ராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை-

தலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்து கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்தக் காணொளியில் அவர் பேசும் முறையை நுண்ணறிவின்றி நோக்கில் தமிழர்கள் ஏமாறத்தான் செய்வார்கள். மிக நுணுக்கமாக சூழ்ச்சியாக இந்திய உளவுத்துறைக்குத் தேவையான கருத்தேற்றங்களை உள்ளீடு செய்து பாதிரிக்குக் கைவந்த கலையான உளவியல் அணுகுமுறையுடன் அந்தக் காணொளியை பாதிரி கசுபர் வெளியிட்டிருந்தார். மெல்லெனக் கொல்லும் நஞ்சாக புகழ்வது போல் இகழ்ந்து கேட்போரை மடையர்களாக்கியவாறே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீள் எழுகைக்கான முனைப்புகள் அனைத்துத் தளங்களிலும் வாய்ப்பற்றதொன்றாகவே இருக்கிறதெனக் காட்டுவதற்கென்றே வெளியிடப்பட்ட இந்தப் பாதிரியின் காணொளி போன்ற பல சூழ்ச்சிகள் தாங்கி வரும் விடயங்களை எட்டி உதைந்து காறி உமிழ்ந்து விரட்ட வேண்டும் என்ற விழிப்பில் தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.

யார் இந்த பாதிரி யெகத் கசுபர்?

கத்தோலிக்கப் பாதிரியாகிய இந்த கசுபர் 1995- 2002 வரையான காலப் பகுதியில் பிலிப்பைன்சு தலைநகர் மணிலாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் வெரித்தாசு வானொலியின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தார். உலக வல்லாண்மையாளர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் வெரித்தாசு போன்ற ஊடகங்கள் அமெரிக்க உளவுச் சூழ்ச்சிகளின் ஊடுருவல்களுக்கு வசதியான மூடுதிரையாக அவலப்படும் மக்களின் குரல்களைத் தாம் வெளிப்படுத்துபவர்களாகப் பாசாங்கு செய்தவாறு அவலப்படும் மக்களின் விடுதலைக்காக உலகளவில் பாடுபடும் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவுவார்கள். தமிழீழ மக்கள் மீதான சிறிலங்காவின் கொடுமைகள் வெளியுலகிற்குப் பெரிதளவில் எடுத்துச் செல்லப்படாத காலத்தில், அன்று தமிழீழ மக்களின் அவலக் குரல்களை (விடுதலை வேட்கையை அல்ல) வெளியுலகிற்கு வெரித்தாசு போன்ற வானொலிகள் எடுத்துச் சென்றதால் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களிடத்தில் பெருமளவிலும் தமிழீழ தாயகத்தில் வாழும் மக்களிடத்தில் ஓரளவும் வெரித்தாசு என்ற வானொலி செல்வாக்குப் பெற்றது.  ஊரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் பேரார்வத்துடன் இருந்த புலம்பெயர் மக்களிடத்தில் காகிதப் போக்குவரத்துக் கூட முறையாக இல்லாத காலத்தில் வெரித்தாசு வானொலி செல்வாக்குப் பெற்றமையைக் கண்ணுற்ற பாதிரி கசுபர் உறவுப்பாலம் என்ற வானொலி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ததன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் அறிமுகத்தையும் அங்குள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புரவலர்களுடன் நட்புறவையும் பெற்றார். இந்தத் தொடர்புகள் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லக் கூடிய பன்னாட்டுத் தொடர்பை இந்தப் பாதிரி கசுபர் கொண்டிருந்தமையால் ஒரு பன்னாட்டு ஊடகராக தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க வன்னிக்கு வந்தார். போர் தமிழீழ மண்ணில் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் பன்னாட்டு அரசியல் வலையமைப்பின் தேவையை உணர்ந்து பாதிரி கசுபர் போன்றவர்களைத் தொடர்ச்சியாகக் கையாளும் முனைப்பு விடுதலைப் புலிகளிடம் இருந்தது.

ஆனால் பாதிரி கசுபரோ இந்தப் புலம்பெயர் தொடர்புகளைப் பயன்படுத்திக் காசு கறக்கும் முயற்சியிலேயே முனைப்புக் காட்டினார். எமது மக்களின் அவலக் குரல்களை வெளியுலகத்திற்கு ஓரளவேனும் வெரித்தாசு வானொலி மூலம் வெளிக்கொண்டு வர முடிகிறது என்பதில் கூடுதல் நன்றியுணர்வு மேலிட நடந்து கொண்ட புலம்பெயர் தொடர்பாளர்களுக்கு கசுபர் பணத்தைக் கறக்கும் நோக்குடன் தனது பன்னாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்துகின்றார் என்பதில் ஐயுறவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல மட்டங்களில் நடந்த உசாவல்களில் பாதிரி கசுபர் பல கிறித்துவ அமைப்புகள் போய் முடியும் மூலத் தளத்திற்கு புலனாய்வு அறிக்கைகளை அனுப்பியவாறு புலம்பெயர் தமிழர் வாயிலாகக் காசு கறக்கும் ஒரு சூழ்ச்சிக்கார நபர் என்பது தெளிவாக, கசுபருக்கும் இனி வெரித்தாசில் வேலை இல்லை என்றாக தமிழ்நாடு திரும்பினார் இந்தப் பாதிரி கசுபர்.

இசைஞானி இளையராசாவின் “திருவாசகம்” இசை இறுவட்டினை வெளியிட்டதன் மூலம் திரையுலகத் தொடர்பையும், கனிமொழியுடன் நெருக்கமாகச் சேர்ந்து மரதன், சங்கமம் போன்ற நிகழ்வுகளை நடத்திப் பணமீட்டியவாறே கனிமொழியின் தொடர்புகள் மூலம் தி.மு.க வின் மேல் மட்ட நட்பும் Goodwill Communications, Acro Links Business Solutions (Pvt) Ltd போன்ற நிறுவனங்களை இயக்குவதன் மூலம் தமிழ் வணிகர்களின் தொடர்பைப் பெற்று அவர்களை ஒருங்கிணைத்து தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் என்ற அமைப்பை நிறுவி அந்த அமைப்பிலுள்ள நிறுவனங்களுக்குத் தனது தி.மு.க அரசியல் மேல்மட்டத் தொடர்புகள் மூலம் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்துத் தரகுப் பணம் பெற்றுக் கொழுத்தவாறும் “மறக்கமுடியுமா?” போன்ற ஈழச் சிக்கலை வைத்து நக்கீரனில் எழுதிய தொடர்கள் மூலம் தமிழ்நாட்டின் ஊடக மற்றும் எழுத்துத் துறைகளில் தொடர்பும் தமிழ் மையம் போன்ற இன்னும் பல அறக்கட்டளைகளை இயக்குவதன் மூலம் அரசியல்வாதிகளின் குறிப்பாக தி.மு.கவின் கறுப்புப் பணங்களைத் தனது பன்னாட்டுத் தொடர்புகளின் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொடுப்பதன் மூலம் தி.மு.க அரசியல் தரப்புகளுடன் இன்னும் இன்னும் ஒட்டான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டும் தமிழகத்தின் புதிய அரசியல் அதிகாரத் தரகர்களில் ஒருவரானார் இந்தப் பாதிரி கசுபர்.

இப்படியாக தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத் தரகர்களில் முதன்மை பெற்று இவரடைந்த புகழினால் டெல்கியிலும் அரசியல் தரகு வேலை செய்யும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்க, ஈழப் போராட்டத்தினை ஒழிக்க இந்திய உளவு அமைப்புகள் செய்த நரபலிச் சூழ்ச்சிகளிற்குப் பங்களிக்கும் நிலையில் இந்தப் பாதிரி யெகத் கசுபர் இருந்தார். யேர்மனிய அரசிடமிருந்து உயரிய அரசு விருதைப் பெற்றுச் சில திங்கள்களில் பிரித்தானிய அரசிடமிருந்தும் உயரிய அரச விருதையும் பெற்றுப் புலனாய்வு இரட்டை முகவர்களின் பாடநூலாகி விட்ட யுவன் புயொல் கார்சியாவைப் பற்றியெல்லாம் பாதிரித் தொடர்பைப் பயன்படுத்திப் போய்ப் படித்துப் பாதிரி கசுபர் பயிற்சி பெற்றாரோ அல்லது கமலகாசன் நடித்த “குருதிப்புனல்” போன்ற திரைப்படத்தைப் பார்த்துத் தொப்பை வயிற்று பிராமண அதிகாரிகளிடம் டெல்கியில் “இரட்டை முகவர்” குறித்து ஏதேனும் பாடங்களைக் கற்றாரோ அல்லது அங்கு பலதும் இங்கு சிலதுமெனக் கற்றாரோ என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இவர் யுவன் புயொல் கார்சியாவாவது விடுதலைப் புலிகளிடம் எடுபடவில்லை.

இனி பாதிரி அண்மையில் ஓடோடி வந்து வெளியிட்ட “ஆடு நனைகிறது ஓநாய் நான் அழுகிறேன்” என்று தலைப்பு மட்டும் இடப்படாத காணொளியில் அப்படிக் கசுபர் எப்படியான சூழ்ச்சிக் கருத்தேற்றங்களைத் தேன் தடவிய நஞ்சாக எப்படி வெளிப்படுத்தினார் என்பதைப் பார்க்கலாம்.

பாதிரி கசுபரின் புரட்டு 1

ராசீவ்காந்தி கொலை என்பது ஒரு பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சியாம். அதில் அந்த பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சிக் கண்ணியில் விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு இடத்தில் தொடர்புபடுகிறார்களாம். அதில் அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி பிரேமதாசாவுடன் ஏற்பட்ட உடன்பாடு மற்றும் சந்திரசுவாமி, சுப்பிரமணியசுவாமி போன்றோர் அடங்கலான தொடர்பும் அந்தக் கொலையில் உண்டாம். அந்தக் கொலையை முன்னின்று நடத்திய சிவராசன் என்பவருக்கு இந்திய அதிகாரவர்க்கத்துடன் தொடர்பு கண்டிப்பாக இருந்திருக்குமாம். மொத்தத்தில் விடுதலைப் புலிகள் ஒரு ஒப்பந்தக் கொலையில் பங்கெடுத்திருக்கிறார்களாம். இதனால் தான் தமிழர்களை இந்தியா அழித்ததாம்.

பாதிரி கசுபரின் புரட்டு 2

விடுதலைப் புலிகள் ஒரு மரபுவழிப் படையாகச் செயற்பட்டதாலேயே அவர்களால் இறுதி நேரங்களில் தம்மைக் காப்பாற்ற முடியவில்லையாம். கரந்துறை அமைப்பாக விடுதலைப் புலிகள் செயற்படாமல் இருந்து அழிந்ததை இராணுவ நுணுக்கங்கள் தெரிந்த தலைவர் பிரபாகரன் எப்படி அனுமதித்தார் என்ற கேள்விக்குப் பதில் தேடும் போது “நான் உயிரோடு இருக்கும் வரை எனது மக்களுக்கு இந்தியா ஒரு நீதியைத் தராது” என்று தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம். மற்றும் கரந்துறை அமைப்பாக மாறினால் தமிழர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தமக்குள் மோதி ஈழம் ஒரு ஆப்கானித்தானாக மாறுமாம். தலைவர் பிரபாகரன் காலத்திலேயே அவரது சொல்லைக் கேட்காமல் பல புலித்தளபதிகள் பிரிந்தார்களாம். எனவே இனி ஒரு கரந்துறைப் போராட்டம் உருவாவதைத் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லையாம்.

பாதிரி கசுபரின் புரட்டு 3

தி.மு.க வை விட நல்ல கட்சி தமிழ்நாட்டில் இன்னும் இல்லையாம். அதனால் தான் அதைத் தெய்வீகட்சி என்று கூறவில்லையாம். தான் அதற்குத் தான் வாக்குப் போடுவாராம். அதற்குத் தான் வாக்குப் போட வேண்டுமாம். இறுதி நேரத்தில் எடுத்த முடிவு மட்டும் தான் பிழையாம். தி.மு.க தான் தமிழ்நாட்டிற்குத் தேவையாம்.

பாதிரி கசுபரின் புரட்டு 4

தலைவர் பிரபாகரன் கடைசிக் காலத்தில் ஒரு கூட்டத்தின் கைதியாக இருந்தார் என்றெல்லாம் விடயங்கள் உண்டாம். அவரைப் பற்றித் திறனாய்வு செய்துகொள்வதில் தவறில்லையாம் அவர்கள் பக்கத்து நியாயத்தையும் பார்த்து இப்படியான உண்மைகளைச் சொல்லலாம். தவறில்லையாம்.

 

பாதிரி கசுபரின் நச்சுக் கருத்தேற்றங்களான புரட்டுகள் குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்கள்

பாதிரி கசுபரின் புரட்டு 1 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்

காலனியர்களின் நம்பிக்கைக்குரிய முகவரான நேருவின் பேரன் ராசீவ்காந்தி என்பவர் செல்வக்கொழிப்பின் ஊதாரி வாழ்வில் உலகம் சுற்றி உல்லாசத்தில் திளைப்பதை வாழ்வாகக் கொண்டிருந்த போது அவரது தாயார் இந்திராவின் மறைவைத் தொடர்ந்து தமது குடும்ப ஆட்சியைக் காப்பாற்ற ஓடி வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதல் இந்திய வன்வளைப்பிற்குள் ஒடுக்குண்டு கிடக்கும் பல வேறு தனித்த தேசிய இனங்களைச் சீண்டுவதும் ஒடுக்குவதுமாக நடந்த பன்னாட்டு வணிகத்திற்காக இயலுமானவரை ஊழல்கள் செய்தும் கூட்டிக் கொடுத்துத் தரகு பெற்றும் இழிநிலை ஆட்சிக்கு அடித்தளமிட்டார். இந்தப் பன்னாட்டு வணிகத்தின் ஊழல் மற்றும் தரகு வலையமைப்பில் இருக்கும் அமெரிக்க உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சவுதி நாட்டைச் சேர்ந்த பெரு வணிகனும் போர்க்கருவிகளை விற்றல் அடங்கலான மிகப்பெரும் கறுப்புச் சந்தை வணிகப்புள்ளியான அட்னன் கசோக்கி மற்றும் பணப் பரிமாற்றங்களை சிக்குப்படாமல் அறக்கட்டளைகள் மூலம் பன்னாட்டுத் திருட்டு வணிகருக்கு மாற்றுவதுடன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வெள்ளையாக மாற்றி வெளிநாடுகளில் முதலிட்டுக் கொடுப்பவருமான சந்திரசாமி என்ற அரசியல் தரகர் போன்றவர்களுடன் ராசீவ்காந்திக்கு ஒட்டான உறவுகள் உண்டு.

பதவிக்கு வந்த மறுநாளிலிருந்து தனது தாயைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் தம்மைத் தனித்த தேசிய இனமாக வளர்த்து வருவதோடு தமக்கான தனித்த தேசம் அமைக்கும் வாஞ்சையுடன் இருப்பதாலும் வட இந்திய நகரங்களில் சீக்கியர் மீது கொலைவெறியாட்டம் ராசீவ்காந்தியால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அத்துடன் வட கிழக்கிலுள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மீது என்றுமில்லாதவாறு ஒடுக்குமுறையை ராசீவ்காந்தி பதவிக்கு வந்து மிகச் சில மாதங்களிலே ஏவினார். உளவுத்துறை மூலம் காசுமீர், வட-கிழக்கு மாநிலங்கள் மற்றும் காலித்தானில் பல சூழ்ச்சிகளைச் செய்து அந்த இடங்களில் குருதியாறு ஓடச் செய்து அந்த மக்களின் மனதில் அழித்தொழிக்கப்பட வேண்டியவனாக ராசீவ்காந்தி இடம் பிடித்தார். இதனால் ராசீவை அழித்தொழிக்கும் எண்ணத்தில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சீக்கியரின் காலித்தான் விடுதலை இயக்கங்கள் என்பன இருந்தன.

ராசீவ்காந்தி ஊழல் செய்வதற்காக வாங்கிய வானூர்தியில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்தமை, ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விசவாயு ‘விபத்து’க்கு காரணமான யூனியன் நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்யப் பணம் பெற்றமை, 155mm Artillery எறிகணை செலுத்திகள் 410 சுவீடனிடமிருந்து தனது இத்தாலிய மனைவி சோனியாவின் இத்தாலிய உறவினர்களுடன் சேர்ந்து கொள்வனவு செய்ததில் கோடி கோடியாக ஊழல் செய்தமை என ராசீவின் ஊழல் செயற்பாடுகளைப் பட்டியற்படுத்தினாலே விடயமறிந்தவர்களுக்குப் புரியும் இப்படியொரு ஆட்சியாளரைத் தான் பன்னாட்டு வணிகக் கும்பல்களிற்குப் பிடிக்கும் என்பது.

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல் இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராசீவ்காந்தியும் தமிழர்களின் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் மேற்கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்குச் சில நாட்கள் முன்னரே தலைவர் பிரபாகரனை டெல்கிக்கு அழைத்து அசோகா விடுதியில் தங்க வைத்துக் கேவலப்படுத்தும் வகையில் சில்லறைத்தனமாக நடந்துகொண்ட பின்பு ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஒரு நாள் முன்பே ராசீவ்காந்தி தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் மறுத்தாலும் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என மெத்தனமாகவும் தமிழர் மீது ஏளனமாகவும்  நடந்துகொண்டமையுடன் தனது இழிசெயலைத் தொடங்கிய இந்தியக் கொடுங்கோலர்கள் இறுதி நேரத்தில் தேர்தல் நடக்கும் வரை விடுதலைப் புலிகள் தலைமையில் இடைக்கால நிருவாகத்திற்கு பல நெருக்குதல்களின் பின்னர் உடன்பட்ட பின்னர் அப்பட்டமாக ஏமாற்றியவாறே விடுதலைப் புலிகளிடம் போர்க் கருவிகளைக் களைந்து ENTLF என்ற தன்னால் உருவாக்கப்பட்ட நரபலிக் கூலிப்படையிடம் கொடுத்துப் புலிகளை அழிக்க முனைந்தமை, சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான அத்தனை அரசியல்கைதிகளும் விடுவிக்கப்ப்படுவர் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெருமளவிலான அரசியல் கைதிகள் மீது பாராமுகமாகவும் தமிழர்களின் நிலங்களில் குறிப்பாக தென் தமிழீழத்தில் ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டும் காணாததுமாக இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணம் வட-கிழக்காக இணைவது தொடர்பாக ஒப்பந்ததில் குறிப்பிட்டவாறு கிழக்கில் தேர்தல் நடக்க நேர்கையில் வடக்கு-கிழக்கை நிரந்தரமாகத் துண்டாடும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைய உதவுமென்ற சூழ்ச்சி எண்ணத்துடன் ஏற்றமை, ஈகி லெப்.கேணல் திலீபனை அணுவணுவாகச் சாகவிட்டு வேடிக்கை பார்த்தமை, முதன்மையான தளபதிகள் அடங்கலான 12 போராளிகளை ஒப்பந்தத்தின் படி பொறுப்பேற்காமல் சிறிலங்கா இராணுவத்தின் கொழும்புச் சித்திரவதைக் கூடங்களிற்கு கூட்டிச் செல்ல அனுமதித்ததால் அவர்கள் தாம் வரித்த உயர்ந்த இலட்சியத்தின் படி நஞ்சுக் குப்பி கடித்து வீரச்சாவடைய காரணமாகியமை, மக்கள் போராட்டத்தின் உன்னத வகையான தமிழீழ மக்களின் கரந்துறை போர்முறைக்கு (Guerrilla Warfare) ஈடுகொடுக்க வக்கற்ற நரபலி இந்திய வன்வளைப்புப் படைகள் கண்மூடித்தனமாக மக்கள் மீது எறிகணைகளை வீசி 29 மாதங்களில் 15,000 வரையான மக்களைக் கொன்று குவித்தும் 30,000 வரையான மக்களைக் காயத்திற்குள்ளாக்கியும் 3000 இற்கும் அதிகமான மக்களை உறுப்புகள் இழந்தவர்களாக்கியும் 2000 இற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரையான பெண்களை உலகின் மாந்த குல நாகரிகத்தின் ஏடறிந்த வரலாறுகளில் என்றும் இடம்பிடிக்காதளவில் இந்திய வன்வளைப்புப் படைகள் தமிழர்கள் மீது நரபலி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்தமை என எண்ணிலடங்காத சேட்டைகளைச் செய்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் நரபலியாட்டத்தின் மீதான தமிழர்களின் அறச்சீற்றமே ராசீவ்காந்தி என்ற கீழினப் பாசிச வெறியன் மீது பாய்ந்த புலிகளின் தற்கொடைத் தாக்குதல். இந்திய நரபலியாட்டம் தமிழீழத்தில் அரங்கேற்றிய வெறியாட்டத்தை மிகவும் நேர்த்தியாக விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்திச் “The Satanic Force- சாத்தானின் படை” என்ற நூலாக்கி இருந்தார்கள். இந்த நூல் ராசீவ் அழித்தொழிக்கப்பட்ட பின்பு இந்திய உளவுத்துறையால் கைப்பற்றப்பட்டுத் தடை செய்யப்பட்ட நூலாகியது. அந்த நூலைப் படிப்பவர்களுக்கு ராசீவ் மீதான் அழித்தொழிப்பு என்பது எவ்வளவு தெளிவுடனும் மேலிட்ட அறச்சீற்றத்துடனும் மிகுந்த அரசியல் தெளிவுடன் நிகழ்த்தப்பட்டது என்பது எளிதில் புரியும். இந்த அழித்தொழிப்புக் குறித்து விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான கிட்டுவிடம் கருத்துக் கேட்ட போது “நாங்கள் செய்யவில்லை. முடிந்தால் யார் செய்தார்கள் என இந்தியா கண்டுபிடிக்கட்டும்” என்று புலிகளின் புலனாய்வினர் செய்யும் இரகசிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் நேர்த்தியும் திறமும் குறித்த பெரு நம்பிக்கையில் ஏவல் நாயான இந்தியா மீது ஏளனமாக பதிலுறுத்தினார். அந்த வகையில் ராசீவ்காந்தி என்ற ஒருவனைப் பழிதீர்த்து விட்டால் விடுதலை கிடைத்துவிடுமென்பதற்காக இந்த அழித்தொழிப்பு நடத்தப்படவில்லை மாறாக “தமிழர்களை அழிக்க நினைப்பவர்கள் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அழிக்கப்படுவர்” என்ற செய்தியைச் சொல்வதுடன் இந்தியப் பகைவன் மீதும் ஆட்சிக் கட்டிலில் இருந்து மிரட்டும் கொடுங்கோலர்கள் மீதும் அதுகாலவரையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிழலுருவை அகற்றுமுகமாகவும் இது அமைந்தது. உண்மையில் இந்தியாவில் ஒடுக்குண்டிருக்கும் அத்தனை தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களிற்கும் ஒரு நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்சுவதாகவும் தமிழக மக்களிற்கு ஒரு வீரப்பேருணர்வு ஏற்படுவதற்கும் வழிகோலியிருக்க வேண்டிய நிகழ்ச்சியை தமிழர் நாம் உரிமையுடன் அன்றே ஏற்று உலகத் தமிழர் அனைவரும் ஒருமித்துத் தமிழின விடுதலை முழக்கத்துடன் ஏற்றிருக்காமல் விட்டதை அல்லது அந்த முனைப்பில் தளபதி கிட்டு அளித்த பதிலை முறைப்படி எடுத்துச் செல்லாததை வேண்டுமானால் தவறென்று சொல்லுங்கள்.

அரசியல் தரகு மாமாக்களான சந்திரசாமி மற்றும் பன்னாட்டு கறுப்பு வணிகத் தாதாவான அட்னன் கசோக்கி போன்றோருக்கு உகந்தவராக வரவிருந்த ராசீவின் இழப்பு இழப்பாக இருக்கலாம். உண்மையில் ராசீவின் அழித்தொழிப்பைத் திரிபுபடுத்தும் நயவஞ்சக நோக்கிலேயே யெயின் கமிசன் அமைக்கப்பட்டது. சீக்கிய விடுதலைப் போராட்டங்களுக்குள் ஊடுருவி அவற்றை அழிக்கவெனப் போராளி வேடத்தில் இந்தியாவால் இறக்கிவிடப்பட்டு இந்தியாவின் Z+ பாதுகாப்பில் இருந்த மெகன்ட் தாசு சிங் என்ற கயவனை வைத்து அதில் அசாமின் ULFA, காலித்தான் விடுதலை இயக்கம், காசுமீரிய விடுதலை இயக்கம் போன்ற பல விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் ஒரு கதையைப் புனைந்துரைத்து இது ஒரு பன்னாட்டுச் சூழ்ச்சியெனக் காட்டி விடுதலைப் புலிகளை ஒரு தரகுக்கொலையாளிகளாகக் காட்ட முனைந்த இந்தியாவின் குரல்வளையைக் கடித்துத் துப்பி அதன் போலிப் பரப்புரைகளை கிழித்துத் தொங்கவிடுவதே அந்த மறவர்களின் ஈகத்திற்கு நாம் செய்யும் குறைந்தளவிலான நன்றிக்கடனாகும். எனவே, ராசீவின் கொலை தமிழர்களின் அறச்சீற்றத்தின் வெளிப்பாடு. அதில் நேரடியாகப் பங்கெடுத்தோர்கள் தாயக மண்ணிற்காக ஆகுதியாகிவிட்டார்கள். அந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை நெறிப்படுத்திய சிவராசனுக்கு அறிந்தவர் தெரிந்தவர் அல்லது அவரின் ஊர்க்காரர் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக தமிழ்நாட்டில் தங்கியிருந்தோர் என்பதற்காகக் கைதுசெய்யப்பட்டு வெறியாட்டத்துடன் நடத்திய உசாவல்களின் பின்பு அறத்திற்கு முரணாகக் குற்றவாளியாக்கப்பட்டுள்ள எழுவர்களும் இந்தியாவின் நோக்கறிந்து வழக்கறிஞர்களின் வழிகாட்டல்களில் தண்டனையை ஏற்று வெளிவரும் நோக்கோடு பொதுமன்னிப்புக்கேட்டுள்ள அந்த அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் கிளர்ந்தெழுவார்கள் என்பதை அறிந்த இந்தியா இதை ஒப்பந்தக்கொலையாகவும் பன்னாட்டுச் சூழ்ச்சியாகவும் திரிபுசெய்வதைத் தமிழர்கள் பல்லைக்கடித்துச் சகிப்பார்கள் என மகிழ்வுடன் கணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. ராசீவின் அழித்தொழிப்பென்பது தமிழர்களின் அறச்சீற்றமே. ஆனால் அதை நிகழ்த்தியவர்கள் ஆகுதியாகி விட்டார்கள். இப்போது சிறைப்பட்டிருக்கும் உறவுகளுக்குச் சொல்லும்படியான தொடர்புகள்  இல்லை. 28 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவது என்பதற்கு இதை ஒப்பந்தக்கொலை என இந்திய உளவு அமைப்பின் தேவைக்கேற்ப நிறுவுவது எந்த வகையிலும் பயனளிக்காது. பாதிரி கசுபர் நீர் மூடிட்டுப் போகலாம்.

பாதிரி கசுபரின் புரட்டு 2 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்

ஒரு அரசின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை இராணுவ எந்திரத்தின் மீது ஒடுக்குண்ட மக்களிடத்திலிருந்து எழும் புரட்சிகர இயக்கமானது கரந்துறை போர்முறையையைக் (Guerrilla Warfare) கைக்கொண்டு ஒடுக்கும் இராணுவத்தின் மீது பதுங்கித் தாக்குதல்கள் மேற்கொண்டு போர்க்கருவிகளைப் பறித்தெடுக்கும். நன்கு அரசியற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் தளமமைத்து மக்களின் கையால் உணாவருந்தி மக்களின் வேவுத்தகவல்களைக் கொண்டு மக்களைக் காத்து மக்களின் மூலம் நகர்வுகளை இலகுபடுத்தி தொடர்ந்தேச்சியாக அடக்குமுறை இராணுவத்திற்கு உளவியல் பீதியைக் கொடுக்கும் தாக்குதல்களைத் தொடுத்து எதிரி எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள நேரமும் இடமும் கொடாமல் வேகமாக நகர்ந்து தொடர்ச்சியாக தளங்களை மாற்றி மாற்றி அசையும் தளங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆளணியையும் வளங்களையும் கொண்டு நன்கு நவீனமயப்பட்ட இராணுவத்திற்கு இம்மை மறுமை தெரியாத அடிகொடுத்து ஒடுக்கும் இராணுவத்தை முகாம்களுக்குள் அடக்கிவிட்ட பின்பு தேடிச் சென்று தாக்கி நிலங்களை மீட்டெடுத்து மீட்டெடுத்த நிலங்களில் நிழலரசாக மக்களரசை அமைத்து முறை செய்து காப்பாற்றும் இயங்கியல் வழியிலேயே கரந்துறைப் போராட்ட வடிவம் விடுதலைப் புலிகளை முன்னகர்த்தியது.

விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகியமையால் வழங்கலில்லாமல் போக அழிய வேண்டியதாயிற்று என்று கொரில்லா போராட்டம் பற்றி ஓரிரு சிவப்புக் கட்டுரைகளை வாசித்து விட்டுக் கருத்துச் சொல்லப் பல கையாளாகாத கூட்டம் அலைந்து திரிகிறது. விடுதலைப் புலிகளின் கரந்துறைப் போராட்ட முறைமை மீட்டெடுத்த தமிழீழ நிலப்பரப்பின் எல்லைகளைக் காக்கவும் மீட்கவுமான மக்கள் இராணுவமாகியதே தவிர அது ஒரு முழுமையான அரச படைகள் போல எந்திரமாக மரபுவழிப்படையாகச் செயற்படவில்லை. மீட்கப்படாத தமிழீழ நிலங்களில் கரந்துறை முறையில் மக்களோடு போராளிகள் தண்ணீரும் மீனும் போல் இணைந்தும் சிறிலங்காப் பகுதிகளின் பொருண்மிய, இராணுவ மற்றும் அழித்தொழிப்புகளுக்கு அதே கரந்துறை உத்திகளைப் பயன்படுத்தியும், மீட்கப்பட்ட நிலங்களுக்கும் மீட்கப்படாத மற்றும் வழங்கல்களுக்கான பகுதிகளுக்கிடையில் ஊடாடும் கரந்துறைப் போரியலிற்கேயான சிறப்பியல்பை உள்ளடக்கிய மிக வேகமாக நரும் அணிகளாகவும் கரந்துறைப் போர்முறை உத்திகளையே விடுதலைப் புலிகள் கடைசி வரை பயன்படுத்தினர். மீட்டெடுத்த நிலங்களின் எல்லைகளை சிறிலங்காவின் மரபுவழி இராணுவத்தின் வன்வளைப்பிலிருந்து காக்க எல்லைகளில் நிலையெடுத்திருந்த மரபுவழிப்படையணி போல் அல்லது அதற்கு ஈடான கட்டமைப்புடன் இயங்கிய புலிகளின் படையணிகளும் தமிழீழ மக்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவுகளாகவே செயற்பட்டன. உலகளவில் இராணுவத்தினர் மட்டுமேயாற்றும் பல களமுனை விடயங்களை தமிழீழ மக்களே ஆற்றினர்.

நிலமீட்புப் போரில் ஈடுபடும் அத்தனை தாக்குதல்களிலும் ஊடறுப்பு, பதுங்கியிருந்து தாக்கி நிலைகுலையச் செய்தல், மிகவேகமாக நகர்ந்து அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளல் என கரந்துறைப் போரியலின் அத்தனை போரியல் உத்திகளும் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் பயன்படுத்தப்பட்டன. எதிரியின் சூட்டுவலுவை முடக்கி மக்களை எறிகணை மழையிலிருந்து காக்க எதிரியின் எறிகணைத் தளங்களை முடக்கவென வீறுகொண்டு காடுகளுக்குள்ளும் குளங்களுக்குள்ளும் வாழ்க்கையை பல மாதங்களாக நகர்த்திய நால்வர், எண்மர் கொண்ட பல அணிகள் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்பும் இயங்கு நிலையில் அங்கங்கே இருந்தன. அவர்கள் எல்லோரும் கரந்துறைப் போரின் அத்தனை விடயங்களுக்குமான பாடநூல்களே. எனவே விடுதலைப் புலிகளின் போர்முறையில் கரந்துறைப் போர்முறையின் உத்திகளே எங்கும் விரவிக் காணப்படும். இதெல்லாம் அறியாது போர்முறையில் தவறுகள் ஏற்பட்டதாக தமிழினவழிப்புக்குக் காரணம் சொல்பவர்கள் கணொளியிலும் களமுனை காணோதோராகவே இருப்பர்.

“நான் உயிரோடு இருக்கும் வரை எனது மக்களுக்கு இந்தியா ஒரு நீதியைத் தராது” என்று தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம்”

என்று புனைவுகளிலும் மிகத் தரந்தாழ்ந்த இழிநிலைப் புனைவைச் செய்யும் பாதிரி கசுபர் என்ன சொல்லவருகின்றார் என்றால் தான் இறந்தால் தமிழருக்கு விடிவு வரும் எனத் தெரிந்து தலைவர் பிரபாகரன் சாகாமல் இருந்தார் என்பதாகும். அத்துடன் இனிப் போராட முனைவோரும் இந்தியாவைப் பகைக்காமல் நக்கிப் பிழைக்க வேண்டும் என்பதை இந்தப் புனைகதை மூலம் பாதிரி கசுபர் சொல்ல வருகின்றார்.

அத்துடன் கரந்துறைப் போர்முறை தமிழீழத்தை ஒரு ஆப்கானித்தானாக்கும் என்று கருதி அதைத் தலைவர் விரும்பவில்லை என கொடிய நஞ்சைப் பாதிரி கக்குகிறார். பலவீனமாக இருக்கும் தேசிய இனத்தின் ஒடுக்குமுறை அரச இயந்திரத்திற்கு எதிரான பலமான போர்வடிவமாக கரந்துறைப் போர்வடிவமே எழுச்சிகொள்ள முடியும் என்பதையும் என்றோ ஒரு நாள் வரலாற்றில் இது நடந்தே தீரும் என அறியும் இந்தப் பாதிரி, அப்படி இனிமேலும் ஒரு போராட்டம் நடக்காதிருக்க இந்த இழிநிலைப் புனைவைச் செய்வதோடு, அப்படி நடந்தால் அன்றே பல குழுக்களாக உடைந்த தமிழர்களை பிளவுபடுத்திச் சீரழித்து இல்லாதாக்குவோம் என்ற மிரட்டலையும் இந்தப் பாதிரி கசுபர் விடுக்கிறார்.

பாதிரி கசுபரின் புரட்டு 3 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்

தமிழ்நாட்டில் தனது தரகு வேலைகளுக்கு தி.மு.க விற்குள் கனிமொழி மூலமாக நுழைந்து போட்ட வலுவான தளமானது பாதிரி கசுபர் என்ற அரசியல் தரகருக்குக்குத் தேவையானதே. டெல்கியின் கருத்தூட்ட நஞ்சைத் தேன் தடவிக் காவி வந்த இந்தக் காணொளியில் கூட தி.மு.க விற்குப் பரப்புரை செய்ய வேண்டிய தேவையில் கசுபர் உள்ளார். தி.மு.க வைத் தெய்வீகக் கட்சியென்று சொன்னால் அந்த ஒன்றே போதும் பாதிரி கசுபர் மீது எண்ணியுணரும் தன்மையற்றோர் கூட விழிப்படைந்து விடுவர் என்பதை நன்கறிந்த பாதிரி கசுபர், இருக்கும் அரசியல் கட்சிகளுள் தி.மு.க வினைத் தவிர வேறு மாற்றில்லை என்பது போல் கதையளந்து விடுகிறார்.

பாதிரி கசுபரின் புரட்டு 4 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்

தலைவர் பிரபாகரன் ஒரு கூட்டத்தின் கைதியாக இருந்தார் என்று கதை உண்டாம் என்று புனைந்துரைத்து மென்று விழுங்கும் கசுபர் எந்தக் கூட்டத்தின் கைதியாக இருந்தாரென்றும் அப்படியென்றால் அந்த விமர்சனத்தை யார் வைக்கிறார்கள் என்று சொல்லாமல் கடப்பதோடு தலைவர் பிரபாகரன் மீது திறனாய்வு செய்வதைத் தொடருங்கள் என்றாற் போல “கூட்டத்தின் கைதி” ஆக தலைவர் பிரபாகரன் இருந்தார் எனத் தலைப்பிட்டு விட்டுப் பாதிரி களைத்துப் போய்க் காணொளியை முடித்துக் கொண்டார். இனி இதன் தொடர்கள் இந்திய உளவமைப்பாலும் தி.மு.கவின் கணினிப்பிரிவென்று தம்மை அடையாளப்படுத்த முனையும் சில்லறைத் தரகர்களாலும் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். தலைவர் பிரபாகரன் மீது தரங்கெட்ட சேறடிப்புகளைச் செய்யுமாறு சுடாலினின் ரசிகர்களாக இருக்கும் ஆனால் தம்மை ஊடகர்கள் என அடையாளப்படுத்தும் ஒரு கும்பலுக்கு சுடாலின் ஆதரவு திமு.க மேல் மட்டத்தினரால் ஒரு பணியிடுகை வழங்கப்பட்டது. தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை அடக்கத் தலைவர் பிரபாகரனின் மீது சேறடித்தால் போதுமெனக் கிளம்பியிருக்கும் வாக்குப் பொறுக்கும் திராவிடப் பேடிகளிடம் பாதிரி கசுபர் மறக்காமல் சொல்லி விடுங்கள் “இது தேசிய இனங்களின் விடுதலைக்கான எழுச்சிக் காலம். தமிழ்நாடு விடுதலை என்ற முனைப்பிலேயே தமிழ்த் தேசியக் கருத்தியல் வீறு வளர்ச்சி கொள்கிறது. இதற்குள் தமிழீழ இனவழிப்பு வலியாயும் வன்மமாயும் அடி நெஞ்சில் நின்று தமிழ்த் தேசிய எழுச்சியைத் தமிழ்நாட்டு மக்களிடத்தில் உக்கிரங்கொள்ள வைக்கிறது” என.

-சேதுராசா –

21-01-2019

 8,304 total views,  2 views today