
உலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து பேணுதற்கும் தேச அரசை அமைப்பதை நோக்கிப் பயணப்படுவதற்கும் அது தனக்கென தொடர்ச்சியான பொருண்மிய மரபினைக் கொண்டிருக்கவேண்டும். அந்தத் தேசிய இனத்தின் இருப்பினைத் தீர்மானிக்கும் பொருண்மியமரபானது, தமிழர்களைப் பொறுத்தவரையில் உழவும் கடலுமென விரிந்து கிடந்தது. ஆயினும் இன்று முள்ளிவாய்க்காலில் விடுதலைப்போராட்டம் பேசாநிலைக்கு வந்தது போல, பொருண்மியமும் நந்திக்கடலினுள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. எந்தவொரு அதிகாரவர்க்கமும் எந்தவொரு இனத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவேண்டுமெனில் அதன் பொருண்மியமரபைச் சிதைத்து, அந்தச் சிதைவுகளின்வழி அதிகாரத்தை உட்புகுத்த நினைக்கும். எமது மக்களுடைய வாழ்வியல் பொருண்மியக்கட்டமைப்பு உடைபட்டுப்போக, இன்று மக்கள் பொருண்மிய அடிமைகளாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் முதனிலை வகிப்பது நுண்கடன்கள். முதலாளித்துவத்தின் கூறான வட்டிக்கடையின் நவீன வடிவமான நுண்கடன்களும் அதன் விளைவுகளும் பொதுவெளியில் விவாதிக்கப்படவேண்டியவை. அதன் உரையாடல்கள் அங்காங்கே காணப்படினும், அதன் மீதான காத்திரமான ஓரு பொதுவெளி அலையை உருவாக்கவேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
நுண்கடன் என்பது அரச அல்லது தனியார் வங்கிகளால் வழங்கப்படும் சிறுதொகைக் கடன்களைக்குறிக்கின்றது. ஆனால் அரச வங்கிகளில் கடன் பெறுதல் என்பது எளிய மக்களுக்கு முயற்கொம்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போரினால் வாழ்வியல் மட்டுமல்ல பொருண்மியமும் சிதைந்துபோயுள்ள நிலையில் மக்களுடைய நிதித்தேவை என்பது மிகவும் அதிகளவில் உள்ளது. குடும்பத்தில் உழைக்கும் மகனையோ மகளையோ கணவனையோ இழந்த மக்களினுடைய அன்றாட வருமானம் சுழியமாக இருக்கின்றது. மக்களுடைய தேவைகளுக்கும் அரச வங்கிகளினுடைய கடன் திட்டங்களுக்குமிடையில் நிலவும் பாரிய இடைவெளியை தனியார் நுண்கடன்கள் இலகுவாக நிரப்பிக்கொண்டன. வீட்டுச் சமையற்கட்டுவரை கடன்திட்டங்கள் வந்துசேர்கின்றன. ஆயினும், கோட்பாட்டளவில் மக்களுடைய பொருண்மிய மேம்பாட்டுக்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த நுண்கடன் என்கிற போர்வைக்குள் நின்று நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள் இன்று உண்மையில் அறாவட்டிக்கடைகளாகவே இயங்குகின்றன.
மக்களுடைய வாழ்வியல் போராட்டங்கள் அவர்களை மீளாக் கடன்சுமைக்குள் அமிழ்த்தி மீண்டும் சுழிய நிலைக்கு அவர்களது வாழ்க்கையை இட்டுச்செல்கின்றன. பொருண்மிய மேம்பாடென்ற போர்வையில் வட்டிக்கடைகளை நடத்தும் குட்டி முதலாளிகளின் அடாவடித்தனங்களுக்கு கைக்கூலிகளாகி, தவணைக் கட்டணத்தை அடித்தேனும் புடுங்க வரும் எம்மவர்களும் அடிவாங்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்தேறியிருக்கின்றன. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் “கூகுள்” அறியாத குச்சொழுங்கைகளைக் கூட இந்த நுண்கடன் திட்டங்கள் அறிந்துவைத்திருக்கின்றன. அதன் பின்னர் நுண்கடனைக் கட்டவென வேறொரு நுண்கடன், அதனைக் கட்ட பிறிதொரு நுண்கடன் என வாரத்தில் ஒரு நாள் கடன் கட்டுவதற்கேனும் உழைப்பு கிடைக்காதா என்று திரிந்தவர்கள், பின்னர் வாரம் முழுவதும் கடன் கட்டுவதற்காக மட்டும் உழைத்து, உருக்குலைந்து, இறுதியில் தூக்கில் தொங்கிய பின்னரே அந்த ஊருக்கான வழி பக்கத்து ஊர் மக்களுக்கே தெரிய வரும்.
மக்கள் பொருண்மிய விருத்திக்காகக் கேட்கவில்லை என்றும் பணத்தேவைகளுககாகவே கேட்கிறார்கள் என்று தெரிந்தும், கடனைக் கொடுத்துவிட்டு, இரத்தக்காட்டேறிகளாய் மக்களின் வியர்வையை உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். தவணைமுறையில் செலுத்துவார்களா என்ற கண்காணிப்பு பொறிமுறை ஒன்று இல்லாது, கடனை வழங்கும் இவ்வாறான நுண்நிதிக் கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தப் பொறிமுறையும் இல்லையா என்ன? அல்லது வடக்கு கிழக்கில் மட்டும் அந்தப் பொறிமுறைகள் ஓய்வுநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனவா? உண்மையான பொருண்மிய விருத்திக்காக நிகழ்ந்திருப்பின் முள்ளிவாய்க்காலின் பின்னரான 10 ஆண்டுகளில் மக்களின் பொருண்மியம் விருத்தியடைந்திருக்க வேண்டும். மாறாக, தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கடன்கட்ட முடியாதவர்களை அரசாங்கம் பொறுப்பெடுக்கும் என்று மைத்திரி சொன்ன வாக்கு, அரசாங்கத்தின் வழமையான பொய்களில் ஒன்றாகிவிட்டது.
தொடர்ச்சியான இடப்பெயர்வு, குடும்பங்களில் முன்னர் செய்து வந்த தொழில்களைத் தொடரமுடியாமை, உழைப்பவரைப் போர் தின்ற அவலம் என நுண்நிதிக் கடன் என்னும் அட்டை இலகுவாக ஒட்டுவதற்கு எம்மிடமும் ஆயிரம் கிழிஞ்சல்கள். மூன்று வேளை உணவில் ஒருநேரம் வெதுப்பியும் தண்ணீரும் சாப்பிட்டால் கூட பக்கத்து வீட்டுக்கு தெரியாமல் வளர்ந்த தமிழினம் இன்று கண்டநிண்டவனிடத்தில் எல்லாம் கையேந்தி நிற்கின்றது. வீட்டில் உலை வைக்கவில்லை என்று கூறுவதற்கு தன்மானம் இடம்கொடுக்காத தமிழினம் இன்று நுண்நிதிக்கடன் கட்ட முடியாமல் போகும் போது, நுண்நிதிக்கடன் அறவிடுவோரின் அடாவடித்தனங்களால் நடுவீதியில் கூறுபோட்டு விடப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கடன் என்று சொல்வதற்குள் ஆயிரம் தடவைகள் நிர்வாணப்படுத்தப்படுவதாய் உணர்ந்தவர்கள் இன்று, கடனா? வாழ்க்கையெண்டா கடன்தண்ணி இருக்கத்தானே செய்யும் என்று இயல்பாகக் கடந்துபோகுமளவிற்கு வந்துவிட்டது. “கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கூறுமளவிற்கு, கடன் பட்டவர்களில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்கள் தம் வாழ்க்கையைத் தாமே முடித்துக்கொண்டுவிடுகிறார்கள்.
கடன் தவணைக்கான நாள் விடியும்போதே, காசு கையில் இல்லை.. கடன் அறவிடுபவனிடம் எவ்வாறு சமாளிப்பது.. ஊரிற்கு பறைதட்டி மானத்தை விற்றுவிடுவானே என்றெல்லாம் கலங்கித் தவிக்கும் ஆயிரம் பெண்களின் விடியல்கள் இன்றும் இருக்கின்றன. அதிலும் நுண்கடனுக்கு பலியாகிப்போவது பெண்கள் தான். வீட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய இயலாதபோது, தன் அறிவுக்கு எட்டியவரையில் தவறில்லை என உணர்ந்து, பெண்கள் குழுக்களுடன் இணைந்து நுண்கடனைப் பெற்றுவிடுகின்றனர். ஆரம்ப வாரங்களில் அந்தக் கடன் பணத்தில் தவணைக்கடனைக் கட்டும் பெண்களுக்கு, தொடர்ந்து வரும் வாரங்களின் தவணைக்கட்டணங்கள் தூக்குக் கயிறுகளாகின்றன. பிள்ளைகளின் சாப்பாட்டிற்கோ, படிப்புச்செலவிற்கோ மட்டுமே அந்தப் பெண் கடன் எடுத்திருந்தால் கூட, அறவிடுபவன் வீட்டின் சமையற்கட்டு வரை வந்து அடாவடித்தனம் செய்யும் போது, பிள்ளைகளிடம் தாய் பற்றிய படிமம் மாறுபடத்தொடங்குகிறது. கணவன் இருக்கும் குடும்பமெனின், குந்தியிருந்து கடனில் சாப்பிட்டுவிட்டு, கடன் அறவிடுபவன் வரும்போது மனைவியைக் கேவலமாக நடத்தும் ஆண் சிங்கங்களும் எம் சமூகத்தில் இருக்கிறார்கள். கணவன் இல்லாத பெண் எனின், சும்மாவே உருவாடும் சமூகத்திற்கு, கையில் வேப்பிலை கொடுத்ததுபோல, ஆடித்தீர்த்துவிடும். கடன் அறவிடுபவன் வரும்போது, கையில் காசு இல்லையெனின் தாய் ஒழித்துவிட்டு, தான் இல்லையெனப் பொய் சொல்லச் சொல்லும் சந்தர்ப்பங்களில், புரைதீர்ந்த நன்மையற்ற பொய்யினால், பிள்ளைகளும் பொய்களை இயல்பாக்கிவிடுகிறார்கள். அதைவிட, நுண்நிதிக்கடன் வழங்குபவர்கள் தனிநபர்களுக்கு பணம் கொடுப்பதில்லை. ஐந்து தொடக்கம் ஏழு பேர் கொண்ட குழுக்கள் என குழுக்களாகவே கடன் வாங்க முடியும். கடன் வாங்கச் செல்லும்போது மச்சாள்மார் போல கைகோர்த்து செல்லும் பெண்கள் குழு, ஒருவர் கட்ட இயலாத போது, ஏனையவர்களிடம் அந்தப் பணம் கேட்கப்படும். எல்லோருடைய தவணைப் பணங்களும் சேர்த்துதான் கட்டவேண்டும் என்று கூறும்போது, மச்சாள்மாராக சென்றவர்கள் மாமிமார்களாக மாறி, கடன் கட்டமுடியாத பெண்ணை வசைபாடத்தொடங்குவார்கள். நுண்நிதிக்கடன்களால் பொருண்மியச் சிதைவு மட்டுமல்லாது, சமூகக் கட்டமைப்பிலும் சிதைவுகள் ஏற்படுகின்றன. தமிழினத்தைப் பொறுத்தவரையில் அதன் மரபுத்தொடர்ச்சியில் சமூகமாக வாழும் கட்டமைப்புகள் பெரும்பங்குவகித்திருக்கின்றன. ஆனால், போர் தின்ற கட்டமைப்புகள் போக எஞ்சியவற்றை நுண்நதிக்கடன்கள் தின்றுகொண்டிருக்கின்றன. தங்கள் குடும்பத்தில் ஒருவன் மீளமுடியா பொருண்மியச் சிக்கலில் இருக்கின்றான் என்றால் சுற்றம் கூடி, அவனது சுமையைத் தாங்கியிருக்கின்றது. ஆனால் இன்று சமூகக் கட்டமைப்புகளின் சிதைவினால், உலகம் கையிற்குள் சுருங்கிவிட்டது என்று கூறினாலும், சமூகங்களுக்குள் ஏதோ ஒரு இடைவெளியைப் போர் ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த இடைவெளிகளுக்கிடையில் அகழிகளை வெட்டி, அதனுள் நீந்திக்கொண்டிருக்கின்றார்கள் குட்டி முதலாளிகள்.
எதைப்பற்றிக் கதைத்தாலும் போர் என்று பேசுகின்றோமே அது ஒரு சடங்குச்சொல்லாக மாறிவிட்டதா என்னும் கேள்வி எழலாம். ஒரு இனத்தினுடைய இருப்பு, அவனது மண்ணில் தங்கியிருக்கும். அந்த மண்ணில் அவனது உரிமை மறுக்கப்படும்போது, இனத்தினுடைய எல்லாக் கட்டமைப்புகளும் சிதைந்துபோகும். விடுதலைப்புலிகளின் ஆட்சியில் கடன் திட்டம் இருந்திருக்கவில்லையா என்று சிலர் கேட்கலாம். நுண்நிதிக் கடன் திட்டங்கள் மிக மோசமானவை என்று கூறிவிடவும் முடியாது. அது பொருண்மியப் பார்வையற்ற பாமரர்களின் பார்வை. அதேநேரம் அது ஒரு சிறந்த பொருண்மிய மேம்பாட்டுத் திட்டமும் இல்லை. விடுதலைப்புலிகளின் காலத்திலும் கடன்திட்டங்கள் இருந்தன. ஆனால் அதற்கென ஒரு கண்காணிப்புப் பொறிமுறை இருந்தது. கால்நடை வளர்ப்பு, சிறுதொழில், வேளாண்மை, உற்பத்தித்துறை என்பனவற்றிற்கு என பல்வேறு வடிவங்களினாலான திட்டங்களுக்கு நுண்நிதிக்கடன்கள் வழங்கப்பட்டன. இன்றும் நுண்நிதிக்கடன்கள் பொருண்மிய மேம்பாடென்னும் பெயரிலே நடைபெற்றாலும், அவை பொருண்மிய மேம்பாட்டுக்காய் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது கடன் வாங்குபவனுக்கும் கடன் கொடுப்பவனுக்கும் தெரியும். ஆயினும் ஆவணங்களில் மட்டும் கடன்களுக்கான காரணங்கள் எழுத்துகளில் உறங்கிக்கிடக்கின்றன.
தன்னிறைவுப்பொருண்மியத்தினை மரபுவழியாகக் கொண்ட தமிழர்களின் நிலை இன்று இவ்வாறு மாறிப்போனதற்கு அவர்களது நுகர்வுப் பண்பாட்டு மாற்றமும் ஒரு காலாகிறது. தேவையான பொருட்களை மட்டுமே வாங்கிய மக்கள் இன்று ஆடம்பரத்திற்காகவும் பிறருக்காகவுமென தேவையற்ற பொருட்களை வாங்கிக்குவிக்கிறார்கள். புலம்பெயர் பணத்தில் வாழும் சிலரது வாழ்வியல் முறையைப் பார்த்து கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிகளாய் கடன்பட்டேனும் பொருட்களினை வாங்கிக்குவிக்கிறார்கள். ஆடம்பரப்பொருட்களைப் பார்த்து அவாப்பட்டும், விரலுக்கேத்த வீக்கம் தான் இருக்கவேண்டும் என்று அமைதிகொள்பவர்களை, படலைக்கு படலை வரும் வியாபார நிறுவனங்கள் உசுப்பிவிடுகின்றன. முன் வீட்டுக்காரர் வாங்கினவை என்று ஆரம்பிக்கும் முகவர்களுக்கு அதைவிட வேறு விளம்பரம் தேவைப்படுவதில்லை. ஆனால் வரவிற்கு மீறி கட்டில், குளிர்சாதனப் பெட்டி, மேசைகள், கதிரைகள், தொலைக்காட்சிப்பெட்டி, முச்சக்கரவண்டி எனத் தொடரும் பொருட்களின் பட்டியல் நீள நீள, நுண்நிதிக்கடன்களின் பட்டியலும் நீண்டுகொண்டு போகும். ஆனால், இறுதியில் வலிந்து திணித்தவனே, வலிதாக வந்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான். அதுவரை கட்டிய பணமும் போய், மரியாதையும் போக அவர்களிற்கு எஞ்சுவது நுண்கடன் மட்டுமே.
தமிழர்களின் மரபில் கடன் வாங்குதல் என்பது இழிவாகவே பார்க்கப்பட்டிருக்கின்றது. தமிழரின் வாழ்வியல் நெறியான வள்ளுவம்,
“இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டதில்”
என்கிறது. அதாவது வறுமையால் வரும் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதுவது மிகக் கொடியது என்கிறார். அதே வள்ளுவம் தான்
“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு “
என்றும் கூறுகின்றது.
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற மரபின் வழி வந்தவர்கள் இன்று கந்தைக்காகக் கடன்படவில்லை. பத்தாயிரம் ரூபாயில் வரும் பஞ்சாபி வாங்குவதற்கு கடன் வாங்குகிறார்கள். கடன் கட்டி முடிவதற்குள் அந்த வலைத்துணி, கிழிஞ்சு சீலம்பாயாகிப்போய்விடுவது தனிக்கதை. பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு கனடாவிலிருந்து உந்துருளியும் லண்டனிலிருந்து அப்பிளும் வந்தால், முள்ளிவாய்க்காலில் முழுவதையும் தொலைத்துவிட்டு ஏதிலியாய் நிற்கும் தாயின் மகன் என்ன செய்வான்? சாகப்போவதாக மிரட்டி. உந்துருளி வாங்குவதற்கான ஆரம்பக் கட்டுப்பணத்தை நுண்கடனிலிருந்து வாங்கி, தொடர்ந்த மாதங்களிற்கு உந்துருளியின் கட்டுப்பணம், நுண்நிதிக்கடனின் கட்டுப்பணம் என இரட்டைக்கடனைச் சுமக்கும் தாய் என்ன செய்வாள்? கடன்கள் கயிறாக மாறி கழுத்தை நெரிக்கும். வடக்கு கிழக்கில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் நுண்கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் மக்கள் தமது உற்பத்திகளைத் தாமே நுகர்கின்ற காலத்தில் அவர்களுக்கு கடன்வாங்கவேண்டிய தேவையின் நூற்றுக்கூறு குறைவாக இருந்தது. தொன்றுதொட்டு வரும் உழவுத்தொழிலே என்பதற்கு சிலப்பதிகாரத்தின்,
கோவலன் காணாய்!
கொண்ட இந்நெறிக்கு
ஏதும் தருவன யாங்கும் பல
கேள்மோ!
வெயில் நிறம்பொறாஅ
மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை”
என்ற பாடலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நாட்டில் எங்கு சென்றாலும் உழவுத்தொழில் இருக்கும் என்பது இதன் பொருளாகும். ஆயின் இன்று நுகர்வுப் பழக்கம் மாறுபட்டிருப்பதால் உணவுக்கான செலவு அதிகமாகிவிட்டது. பொருண்மிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக மாறிவிட்ட நாங்கள் பைகளில் அடைக்கப்பட்ட அலங்காரங்களில் எங்கள் பணப்பைகளைத் தொலைத்துவிடுகின்றோம். கடன் வாங்கலாம் என்ற மனநிலை வந்துவிட்டால் அதுசார்ந்த மறை குணங்களும் இலவச இணைப்பாக வந்துசேர்ந்துவிடும். தனிமனிதனில் ஏற்படும் இந்த இயல்பு மாற்றம், பரவலடைந்து ஏனையோருக்கும் தொற்றி, மாறாத தொற்றுநோயாக சமூகத்தில் புரையோடிவிடும்.
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்கிறார் வள்ளுவர். அதாவது வருவாய் வரும்வழி சிறிதாக இருந்தாலும், வருவாய் போகும் வழி பெரிதாக இல்லாவிடின் அதனால் தீங்கில்லை என்கிறார்.
மக்களுடைய வறுமையைப் போக்கி, பொருண்மிய மேம்பாடுதான் இலக்கு எனக் களமிறங்கிய நுண்நிதி நிறுவனங்களுக்கு, வடக்கு கிழக்கு மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தமை இலங்கைத்தீவில் இருப்பவர்களுக்கு புதிய விடயமல்ல. ஆயினும் இந்தக் கடன்களால் என்படும் சமூக பொருண்மிய உளவியல் தாக்கங்களுக்கான மாற்றுபொறிமுறையொன்றினை இலஙகை அரசாங்கமோ அல்லது, வடக்கு கிழக்கு மாகாண சபைகளோ கொண்டிருக்கின்றனவா?
நுண்நிதிக்கடன் என்னும் சுழலுக்குள் ஒருதடவை வீழ்ந்தவர்கள் மறுபடியும் எழுந்தது மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் கடனுக்கு மேல் கடன் என்று அந்தச் சுழலுக்குள் அமிழ்ந்துபோய் விடுகிறார்கள். கடனைக் கட்டவென்று ஆண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து இடைவிலத்தி, வேலைக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது. அதுமட்டுமல்லாது, கடனை அறவிடுபவர்கள், நேரடியாக வீடுகளுக்குச் சென்று, பெண்களைத் தகாத சொற்களில் வைது, உளரீதியாக அவர்களை ஒடுக்குகிறார்கள். நுண்நிதி நிறுவனங்களுக்கு மக்களைப் பற்றியோ, அவர்களது வாழ்வியல் பற்றியோ எந்தவித பொறுப்புக்கூறலும் இல்லை. அவர்களது கடன்களை அறவிடும் முகவர்கள் பற்றிக்கூட அவர்கள் சிந்திப்பதில்லை. அன்றைய நாளிற்கான அறவீடு வரவிவ்வை எனின், குறிப்பிட்ட முகவரின் சம்பளத்திலிருந்து அந்தப் பணம் கழிக்கப்படும். ஆகவே அவர்கள் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து, பணத்தை அறவிடுவதில் முனைப்புக் காட்டுகிறார்களே தவிர, மக்களுடைய வாழ்வியல், அவர்களது சூழல் என எதையும் கணக்கிலெடுப்பதில்லை.
நுண்நிதிக்கடன்சுமைக்குள் சிக்குண்டு கிடப்பது பெண்களே. இதனால் பாலியல் ரீதியான சிக்கல்களுக்கும் முகங்கொடுப்பதான கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே சிதைந்து போயிருக்கின்ற சமூகக் கட்டமைப்பை உடைத்து, மக்களை எந்தநேரமும் மன உளைச்சலுக்குள் வைத்திருக்;க விரும்பும் அரச பயங்கரவாதத்தின் சூழ்ச்சியாகவும் இதனைக் கருதலாம். தன் சார்ந்த உளவியற்சிக்கல்களுக்குள் இருக்கும் ஒருவனால் நாடுசார்ந்து சிந்திக்க முடியாது, அல்லது மிகக் குறைவான பங்களிப்பே இருக்கும் என்பது வெளிப்படை உண்மை. நுண்நிதித் திட்டங்கள் மெல்லக் கொல்லும் விசமாகப் படர்ந்து, மக்களின் பொருண்மியத்தின் கழுத்தைச் சுற்ற வளைத்துள்ளது. இப்போதும் நாங்கள் விழிப்படையாவிட்டால், இருக்கிற கோவணத்தையும் இழந்துநிற்பது உறுதி.
நுண்கடன்கள் மக்களின் பொருண்மியத்தினை விருத்திசெய்ய வந்தது என்பதில் நுண்நிதி நிறுவனங்களுக்குத் தெளிவிருந்தால், கடன் வழங்க முன்னர் கடன் வாங்குபவரின் பண நிலையைக் கருத்திற்கொள்வது முதன்மையானது. அதே போல கடன் வாங்குபவர்களும் தங்களுடைய விருத்திக்கு இந்தப் பணம் தேவை என்று உறுதியாக நினைப்பின் மட்டுமே வாங்க வேண்டும். “கிராமப்புறப் பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறு வியாபாரம் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வறுமையைத் தாங்களாகவே ஒழித்துக் கொள்வதற்கு உதவுவது தான் இதன் நோக்கம்” என பெண்களுக்கான உலக வங்கி என்ற அமைப்பு கூறுகின்றது. ஆனால் இன்று அது வட்டிக்கடைகளாக மாறி, ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக, தேசிய இனங்களின் மரபுக் கடத்திகளான ஏழைமக்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகின்றது.
பொருண்மிய ஏகாதிபத்தியத்திற்கு மக்களின் வறுமைகூட ஒரு சந்தைதான். அதன் மூலம் குறிப்பிட்ட நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் நுண்மையான அரசியலையும் ஏகாதிபத்தியங்கள் செய்கின்றன. பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்களின் இந்த கொள்ளையில் நேரடியாகப் பலியாவது நடுத்தரக்கீழ் பொருண்மிய நிலையில் இருக்கும் மக்கள். அதுவும் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். வெளியிலிருந்து பார்த்தால் வாராவாரம் காசு கட்டும் இலகு நிகழ்வாகத் தோன்றும் நுண்கடன்களின் பன்னாட்டுக் கட்டமைப்பு, மிகவும் திட்டமிடப்பட்டது. வறுமையில் வாடும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கிறேன் என்று ஊர் எழுச்சியை ஊக்குவிப்பதாகக் கூறும் அரசு, அந்தக் கடன் திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியை எமக்குள் கேட்டாலே, எமது தன்னிறைவுப் பொருண்மயத்தின் தேவை விளங்கிவிடும். விடுதலைக்காகப் போராடிய இனமொன்றின் தோல்வியின் குறியீடுகள் மண்ணில் புதைந்தும், போரின் வடுக்களும் மட்டுமல்ல. மக்களின் வறுமையும் அந்தத் தோல்வியை எமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றது.
அதிகாரத்தின் கைகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை இன்னமும் கடன் என்ற வடிவத்தில் சிக்கிக்கிடக்கின்றது. மக்களுக்குரிய ஆட்சி என்பது கட்டிறுக்கமான பொருண்மியத்தை கட்டியமைப்பதாகும். பண்டைத் தமிழர்களின் வாழ்வில் கட்டிறுக்கமான பொருண்மிய மரபு இருந்ததெனின் அதற்கான காரணமாக, நாட்டின் உழவினைச் சொல்லுவர். சிலம்பின் வேனில் காதையில்,
“கரியவன் புகையினும் பகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு…….
கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில்,
என்ற பாடலினூடாக இயற்கை தன் இயல்புக்கு மாளாக நடந்தால் கூட, குன்றாத அளவுக்கு நாட்டுவளம் இருக்குமெனக் கூறப்படுகின்றது. ஆனால் இன்று, சிறு வெள்ளம் வந்தால் கூட, மறுபடியும் சுழியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கவேண்டியிருக்குமளவுக்கு நலிவான பொருண்மியத்தைக் கொண்ட எம் வாழ்வியல் கூட எங்கள் போராட்டத்தின் தோல்வியின் வடு தானே? அந்த வடுக்களிலிருந்து எப்போது மீண்டெழப்போகிறோம்? இது இன்றைய அன்றாடச் சிக்கலும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சிக்கலும் இல்லையா?
-தழலி-
2019.02.03
8,147 total views, 6 views today