சிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து போராட்ட ஆற்றல் தலைதூக்கிவிட ஏதுவான அத்தனை வாய்ப்புகளையும் இல்லாதாக்கியும் மடைமாற்றியும் இந்தக் கனவான் கும்பலிடம் கொண்டு சென்று தமிழர்களின் அரசியல் தலைமையை அடகுவைப்பதில் இந்த மேற்குலக இந்தியச் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் வேலை செய்கின்றது. இந்த நுண்ணரசியற் கேடுகளை உணர்ந்துகொள்ளத் தடையாக உள்ள பல தடைகளில் தமிழ்ச் சமூகம் NGO க்களுடன் பின்னிப்பிணைந்திருப்பது ஒரு பெருந்தடையாக இருக்கிறது. இது குறித்த விழிப்பூட்டல்களை மக்களிடத்தில் மேற்கொள்ள ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தால் மட்டுமே இயலுமே தவிர மக்கள் இயக்கங்கள் என்ற போர்வையில் இயங்கும் NGO க்களால் இயலாதென்பதைச் சுட்டி மேற்கொண்டு விடயப் பரப்பிற்குள் செல்லலாம்.

இதுகாலவரையிலும் அரசியலை ஏடுகளிலும் நடைமுறையிலும் கற்றோர் NGO க்கள் பற்றிப் பெரும்பாலும் அறிந்திருப்பனவற்றை இக்கால சூழலில் அரசியல் தளத்தில் காலடி வைத்துள்ள புதுமுக இளவல்களுக்காக கீழ்வருமாறு சுருங்கத் தொகுக்கலாம்.

மேற்குலக ஏகாதிபத்தியமானது மூன்றாம் உலகநாடுகளைக் கடனாளியாக்குவதற்காக அந்த நாடுகளின் தற்சார்பு நுகர்வை இயலுமான வரையில் சீரழித்தவாறு கடன்களை உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்ற தங்களின் முகவர் அமைப்புகள் மூலம் வழங்கி மேலும் மேலும் கடன் சுமைக்குள்ளாக்கி பொருண்மியத்தில் நலிவுறச் செய்து கடன் வாங்காமல் எதையும் சரிக்கட்ட இயலாத சூழலை அந்த நாடுகளில் உருவாக்கி மீளக் கடன் வழங்குவதானால் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் துறைகளில் ஒரு பகுதியைத் தானும் தனியார்மயமாக்க வேண்டுமென நிபந்தனைகள் விதித்துத் தமது மேற்குலக வணிக நலனிற்காக சந்தைவிரிப்பிற்கு மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை உடன்படவைக்கும் போது மக்களிடத்தில் தாம் அதுவரை தமது வரிப்பணத்தில் அனுபவித்த அடிப்படை வசதிகள் தனியார்மயப்பட்டு அவர்களின் வாழ்வு இறுக்கத்திற்குள்ளாகுகையில் அந்த அரசாங்கட்திற்கு எதிராக மக்கள் வீதியிலிறங்கிப் போராடுவர். அப்படியான சூழலைத் தவிர்ப்பதற்காக NGO க்கள் களமிறங்கி மக்களிற்கு உதவும் போர்வையில் வேலை செய்து மக்கள் புரட்சிக்கான சூழலை இல்லாதாக்கி ஏகாதிபத்திய உலகையும் அதற்கு அடிமையாகிப் போன மூன்றாமுலக நாடுகளின் அரசுகளையும் காப்பாற்றும்.

NGO க்கள் கருத்திட்டங்களை முன்வைக்கும் போது இயலுமானவரை பெண்கள், கைம்பெண்கள், நலிவுற்றோர் எனப் பலவாறு சமூகத்தைக் குழுப்படுத்தியே தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். இவ்வாறாக மக்கள் ஒரு தேசமாக ஒன்றுபடுதலை இல்லாமலாக்க மக்களை குழுக்களாக அணுகும் போக்கைக் கடைப்பிடிக்கும். அப்படி அணியமாதலை மக்களிடத்தில் பழக்கப்படுத்தித் தேசமாக ஒன்றாகும் வாய்ப்புகளை இயன்றவரை குறைப்பதில் NGO க்கள் வேலை செய்யும்.

இயற்கையாகவோ செயற்கையாகவோ பேரிடர்கள் நேருகையில் அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டுகொள்ள மக்கள் தம்முள் அணியமாகி ஒரு சமூகமாகத் தமது சிக்கல்களைத் தமது ஆளுமையின் மூலமும் தமது வரிப்பணத்தை நிருவகிக்கும் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தினுடனும் சேர்ந்து தீர்த்துக்கொள்ள முனைகையில் அந்த சமூகம் தனது ஆற்றலில் தான் நம்பிக்கை வைத்து ஒரு சமூகமாகத் தனது சிக்கல்களைத் தானே தீர்க்கும் ஆளுமையை வளர்த்து வெளியாருக்காகவும் வெளியாரின் ஏய்ப்புகளுக்காகவும் காத்திருக்காது. எனவே இந்த நிலை உருவாகாமல் தடுக்க இப்படியான பேரிடர்கள் நேர்ந்த மறுகணமே NGO க்கள் வந்து மக்களிடத்தில் வேலை செய்து மக்களைத் தமது ஆளுமையையும் ஆற்றலையும் உணரவிடாது செய்வதோடு சமூகமாக அணிதிரண்டு தமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளும் பழக்கம் ஏற்படுவதை இல்லாமல் செய்யும்.

ஏகாதிபத்திய நலனுக்கு உகந்த அல்லது கேடாகாத ஒடுக்குமுறை அரசுகளை ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகளிலிருந்து காப்பாற்றுவதில் NGO க்கள் முன்னின்று உழைக்கும்.

தமது மண்ணிழந்து, உறவுகளை இழந்து, உடல் அவயங்களை இழந்து, வாழ்வாதாரமிழந்து எமது மக்கள் சொந்த மண்ணில் ஏதிலிகளாக இருக்கும் போது, அவர்களின் நிலங்கள் இராணுவத்தால் வல்வளைப்புக்குள்ளாகி, உறவுகள் சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கும் போது அவர்கள் எதை இழந்தார்களோ அவற்றிற்கான மூல காரணத்தை அகற்றிச் சிக்கல்களைத் தீர்க்க முனையாது, மாறாக அதனை மழுங்கடித்து மறைப்பதற்காக ஏதோ எமது மக்கள் இழந்தது இவையொன்றுமில்லை உளவியல் சமநிலையை மட்டும் என்றாற் போல காட்டி, எமது மக்களிடத்தில் எழும் நியாயமான வெஞ்சினத்தையும்  ஒடுக்குமுறையாளனிற்கு எதிராக வஞ்சினமாக நெஞ்சிலிருக்கும் தமிழ்த் தேசிய மெய்யுணர்வையும் உளநோயாகக் காட்டி அவற்றினை இல்லாதொழித்து அடக்குமுறையாளனின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு எமது மக்களின் அடக்குமுறைக்குள்ளாகி அவதியுறும் உண்மை நிலை மடைமாற்றம் செய்யப்பட்டு மக்களின் நியாயமான தேசிய உணர்வுகளை மழுங்கடிக்க பெரும்பாலான NGO க்கள் உளவியல் சமூக திட்டங்கள் (Psycho Social Projects) என்ற கருப்பொருளில் பல திட்டங்களை முன்னெடுக்கும். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் தமிழீழ மண்ணில் காலடி வைத்துள்ள NGO க்கள் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை உற்று நோக்கின் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

மேலே விளக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுவாக எவ்வாறு எதற்காக NGO க்கள் உலகெங்கும் இறக்கிவிடப்பட்டுள்ளன எனப் பார்த்தோம். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ மண்ணில் புதுப்புது வடிவங்களுடன் எப்படிக் களமிறங்கித் தமிழர்களின் அரசியல்வெளியைச் சீரழித்துக்கொண்டு வெளியாரின் குழிபறிப்புகளிற்கான அரசியலை NGO க்கள் முன்னெடுத்துச் செல்கின்றன என்பதனை நாம் தெளிவாக உணர வேண்டும். NGO க்கள் “சிவில் சமூகம்” என்ற பெயருக்குள் ஒளிந்திருந்து கழுத்தறுக்கும் நுண்ணரசியலை முழு உடற்கூற்றாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

இதில் பாக்கியசோதி சரவணமுத்து எனும் மேட்டுக்குடிக் கொழும்புவாழ் தமிழர் நிறைவேற்றுப் பணிப்பாளாராக இருக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான அமையம் என்ற பெயருடன் தம்மை சிவில் சமூகமாக அடையாளப்படுத்தி வரும் NGO வானது 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகி வருகின்றது. வாசிங்டனின் கொழும்புக்கிளையாகச் செயற்பட்டு வரும் இத்தகைய அமைப்புகள் நல்லிணக்கம், மாந்த உரிமைகள், புனர்வாழ்வு எனப் பலவாறு பேசி மேட்டுக்குடிக் கனவான்களை ஆபத்பாண்டவர்களாகப் பார்க்கும் காலனியடிமைப் பொதுப்புத்தியைக் கொண்ட மக்களை எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர்.

சரி. பாக்கியசோதிக்கு தமிழ்மொழியே தெரியாததால் அவர் ஊரோடிருந்து (கொழும்பு) வாசிங்டன் வேலைகளைச் செய்துவருவதால் அவரால் புரட்சிச் சாயத்துடன் தமிழீழ மக்களிடத்தில் வர முடியவில்லை. ஆனால் தமிழீழ மண்ணின் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் வலம் வரும் அமைப்பானது புரட்சிச் சாயத்தை அள்ளிப் பூசிக்கொண்டு வந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஒரு இனவழிப்புப் போரின் பின்பு இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்ட மக்களிடத்தில் ஏகாதிபத்தியத்தின் துணைப்படைப் பிரிவுகளில் ஒன்றான NGO க்கள் எப்படிச் செயாலாற்றும் என்ற நுண்ணரசியலை விளங்கிக்கொள்ள தமிழ் சிவில் சமூக அமையம் என்ற பெயரில் தமிழீழத்தில் இயங்கிவரும் NGO இனைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். ஐந்தாண்டுகளாக தமிழ் சிவில் சமூக வலையமைப்பு என்ற பெயரில் அறிக்கையிட்டு வந்தவர்கள் 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் அமைப்பு வடிவம் பெற்றனர். சிவில் சமூகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பின் தலைமைகளாகவும், இணைப்பாளர்களாகவும் அந்த அமைப்பிலிருப்போர் யாரென்று சற்றுநோக்கித் தான் ஆக வேண்டும். சிவில் சமூகம் என்றதும் தமிழீழ விடுதலைக்குப் போராடி இனக்கொலைக்குள்ளாகியுள்ள மக்களில் காணாமல் போனோரைத் தேடுவோரும், சிறைபட்டிருக்கும் எமது அரசியல் கைதிகளின் உறவினரும், விடுதலைக்காகப் போராடிய ஆளுமைகளும் மண்சார்ந்து மக்களுடன் நின்று பணியாற்றியவர்களும் இருப்பார்கள் எனவே பெயரை வைத்துப் பலரை நினைக்கத் தூண்டும். ஆனால், இந்த அமைப்பில் இருப்பவர்கள் யாரெனில் மருத்துவர்கள், பொறியியளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மக்களை நம்பாமல் கர்த்தரை நம்பும் பாதிரியார்கள் என ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தி வாழும் மேட்டுக்குடிக் கனவான்களே இருக்கிறார்கள். இவர்களில் பலர் போர்க் காலங்களில் மாணவர்களாக இருந்த போது அவர்களிலும் திறமையான மாணவர்கள் தேச விடுதலைக்காகப் புறப்பட்ட போது வீட்டுக்குள் ஒளிந்திருந்து பாடங்களை மனனம் செய்துகொண்டு பக்கத்தில் அழுகுரல் கேட்டாலும் படிப்புப் போய்விடும் என்று எட்டிக் கூடப் பார்க்காத உள்ளங்காலில் ஒரு துளி மண்படாத மலர்ப்படுக்கை வாழ்விலிருந்து வந்த ஆளுமை குறைந்தோராகவே இருந்தனர். இவர்களில் பலர்தான் இன்று தமிழ் சிவில் சமூக அமையம் என்ற பெயரைப் பயன்படுத்தி NGO ஆக இயங்குகின்றனர்.

இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவித்து ஏனையோர் மக்களைக் காணாதோரே. பள்ளிக்கூடமும் தனியார் வகுப்புகளுமென இருந்தவர்கள் பின்பு பல்கலைக்கழமும் பட்டமுமென இருந்து இப்போது வேலையும் வீடும் சம்பாதிப்புமென இருந்தவர்களாக உடலில் ஒரு வியர்வைத்துளியை அறியாதவர்களாக மக்களைக் காணாதவர்களாக இருந்தவர்களை இழுத்துப் போட்டு “சிவில் சமூகம்” என்ற போர்வையில் இந்த NGO தேரினை இழுப்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? எத்தகைய நுண்ணரசியல் ஆட்டம் இவர்கள் மூலமாக ஆடப்படுகிறது எனப் பார்க்க வேண்டும்.

இனப்படுகொலைக்குள்ளாகித் தமக்கான தக்க தலைமையையும் தாம் வாழ்ந்த நிழலரசின் அத்தனை கட்டமைப்புகளையும் இழந்து நட்டாற்றில் இருக்கும் ஒரு ஒடுக்குண்ட தேசத்தில் எங்கெங்கெல்லாம் வெற்றிடம் இருக்குமோ அங்கங்கெல்லாம் NGO க்கள் வந்து அமர்ந்துகொள்ளும். மக்களுக்கான ஊடகங்கள் இல்லையென்றால் ஒரு ஊடகம் அங்கே வந்து விடும். இப்படியாக வல்ல தலைமையை இழந்துவிட்ட தமிழ்மக்களின் அரசியல் தலைமை கெடுவாய்ப்பாக மீண்டும் வாக்குப் பொறுக்கும் மிதவாதத் தமிழ்த் தலைமையிடம் சென்றது. வாக்குப் பொறுக்கிய பின்னர் செய்யும் பாராளுமன்ற அரசியலினால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் இழந்துவரும் சூழலைத் தாமதப்படுத்தத்தன்னும் இயலாது என்று மக்களுணர்ந்து தமக்கான தலைமையை ஒரு புரட்சிகர மக்கள் இயக்கமாக பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தேடுவார்கள். தேடினார்கள். தேடுகிறார்கள். எல்லா வெற்றிடத்தையும் உரியவர்கள் நிரப்ப முன்னரே நிரப்பிவிடும் NGO க்கள் ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தின் தேவை மக்களிடத்தில் எழும் என்பதால் அதுவாகவும் அல்லது அதனைத் தீர்மானிக்குமிடத்திலும் இருப்பதற்காக உருவாக்கிவிடப்பட்ட NGO தான் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் வலம் வருகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டோரும் மக்களைக் காணாத மேட்டுக்குடிக் கல்வியாளர்களும் இந்த NGO உடன் நிற்க இடம் தேடிக் கூட்டிற்கு நிற்க அது ஒரு வெகு மக்கள் அரசியல் செய்வது போன்ற ஒரு போலித்தோற்றம் தெரியும்.

இந்த அமைப்பில் இன்று பேச்சாளர்களில் ஒருவராகப் பதவிநிலையில் அடையாளப்படுத்தப்பட்டாலும் அந்த அமைப்பின் சார்பில் இயங்கியும் பேசியும் வருபவர்களில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக இருக்கும் கு. குருபரன் முதன்மையானவர். அவர் சட்டத்துறையில் இளமானிப்பட்டத்தைப் பெற்ற சில நாட்களிலேயே அவரை அமெரிக்காவின் உதவி இராசாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியுள்ளார் என்றளவில் இந்தக் குருபரன் முன்னரே அமெரிக்கத் தூதரகத்தால் இனங்காணப்பட்டவராக இருந்துள்ளார். இளமானிப்பட்டம் பெற்ற அடுத்த சில மாதங்களில் இந்த சிவில் சமூக அமையத்திற்குப் பேச்சாளாராக குருபரன் நியமிக்கப்பட்டிருக்கிறார் எனில் அவர் மீது ஏதோவொரு பாரிய நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அது எவரால் என ஊகிப்பது இலகுவானதுதான். பொதுவாக ஒரு அமைப்பின் பேச்சாளராக முதிர்ச்சியுள்ள அனுபவமுள்ள ஒருவரையே நியமிப்பார்கள். ஆனால் சிவில் சமூக அமையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட NGO க்கு பேச்சாளராக இருப்பதற்கு இளமானிப்பட்டம் பெற்று சில காலமேயான குருபரன் தகுதியானவர் என அடையாளங்காணப்பட்டமை விபரமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. இந்தக் குருபரன் “அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்” என இன்னொரு NGO வினை நிறுவி நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து அதனை இயக்கி வருகிறார். மாதமொருமுறை அல்லது சில மாதங்களுக்கொருமுறை அமெரிக்க ஐரோப்பியப் பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவது தான் இந்த அடையாளம் என்ற NGO வின் முதற்பணி. உலக வங்கி மற்றும் USAID போன்றவற்றிலிருந்தும் நிதிபெற்று இயங்கும் இந்த அமைப்புக்கு மேற்கு நிதிகள் கிடைக்க குறிப்பிட்ட சில தூதரகங்கள் பெருமுதவிகள் செய்கின்றன. மேற்கின் நிதியில் NGO நடத்தும் குருபரன் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பேச அனுமதியுண்டு. ஏனெனில், அதனைக் கூட இப்படியான NGO க்கள் தான் பேச வேண்டுமென்பது மேற்குச் செய்யும் நுண்ணரசியலாகும்.  இதனால் இந்தக் குருபரன் கருத்து வெளியிடும் போது மேற்கின் நிதியை வெளிப்படையாகப் பெற்று இயங்கும் அடையாளம் எனும் NGO வின் கருத்தா அல்லது மேற்கின் நிதியை மறைமுகமாகப் பெறும் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற NGO வின் கருத்தா என்று குழப்பமாக இருப்பதாக ஒரு ஊடக நண்பர் அப்பாவித்தனமாக இந்தப் பத்தி எழுதுபவருக்குச் சொன்னார்.   

அத்துடன் எமது இனவிடுதலைக்காகப் போராடிச் சிறைப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளான உறவுகள் தமது விடுதலை குறித்தும் வழக்குகள் தொடர்பாகவும் சிறைகளில் இருந்து தொடர்புகொண்டு சட்டவாளர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேசுவது ஒரு இயல்பான வழக்கம். அவர்களது வழக்குக் குறித்து அவர்களை விட எவருக்கும் சட்ட அறிவோ அது குறித்த முன்னெடுப்பறிவோ இருக்காதென்றளவில் விடயங்களை விளங்கி வைத்திருக்கும் எமது அரசியல் கைதிகள் வெளியே தம்மால் இயங்க முடியாத ஒரே காரணத்தால் சிறைப்பட்ட வலியுடன் வாய்க்கும் அருமையான நேரத்தில் எவ்வளவோ துன்பங்களிளுக்கும் இறுக்கங்களுக்கும் நடுவிலும் தொலைபேசிக்கு அழைக்கும் போது அரசியல்வாதிகளோ அல்லது பெரும்பாலான தொழில்முறைச் சட்டவாளர்களோ (சிங்களச் சட்டவாளர்கள் அடங்கலாக) கூடிய முதன்மை கொடுத்து அவர்களின் சூழலறிந்து பேசுவார்கள். ஆனால் குருபரன் என்பவர் ஒரு அனுபவமற்ற அப்போது தான் ஓரிரண்டு வழக்குகளில் ஈடுபட்டுப் பயிலும் ஒரு சட்டவாளர் என அறியாமல் இவருக்கு ஊடகங்களும் இன்னும் யார் யாரோ கட்டிவிட்ட மணியை நம்பி இவர் பேசும் அரசியலை நம்பி இவருக்கு சிறையிலிருந்து அழைத்து தமது வழக்குக் குறித்துப் பேச முற்பட்டபோது, “சிறையிலிருப்பவர்கள் தொலைபேசி வைத்திருப்பதும் பேசுவதும் சட்டத்திற்கு முரணானது. என்னை நீங்கள் அழைக்க வேண்டாம்” என தனது மேட்டுக்குடி மலர்ப்படுக்கைவாழ் பண்புநிலையின் மெய்நிலையைக் குருபரன் காட்டி விட்டார். இவரின் பேச்சுகளின் போலித்தன்மையையும் நடைமுறையின் மெய்நிலையையும் அறிந்த எமது இனவிடுதலைக்காகப் போராடிச் சிறைப்பட்டிருப்பவர்களின் மனநிலையில் தான் இந்தக் குருபரன் வகையறாக்கள் சரியான முறையில் பதிவாகியிருப்பார்கள்.

இதே குருபரன் தமிழ்ச் சமூகத்தில் இருகட்சி அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பது தேவையாம் என்று பரப்புரை செய்து வருகிறார். இனப்படுகொலைக்குள்ளாகி நிற்கும் தமிழினம் எண்ணிக்கையில் தனது சொந்த நிலத்திலே கூட சிறுபான்மை ஆக்கப்பட்டு வரும் வேளையில் தனது பிரதிநிதித்துவ அரசியலைத் தான் எழுந்து விடுதலைக்காகப் போராடும் காலம் வரையிலாவது தக்கவைக்க வேண்டுமென்ற நிலையில், இப்படியாகத் தமிழர்களின் வாக்குகள் சிதறுவது யாருக்கு நன்மை பயக்கும் எனத் தெரியாமல் இந்த NGO நபர் இதைச் சொல்லியிருக்க மாட்டார். அதுவும் இப்படியான பரப்புரைகளை தென் தமிழீழத்தில் செய்தால் அதன் விளைவு என்னவாகும் என இந்த மண்ணில் ஊர்வனவுக்குக் கூடத் தெரியும். இந்த NGO நபருக்குத் தெரியாமலா இருக்கும்?

“யாழ்ப்பாணத்திலிருந்து முசுலிம்களை வெளியேற்றியமையானது ஒரு இனச் சுத்திகரிப்பு” என ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனின், பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு விடயமாகக்கொள்ளாது” என இதே குருபரன் கூறியுள்ளார். இந்த மோசமான கருத்தைச் சுமந்திரன் கூறிய போது எதிர்த்தெழுந்து கொதிப்புடன் கண்டித்த பலருக்கு குருபரன் சொன்ன இந்தக் கூற்றுக் கண்ணிற்குத் தெரியவில்லை. ஏனெனில் தமது கட்சிசார் நிலைகளுக்கு இப்போது பயன்படுகிறார் எனக் கணித்து இப்படியானவர்கள் கொள்ளும் பராமுகத்தில் நேர்மையான விடுதலை அரசியல் இல்லை.

எனவே இத்தகைய NGO க்கள் இன்று எவ்வாறு செயற்படுகின்றன என கீழ்வருமாறு சுருங்க அடுக்கலாம்.

புரட்சிகர ஆற்றலாக ஒரு மக்கள் இயக்கத்தின் பின்னே மக்கள் செல்வதைத் தடுத்துத் தம்மை மாற்றாகக் காட்ட சிவில் சமூகத்தின் பெயரால் இயங்கும் NGO க்கள் வேலை செய்வதுடன் சிவில் சமூகத்தின் சார்பில் பேசவல்லவர்களாக தாமே அடையாளங் கொள்கின்றனர். இவர்களின் கருத்தே சிவில் சமூகத்தின் கருத்தாக ஊடகங்களின் மூலம் பதிவாகும்.

அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புவார்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பும் பேசுவார்கள், இனப்படுகொலையில் மேற்கின் பங்கையும் பேசுவார்கள். ஆனால் அங்கிருந்து நிதிபெற்றுத் தான் இயங்குகிறார்கள் எனில் இவர்கள் புரட்சிகரச் சாயத்துடன் மக்களிடம் வந்து சிக்கல்களைக் கையிலெடுத்து அப்படியே அதை மடைமாற்றிவிட்டு அறிக்கையுடன் போய் விடுவார்கள். இதன் தொடர்நிலையை உற்றுநோக்கி மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினால் அவர்களுக்கு எல்லாம் புரியும்.

இப்படியாக சமூகத்தில் மக்கள் சார்பாகப் பேசுபவர்கள் என்ற வேடந்தாங்கி இந்த நபர்களை அறிவார்ந்த தலைமைகளாக NGO முன்னிறுத்துகின்றது. உண்மையில் இவர்கள் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட மேற்குலகின் புல்லுருவிகளே.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் துன்பங்களைத் தாங்கிய மக்களின் அழுகைகளையும் குரல்களையும் பதிவு செய்து மேற்கிற்கு அனுப்பி மேற்கிடமிருந்து நிதிபெற்றுக்கொள்ளும் அடையாளம் வகையறா அமைப்புகள் ஏதோ மக்களுடன் நின்று செயற்படுவதாகத் தோற்றம் தரும். இதற்கு எதற்காக மேற்குலகு நிதியளிக்கிறது என வினா எழுப்பிப் பாருங்கள். அவர்கள் பேயறைந்தவர்கள் போல முற்போக்குத் திரையகன்று அகன்று விடுவார்கள். ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முன்பு, போராட்டத்தின் போது, அந்த மக்கள் இனப்படுகொலைக்குள்ளான பின்பு அந்த மக்களின் மனநிலை, ஆளுமை, எதிர்பார்ப்பு என்பன குறித்து ஆய்வு செய்து, அதற்குள் வேலை செய்யத் தான் எப்படி உள்ளிறங்கலாம் என மேற்கு முடிவெடுக்கவே இத்தகைய ஆவணபடுத்தல்களை இவர்கள் மூலம் செய்ய இவர்களுக்கு மேற்கு நிதியளிக்கிறது. இதை ஏனைய தேசிய இனங்களிற்கு நடந்தவற்றோடு ஒப்பாய்வு செய்து சில ஒடுக்கல் விதிகளை மேற்குப் புதிதாகத் தனது உட்சுற்றுக் கையேடுகளில் எழுதி வைக்கும்.

கலை, இலக்கிய, படைப்புத் தளங்களிலும் இருந்து இயல்பாகவெழும் விடுதலைக் குரல்களை வெளிச் சொல்ல அவர்கட்கு நிதியொரு தடையாக இருக்கும் வேளை அப்போதும் புரவலர்களாக உள்நுழைந்து படைப்புவெளிகளையும் இத்தகைய NGO க்கள் தமதாக்குவர்.

இளவல்களிடத்தில் ஆளுமை விருத்தி செய்யப்போவதாகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தித் தமக்கானவர்களை அடையாளங்கண்டு அவர்களை NGO சமூகமாக வளர்த்தெடுத்து தூதரகங்களினதும் மேற்குமைய நிறுவக அமைப்பாளர்களினதும் கோப்புகளில் இப்போதே இடம்பிடிக்க வைப்பர். நாளை இவர்களையே தலைவர்களாக உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபடுவர். (ஒரு மாபெரும் இனவிடுதலைப் போராட்டத்தைத் தனது சொந்தக் காலில் நின்று எதிர்கொண்டு போராடிப் பெற்ற ஆளுமையை விடுத்து மூடிய அறையில் வெண்திரையில் படங்காட்டி ஆளுமை விருத்தி வகுப்பெடுப்பதை நினைத்து யாரும் சிரித்துச் சாகாதீர்கள்)

உறைக்கச் சொல்வதானால், மேற்குலக ஏகாதிபத்திய உலகு புரட்சி மீதான தனது வன்மத்தை இப்படியான NGO க்களையும் NGO நபர்களையும் புரட்சி பேசவைத்துத் தீர்த்துக்கொள்கிறது.

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகச் சில நுண்ணரசியல்களை “சிவில் சமூகம்” போன்ற பெயர்களிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் NGO க்கள் மூலம் செய்கின்றன. இதனால் சிவில் சமூகம் என்ற பெயர்களில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை.

இதனை உணருவோமா? புரட்சிகர ஆற்றல்களாக ஒரு மக்கள் இயக்கம் தமிழீழ மண்ணில் இருந்து மீண்டெழ வேண்டாமா?

-சேதுராசா-

2018-10-05

 12,838 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply