இரணைமடு-யாழ்ப்பாணம் தண்ணீர் அரசியல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.

இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் சமூகவியல் கருத்துகளை ஆய்வுக்குட்படுத்தாமல் வெறுமனே உணர்ச்சிகரமான விடயமாகவும் பிரதேசவாதத்தன்மையான விடயமாகவும் மட்டுமே சில பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இது தொடர்பாகக் கருத்தேற்றப் பரப்புரை செய்துவருவது எமது அறிவார்ந்த மக்களிடத்தில் பலத்த ஐயுறவை ஏற்படுத்தியுள்ளது.

இரணைமடு நீர்ப்பாசனக்குளமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வேளாண் பொருண்மிய நலனுக்காகவே வடிவமைக்கப்பட்ட நிலையில் மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வேளாண் நடவடிக்கைகளின் அதிகரிப்பைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. 2002 காலப்பகுதியில் சிறிலங்கா அரசுடன் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரணைமடு நீர்ப்பாசனக் குளத்தின் புனரமைப்புத் தொடர்பிலும் “ஆறுமுகம் திட்டம்” நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டு வந்த நிலையில் போர்ச்சூழல் காரணமாக அனைத்துத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் ரணில்-மைத்திரி தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ் “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை எண்பிப்பதற்காக ஏராளமான முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது மட்டுமன்றி கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்கால இடர்கள் குறித்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது.

இரணைமடு யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டமானது “நூற்றுக்கு நூறு பக்க விளைவுகளோ எதிர்விளைவுகளோ அற்ற அபிவிருத்தித் திட்டம்” என்று தீவிர பரப்புரை செய்யப்படுவதை மிகுந்த எச்சரிக்கையுடனும் அறிவார்ந்தும் அணுக வேண்டிய உடனடித் தேவை காணப்படுகிறது.

பல திட்டங்களை ஆய்வு செய்து அதன் முடிவுகளில் இருந்துதான் இரணைமடு-யாழ்ப்பாணம் குழாய் மூலம் நீர்வழங்கல் திட்டம் கொண்டுவரப்படுகிறதா என்று கேட்டால் இல்லை. விடுதலைப் புலிகள் காலத்தில் மீளாய்வு செய்யப்பட்டு யாழ் மாவட்டத்தின் நீர்த் தேவைக்கான நீண்டகாலத் தீர்வாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டமாக நிறுவப்பட்ட “ஆறுமுகம் திட்டம்” ரணில்-மைத்திரி ஆட்சியில் முற்றுமுழுதாக கிடப்பில் போடப்பட்டு குழாய் மூலம் இரணைமடு நீரை உறிஞ்சி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் முழுவீச்சோடு ஆரம்பிக்கப்பட்டது. திட்டம் முழுமை பெறாவிட்டால் யாழ்ப்பாண மக்கள் தன் மீது கோபப்படுவார்கள் என்று ரஃவுப் கக்கீம் அறிக்கை விடுமளவிற்கு மிக வருந்தத்தக்க நிலையை இந்த விடயம் எட்டியிருக்கிறது. யாழ்ப்பாண நிலவமைப்பானது யாழ்மாவட்டத்திற்கான பெரும் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்குப் பொருத்தமற்றது என்று காரணம் சொல்லப்பட்டாலும் யாழ்ப்பாண கிளிநொச்சி எல்லைகளில் யாழ் மாவட்டத்திற்கான நீர்த்தேகத்தினை உருவாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றிருக்கிறது.

இந்த இயல்பிலேயே வாய்த்த இயற்கைத் தரைத்தோற்றத்தினைக் கருத்திலெடுத்துத்தான் “ஆறுமுகம் திட்டம்” வரையப்பட்டது. வவுனியா கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாண எல்லையில் கடலில் கலக்கும் கனகராயன் ஆற்றின் மூலம் யாழ்ப்பாணத்திற்கான நீர்த்தேகத்தை உருவாக்க முடியும் என்பது ஏறத்தாள ஒரு நூற்றாண்டிற்கு முன்னராகவே கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது அதிகாரத்தில் இருக்கக் கூடிய பொறியியலாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் “தொண்டு நிறுவனங்கள்” யாழ்ப்பாணத்திற்கான நீர்த்தேக்கம் உருவாக்க முடியாது என்ற கருத்தியலை தீவிரமாகப் பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாது பெரும் பொருட்செலவில் இரணைமடுத் தண்ணீரை குழாய் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவருவதில் தீவிரமாக செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றனர்.

இரணைமடு-யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) திட்டத்தின்படி இரணைமடுவில் இருந்து நீர் உறிஞ்சும் திட்டமானது மூன்று கட்டமாக நடைபெறும். முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு 27,000 கனமீற்றர் நீர் உறிஞ்சப்படுவதோடு இரண்டாம் கட்டத்தில் 38,500 கனமீற்றர் நீரும் மூன்றாம் கட்டத்தில் நாளொன்றுக்கு 89,200 கனமீற்றர் நீரும் உறிஞ்சப்படும். அதாவது இரணைமடு-யாழ்ப்பாணம் நீர்த்திட்டமானது 2058ம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவு பெறும் என்றும் அந்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு யாழ்ப்பாணத்தில் ஏறத்தாள பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இரணைமடு நீரில் தங்கியிருப்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்படி இன்னும் 30 ஆண்டுகளில் இரணைமடு நீர்த்தேக்கமானது யாழ்ப்பாணத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்யும் நீர்த்தேக்கமாக முழுமையாக மாற்றப்படும். இரணைமடு நீர்த்தேக்கம் வரட்சியை எதிர்கொள்ளும் போது யாழ்மாவட்டத்தின் சில பகுதியின் நிலத்தடி நீரும் மேலதிகமாக யாழ்மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய மழை நீரை சேகரிக்கும் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரணைமடு-யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டத்தினால் சமூக மற்றும் சூழலியல் தொடர்பாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவை வெளியிடப்படவில்லை. தவிர இரணைமடு கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டத்தினால் ஏற்படக் கூடிய சூழலியல் தாக்கங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியானது “டீ” தரப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது “டீ” தர பாதிப்புகளானது சரி செய்யப்படக் கூடியது என்பது ஆசிய அபிவிருத்தி வங்கியின் அளவீடு. அந்த அளவீடானது எந்த அளவிற்கு நம்பகத்தன்மையானது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அது போக இந்த திட்டத்தில் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களின் நீர்த்தேவைகள் குறித்து சிறிய அளவில் மட்டுமே பேசப்பட்டுள்ளதே தவிர கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்த்தேவைகள் குறித்தோ அல்லது இரணைமடு நீரை உறிஞ்சி யாழ்பாணத்திற்கு கொண்டு செல்வதால் ஏற்படப்போகும் நீர்ப்பற்றாக் குறையால் ஏற்படப்போகும் கெடுதிகள் மற்றும் அவற்றைச் சமாளிக்கக் கூடிய பொறிமுறைகள் என்பன குறித்துத் தேவையானளவில் அக்கறை செலுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணத்திற்கான நீர்த்தேக்கம் பொருத்தமற்றதா அல்லது யாழ்ப்பாணத்திற்கான நீர்த்தேக்கம் உருவாவதை யாரும் விரும்பவில்லையா??

விடுதலைப் புலிகளின் நிருவாகக் காலப்பகுதிகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுவதற்கான திட்டம் முன்மொழிப்பட்ட போது, யாழ் மாவட்டத்திற்கான நிரந்தர நீர்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டமும் (ஆறுமுகம் திட்டம்) அக்கறையுடன் கருத்திற்கொள்ளப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்து.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போன்ற தொலைவுக் குடியிருப்புகளின் நீண்டகாலக் குடிநீர்ச்சிக்கலைத் தீர்ப்பதற்கு குடமுருட்டி ஆற்றை மறித்து நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறிவதோடு மட்டுமன்றி தொண்டமனாறு ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றி யாழ்மாவட்டத்திற்கான நிலத்தடி நீரை அதிகரிப்பது போன்றதான நீண்டகால திட்டங்களும் விடுதலைப்புலிகளின் நிருவாக காலத்தில் ஏற்புச் செய்யப்பட்டது. தவிர யாழ்மாவட்டத்திற்கான குடிநீர் இரணைமடு போன்ற தொலைவுப் பிரதேசங்களில் இருந்து கொண்டு செல்லப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இடர்கள் குறித்தும் விடுதலைப் புலிகளால் அக்கறை செலுத்தப்பட்டது. அது போக தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுவதால் எதிர்காலத்தில் யாழ்மாவட்டத்தின் தற்சார்புநிலை கேள்விக்.குறியாககும் என்பது மட்டுமன்றி அது யாழ்மாவட்டத்தின் பொருண்மியம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மிக மோசமான முறையில் சிதைக்கும் என்பதும் கணிக்கப்பட்டது.

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட எதிர்கால பொருண்மிய மற்றும் தற்சார்பு இருப்பு நிலைகள் குறித்து தொலைநோக்குப் பார்வையில் ஆய்வுகள் செய்யப்பட்டு யாழ் மாவட்டத்திற்கான நிரந்த நீர்நிலை உருவாக்கப்படல் வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவானது 2009 விடுதலைப்புலிகளின் பேசாநிலைக்குப் பின்னர் கிடப்பில் போடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாக இரணைமடுவில் இருந்து குழாய்வழி நீர் கொண்டு செல்லப்படும் திட்டத்தைத் துரிதமாக நடமுறைப்படுத்த முனைவது பலதரப்பட்ட ஐயுறவுகளை உருவாக்குகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2009 ற்கு முன்னரான ஆய்வறிக்கையின்படி, யாழ்மாவட்டத்தில் குழாய்வழி குடிநீரானது மக்களை விடவும் இராணுவத்திற்கும் மருத்துவமனைக்கும் தான் அதிகமாகத் தேவைப்படுகிறது. அது போக இரணைமடு-யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டத்தில் இராணுவத்தின் தலையீடும் கணிசமான அளவு காணப்படுகிறது. உண்மையில் இரணைமடு யாழ்ப்பாண குடிநீர் திட்டத்தின் மூலம் “யாழ்நகர” மக்களுக்கு நன்மை என்று சொல்லப்பட்டாலும் இந்த “விரைவுத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் இராணுவத்திற்கான குடி நீர் தேவைகளை நிறைவு செய்வதே.

இராணுவத்திற்கான தேவைகள் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதால் இரணைமடு-யாழ்ப்பாண குழாய் மூல நீர்வழங்கல் திட்டம் விரைவாக முடிக்கப்பட வேண்டிய நிலை சிறிலங்கா அரசிற்கு இருப்பதாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத ஓய்வுபெற்ற பொறியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.  சிறிலங்கா அரசின் தேவையை எண்பிப்பதற்காக சமூகத்தில் பிழையான கருத்துருவாக்கங்களையும் பிரதேசதவாத கருத்துகளையும் வெள்ளப்பெருக்கிற்கு இரணைமடுதான் காரணம் என்பது போன்ற சித்தரிப்புகளையும் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைமடு-யாழ்ப்பாணம் குழாய் வழி நீர்வழங்கல் திட்டத்தை கட்டாயம் நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்றும் அதற்கான தீவிர கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கலாநிதி சிவகுமார் (கிளிநொச்சி பொறியியல் பீடம்) யாழ்ப்பாணத்திற்கான நிரந்தர நீர்த்தேக்கம் ஒன்றை யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சி யாழ்ப்பாண எல்லையிலோ உருவாக்க முடியாதென்றும், யாழ்ப்பாணத்தில் இராணுவம் மற்றும் மருத்துவமனைக்கான நீர்த்தேவை அதிகமாக இருக்கலாம் ஆனால் அது குறித்து கவனம் செலுத்துவது தனது வேலைக்கு அப்பாற்பட்டதென்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். அது தவிர சுண்டிக்குளத்தில் யாழ்மாவட்டத்திற்கான நீர்நிலையை உருவாக்குவதற்கான முனைப்பில் ஈடுபட்டால் யாழ் பல்கலைக்கழக சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிடலாம் என்று எச்சரிக்கைத் தொனியில் கலாநிதி சிவகுமார் கருத்துத் தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. யாழ்மாவட்டத்திற்கான நீர்த்தேவைகள் குறித்து எவர் ஆய்வு செய்தாலும் அதற்குள் பேராசிரியர் சிவகுமாரின் தலையீடு அல்லது பேராசிரியர் சிவகுமாருக்கு தெரியாமல் ஆய்வு செய்ய முடியாது என்ற நிலையே காணப்படுவதாக துறைசார் மாணவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

கலாநிதி சிவகுமார், சில அரசியல் தலைவர்கள் மற்றும் சில கலாநிதி சிவகுமார் சார்பு அதிகாரிகள் மிகத்தீவிரமாக இரணைமடு-யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டத்தை ஆதரிப்பதற்காக எண்பிக்க முனையும் அல்லது பரப்புரை செய்யும் கருத்தானது “இரண்டாயிரம் கோடியில் செய்யப்படும் திட்டம் இதை செய்யாவிட்டால் காசு திரும்பிவிடும்” என்பது மட்டுமேயாகும். இந்த மிரட்டும் கருத்துருவாக்கமானது ஆசிய அபிவிருத்தி வங்கியால் திட்டமிடப்பட்டு உருவாக்கபட்டது. (ஆசிய அபிவிருத்தி வங்கியின் அரசியல் குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

எனவே, யாழ்மாவட்டத்திற்கான நீர்நிலையை உருவாக்குவதற்கான பொருத்தப்பாடுகள் குறித்து தொழினுட்ப மற்றும் துறைசார் வல்லமையுள்ள சுயாதீன அணி ஒன்று மீள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் நிருவாக காலத்தில் இந்த திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் துறைசார் அணி முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், மக்களையும் மண்ணையும் தொலைநோக்குச் சிந்தனையோடு நேசிக்கும் துறைசார் அணி ஒன்று ஆய்வுகளை மீளச் செய்து மக்களைத் தெளிவுறச் செய்து எதிர்காலத்தில் நேரக் கூடிய இடர்களிலிருந்து மண்ணைக் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவித் திட்டங்களின் அரசியல்

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய மூலதனத் திரட்சிக்கான பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் குடிநீரை தனியார்மயப்படுத்தும் அல்லது குடிநீரை விற்பனைப் பொருளாக்கும்  வேலைத்திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. ஏற்கனவே வளர்முக நாடுகள் மற்றும் தொழிற்துறையில் வளர்ச்சிகண்டுவரும் கிழக்காசிய நாடுகளில் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் நீரானது விற்பனைப் பொருளாக்கபட்டுள்ள நிலையில், தற்போது சிறிலங்கா, இந்தியா, பங்களாதேசு, நேபாளம் போன்ற நாடுகளில் அன்றாடத் தேவைக்கான நீரை விற்பனைப் பொருளாக்குவதில் தீவிரமாக இவை தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன.

“தண்ணீர் அரசியல்” குழப்பங்களை ஏற்படுத்தி பிரதேசவாத கருத்தியலை விதைத்து, குறிப்பிட்ட மண்ணின் தற்சார்பு வாழ்வியலை சிதைப்பதன் மூலம் குறித்த மக்கள் எப்பொழுதும் குடிநீருக்குக் கூட பன்னாட்டு முதலாளிகளில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துவதில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி முன்னிலை வகிக்கிறது. 2008 காலப்பகுதிகளில் வெண்களூரில் ஒன்று கூடிய இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சிலர்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் “நீர் அரசியல்” குறித்து   ஆய்வுகளைச் செய்து, ஆசிய அபிவிருத்தி வங்கி எப்படித் தண்ணீரை விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு திரைமறை வேலைகளைச் செய்கின்றது என்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

வழக்கமான வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்குகள் குறித்து மிகைப்படுத்திய  அச்ச நிலையை அரசுகள் மற்றும் மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் தண்ணீர் தொடர்பான திட்டங்களை நாட்டுக்குள் கொண்டுவந்து தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உத்தி. தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அந்தந்தப் பிரதேசங்களில் விலை போகக் கூடிய, உணர்ச்சிவசப்படக் கூடிய, கண்மூடித்தனமான எதிர்ப்பு அரசியலை செய்யக் கூடிய, ஆய்வுகள் செய்யக் கூடிய தகைமையற்ற ஊடகவியலாளர்கள் என பல தரப்பட்ட துறையினரை உளவியல் ரீதியாக அளவீடு செய்து அவர்களை தங்கள் திட்டங்களுக்கு கையகப்படுத்துவார்கள் இந்த ஏகாதிபத்தியத்திற்கான தாங்கு தூண்கள்.  அந்த நபர்கள் பின்னர் “ஆசிய அபிவிருத்தி வங்கி” இல்லாவிட்டால் வரட்சி கூடி, தண்ணீர் மாசுற்று, தூய்மையான தண்ணீர் இல்லாமல் மக்கள் மடியப் போகிறார்கள்” என்பது போன்று தீவிர பரப்புரையில் ஈடுபடுவார்கள். இந்த உத்தி ஆசியாவில் பரவலாக கையாளப்பட்டிருப்பதை நாம் கூர்ந்துநோக்க வேண்டும். தமிழின அழிப்பின் போது குறித்த நிறுவனங்கள் சிறிலங்கா அரசிற்கு பெருமளவிலான நிதி உதவியை வழங்கியிருக்கின்றன. அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் இன்று சிறிலங்கா அரசானது சிக்கியிருக்கும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளையின் படி அவற்றின்  வேலைத்திடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டிருக்கிறது.  அதே நேரத்தில் தான் நடைமுறைப்படுத்த விரும்பும் வேலைத்திட்டங்களுக்கு கிளம்பும் எதிர்ப்புகளை சமாளிக்க உள்ளூர் அரசியல்வாதிகள் அதிகாரிகளை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தும் முறையைப் பல நாடுகளில் இந்த நிறுவனங்கள் செயற்படுத்தியிருக்கின்றன. அதையே தான் தற்போது இரணைமடு-யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்திலும் காண்கிறோம்.

மக்கள் தமக்கான நிரந்தர நீர் மூலங்களை உருவாக்குவதை பன்னாட்டு முதலாளிகள் விரும்புவதில்லை. தண்ணீரானது அடிப்படைத் தேவைகளில் ஒன்று அதை விற்பனை செய்வதே இவர்களின் நோக்கம்.

*  *  *  *

தமிழினம் தனக்கான தற்சார்பு இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் தமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிரந்தர கட்டுமானங்களை உருவாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு நிதிநிறுவனங்களின் தாளத்திற்கு ஆடக் கூடாது. தமிழர் தாயகப் பகுதியானது இயற்கையோடியைந்து தற்சார்பு வாழ்வு வாழ வல்ல பகுதியாகும். இங்கு தண்ணீர் விற்பனைப் பொருளாக மாற்றப்படுவதன் பின்னணியில் மாபெரும் வணிகமும் அரசியல் பொறியும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை பெரும் பொருண்மிய பலமாக நம்பியிருக்கும் யாழ் நகரம் தண்ணீரை எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கும் நிலைக்குப் போவது குறித்து விழிப்படையவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தப் போக்கை பெரும் வணிகமாக மாற்றுவது அரசிற்கோ அரச சார்பற்ற நிறுவனங்களுக்கோ பெருங்கடினமாக இருக்காது ஆனால் யாழ்ப்பாணத்தில் தண்ணீர் பெரும் விற்பனைப் பொருளாக மாற்றப்படுமானால் அது ஒட்டு மொத்த தமிழினத்தின் வளங்களைச் சுரண்டுவதற்குப் போடப்படும் தொடக்கப் புள்ளியாக மட்டுமில்லாமல் மோசமான அரசியல் அழிப்பிற்கும் வித்திடும்.

தகவல் மூலங்கள்:

1 ) ஆசிய அபிவிருத்தி வங்கி இணையம் – இரணைமடு யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டம்

2 ) இந்து செய்தி  இணையம் (பங்களுர் சந்திப்பு தொடர்பானது)

-தேனு, ஆதவன், மகிழன்-

05-01-19

Loading

(Visited 62 times, 1 visits today)