திரையுலகும் ஊடகங்களும் காட்டுவதை வைத்துத் தமிழ்நாட்டை எடைபோடுவது சிறுபிள்ளைத்தனமானது – தேனு

ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாடு என்றால் வெறும் திரையுலகத்தையும் அங்கிருக்கக் கூடிய காட்சி ஊடகங்களையும் மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பண்பாட்டுத் தொட்டிலாகவும் அறிவியலின் ஊற்றாகவும் இருக்கிறது.

தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றியத்தில் அறிவியலிலும் பண்பாட்டிலும் தமிழ்நாடே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழீழத்தின் அத்தனை கட்டமைப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மறப்போராட்ட வடிவைப் பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளை கட்டிக் காத்ததிலும் அவர்களை வளர்த்து விட்டதிலும் தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான ஊர்களுக்கு உரிமை இருக்கிறது. தவிர, அடிப்படையில் அறிவியல் துறையில் மிகத்திறமையானவர்கள் தமிழ்நாட்நாட்டில் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தொடக்ககால வெடிபொருட்கள் தொடர்பான பல செய்முறை எத்தனிப்புகள் தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களைத் தளமாகக்கொண்டு நடந்திருக்கின்றன.  தமிழீழ வான்படையின் முதல் தளபதி கேணல். சங்கர் அண்ணா விமானம் தொடர்பான தொடக்ககாலத் தேடல்கள் பலதைத் தான் தமிழ்நாட்டில் தங்கியிருந்து கற்ற காலத்தில் தான் மேற்கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ அரசின் கட்டமைப்புகளின் பெயர்களையும் அது குறித்த கோவைகள் மற்றும் கையேடுகளையும் தூய தமிழ்ப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்த போது அதற்கு பக்கபலமாகவும் முற்று முழுதாகவும் நின்று உழைத்தவர்கள் தமிழ்நாட்டு பேராசிரியர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாட உற்பத்தித் துறை, தமிழீழ திரைப்படைத் துறை, தமிழீழ தகவல் தொழினுட்பப் பிரிவு என தமிழீழத்தின் அனைத்து கட்டமைப்புகளின் வளர்ச்சிகளுக்குப் பின்னாலும் தமிழ்நாட்டு தமிழனின் அறிவியலும் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.

இனி விடயத்திற்கு வருவோம்..

இன்று உலகின் முன்னணி இலத்திரனியல், தகவல் தொழினுட்பம், கணினி வரைகலை மற்றும் இயற்கை வேளாண்மை துறைசார் நிறுவனங்களின் உற்பத்திசார் வேலைத்திட்டங்களில் தமிழ்நாட்டவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். மிகச் சிக்கலான மின்னணுச் சுற்றுகளையும் மிகநுணுக்கமான பல அறிவியல் வேலைகளையும் தமிழ்நாட்டின் ஊர்களில் இருந்து வந்தவர்களே செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று புதிய உலகின் மிகச் சிறந்த தொழினுட்பமாக கருதப்படும் “Drone” ற்கு தேவையான கருவிகளை தாங்களாகவே வடிவமைத்து அல்லது வாடிக்கையாளரின் தேவைக்கேற்றவாறு வடிவமைத்து அதை மிக இலகுவாக தமிழ்நாட்டின் ஊர்களிலிருந்து வந்தவர்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். Microsoft நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்கல் மற்றும் கணக்கு வழக்கு தொடர்பான வேலைகளை தமிழ்நாட்டில் வைத்தே செய்கிறார்கள். அங்கு பணியாற்றுபவர்களில் 95 நூற்றுக்கூறுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. அது போக தமிழின் கலை, இலக்கியப் பரப்பிலும் (இலக்கியம் என்ற போர்வையில் எதை வேண்டுமென்றாலும் எழுதுவதை குறிப்பிடவில்லை) தமிழின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டின் ஊர்களிலிருந்து அளப்பரிய பங்களிப்புக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை, இயற்கையோடியைந்து வாழுங்கலை, தமிழ் மருத்துவம் என தமிழின் உச்சக்கட்ட அத்தனை அறிவியலையும் இன்னமும் நடைமுறையிலும் அதை கட்டிக்காத்து மெருகேற்றுவதிலும் தமிழ்நாட்டு தமிழர்கள் முழு வீச்சோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயமாக்கலும், உலக நடைமுறை மாற்றங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சமாந்தரமாக தமிழை காப்பதிலும் உலக நடைமுறைகளோடு தமிழை வளர்ப்பதிலும் தீவிர அக்கறை செலுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்குள்ள இளைய சமுதாயம் உற்பத்தித் துறையிலும் புத்தாக்க முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட முயல்கிறார்கள். அதில் வெற்றியும் கண்டுவருகின்றனர். உச்சக்கட்ட அறிவியல் கருவிகளை ஊர்களிலிருந்தே செய்யும் அளவிற்கு அவர்களின் ஆளுமையும் திறமையும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் பலருக்கு தமிழ்நாடு குறித்த பார்வை எப்படியிருக்கிறது என்பதுதான் இங்கு நோக்கப்பட வேண்டியது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பள்ளிக்கூடங்களில் மிசனரிகள் அன்று கொடுத்த கல்வித்திட்டங்களில் கல்விகற்று வெளியேறும் ஈழத்தமிழ் சமுதாயம் வெறுமனே பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை மாத்திரமே கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடக் கல்வியில் அதிக நாட்டம் கொண்டிருந்த யாழ் சமூகம் இன்று பள்ளிக்கூடக் கல்வியில் ஏதும் சறுக்கல் வந்தால் மேற்கத்தைய நாடுகளுக்கு ஏதிலியாகவேனும் பொருண்மிய நோக்கோடு சென்று ஏதாவது அடிமை வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற மிக மோசமான சமூக ஒழுங்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் உற்பத்தித் துறை அறவே இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை பொருட்கள் வடகிழக்கில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதைப் பார்த்தாலே எமது நிலைமை விளங்கிவிடும்.

தமிழ்நாடு திரையுலக மோகத்திலும் மயக்கத்திலும் சிக்கியிருக்கும் ஒரு கோமாளி தேசமாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அத்தனை ஊடகங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அத்தனை ஊடகங்களும் ஆரிய பார்ப்பானியர்களால் அல்லது தமிழர் அல்லாத மாற்றாரால் ஆளுகை செய்யப்படக் கூடிய அல்லது இயக்கப்படக் கூடிய ஊடகங்களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் திரைக்கவர்ச்சிக்கு கூடுதல் முதன்மை வழங்கும் இடங்கள் சென்னை போன்ற வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்ட பல்தேசிய மக்கள் வாழும் இடங்கள் மட்டுமே. தமிழர்கள் மட்டுமே வாழக்கூடிய ஊர்களில் திரையுலகக் கவர்ச்சிக்கு இப்படியெல்லாம் அடிமையாவது கிடையாது. அந்த உழைக்கும் மக்களிடம் தமிழ் மணம் மாறாத மண் சார்ந்த நுகர்வுப் பண்பாடே இயல்பில் இருக்கும். சென்னையை வைத்துக் கொண்டு அதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பட்டெறிவாகக் காட்ட வேண்டிய தேவை தமிழரல்லாதோருக்கு இருக்கிறது. ஆனால் அதை விளங்கிக் கொள்ளக் கூடிய தெளிவில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் இல்லையென்பது சொல்லியேயாக வேண்டிய கவலை தரும் செய்தி.

அண்மையில் திரைப்பட இயக்குநர் பாராதிராசா ஈழத்தில் பள்ளிக்கூடங்கள் சிலவற்றிற்கு பயணம் செய்ததும் அவரை அங்கு கொண்டாடிய விதங்களும் அவர் ஊடகங்களுடன் நடந்துகொண்ட முறையும் பல முரண்களை ஏற்படுத்தியிருந்தது. ஆரிய பார்ப்பனியக் காவித் திரையுலகப் படைப்புகள் தமிழ்த் திரையுலகில் அதிகம் உலவிய காலப்பகுதியில் ஊர் மணம் வீசும் தமிழ் மண்சார்ந்த தூய தமிழ் வழக்கிற்கு முதன்மை கொடுத்த நல்ல தமிழ்த் திரைப்பட உருவாக்கல்களைச் செய்ததில் பாரதிராசாவுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் பாரதிசாரா தமிழினத்தின் சமூக வளர்ச்சியில் எப்படிப்பட்ட பங்குவகித்திருக்கிறார் என்று கேட்டால் உறுதியான பதில் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மிகச்சிறந்த கல்விமான்களும், மிகச்சிறந்த அறிவர்களும் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்து ஈழத்தமிழ் மாணவர்களுக்கு அடையாளம் காட்டுவதால் நன்மையுண்டு. ஆனால் திரைப்படைத்துறை சார்ந்தவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் என்ன நன்மை உண்டு? யாருக்கு தேவை? புலம்பெயர் தமிழர்கள்; ஆண்டுதோறும் மில்லியன் டாலர் பணம் செலவழித்துச் செய்யும் களியாட்டங்களுக்காக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களை வரவழைத்து மகிழ்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, அதே பண்பாட்டை ஈழத்திலும் திணிக்கும் முயற்சி பலவழிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வடகிழக்கில் கோயில் திருவிழாக்களுக்கும் பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கும் தென்னிந்திய திரைப்படத்துறையினரை வரவழைத்து மகிழும் நிலைமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் பணமும் இந்திய உளவுத்துறையின் கருத்தூட்டல்களும் பலமாக காணப்படுகிறது. இந்த நடைமுறை தடுக்கப்படல் வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அறிவியல் சார்ந்தவர்களை ஈழத்தமிழ் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க எமது சமூகம் முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டு தமிழர்கள் தங்கள் இளைய சமுதாயத்தின் மேல் முதலீடு செய்வது போல ஈழத்தமிழர்களும் முன்வர வேண்டும். புத்தாக்க முயற்சிகள், அறிவியல் வேலைத்திட்டங்கள், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் என தமிழ்நாட்டில் ஏராளமான வேலைத்திட்டங்களை இனத்திற்காக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும் பொருண்மிய வசதிகளோடு இருக்கக் கூடிய புலம்பெயர் தமிழர் கட்டமைப்புகள் ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட அறிவியல் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய இன்றுவரை அணியமாக இல்லை என்ற கசப்பான உண்மையை எப்படிக் கடந்து செல்வது? சிங்கள மாணவர்கள் ஈடுபடும் புத்தாக்க முயற்சிகளுக்கு சிங்கள அறிவியலாளர்களும் வர்த்தகர்களும் சிங்கள அரசும் பக்கபலமாக இருக்கிறது. அவர்களை ஊக்குவித்து அடுத்தகட்ட நகர்விற்கு உதவி செய்கிறார்கள். ஆனால் தனிநாடு கேட்டு போராடிக்கொண்டிருக்கும் இனம் தனக்கான ஒன்றை உருவாக்கவும் தனது இனத்தை எப்படி அறிவார்ந்து வலுவான இனமாக கட்டியமைக்கலாம் என்பது குறித்தும் சிந்திக்காமல் இருப்பது பெரும் சாபக்கேடே.

தமிழர் தாயகம் எங்கும் ஏராளமான வளங்கள் காணப்படுகின்றன. எமது நிலத்தின் இயற்கை கெடாமல் இந்த நிலத்தில் உற்பத்தித்துறையை முன்னேற்ற பொருண்மிய பலமிக்க புலம்பெயர் கட்டமைப்புகள் முன்வரவேண்டும். எமது இளைஞர்கள் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

வேளாண்துறை, ஆடைத்துறை, மீன்பிடித்துறை, கணினி மென்பொருள் துறை, அறிவியற்றுறை என எமது நிலத்தில் ஏராளமான இயற்கை வளங்களும் மூளை வளமும் இருக்கிறது. இவற்றை எப்படி விளைதிறனாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது எப்படி உச்சக்கட்ட பலனை சமூகமாக அடைவது என்பன குறித்து எமது இளைய தலைமுறை சிந்திக்க வேண்டும்.

இன்றைய உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு அறிவியல் துறையில் நாம் புதிய முயற்சியில் ஈடுபடாதவரை எமது தேடல் விரிவடையப்போவதில்லை. வாசிப்பும் அறிவார்ந்து சிந்திக்கும் ஆற்றலும் மங்கிக் கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு தங்களைச்சுற்றி நடைபெறும் அரசியலைக் கூட முழுமையாக விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. எமது இனத்தின் மிகப்பெரும் பகுதி சிறந்த ஆற்றலோடு எமக்கு அருகில் காணப்படுகிறது. அங்கிருக்கக் கூடிய ஆற்றல்மிக்க ஆற்றலாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எம்மை மிக விரைவாகவும் மிகத் தீவிரமாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

தமிழ்நாட்டில் திரைக்கவர்ச்சியையும் தொலைக்காட்சிகளையும் தேடாமல் அங்கிருக்கக் கூடிய அறிவியலையும் வணிக வளர்சியையும் மொழிப் புலமையையும் தேடுங்கள். ஆகக் குறைந்தது இவற்றைத் தேடுவதற்கு எமது ஈழத்தமிழ் இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்துங்கள். புலம்பெயர் கட்டமைப்புகளை முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

மரபார்ந்தும் இன்றைய உலக நடைமுறையிலும் உலகெங்கும் தமிழர்கள் அறிவார்ந்திருக்கத் தமிழ்நாடு பெருந்தளப்பங்களிப்பை வழங்கியது. வழங்கியும் வருகிறது. காரணம் எல்லாவற்றிற்குள்ளும் அந்த தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்மொழி மீதும் தமிழரின் மண்சார்ந்த வாழ்வியல் நெறி மீதும் மிகத் தீவிர ஈடுபாட்டை நோக்கி தமிழ்நாட்டில் ஒரு புதுத்தலைமுறை விரைந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. எனவே தமிழால் இணைவோம். தமிழர்களாய் எழுவோம். தமிழர் தாயகங்களான தனிப் பெரும் தேசங்களாம் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் மீட்டெடுப்போம் என அனைவரும் உறுதியேற்று வேலை செய்வதே இன்றுள்ள காலத்தின் கட்டாயத் தேவை.

தேனு

21-10-18

Loading

(Visited 13 times, 1 visits today)

1 Comment

  1. We can not under estimate Barthiraj’s visit one the one hand and on the other hand this is a good relationship between Thamilnadu and S L Tamils as you mentioned here we do not ignore his contributions to Tamil cultural world consequently we can introduce technology from there But school children must see people artists great contributes to Tamil cinema . as cinema is a inseparable part of modern society. We must respect their talents dediction . We can not bring a scientist all of a sudden this is a first step .. Let us think of scholars in the future .. They only visited our area as tourists I believe ..
    We Srilanks have a long term relationship with Indian cinema people . We still can mention that the Sinhala film producers had made use of Tamil music composers then from Tamilnadu .
    Let us continue the building of the relationship. The technological aspects will be shared in the future by our SL government too.
    Hence children must have exposure of different personalities irrespective of fields .. Even Agricultural technology is at high in India. No person could be under estimated .. We make use of every body …

Leave a Reply