ஓ, பத்தாயிரம் கைதிகளே! – தெளபீக் சையத்

எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.

தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.

ஓ, பத்தாயிரம் கைதிகளே!

என் அன்புக்குரியோரே,

ஓ, பத்தாயிரம் கைதிகளே

உங்கள் குரலோ,உறுதிகொண்டெழுந்த

உமது மக்களின் உளம் தொடுகின்றது.

உங்கள் நிலைப்பாடு,உறுதிகொண் டெழுந்த

உமது மக்கள் தலைநிமிரச் செய்கிறது.

உங்களை நாங்கள் ஒருபோதும் மறவோம்

 

நாங்கள் எல்லோரும் உம்மமுடம் உள்ளோம்.

சுதந்திரத்தின் விலையினைச் செலுத்தி,

நம் தாயகத்தில்

 

சுதந்திரச் சூரியன் உதிக்கும் வரைக்கும்

நாங்கள் எல்லோரும் உம்முடன் இருப்போம்

அந்த நாள் வருகிறது

அது விரைந்து வருகிறது.

என் இசைக் கருவியை எடுத்துச் செல்வேன்

வீதிகள் தோறும் பாடித் திரிவேன்.

 

என் பட்டின மெல்லாம்

கிராமங்கள், பரிசுகள் குவியும்

விடுதலை பெற்ற என் தாய்நாட்டிற்காக

இங்கிருந்து நான் பாடல் இசைப்பேன்

எங்கும் நான் பாடல் இசைப்பேன்

அந்த நாள் வருகிறது

அது விரைந்து வருகிறது.

 

எனது பேனையை

இதயத்தில் தோய்த்து, நான் எடுத்துச் செல்வேன்

பூவின் இதழ்களில் நான் அதால் எழுதுவேன்

பறவைச் சிறகில் நான் அதால் எழுதுவேன்

காற்றில் நிமிர்ந்த மரக் கொப்புகளில்

நான் அதால் எழுதுவேன்

எனது பண்ணைகளில், தொழிற்சாலைகளிலன்

வாசற் கதவிலும்

பாலகர்களின் உள்ளங்க கையிலும்

புனித வீரர் நினைவாலயத்திலும்

இராணுவ வீரரின் தோள்ப் பட்டையிலும்

நான் எழுதுவேன், தொடர்ந்தும் எழுதுவேன்

இங்கும் எழுதுவேன்

கைப்பற்றப்பட்ட ஜெருசலேமிலும்

காசாவிலும், கோலானிலும்

எல்லா இடமும் இதை நான் எழுதுவேன்.

 

முன் ஒரு காலம் என் தாய் நாடு

கைப்பற்றப்பட்ட அடிமையாய் இருந்ததது

ஆனால் இன்றே சுதந்திரம் பெற்றது

கைப்பற்றியவன் கழிந்து மறைந்தான்

இன்று அவன் வெறும் நினைவு மட்டுமே.

 

நான் வாழ்வேன்,

உயிர்த்துடிப்புடன் இருப்பேன்

அசையும் ஒரு சிறு காற்றில்

ஒரு பூவில், ஒரு பச்சைப் புல் இதழில்,

ஓடும் நீரின் ஒரு சிறு தாரையில்

இடையன் ஒருவனின் புல்லாங் குழலில்

சூரிய ஒளியில், மௌனத்தில்

அசையும் இறக்கைத் துடிப்பில்

நான் வாழ்வேன்.

 

உயிர்த்துடிப்புடன் இருப்னே்.

 

என் மூதாதையரின் தாய்த்திரு நாட்டில்

இறுதிநாள் வரை,

நான் மறுபிறப் பெடுப்பேன்

 

வெற்றியுடனும்

சுதந்திர மனிதனின் வைகறையுடனும்

எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால்

இறுதி நாள் வரை

நான் மறுபிறப் பெடுப்பேன்.

 

Loading

(Visited 21 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply