தமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்?

2009 ற்கு பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது.

விடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய மிக மோசமான குற்றச் செயல்களான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் நுகர்வு, நிருவாக ஊழல், பாலியல் லஞ்சம், நிதி மோசடி, கொலை, கொள்ளை, குழு மோதல் போன்ற குற்றச் செயல்கள் இன்று மிக இயல்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்றுவருகிறது. இவை சிறிலங்கா அரசால் திட்டமிடப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டாலும் தமிழர் தாயகப்பகுதிகளில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவபர்கள் தமிழர்கள்தான் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சமூகக் குற்றச் செயல்களை சமூகப் பொறுப்புடன் கூடிய சமூக சிந்தையின்பாற்பட்ட பழக்கவழக்கங்களின் மூலமே இன்றைய நிலையில் கட்டுப்படுத்த முடியும் என்று காகத்தில் ஏற்கனவே எழுதியிருந்த நிலையில் (விழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன் ) இன்றும் இந்த குற்றச் செயல்கள் இடம்பெறுவதானது எம்மவர்களின் சமூக வாஞ்சை மற்றும் சமூகப் பொறுப்புக் குறித்த பண்புநிலைகள் தொடர்பில் கேள்விக்குள்ளாக்குகிறது.

சட்டத்தரணிகள்

அது தவிர தமிழர் தாயகப்பகுதிகளில் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களினால் தமிழர்களை வைத்து நடந்தேறும் சமூகச் சீரழிவுகளும், சிங்களப் புலனாய்வாளர்களால் தமிழர்களை வைத்து அரங்கேற்றும் சமூகச் சீரழிவுகளும் வெறும் செய்திகளாகக் கடந்து போகும் மனநிலைக்கு எமது மண்ணின் மக்கள் மனமாற்றமடைந்துள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. வித்தியா என்ற சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையாக மறுத்த யாழ் சட்டத்தரணிகள் அல்லது தமிழ் சட்டத்தரணிகள் இன்று தமிழர் தாயகத்தில் நடைபெறும் அத்தனை சமூக விரோதச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் காப்பாற்றும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சந்தேக நபர்களுக்காக வாதாடி அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்று நீதிமன்றம் தீர்மானிக்கவிடுவது சட்டத்தரணிகளின் தொழிலாக இருந்தாலும், ஆதாரத்தோடு கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாவது இனத்திற்குச் செய்யும் பெரும் இரண்டகமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வித்தியா கொலைக் கொடூரத்தோடு தொடர்புடையவர்களை மக்கள் பிடித்து ஊடகங்களில் வெளிப்படுத்தியதால் தான் அந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடுவதில்லையென யாழ் சட்டத்தரணிகள் முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இல்லையேல் இப்படியான பாரதூரமான குற்றசாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்காக வாதாடுவதற்கு பெருமளவிலான பணம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காரணம், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்களுடன் 2010 இல் யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு தென்னிலங்கை இசுலாமியர்களை உடனடியாகவே இரண்டு லட்சம் சரீர பிணையில் வெளியில் எடுத்து காப்பாற்றியிருந்தார் சட்டத்தரணி சர்மினி அவர்கள். தமிழர் தாயகப்பகுதியில் அதுவும் தனது சொந்த மண்ணுக்குள் தென்னிலங்கை இசுலாமியர்களால் தடைசெய்யப்பட்ட சிகரட் பொருட்கள் கொண்டுவரப்பட்டு சொந்த தமிழ் உறவுகளுக்கே விற்கப்படுகிறதே, “இதை நான் தடுக்காமல் வேறு யார் தடுப்பது” என்ற நினைப்பு வந்திருந்தால், அல்லது “புலிகள் இல்லாத வெளியில் தமிழர்களை சீரழிக்க புகுந்திருக்கும் இந்த நயவஞ்சகக் கும்பலை நானே தண்டிக்க வேண்டும்” என்ற நினைப்பு இருந்திருந்தால் அல்லது இந்த வழக்கில் முன்னிலையானால் எமது சமூகத்திற்குப் பதில் சொல்ல நேரிடும் என்ற சமூகக் கடப்பாடு இருந்திருந்தால் அந்த இரண்டு இசுலாமிய சமூக விரோதிகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பித்திருக்க முடியாது. 2010 இல் சமூக விரோதிகளுக்காக நீதிமன்றில் வாதாடிப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த சட்டத்தரணி சர்மினியின் பயணம் இன்று வாள்வெட்டு கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு வாதாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

அது போக யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்களையே ஏமாற்றி பாரிய நிதி மோசடிகளில் ஈடுபடுவோரையும், கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டுச் சாட்சிகளோடு பிடிபடும் குற்றவாளிகளையும், சாட்சியங்கள் மற்றும் பொருட்களோடு பிடிபடும் வாள்வெட்டுக் கும்பல்களுக்காகவும் சட்டத்தரணி திருக்குமரன், சட்டத்தரணி சுகாஸ் போன்றோர் நீதிமன்றில் முன்னிலையாகின்றனர். (நிதி மோசடி மற்றும் வாள்வெட்டுக் கொடூரங்களில் தொடர்புபட்ட நபர்கள் தொடர்பில் புலானாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்). யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளின் பின்னணியில், புலிகள் காலத்தில் புலம்பெயர்ந்து போன சில சமூக விரோதிகளின் செல்வாக்கும் காணப்படுகிறது. விடுதலைப்புலிகள் நிருவாகத்தில் இருந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு, புலிகளால் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியில் காணப்பட்ட பலரும் நாட்டைவிட்டுத் தப்பியோடியிருந்த நிலையில் அவர்கள் பெரும் பணங்களை முதலீடு செய்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தவொரு தொழிலும் செய்யாமல் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண இளைஞர்கள் அத்தனை பேரிடமும் விலையுயர்ந்த உந்துருளிகள் காணப்படுகின்றன. குடும்பம் பொருண்மியத்தில் நலிவுற்றிருந்தாலும் 5 இலட்சத்திற்கும் மேலதிகமான பெறுமதியுடைய உந்துருளிகளை வைத்திருப்பவர்களாகவே அந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காக சட்டத்தரணி திருக்குமரன், சட்டத்தரணி சுகாஸ், சட்டத்தரணி சர்மினி போன்றோரே நீதிமன்றில் அதிகம் முன்னிலையாகின்றனர் என்பது குறிப்பிடித்தக்கது.  (ஆவா குழு தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல்களை காகம் விரைவில் வெளியிடும்).

வித்தியா படுகொலை விடயத்தில் சமூகப் பொறுப்புடன் முடிவெடுக்கத் தெரிந்த யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் ஒன்றியம், தமிழினத்தின் இருப்பையும் சமூகத்தையும் சீரழிக்கும் குற்றச் செயல்களைச் செய்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதில்லை என்று முடிவெடுக்கத் தயங்குவது ஏன்?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் சுத்திகரிப்பு ஊழியர்களாகப் பணிபுரிபவர்களின் சட்ட விரோதச் செயல்களால் பல நோயாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பிணவறைகளில் பிணங்களை பொறுப்பேற்பதற்கு வரும் உறவினர்களிடம் பணம் பெற்ற பின்னரே பிணங்களைக் கையளிக்கும் அவலங்கள் நடந்தேறிவந்தன. இந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்தியினால் குறிப்பிட்ட ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டதும் சத்தியமூர்த்திக்கு எதிராக அரசியல் மற்றும் பிரதேசவாத நெருக்குவாரங்கள் கொடுக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது. ஒரு தமிழன் சக தமிழனின் பிணத்தைக் கையளிப்பதற்குக் கூட கையூட்டு கேட்கும் அளவிற்கு இழி நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது எமது இனத்தின் இன்றைய நிலை. பல இறுக்கமான நிருவாக நடைமுறைகளைக் கொண்டுவந்திருக்கும் சத்தியமூர்த்தியின் நிருவாகக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்காகப் பிரதேசவாதக் கருத்துகளை விதைத்து சிறு சிறு குழுக்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் செயற்படுவதாக சொல்லப்படுகிறது. தனது இனத்திற்கு கையூட்டலில்லாத நேர்மையான பணியை வழங்குவதற்குக் கூட இந்த இனம் தன்னை அணியப்படுத்திக் கொள்ளவில்லை என்பது மிக மோசமான நிலையாகும்.

நேர்மையற்ற அதிகாரிகளை, நேர்மையற்ற நிர்வாக கட்டமைப்புகளை அம்பலப்படுத்தி சமூகப்பொறுப்போடு செயற்பட வேண்டிய ஊடகர்கள் கூட பிரதேசவாத, அரசியல் கட்சிகளின் அடியாட்களாக செயற்படுகின்றனமை தமிழினத்தின் இனப்பற்று மற்றும் சமூக வாஞ்சை குறித்து கேள்வி எழுகிறது.

வடகிழக்கு உற்பத்தித் துறை

வடகிழக்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வடகிழக்கிலேயே பொருத்தமான சந்தைப்படுத்தல் ஏற்படுத்திக் கொடுக்காமல், வடகிழக்கின் உற்பத்தி மூலப் பொருட்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்காக வடகிழக்கிற்கு கொண்டுவரப்பட்டு தமிழர்களிடமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வடகிழக்கு பொருட்களின் மூலமான உபரி இலாபம் தென்னிலங்கைக்கு கிடைக்கிறது. இந்த நிலமைக்கு மிக முதன்மையான காரணம் தமிழ் அரசியல்வாதிகளே. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மட்டுமல்ல ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளிலும் அதிகமாக காணப்படுபவர்கள் சட்டத்தரணிகளே. அவர்களுக்கு இனத்தின் பொருண்மியக் கட்டமைப்புக் குறித்தோ அல்லது நிருவாக கட்டமைப்புகள் குறித்தோ தொலைநோக்கு சிந்தனையும் கிடையாது துறைசார் அறிவும் கிடையாது. இடைத்தரகர்களாக மட்டுமே அவ்ர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு இலாபம் கிடைக்கிறதா என்பதை மட்டுமமே பார்க்கிறார்கள். வடகிழக்கின் உற்பத்தியை முழுமையாக வடகிழக்கு மக்கள் எப்படிப் பயன்படுத்துவது என்றும் அதற்கான பொறிமுறை குறித்தும் இதுவரை எந்தவொரு திட்ட வரைபுகளும் முன்வைக்கப்படவில்லை. வடகிழக்கில் ஏராளமான வேளாண் உற்பத்திப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், விலங்குற்பத்திப் பொருட்கள் மற்றும் புடவை உற்பத்திகள் உற்பத்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரணைமடு யாழ்ப்பாண குடிநீர் அரசியல்  

இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் அரசியல் தொடர்பில் ஏற்கனவே எழுதப்பட்ட ஆய்வு குறித்து இந்த இணைப்பில் வாசிக்கவும். http://www.kaakam.com/?p=1408

மேலதிகமாக 2058 யாழ்ப்பாணத்தில் ஏறத்தாள 10 இலட்சம் மக்கள் இரணைமடு தண்ணீரில் தங்கியிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஏறத்தாள 2 இலட்சம் குடும்பங்கள் இரணைமடு நீரில் தங்கியிருப்பார்கள். கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதமொன்றிற்கு தண்ணீர்ச் செலவாகச் (சமையல் மற்றும் சுகாதாரச் செலவுகள்) சராசரியாக 3,000ரூபாய்கள் தேவைப்படுகிறது. இதனடிப்படையில் பார்த்தால் 2058 இல் இரணைமடு தண்ணீரில் இருந்து மாதமொன்றிற்கு 600,000,000 ரூபாய்கள் கிடைக்கும் (மாதமொன்றிற்கு 600 மில்லியன் ரூபாய்கள் அதாவது 60 கோடி ரூபாய்கள்) இந்த வருமானத்தில் இரணைமடு தண்ணீர் இயற்கையாக கிடைக்கும் மூலப் பொருள். இரணைமடு யாழ்ப்பாண நீர்வழங்கல் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருட்கள், இயந்திரச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் போக மிக பெரிய அளவிலான இலாபத்தை சிறிலங்கா அரசாங்கம் பெற இருக்கிறது. ஏற்கனவே வடமாகாணத்தில் குடிநீர் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் யாழ்மாவட்ட மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதை நிரந்த அரசாங்க வருமானமாக மாற்றும் திட்டமே இரணைமடு யாழ்ப்பாண குடிநீர் திட்டம்.  

இரணைமடு நீர்பாசனக் குளத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட உழவர்களின் உழைப்பினால் கிடைக்கும் வருமானத்தை விடவும் அந்த நீரை யாழ்ப்பாண மக்களுக்கு விற்பதன் மூலம் சரசரியாக ஆண்டிற்கு 700 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான (7000 மில்லியன் ரூபாய்கள்) பணத்தை ஈட்ட முடியும் என்பது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தினது கணக்கு. (இந்த உத்தேச கணக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே கணிக்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் நீர்ப்பயன்பாடு கணக்கில் எடுக்கப்படவில்லை)

இரணைமடு நீர் உறுஞ்சும் திட்டத்தின் மூலம் யாழ்மாவட்ட மக்களிடம் இருந்து பணம் உறுஞ்சுவது மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக முதன்மையான நிருவாக நகராகத் திகழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தின் வேளண்மையைச் சிதைப்பதன் மூலம் அதை நம்பியுள்ள மக்களை வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயரச் செய்வதும் அதன் மூலம் பலமான இராணுவக் கட்டமைப்பு ஒன்றை வடமாகாண நடுவத்தில் உருவாக்குவதும் சிறிலங்கா அரசின் திட்டமாகும். இத்தனையும் தெரிந்தும் இரணைமடு தண்ணீரை உறுஞ்சி வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தீவிர கருத்துருவாக்கத்தைச் செய்துவரும் வடமராட்சியைச் (தன்னைப் பற்றிய அறிமுகத்தை அப்படியே எப்போதும் ஆரம்பிப்பதால் குறிப்பிடப்படுகிறது) சேர்ந்த கலாநிதி சிவகுமார் (இயந்திரவியல் பீட இணைப்பாளர், கிளிநொச்சி, யாழ் பல்கலைக்கழகம்) சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமன்றித் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அதிகார மட்டத்திலும் செல்வாக்குள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஈபிடிபி உள்ளிட்ட இதர தமிழ் அரசியல் கட்சிகளும் இரணைமடு நீரை உறுஞ்சும் திட்டத்தை தீவிரமாக ஆதரக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது). அது போக கலாநிதி சிவகுமார் தமிழரசுக்கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு சுமந்திரனைத் தொடர்ந்து அரசியலமைப்பு உருவாக்க முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கு கூர்ந்து நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இரணைமடு நீர் உறிஞ்சும் திட்டத்தின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டு அது தமிழ் மக்களால் தோற்கடிக்கபட முன்னர் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் ரவ்ஃ ஹக்கீம், மைத்திரி ரணில் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இருக்கின்றன. மக்களின் எழுச்சியைத் தடுத்து அதற்கான கருத்துருவாக்கத்தைச் செய்யும் பணியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வழிகாட்டலில் கலாநிதி சிவகுமார் செய்துவருகிறார். யாழ் மாவட்டத்திற்கான நிரந்தர நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பல தமிழ்ப் பொறியியலாளர்கள் ஆய்வுகளையும் களப் பணிகளையும் மேற்கொண்டுவரும் நிலையில் தனது அரச செல்வாக்கின் மூலம் முட்டுக்கட்டைகளை கலாநிதி சிவகுமார் போட்டுவருவதும் நோக்கப்பட்டு வருகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் உருவாக்கப்பட்ட அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து அதன் நீண்டகால அழிப்புத் திட்டம் குறித்தும் சிவகுமார் மற்றும் அவரது பின்புலத்தாரின் தமிழர் விரோத செயற்பாடுகள் குறித்தும் மக்களுக்கு விளக்கமளிக்கப்படல் வேண்டும்.

நிருவாக ஊழல்கள்

வடகிழக்கு அரச மற்றும் தனியார் நிருவாகப் பணிமனைகளில் எண்ணற்ற ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. நலிவுற்ற பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்பது முதல் “500 ரூபாய் காசு குடுத்தால் வேலை வேகமாக நடக்கும்” என்று சொல்லும் அளவிற்கு தமிழர்களின் நிருவாகம் தரமிழந்து காணப்படுகிறது. தமது சொந்த மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்ற இன உணர்விழந்து வெறுமனே பணத்திற்காக தன் இனத்தவனையே கீழ்மைப்படுத்தி வாழும் இழி நிலையை தமிழ்ச் சமூகம் எட்யிருப்பதை இயல்பாகக் கடந்துவிடக் கூடாது.

எப்படி மாற்றுவது!

அரச ஓத்தோடிகளாகவும் நிருவாகங்களில் நேர்மையற்றவர்களாகவும், தமது பணிகளில் இன உணர்வற்றவர்களாகவும் அடையாளம் காணப்படுவோரை நிரல்படுத்தி வெளியிட்டு முதலில் எச்சரிக்கை வழங்குதல் வேண்டும். அவர்கள் தொடர்ச்சியாக இன விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் மக்களே தண்டனை கொடுத்தல் வேண்டும்.

தேனு

19-02-2019

Loading

(Visited 31 times, 1 visits today)