காசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்? -மறவன் –

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் நன்மையடையப் போவது தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க என்ற இந்துத்துவக் கட்சியேயென அந்தக் கட்சியும் அதனை இயக்கும் RSS (Rashtriya Swayamsevak Sangh) என்கிற இந்துப் பயங்கரவாதக் கும்பலும் அகமகிழ்வடைந்தன. இப்படியான தாக்குதலுக்குப் பதிலடி என்பது இந்து- இசுலாமிய மோதல் மனநிலையின் வெளிப்பாடான இந்தியா- பாகிஸ்தான் போரென்பதாக்கி அதில் ஒரு போர் வெற்றியைக் காட்டி இந்துத்துவத்தின் உறுதிபேண் கட்சியே இந்தியாவை ஆளத்தகுதியானதென்ற கருத்தேற்றத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தித் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் ஒரு அரிய வாய்ப்பிற்கு வழி அமைத்துக் கொடுத்த தாக்குதலாகவே பா.ஜ.க- RSS கும்பல் புல்வாமாத் தாக்குதலை நோக்கியது. எனவே இப்படியொரு தற்கொடைத் தாக்குதல் நடந்தமையை வெறும் உடனிகழ்வாக (Coincident) மட்டும் பார்த்துக் கடக்க முடியாது. அதே நேரம் மோடியின் ஏற்பாட்டில் இது நிகழ்த்தப்பட்டதாக நேரடியாகச் சொல்லின் அது பலரும் நம்பும்படியானதாக இராது. ஆனால் 2500 வரையான படையினரைத் தரைவழியாக அழைத்துச் செல்லும் முடிவைப் போர்ப்பகுதியில் உலகின் எந்த இராணுவமும் எடுக்காது என்பதுடன் இப்படிப் படையினரைப் பெருமளவில் அதுவும் போர்ப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் சாலை எவ்வளவிற்குப் பாதுகாப்பிறுக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமென்பது எல்லோராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதொன்றே. எனவே இப்படிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சொல்லும்படியாக இறுக்கமாக்கப்படாத சாலை வழியாக இவ்வளவு பெருந்தொகையில் படையினர் ஏற்றிவரப்படுகின்றார்கள் என்ற செய்தி ஏதோவொரு வகையில் தாக்குதலை மேற்கொண்ட அமைப்பின் காதுக்குள் செல்லவிடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே கூடுதலாகத் துலங்குகிறது. எனவே இப்படியான ஒரு தாக்குதல் நிகழத் தேவையான வாய்ப்புகள் திட்டமிட்டே அகலத் திறந்து விடப்பட்டிருக்கின்றது என்பதைப் புலனாய்வுக் கண்கொண்டு நோக்கில் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். புல்வாமா நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்பவை பற்றிய முனைப்பைக் கொண்ட இப்பத்தியில் புல்வாமா பற்றி ஆய்வதல்ல நோக்கமெனினும் இது குறித்துத் தொட்டுச் செல்வது  தவிர்க்க இயலாததாகிவிட்டது.

புல்வாமாத் தாக்குதலுடன் பன்னாட்டளவில் இன்னுமின்னும் கூடியளவில் பேசுபொருளாக்கப்பட்டிருக்க வேண்டிய காசுமீரிய மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது மருந்தளவுக்கேனும் பேசப்படாமல் இந்தியா- பாகிஸ்தான் போர் என்பதாகவும் அதில் வெற்றியாருகென்ற ஒரு துடுப்பாட்டப் போட்டியைக் கண்டு களிக்கும் மனநிலையில் தான் இந்த விடயம் ஊடகங்களிலும் பெரும்பாலானவர்களிடத்திலும் பேசுபொருளாகவிருக்கிறது. உண்மையில் காசுமீரிய மக்களின் முப்பதாண்டுகளாகத் தொடரும் மறப்போராட்டத்தில் 90,000 பேர் இறந்திருக்கின்றனர், 11,000 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர், 20,000 பேர் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், இதுவரை 40 பாரிய மாந்தப் புதைகுழிகளுக்குள் 3000 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்திய நரபலிப்படைகள் தமிழீழத்தில் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகளிலும் பார்க்கப் பன்மடங்கு பாலியல் வன்கொடுமைகள் காசுமீரிய மண்ணில் இந்திய நரபலி வன்வளைப்புப் படைகளால் நிகழ்த்தப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மூலம் 18 மாதங்களுக்கு விசாரணை இன்றித் தடுத்துவைக்க முடியும் என்ற நிலை சிறிலங்காவில் இருப்பது போல் Armed Forces Special Powers Act மூலம் காசுமீரியர்களைக் கேட்டுக் கேள்வியில்லாமல் எழுந்தமானமாகக் கைதுசெய்து விசாரணையின்றி 2 ஆண்டுகளாக தடுத்துவைக்க இந்திய நரபலிப்படையால் இயலுகிறது. காணாமலாக்கப்பட்ட பெற்றார் எமது தமிழீழ மண்ணில் இடைவிடாத தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுப்பது போல காசுமீரிலும் காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தாய்மார்கள் ஒரு அமைப்பாகத் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

தமிழீழத்தவர்கள் போலவே பாரிய அழிவுகளையும் அவலங்களையும் காசுமீரியர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே இந்த வேளையில் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் காசுமீரிய மக்களின் வலிகளை நன்குணரக் கூடியவர்களாகத் தமிழீழ மக்களே இருக்க வேண்டும். எனவே நாம் புல்வாமா நிகழ்வின் பின்பான காலப்பகுதியிலாவது இன்று ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் உலலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவெனினும் காசுமீரிய மக்களின் காசிமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டம் பற்றிப் பேச வேண்டிய நிலையிலுள்ள தமிழீழத்தவர்கள், மாறாக இன்னமும் இதனை ஏதோ பாகிஸ்தான் – இந்தியா போட்டி போல வேடிக்கையாக நோக்கிக் கருத்திட்டு மகிழ்வதானது ஒரு விடுதலைக்காகப் போராடும் இனத்திற்கு இருக்க வேண்டிய அறநோக்கு எம்மவர்களிடம் இல்லாமலிருக்கிறதோ என்று எண்ணச் செய்கின்றது.

மேற்குலக இந்தியக் கூட்டுச் சூழ்ச்சியே தமிழினப்படுகொலையை சிங்கள பௌத்த பேரினவாதம் நிகழ்த்தி முடிக்கக் காரணமாகவிருந்தது. சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற ஏனைய நாடுகள் போர்ப் பொருண்மியமீட்டும் வாய்ப்பாக மட்டுமே தமிழர்க்கெதிரான போரினைப் பார்த்தன. தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதைத் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காதென்பதுடன் அப்படியான தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை அழித்தொழிக்கத் தன்னாலியன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்பதே பாலபாடமாகும். இந்த வகையில் தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்தது இந்தியாவே. இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் உடைந்து சிதறாமல் தெற்காசியாவில் தேசிய இனவிடுதலைப் போரில் வென்று தேசம் அமைப்பது மிகவும் கடினமானது. இந்தியச் சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடும் நாகலாந்து, மணிப்பூர், அசாம், மிசோரம், காசுமீர் போன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டங்களே தமிழர்களுக்கான உலகின் உண்மையான நட்பாற்றல்களாக அமையவல்லன. உலகெங்கிலும் தேசமமைக்கப் போராடும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களுடன் எம்மை இறுகப்பிணைக்க வேண்டியது தமிழீழ தேசம் அமைக்கப் போராடும் எமது விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையானது எனிலும் இந்தியாவிற்குள் சிறைப்பட்டுக்கிடக்கும் தேசிய இனங்களின் தேசம் அமைக்கும் புரட்சிகர எழுச்சிகளுடன் இயன்றளவுக்குக் கூடுதலாகத் தம்மைப் பிணைத்துக்கொள்வது தமிழர்களுக்கு இனிமேலும் தட்டிக்கழித்துவிட முடியாத தேவையாகின்றது.  எனிலும் “காசுமீர் காசுமீரியர்களுக்கே”,  “மணிப்பூர் மணிப்பூரிகளுக்கே” என்ற விடுதலை வேட்கையுடன் தாம் இழந்த இறைமையை மீட்பதற்கான தன்னாட்சியுரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகளே தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்பிற்கு நட்பாற்றல்களாக இருக்குமே தவிர, மாறாக “காசுமீர் பாகிஸ்தானுக்கே”, “மணிப்பூர் சீனாவிற்கே” என்ற முழக்கங்களுடன் இந்தியா என்ற கொடுஞ்சிறையிலிருந்து விடுதலையாகி கொஞ்சம் கொடுமைகள் குறைந்த இன்னுமோர் (சீனா, பாகிஸ்தான்) சிறைக்குள் போவதற்காகப் போராடுபவர்கள் எமக்கான உண்மையான நட்பாற்றல்களாக இருக்கமாட்டார்கள்.

எனவே, தமிழினப்படுகொலையை முன்னின்று வடிவமைத்து நடத்திய மேற்குலகின் கால்களை நக்கி அவர்களிடமிருந்து நீதிபெறுவதாகப் புரட்டுகளை அள்ளி வீசி அவர்களின் பகடைக்காயாகவும் கூலிகளாகவும் இருப்பதற்காக ஜெனிவாத் திருவிழாவுடன் காலத்தை விரையம் செய்யாமல் தேசம் அமைக்கப் போராடும் நாடற்ற தேசிய இனங்களுடன் குறிப்பாக இந்தியச் சிறையிலிருந்து விடுதலை பெறப் போராடும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் ஒட்டான உறவை ஏற்படுத்தித் தெற்காசியாவில் போராடும் தேசிய இனங்களின் பொது எதிரியாம் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தை அடித்துத்தகர்க்க வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்களுக்குத் தம்மை அணியப்படுத்திக்கொள்ள வேண்டிய உடனடித்தேவை தமிழர்களுக்குண்டு.

இந்தியா- பாகிஸ்தான் போராக மட்டும் பேசுபொருளாகி, பேச மறக்கும் காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைத் தமிழர்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உணர்த்தும் நோக்கில் காசுமீரிய விடுதலைப் போராட்ட வரலாறு இப்பத்தியில் மிகச் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

உலகப் போரின் பின்பு தமது காலனிகளை இயன்றளவுக்குப் பெரிய சந்தைகளாக்கிவிட்டு அந்தச் சந்தைகளின் ஆட்சி அதிகாரங்களைத் தமக்கு அடிவருடியாகவும் முகவராகவும் செயற்படவல்ல தரப்பிடம் கொடுத்துத் தமது நலன்களிற்குக் கேடாகாமை உறுதிப்படுத்தப்பட்டு மறுகாலனியங்களை ஏற்படுத்திவிட்டு காலனி ஆட்சியர்கள் வெளியேறினர். இந்த வகையில் காந்தியக் கவர்ச்சி நிழலுருவில் கட்டுண்ட பல தேசிய இனங்கள் இந்தியாவிற்குள் தம்மையறியாமற் சிறைப்பட காலனி ஆட்சியர்களின் கைப்பொம்மையாகவிருந்த 540 இற்கு மேற்பட்ட மன்னராட்சி நிலவிய பகுதிகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ அல்லது தனிநாடாக நீடிக்கவோ வாய்பினைப் பெற்றிருந்த நிலையில் காசுமீரை அப்போது ஆங்கிலேயரின் கைப்பொம்மையாகவிருந்து ஆண்டு வந்த கரிசிங் என்கிற இந்துவாகத் தன்னை அடையாளப்படுத்தும் மன்னன் காசுமீர் தனிநாடகவே இருக்கப்போவதாக முடிவு செய்கின்றான். ஏனெனில் காசுமீரில் மத அடிப்படையில் 70% இசுலாமியர்களும் 25% இந்துக்களும் ஏனையோர் பௌத்தம் உள்ளிட்ட பிறமதங்களைச் சார்ந்தவராக இருந்ததால் அதாவது மிகப்பெரும்பான்மையானோர் இசுலாமியர்களாக இருந்ததால் மன்னன் தன் மதச்சார்புச் சிந்தனையின்பாற்பட்டு இந்தியாவுடன் காசுமீரினை இணைக்க முயன்றால் தனது ஆட்சிக்குக் குழப்பங்கள் நிலவுமென அச்சப்பட்டுத் தனித்திருக்க முடிவெடுத்தான். எனினும் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க நேருவும் பாகிஸ்தானுடன் இணைக்க ஜின்னாவும் பெருமுயற்சிகளை எடுத்தே வந்தனர்.

அவ்வாறாக RSS என்ற இந்துப் பயங்கரவாதக் கும்பலானது காசுமீரில் வாழும் பிராமணியப் பண்டிட்டுகளைப் பயன்படுத்தி நிலங்களையும் நிருவாகங்களையும் தம்வயப்படுத்தி அங்குள்ள இசுலாமியர்களை நலிவுறச் செய்து அந்த மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாகப் பிராமணியப் பண்டிட்டுகளை மாற்றுவதன் மூலம் காசுமீரினை எப்படியாவது இந்தியாவுடன் இணைக்கும் தமது அகண்டபாரதக் கொள்கையில் தீவிரமாக வேலை செய்தது. இதனைத் தொடர்ந்து பக்ரூன் என்ற பழங்குடியினரைத் தூண்டி விட்டுக் காசுமீர் மீது படையெடுக்க வைத்துப் பின்னர் நிலைமையைச் சரிசெய்வது என்ற போர்வையில் பாகிஸ்தான் காஸ்மீரினை வன்கவரும் முயற்சியை மேற்கொண்டது. இப்படியாக காஸ்மீருக்குள் படையெடுத்து வந்த பழங்குடியினரின் படையெடுப்பிலிருந்து தப்பிப்பதற்காக மன்னன் கரிசிங் இந்தியாவின் உதவியினை நாடினான். காஸ்மீரிற்கு உதவுவதென்றால் காசுமீர் தற்காலிகமாகவேனும் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டுமென்ற நேருவின் வற்புறுத்தலுக்கிணங்க மன்னன் கரிசிங் (இவனும் காசுமீரினைக் கைப்பற்றி ஆண்ட அயலான் தான்) காசுமீரினைத் தற்காலிகமாக இந்தியாவுடன் இணைக்க உடன்பட்டான். இந்தத் தற்காலிக இணைப்பு 1947-10-26 அன்று நடந்தது. அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் காசுமீரின் பல பகுதிகளை மீட்டு நிலைகொண்டது. இவ்வாறாக காசுமீரின் ஒரு பகுதியை இந்தியாவும் மறுபகுதியை பாகிஸ்தானும் வன்கவர்ந்து கொண்டன. உண்மையில் காசுமீரின் தற்காலிக இணைப்பிற்கான ஒப்பந்தத்தில் பின்வருமாறே விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

  • காசுமீரின் பாதுகாப்பு, அயலுறவு, நாணயம் மற்றும் செய்தித்தொடர்பு என்பன இந்தியாவின் கீழ் வரும்
  • சட்டம், ஒழுங்கு சீரடைந்த பின்பு ஜம்மு-காசுமீர் மக்களின் விருப்பினை அறிந்து இணைப்பினைத் தொடர்வதா இல்லையா என முடிவு செய்யப்படும்
  • அதுவரை 370 என்ற சிறப்புச் சட்டப்பிரிவின் மூலம் காசுமீரின் தன்னாட்சி உறுதிசெய்யப்படும்

அதைத் தொடர்ந்து 1951 இல் நடைபெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற 370 சட்டப்பிரிவை உறுதி செய்தவாறு 1951 இல் சேக் அப்துல்லா காசுமீரின் பிரதமராகப் (370 சட்டப்பிரிவு இருப்பதால் ஏனைய மாநிலங்களைப் போன்று முதலமைச்சர் என்று அழைப்பதில்லை. பிரதமர் எனவே சேக் அப்துல்லா பதவியேற்றார்) பதவியேற்றதும் RSS என்ற இந்துப் பயங்கரவாதக் கும்பலின் கிளை அமைப்பான பிரஜா பரிசத் என்ற கும்பலினை காசுமீரின் தன்னாட்சி அதிகாரத்தை நீக்கக்கோரிப் போராடத்தூண்டிக் காசுமீரில் குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நேரு.  பாதுகாப்பு, அயலுறவு, நாணயம் மற்றும் செய்தித்தொடர்பு தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பாக காசுமீர் சட்டமன்றம் மட்டுமே தீர்மானத்தை மேற்கொள்ள இயலும் என்ற 370 ஆவது சட்டப்பிரிவைக் கணக்கெடுக்காமல் அடாவடியாக இந்தியா இயங்கத் தொடங்கியதை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பிய அன்றைய காசுமீரின் பிரதமர் சேக் அப்துல்லாவைக் கைது செய்து 18 ஆண்டுகள் சிறையிலடைத்தது இந்தியா. சேக் அப்துல்லாவைச் சிறையிலடைத்துவிட்டுத் தனது கைப்பாவையை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி காசுமீரின் 370 ஆவது சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கி காசுமீர் விடயத்தில் தனது அருவருப்பான பக்கத்தினை இந்தியா காட்டியது. இதனால் சினமடைந்த காசுமீரிய இளைஞர்கள் புரட்சிகரமான மறவழிப்போராட்டத்தினை 1980 களின் இறுதியில் தொடங்கி முன்னெடுத்தனர்.

காசுமீர் மக்களின் காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை ஒரு மதச் சிக்கல் போல திரித்துக் காட்டும் சூழ்ச்சிகர நோக்கோடு காசுமீரின் ஆளுநராக இருந்த RSS இன் உறுப்பினர் மூலம் காசுமீரில் இருந்த 3 இலட்சத்திற்கும் கூடுதலான பிராமணிய பண்டிட்டுகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர். இதன் மூலம் வகைதொகையின்றி இந்துத்துவர்களைத் தவிர்ந்த ஏனையோரை குறிப்பாக காசுமீரிய தேசிய உணர்வாளர்களைக் கொன்று குவிக்க இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதுடன் காசுமீரின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைப் பன்னாட்டளவில் மதச் சிக்கல் போல மடைமாற்றி விட இந்தியாவிற்கு இயலுமாகி விட்டது. உண்மையில் காசுமீரில் இதுவரை 90,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட பிராமணியப் பண்டிட்டுகள் காசுமீரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாகப் பரப்புரை செய்யும் இந்துப் பயங்கரவாதக் கும்பல்களுக்கு ஒரு 300 பிராமணியப் பண்டிட்டுகள் தானும் கொல்லப்பட்டதை இன்றுவரை உறுதியாகச் சொல்லமுடிவதில்லை என்பதிலிருந்து பிராமணியப் பண்டிட்டுகள் இந்தியாவிற்குள் வரவழைக்கப்பட்ட நாடகத்தை விளங்கிக்கொள்ளலாம். இந்தியாவின் போலிப் பரப்புரையின் மூலம் காசுமீரில் இடித்தழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட 23 இந்துக்கோயில்களில் 21 கோயில்கள் எந்தவொரு சேதமும் இல்லாமல் இருப்பதை ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியானது இந்தியாவினைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலச் செய்தியாளர்களை வரவழைத்து அவர்களுக்குக் காண்பித்தது. இதிலிருந்து காசுமீரிய தேச விடுதலைப் போரினை மதச் சிக்கலாக மடைமாற்றவும் திரித்துக் காட்டவும் இந்தியா எவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில் காசுமீர் என்ற நாடானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா என்ற மூன்று வன்வளைப்பாளர்களால் வன்வளைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவால் வன்வளைக்கப்பட்ட பகுதிகள்

காசுமீர் பள்ளத்தாக்கு- இங்கு 35 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழுகின்றனர். அவர்களில் 95% இசுலாமியர்களாவர்.

ஜம்மு- 30 இலட்சம் வரையிலான மக்கள் வாழும் இந்தப் பகுதியில் 66% இந்துக்களும் 30% இசுலாமியர்களும் வாழுகின்றனர்.

லடாக்- 2 1/2 இலட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் 50% பௌத்தர்களும் 46% இசுலாமியர்களும் வாழுகின்றனர்.

பாகிஸ்தானால் வன்வளைக்கப்பட்ட பகுதிகள்

ஜில்ஜிட் பல்திஸ்தான் – இங்கு வாழும் 10 இலட்சம் மக்களில் 99% ஆனோர் இசுலாமியர்கள் ஆவர்.

அசாட் காஸ்மீர் – இங்கு வாழும் 26 இலட்சம் மக்களும் இசுலாமியர்கள் ஆவர்.

சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்

அக்சன் சிம் மற்றும் சவிகன் பள்ளத்தாக்கு – இது மக்கள் வாழும் பகுதியல்ல

வன்வளைக்கப்பட்டிருக்கும் காசுமீர் மண்ணின் இறைமையை மீட்டெடுக்கும் நோக்குடனே ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற அமைப்பும் அதனது இராணுவப் பிரிவான தேசிய விடுதலை இராணுவமும் காசுமீரிய இளைஞர்களால் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் முன்னிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுதிகூறியதன் படி காசுமீரில் ஒரு பொதுவாக்கெடுப்பை நிகழ்த்திக் காசுமீரிய மக்களின் விருப்பினை அறியுமாறே இந்த அமைப்பின் அரசியல் பிரிவு தொடர்ச்சியாக போராட அதன் இராணுவ அமைப்பு காசுமீரிய மண்ணில் நரபலி வேட்டையாடும் இந்திய வன்வளைப்புப் படைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடி வந்தது. தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் பயிற்சியும் பணமும் இந்தியாவின் இலங்கைத்தீவு மீதான மேலாண்மை நோக்கங்களிற்காக இந்தியாவினால் கொடுக்கப்பட்டது போல, காசுமீரின் மீதான தனது மேலாதிக்கக் கனவுடன் காசுமீரிய மறவழிப் போராட்ட அமைப்புகளிற்குப் பாகிஸ்தான் பயிற்சியும் நிதியுமளித்து வந்தது. ஜம்மு காசுமீர் விடுதலை முன்னணியானது (JKLF) “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என்ற கொள்கை நிலைப்பாட்டில் மிகவுறுதியாக இருந்தமையாலும் அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளையும் காசுமீரின் மீதான வன்வளைப்பாளர்களாக இனங்கண்டு அரசியல் செய்து வந்தமையாலும் வெறுப்புற்ற பாகிஸ்தானின் ISI உளவமைப்பானது பாகிஸ்தான் மண்ணைத் தமக்கான தளமாக JKLF (Jammu Kashmir Liberation Front) பயன்படுத்துவதைத் தடைசெய்ததோடு அந்த அமைப்பினை ஒழித்துக் கட்டவும் தீர்மானித்தது.

கிஸ்ப்- உல்- முகாஜிதீன், லக்சர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையில் காசுமீரினை பாகிஸ்தானுடன் இணைப்பதே சரியானது என்றவாறு காசுமீரியை இறைமையப் பாகிஸ்தானிடம் தாரைவார்க்க அணியமாகி இருக்கும் போராட்ட இயக்கங்களையே பாகிஸ்தானின் ISI உளவமைப்பானது போர்க்கருவிகளும் நிதியுமளித்து வளர்த்து விட்டதுடன் JKLF இனை அழித்தொழிக்க இந்த அமைப்புகளைப் பயன்படுத்தியது.

இந்த இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பாகிஸ்தானின் உளவமைப்பும் இந்தியாவினால் வன்வளைக்கப்பட்ட பகுதிகளில் செயற்படும் JKLF இன் இயங்குதளங்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிற்குக் காட்டிக் கொடுப்பதனைக் கூட வாடிக்கையாக வைத்திருந்தார்கள். இப்படியாகக் “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என உண்மையான காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த JKLF என்ற விடுதலை அமைப்பை அழிக்க பாகிஸ்தான், இந்தியா மற்றும் காசுமீரில் இயங்கும் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் என்ற அனைத்துத் தரப்புகளும் முயன்றது. இவ்வாறாக அனைவரையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடியதால் ஏற்பட்ட பாரிய இழப்புகளுக்கு மேலும் முகங்கொடுக்க முடியாமல் JKLF என்ற தேசிய இனவிடுதலை இயக்கமானது தனது இராணுவப் பிரிவை 1994 இல் கலைத்துவிட்டு ஐநாவில் கொடுத்த வாக்குறுதிக்கமைய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காசுமீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பதன் மூலம் காசுமீரியர்களின் தலைவிதியைக் காசுமீரியர்களே தீர்மானிக்கட்டும் என்ற முழக்கத்தோடு தொடர்ச்சியாக JKLF அரசியல் வழியில் போராடி வருகிறது.

உண்மையில் ஜம்மு பகுதியில் வாழும் இந்துக்களால் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்தப் பகுதியில் சிறியளவில் முன்வைக்கப்படுவதுடன் அசாட் காஸ்மீர் மற்றும் ஜில்ஜிட் பல்திஸ்தான் பகுதிகளில் காஸ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்தாலே போதுமானது என்ற மனநிலை கணிசமான மக்களிடத்தில் காணப்படுகிறது. ஒட்டுமொத்த காசுமீரினை எடுத்து நோக்கில் “காசுமீர் காசுமீரியர்களுக்கே” உரிமை முழக்கமே மக்களின் கருத்தாக இருக்கிறது. அதிலும் இந்தியாவால் வன்வளைக்கப்பட்டிருக்கும் காஸ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போரில் மிக உறுதியுடன் விட்டுக்கொடுப்பின்றிப் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் நரபலிவேட்டையிலிருந்து தம்மைக் காப்பாற்ற தற்போதைக்குக் களத்திலிருக்கும் இசுலாமிய அடிப்படைவாத போராட்டக் குழுக்களின் இந்திய வன்வளைப்பாளர்களுக்கெதிரான போராட்டங்களுக்கு அந்த மக்கள் ஆதரவளித்தே வருகின்றனர். உண்மையில் காசுமீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பும் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை உலகளவில் இசுலாமிய பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் சூழ்ச்சிக்குப் பங்காற்றியிருக்கின்றன. இதனாலே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான சரியான நட்பாற்றல்களை இந்தியாவிற்குள்ளிருந்தும் அண்டையிலிருந்தும் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் போராட்ட அமைப்புகளிலிருந்து இனங்காண முடியாது போயிற்று.

இந்தியா 29 இற்கு மேற்பட்ட தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமென்றால் பாகிஸ்தானும் பல்வரிஸ்தான், சிந், பலொசிஸ்தான் போன்ற தேச விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களை ஒடுக்கியே வைத்துள்ளது.

எனவே “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என்ற உரிமை முழக்கத்துடன் போராடினாலே அது முறையான காசுமீரிய தேசிய இன விடுதலைப் போராட்டமாக அமையும். அதுவே, உலகளாவிய தேசிய இனவிடுதலை அமைப்புகளும் அவர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் போராட்டங்களைப் பன்னாட்டளவில் நிகழ்த்தவும் வழிசேர்க்கும்.

ஜெய்ஸ்- இ- மொகமட் என்ற போராட்ட அமைப்பே அண்மையில் புல்வாமாவில் நடந்த தாக்குதலை மேற்கொண்டது. இது உண்மையில் கிஸ்ப்- உல்- முகாஜிதீன் மற்றும் லக்சர்- இ- தொய்பா போன்ற பாகிஸ்தான் நலனை முன்னிறுத்தும் இசுலாமிய அடிப்படைவாதப் போராட்ட அமைப்பல்ல. இந்த அமைப்பே பதான் கோட் விமானநிலையத் தாக்குதல், இந்தியப் பாராளுமன்றம் மீதான தாக்குதல் முயற்சி உட்பட பல தாக்குதல்களை அண்மைக்காலமாக முன்னெடுத்து வரும் அமைப்பாகும். பாகிஸ்தானில் உள்ள தமக்கான ஆதரவுத் தளத்தை செயலுத்தி அடிப்படையில் இந்த அமைப்புப் பயன்படுத்தி வந்தாலும் இந்த அமைப்பானது பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைப் பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பாகக் காட்டி அதற்கு இசுலாமிய அடிப்படைவாதச் சாயம் பூசி அதற்கிருக்கும் காசுமீரிய தேசிய இன விடுதலைப் போராட்ட அமைப்பு என்ற பெருமையைப் பன்னாட்டளவில் போராடும் அமைப்புகளிலிருந்து அகற்ற இந்தியாவின் உளவுப்பிரிவு தொடர்ந்து வேலை செய்கிறது.

எனவே காசுமீரிய மக்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்காகத் தமது உறுதியான ஆதரவை வழங்க வேண்டிய பார்வை மாற்றம் தமிழர்களுக்கு உடனடித்தேவையாகும். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிடமிருந்து விடுதலை பெறத் துடிக்கும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களுக்கு உலகலாவிய தமிழர்கள் கைகொடுக்க வேண்டும். இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் இன்னும் போராட முனையாத ஏனைய தேசிய இனங்களுக்குத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்த்தும் அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்யத் தமிழர்கள் முன்வர வேண்டும். இந்தியச் சிறைக்கூடம் சிதறினால் தெற்காசியாவில் தேசிய இனங்கள் தமக்கான விடுதலைத் தேசங்களை அமைப்பது உறுதியாகிவிடும். இதற்கான வேலைத் திட்டங்களை முடுக்கும் ஆற்றல் உலகெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்குண்டு.

தமிழீழ விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்பன தவிர்க்க முடியாத வரலாற்றுக் கட்டங்கள்……….. தொடர்ந்து போராடுவோம்….

மறவன்

2019-03-03