திருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தி என்ன?- காக்கை-

திருக்கேதீச்சரக் கோயில் முன்றலில் பெருந்திரளான சிவவழிபாட்டு மக்கள் ஒன்று திரளும் சிவராத்திரியை முன்னிட்டு துரித கதியில் அமைக்கப்பட்ட கோயில் நுழைவு வளைவானது மன்னார் புனித லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை மார்க்சின் தூண்டுதலால் வங்காலையிலும் அதன் அயற் சூழலிலும் வாழும் கத்தோலிக்கம் தழுவியவர்களால் பிடுங்கி வீழ்த்தப்பட்டமையானது அடிப்படை நாகரீகத்திற்கே இழுக்கான எல்லை கடந்த கத்தோலிக்க மதஞ்சார்ந்த வன்மத்தைக் காட்டுகிறது. அத்துடன், அதற்கெதிராக எதிர்வினையாற்றுவது என்ற போர்வையில் “சிவசேனை” என்ற இந்திய அடிவருடி அமைப்பும் “விசுவ கிந்து பரிசத்” என்ற அகன்ற பாரதக் கனவுடன் இந்தியச் சந்தை மேலாதிக்க விரிவாக்கத்திற்காக அண்டை நாடுகளுக்குள்ளும் புகுந்து சூழ்ச்சிகளைச் செய்யும் கிந்துப் பயங்கரவாதக் கும்பலும் வெளியிட்ட அறிக்கைகளானவை தமிழர்களிடத்தில் அகமுரண்களைக் கூர்மைபெறச் செய்து கிந்திய ஊடுருவல்களைத் தமிழர்களிடத்தில் செய்யும் தமிழர்தாயகம் மீதான இந்தியத்தின் வன்வளைப்பு வேட்கையையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும், வத்திக்கானின் கண்ணசைவில் கட்டுண்டு கிடப்பதற்காக மிகவும் கட்டிறுக்கத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்க திருஅவையின் மன்னார் மற்றும் யாழ் மறைமாவட்டங்களின் அறிக்கைகளுக்கிடையில் இருக்கும் நேரெதிர் முரண்கள் கூட வத்திக்கானின் கொள்கைகளுக்கமைந்ததே என்பதைத் தெளிந்துகொள்வதற்கான நிகழ்வாகவும் இது அமைவதுடன் தமிழ்த்தேசியம் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு தமிழரின வரலாறு தெரியாமலும் காலவோட்டத்தில் தமிழர்களின் இறையியல் குறித்த பார்வை மாற்றத்தாலும் மாற்றாரின் ஆட்சியாலும் ஏற்பட்ட வேறுபட்ட மதங்களை (ஆசிவகம், சமணம், மகாசன பௌத்தம், சைவம்) வெவ்வேறு காலப்பகுதியில் தமிழர்களில் வெவ்வேறு பகுதியினர் பின்பற்றியமையின் பின்னணி குறித்து முறையான பார்வையற்ற தன்மையாலும் கண்டபடிக்குப் பொறுப்பற்று கத்தோலிக்கம் தழுவிய தமிழர்கள் பற்றிய தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான தூற்றல்களைக் கத்தோலிக்கம் சார்ந்த மதவெறிக்கெதிரான தமது எதிர்வினையாக ஆற்றியவர்களின் சிறுமையுமென பலவற்றை இனங்காணக் கூடிய நிகழ்வாகவும் இந்த மதவெறி நிகழ்வை நாம் நோக்க வேண்டியிருக்கிறது.

தமிழீழத்தைப் பொறுத்தவரையில் மன்னார் மறைமாவட்டத்தில் தான் அதிக நூற்றுக்கூறில் கத்தோலிக்கம் தழுவியவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்தாயக நிலத்தின் 3998 சதுர கிலோமீற்றர் பரப்பளவுகொண்ட ஒரு பகுதியை மன்னார் மறைமாவட்டமாகத் தமது நிருவாக வசதிக்காகப் பிரித்து வைத்துள்ளது கத்தோலிக்கத் திரு அவை. அவர்களின் பிரிப்பின்படி மன்னார் மறைமாவட்டம் என்று நோக்கப்படும் பகுதியில் வாழும் 270,375 மக்களில் 89,516 (33.1%) கத்தோலிக்கம் தழுவிய தமிழர்களாவர்.

இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ளவும் கத்தோலிக்கம் தழுவிய வன்மம் எப்படி மன்னார் மறைமாவட்டத்தில் இற்றைவரை மற்றைய பகுதிகளிலும் அதிகமாக இருக்கின்றது என்பதையும் இதை இன்னும் தூண்டி விடும்படியாக அமையக் கூடிய கத்தோலிக்கம் தழுவிய தமிழர்கள் மீதான் ஏனையோரின் தூற்றல்கள் எப்படி அடிப்படையற்றது என்பதையும் விளங்கிக்கொள்வதற்காக மன்னார் மறைமாவட்டத்தில் இப்படியாக பெருமளவில் தமிழர்கள் கத்தோலிக்கம் தழுவிய வரலாற்றினை மீட்பது இப்பத்திக்குத் தேவையாகின்றது.

பரவர்/ பரதவர் என்போர் சங்க இலக்கியத்தில் கூட சிறப்புடன் பதிவாகியுள்ள பெருஞ்சிறப்பும் தொன்மையும் மிக்க தமிழ்க்குடிகளாக நெய்தல்நில மக்களாக வாழ்ந்து வந்தோர்களாவர். கடல் கடந்து தமிழரின் வாணிகமும் வியாபிப்பும் பெருகக் கடலோடிய கடலோடிகளாக இவர்கள் இருந்தார்கள். முத்துக்குளித்துச் செல்வம் சேர்த்தும் தொலை தேயங்களுக்குக் கடலோடியும் பாண்டியர்களின் கொற்றத்துக்குப் பெருமை சேர்த்த இந்த பரதவர் என்கிற மறத்தமிழ்ப் பழங்குடியானது வெளியாரின் படையெடுப்புகளால் தனது சொந்தப் பெருமையிழக்கும் முகமாக முத்துக்குளிக்கத் தடை செய்யப்பட்ட குலக்குழுவாகியது. பாண்டியக் கொற்றத்துக்கு வலுச்சேர்த்த குடிகளுள் முதன்மைக்குடிகளில் ஒன்றாகப் பரதவர் என்ற இந்த இனக்குழு இருந்தமையால் பாண்டியர்கள் மீதான மாற்றாரின் வன்மம் இவர்கள் மீது பாய்ந்தது. விளைவாக இந்த மக்கள் தங்களின் சொந்தக் கடலில் முத்துக்குளிக்கத் தடைசெய்யப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டார்கள். இப்படியாக, மார்த்தாண்ட வர்ம என்பவன் ஆட்சிக் காலத்தில் முத்துக்குளிக்கும் அனுமதி முசுலிம்களுக்கு வழங்கப்பட்டு பரவர் மக்கள் முத்துக்குளிக்கும் தொழிலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் போர்த்துக்கேயர்கள் படையெடுத்து வரும் போது இந்தப் பரவர் மக்கள் முத்துக்குளிக்கும் தொழிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு, அப்படி முத்துக்குளியலுக்குப் போவதானால் மார்த்தாண்ட வர்மனின் ஆட்சி மற்றும் போர்த்துக்கேயரினால் இரட்டை வரிச்சுமைக்குட்படுத்தப்படுவதான நிலையில் பரவர் மக்கள் இருந்தனர்.

பாண்டியர்களுக்கு வலுச்சேர்த்த தமிழ்க்குடி பரவர் குடி என்பதனால் மிக மோசமாக மார்த்தாண்ட வர்மனின் ஒடுக்குமுறைக்குள்ளாகிச் சொந்தப் பெருமையிழந்து காலாகாலமாக முத்துக்குளித்துச் செல்வஞ்சேர்த்தமையையும் இழந்து நிற்கையில், போர்த்துக்கேயருடனான ஒப்பந்தத்தின் படி முத்துக்குளிக்கும் அனுமதியைப் பரவர் மக்களிற்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் வரிச்சுமையிலிருந்து அந்த மக்களை விடுவிப்பதாகவும் இதற்காக அந்த மக்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவ வேண்டுமென்று உடன்பாடாகியது. தமது முத்துக்குளிக்கும் உரிமையை மீட்கவும் தம்மீது சுமத்தப்பட்ட வரிச்சுமை உட்பட்ட ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் இப்படியாகக் கத்தோலிக்கத்தைத் தழுவிய 20,000 தமிழர்களில் தமிழ்நாட்டிலுள்ள வேம்பாறு எனும் நெய்தல்நில ஊரிலிருந்து பெருமளவானோர் இலங்கைத்தீவின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு முத்துக்குளிக்கும் தொழிலிற்காக போர்த்துக்கேயரால் வரவழைக்கப்பட்டனர். இப்படியாக வந்த மக்களே மன்னார், கற்பிட்டி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தங்கி அங்கிருந்த மக்களுடன் சேர்ந்து வாழத் தொடங்கினர். அப்போது யாழ்குடாநாட்டின் பகுதிகள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு போன்றவை யாழ்ப்பாண இராட்சியமாக முதலாம் சங்கிலி மன்னனின் தலைமையில் இருந்தது. எனவே, கத்தோலிக்கம் தழுவிய பின்பு மன்னாரிற்குப் போர்த்துக்கேயரின் அழைப்பில் முத்து வணிகத்திற்காக தமிழ்நாடு வேம்பாறிலிருந்த தமிழர்கள் மூலம் மன்னாரில் போர்த்துக்கேயரின் கால் வலுவாக ஊன்றப்படுவதால் தனது ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தினை உணர்ந்து போர்த்துக்கேயரின் மீதான ஒரு தாக்குதலாகவே சங்கிலியன் என்கிற மன்னன் இந்த மக்களில் 600 பேரின் தலைகளை வெட்டிக் கொன்றான். இந்த நிகழ்வானது கத்தோலிக்க திருஅவையினால் ஆவணப்படுத்தப்பட்டு மன்னாரில் வாழும் கத்தோலிக்கம் தழுவிய மக்களின் மனதில் இன்று வரை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வன்மம் சேர்க்கும் வகையில் மெல்ல மெல்ல ஏற்றப்படுகிறது. இது அந்த மக்களில் கணிசமானோரிடத்தில் இந்துக்கள் மீதான வெளியில் காட்டப்படாத வெறுப்பாக ஏற்பட்டிருப்பது உண்மையே. இப்படியாக ஒரு காலத்தில் நெடுகடலோடி தமிழரின வரலாற்றுக்குப் பெருமை சேர்த்த பரவர் என்ற தமிழ்க்குடி மக்கள் எவ்வாறு காலவோட்டத்தில் எந்த இறுக்கத்தில் இப்படிக் கத்தோலிக்கம் தழுவினார்கள் என்ற வரலாற்று அறிவில்லாமல் சோற்றுக்காக மதம் மாறியோர் என்று அன்றைய காலத்தில் தேசிய இன அரசியல் தொடர்பான வளர்ச்சியில்லா நிலை குறித்த புரிதலில்லாமல் கருத்திடும் சிறுமைத்தனம் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இயற்கையுடன் நாள்தோறும் போராடிப் போராடி இயல்பாகவே போராட்ட குணம் மிகுந்துள்ள உழைக்கும் கடலோர மக்களே காலவோட்டத்தில் போர்த்துக்கேயரின் கத்தோலிக்கம் தழுவியோராவர். எனவே இப்படி வரலாறு நெடுகலும் பெருமை கொண்ட திரைகடலோடித் திரவியம் தேடி வந்த மக்களைச் சோற்றுக்காக மதம் மாறியவர்கள் என்று கூறுவதன் சிறுமையை உணர வேண்டும். அத்துடன் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் ஆங்கிலேயர் காலத்தில் கிருத்துவமதத்திற்கு மாறியோரில் மிகப்பெரும்பான்மையானோர் தமிழ் மேட்டுக்குடிகளே என்பதையும் இவர்களே அங்கிலிகன், மெதடிச திருச்சபைகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் என்பதையும் தெரிந்து தெளிய வேண்டும்.

அத்துடன் வத்திக்கானின் விரலசைவில் இங்கிருந்து இயங்கும் கத்தோலிக்கத் திருஅவைகள் அரசியல் தளத்தில் எப்படியான நிலைப்பாட்டை எடுத்து எப்பேர்ப்பட்ட செல்வாக்கினை அந்தந்த இடங்களில் நிறுவியுள்ளன என்பது பற்றிய சரியான பார்வை இங்கு தேவையாகின்றது.

போர்த்துக்கேயர் காலத்தில் தமிழர்களின் வழிபாட்டிடங்களை அழித்தொழித்துத் தமது மதத்தை அவர்கள் பரப்பிய காலமல்ல இது. கத்தோலிக்கத் திருஅவையின் ஆட்சி அதிகாரம் இல்லாது போனதன் பின்பாக அந்தந்த இடங்களில் வாழும் சமூகங்களுடனும் அங்கு நிலவும் அரசதிகாரத்துடனும் ஒட்டான உறவுநிலையைக் கடைப்பிடிப்பது போலவே பாசாங்கு செய்தவாறே தமது இருப்பையும் தடங்கலற்ற செயற்பாடுகளையும் உறுதிப்படுத்திக்கொள்ளும் கொள்கையையே கத்தோலிக்கத் திருஅவை கையாளும். எடுத்துக்காட்டாக, தமிழர்கள் மீது தமிழினப்படுகொலையை சிறிலங்கா அரச பயங்கரவாதம் முடுக்கி விட்ட காலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைக் காக்குமாறு சிறிலங்கா அரசை வேண்டி சிங்கள தேசத்தின் கொழும்பிலிருந்து கர்தினல் மல்கம் ரஞ்சித் போன்ற சிங்கள தேசத்தில் தளமமைத்துச் செயற்படும் திருஅவைகளின் குரு முதல்வர்கள் அறிக்கை விடும் போது மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற மறைமாவட்டங்களின் கத்தோலிக்கத் திருஅவைகளோ சிறிலங்கா அரசைக் குற்றஞ் சுமத்தி அறிக்கை விடுவதன் மூலம் அந்தந்த இடங்களில் மக்களோடு இருப்பது போல் பாசாங்கு செய்யும் இந்த உத்தி வத்திக்கானின் உத்திதான். இந்த வகையில் மன்னார் மறைமாவட்டத்தினால் இந்த நிகழ்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையும் யாழ் மறைமாவட்டத்தினால் இந்நிகழ்வு தொடர்பாக முன்னர் வெளியிட்ட அறிக்கையும் நேரெதிர் முரணாக இருக்கலாம் என்பது வத்திக்கானின் கொள்கைக்கு அமைவானதே என நாம் விளங்கிக்கொள்ளலாம்.

மன்னாரில் எண்ணிக்கையில் ஓரளவு பெரும்பான்மையாகக் கத்தோலிக்கம் தழுவியவர்கள் வாழ்வதனால் அங்கு ஒருவிதமாகவும் யாழ் மறைமாவட்டத்தில் எண்ணிக்கையில் குறைந்தளவானோர் இருப்பதால் வேறொரு விதமாகவும் நடந்துகொண்ட மறைமாவட்ட ஆயர்கள், பின்னர் மன்னாரில் தமது பாதிரி நண்பர்களின் நட்புக்காகவும் அவர்கள் மனம் நொந்துவிட்டதென்பதாலும் அதைச் சரிசெய்யக் கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல் திடிரெனத் தாம் முன்னர் வெளியிட்ட அறிக்கையை மறுத்து அடுத்த அறிக்கையை அடுத்த நாளே வெளியிட்டுள்ளது யாழ் மறைமாவட்டம். உண்மையில் முறைப்படி வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற்றே இந்த கோயில் நுழைவழி வளைவினை திருக்கேதீசுவர கோயில் நிருவாகம் அமைத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட கோயில் வளைவு துருப்பிடித்ததைத் தொடர்ந்து இப்புதிய நடுகைக்கான ஏற்பாட்டை கோயில் நிருவாகம் மேற்கொண்டுள்ளது. புதிதாக வளைவு அமைப்பதனை நிறுத்துமாறு பங்குத் தந்தை மார்க்சு மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் திருக்கேதீசுவரனைக் கோரியதைத் தொடர்ந்து, நேரில் சென்று விசாரித்து முறைப்படியான அனுமதி பெற்றே வளைவு அமைக்கப்படுவதாக அவர் சொல்லிச் சென்றமையால் அவர் மீது சினங்கொண்டே மிக அவதூறாக பிரதேச செயலாளர் கத்தோலிக்கர்களை இழிவுபடுத்தியது போல உண்மைக்குப் புறம்பாக மன்னார் மறைமாவட்டம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் காணி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாகச் சொல்லி மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல் அப்பட்டமான பொய்யை மன்னார் மறைமாவட்டம் அறிக்கையாக்கியுள்ளது. அப்படி வழக்கு நிலுவையிலிருந்திருந்தால் வளைவு சேதமாக்கப்பட்ட பின்பு உடனடியாக நாலு நாட்களுக்குள் விடுப்பு நேரம் பாராது புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென எப்படி ஒரு நீதிமன்று உத்தரவிடும்? என்பதைப் பாலகர்களும் புரிந்துகொள்வர்.

உண்மையில் லூர்து மாதா ஆலயம் அமைக்க அரசு காணி ஒதுக்கிக்கொடுத்தமை தொடர்பாகவே வழக்கானது திருக்கேதீசுவரக் கோயில் திருப்பணி அவையினால் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிற்கும் வீதி அதிகாரசபையிடம் அனுமதி வாங்கி அமைக்கப்படும் இந்த கோயில் நுழைவு வளைவிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. இப்படியிருக்கையில் இப்படிக் கொச்சைத்தனமான பொய்களை மன்னார் மறைமாவட்டம் அறிக்கையாக்கியிருப்பது அறிவுள்ள அனைவரையும் கொடுஞ் சினத்திற்குள்ளாக்கியுள்ளது. வளைவினைப் பிடுங்கி வீழ்த்தி நடந்துகொண்ட முறையால் கத்தோலிக்கர் என்ற வகையில் வெட்கித் தலைகுனிவதோடு வன்மையாகக் கண்டனத்தையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட யாழ் மறைமாவட்டம் (இப்படி அந்தந்த இடத்திற்கேற்பப் பாசாங்கு செய்து தமது இருப்பை நிலைப்படுத்தலாம் என்ற வத்திக்கானின் கொள்கைக்கமையவே இந்த அறிக்கையும் வெளிவந்ததென்பதைக் கருத்தில் கொள்க), முதலில் யாழ் ஊடகங்கள் நிலைமையை எடுத்துச் சென்ற உக்கிரத்தன்மையைப் பார்த்துப் பாசாங்காக ஒரு அறிக்கையை முன்னர் வெளியிட்டாலும், தமது மன்னார் மாவட்டத்திலிருக்கும் பாதிரி நண்பர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க நிலைமைகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்த பின்பு தமது இருப்பிற்கு அப்படியொன்றும் எதிராக இனிமேலாகாது என்ற மெத்தனப்போக்குடன் ஒரு மறுப்பறிக்கையைத் தலைகீழாக வெளியிட்டு கத்தோலிக்க திருஅவையின் பாசாங்கை மக்களிடத்தில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.

போன தடவை ஐக்கிய நாடுகளின் மாந்த உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரைத் தொடர்ந்து ஜெனிவாவில் நடைபெறும் காலப்பகுதியை ஒட்டி பொதுபலசேனா மூலமாக முசுலிம்களின் மீது கலவரம் ஏவிவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஐநாவின் மாந்த உரிமை ஆணையகக் கூட்டத்தொடரில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையில் தமிழர்களுடைய சிக்கல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நடைபெறுவது பௌத்த-முசுலிம் மோதல் என்றும் இப்படியான வகுப்புவாத வன்முறை (Communal Violence) மற்றும் மத அடிப்படையிலான அமைதியின்மை (Religious Unrest) என்பன தான் நடைபெறுவதாகச் சொல்லி அதனை இலங்கை சரிசெய்ய வேண்டுமென்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் தேசிய இனச்சிக்கலைக் காயடிக்க இப்படியாக ஒரு உத்தியை உலகச் சூழ்ச்சியாளர்கள் திட்டமிட்டே செய்வார்கள். இனப்படுகொலையெனத் (Genocide) தமிழர் சொன்னபோது அழுத்தம் கொடுத்துப் போர்க்குற்றமென்று (War Crimes) சொல்ல வைத்து அதுவும் இறுதிப் போரின் போதான போர்க்குற்றமெனக் (War Crimes at the final stage of the war) குறுக்கி அதை மேலும் மாந்த உரிமை மீறல்கள் (Human Rights Violations) என்று குறிப்பிட்டு இன்னும் குறுக்கி அதனையும் இறுதிக்கட்டப் போரின் போதான இரு தரப்பினாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல் எனக் குறுக்கி ஈற்றில் அதை ஒரு வகுப்புவாத வன்முறை (Communal Violence) மற்றும் மத அடிப்படையிலான அமைதியின்மைக்கு (Religious Unrest) ஒப்பான சிக்கல் போல் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றிய பேச்சுகள் நீர்த்துப்போகச் செய்து மடைமாற்றப்பட்டன. இந்த மடைமாற்றலுக்குப் போன தடவை ஜெனிவா காலத்தை ஒட்டி நிகழ்ந்த பொதுபலசேனாவால் முசுலிம்கள் மீது ஏவப்பட்ட கலவரம் பயன்பட்டது போல இம்முறை ஜெனிவா காலத்தில் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரால் திட்டமிட்டு மன்னாரில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை ஒரு உடனிகழ்வாகக் (Coincident) கடந்து போக முடியாது. இப்போது இலங்கையில் நடப்பது எல்லாம் சமூகங்களுக்கிடையான நல்லிணக்கமின்மைதான் என்பது போல இலங்கை தொடர்பாக அறிக்கைகள் வெளியாகி உலகம் இனிமேல் நல்லிணக்க வகுப்புத்தான் தொடர்ச்சியாக எடுக்கப்போவது போலத் தெரிகிறது.

தமிழர்களிடத்தில் எங்கெல்லாம் அகமுரண்கள் உள்ளனவோ அங்கெல்லாம்  சென்று அவற்றைக் கூர்மைப்படுத்தி தமிழர்களைப் பிரித்துக் குழுக்களாக்கிச் சிதறடிக்கும் வேலையை சிறிலங்கா மற்றும் இந்திய உளவமைப்புகள் செய்யும். சாதிய, பிரதேச, மத முரண்பாடுகள் எனத் தமிழர்களிடத்தில் காணப்படும் அடிப்படைச் சிக்கல்களான அகமுரண்பாடுகளை இனங்கண்டு அதற்கு எண்ணெய் ஊற்றித் தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளை இந்தியாவின் உளவமைப்பே அதிகம் செய்கிறது. அப்படியாக மன்னாரில் நடந்த பாதிரியாரினால் தூண்டிவிடப்பட்ட வன்முறை நஞ்சானது சிவசேனா என்ற இந்திய அடிவருடி அமைப்பிற்கும் விசுவ கிந்து பரிசத் என்ற இந்துப் பயங்கரவாதக் கும்பலிற்கும் இன்னமுதுவாகவே தெரிந்தது. இதை அவர்கள் ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழர்களிடத்தில் ஊடுருவித் தமிழர்களை இந்துக்களாக்கி தமிழர்களின் தேசிய இன ஓர்மையைச் சிதைப்பதன் மூலம் அவர்களை இந்துக்களாக்கிப் பண்பாட்டு வன்வளைப்பைச் செய்வதன் மூலம் இந்தியாவின் இலங்கைத்தீவின் மீதான மேலாண்மைக்கு ஒத்துதவும் தரப்பாகத் தமிழர்களை மாற்றத் தம்மாலியன்ற அனைத்தையும் செய்வார்கள். இப்போதைக்கு இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் புரிந்துகொள்ள இயலாதவர்களான பெரும்பாலான தமிழ் இளைஞர்களைத் தமது சூழ்ச்சி வலையில் வீழ்த்த இந்த இந்தியாவின் பயங்கரவாதக் கும்பல்கள் தீவிரமாக இன்னும் இன்னும் வேலை செய்வார்கள். அதன் விளைவாகவே சிவசேனா மற்றும் விசுவ கிந்து பரிசத் போன்ற இந்தியாவின் கும்பல்கள் புழுகியடித்து முன்வந்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

இப்படியாகத் தமிழர்களிடம் காணப்படும் அகமுரண்களைக்களையவும் அகமுரண்களின் வெளிப்பாடுகளாக நடந்தேறும் நிகழ்வுகளையும் பொறுப்புணர்வுடன் கையாண்டு சிக்கல்களை முடிவுக்குக்கொண்டுவர தமிழர்களிடத்தில் இருக்கும் புரட்சிகர முற்போக்காற்றல்கள் வேலை செய்ய வேண்டும். கத்தோலிக்கத் திருஅவை நிகழ்ந்த அருவருப்பான நிகழ்விற்கு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்துவதோடு இனியும் செய்வோம் என்றாற் போல வன்மமான மெத்தனத்துடன் இழிநிலைப் பொய் பிதற்றல்களை அறிக்கையாக்குவது கத்தோலிக்க திருஅவைகளின் இழிமுகத்தைத் தோலுரிப்பதுடன் தமிழர்களை அவர்கள் மீது வெஞ்சினம் கொள்ளச் செய்கிறது. அத்துடன் தமிழின விடுதலையின் முதன்மை எதிரியான இந்தியாவின் எவ்வகையான ஊடுருவல்களுக்கும் தமிழர் நாம் இடங்கொடுக்கக் கூடாது என்றும் இப்படியான சூழலைத் தமது கையறு நிலையாக உணர்ந்து சைவ திருப்பணி அவைகள் இந்தியாவின் மற்றுமொரு சூழ்ச்சியில் வீழ்ந்திடக் கூடாது என்றும் தொடர்புடையோர் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

மன்னாரில் கத்தோலிக்கத் திருஅவை ஆடும் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முற்போக்கு ஆற்றல்கள் முன்வரவேண்டியது உடனடித் தேவை. இல்லையென்றால். கத்தோலிக்க அடிப்படைவாதமானது தமிழர்களை இந்துத்துவத்தின் சூழ்ச்சிவலையில் வீழ்த்திவிடும் இடுக்கண் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிகிறது. ஆளுக்கொரு அரசசார்பற்ற நிறுவனங்களை நடத்திக்கொண்டு மலர்ப்படுக்கை வாழ்க்கையிலிருக்கும் பாதிரியார்களினைத் தமிழர்களின் அரசியல்வெளிக்குள் நுழையவிடாமல் ஒதுக்கி வைப்பதே தமிழர்க்கு நன்மை பயக்கும். பூசாரிகள் கோயில்களில் பணியாற்றுவதிலும் பாதிரியார்கள் தேவாலயங்களில் அருட்பணி செய்வதிலும் தமது நேரத்தைச் செலவிடலாம். மாறாக வத்திக்கானின் விரலசைவுக்கும் பல கிறித்துவ அமைப்புகள் ஈற்றில் போய் முடியுமிடமான அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவமைப்பிற்கும் இந்தியாவின் இந்துக் கும்பல் அமைப்புகள் ஈற்றில் போய்முடியுமிடமான றோ என்ற இந்தியாவின் உளவமைப்பிற்கும் தெரிந்தோ தெரியாமலோ மதகுருமார்கள் வேலை செய்யாமல் அவர்களின் அருட்பணிகளை ஒழுங்காகச் செய்வதுடன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

அதுவே தமிழர்களுக்கு என்றைக்கும் நல்லது…………. இதுவே திருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச் செல்லும் செய்தியாகும்……..

-காக்கை-

2019-03-07

 

பின்னிணைப்புகள்

  1. யாழ் மறைமாவட்ட ஆயரின் முதலாவது அறிக்கை

2. யாழ் மறைமாவட்ட ஆயரின் இரண்டாவது அறிக்கை

 

3. மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்ல அறிக்கை

 

4. திருக்கேதீசுவர கோயில் மறுப்பறிக்கை

 10,947 total views,  3 views today

(Visited 18 times, 1 visits today)