
உலகம் எல்லாத் துறைகளிலும் நவீன வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு செல்கிறது. அதற்கேற்றாற்போல் சிங்களப் புலமையாளர்களும் தமது இனத்திற்கு உலகத்தின் புது ஒழுங்கை ஊடகங்கள் மூலமாக மெது மெதுவாக அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் ஆனால் தமிழ் ஊடகப்பரப்பில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தமிழ் செய்தித்தாள்களில் பெரிதளவில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. விளம்பரங்களையும் இறப்புச் செய்திகளையும், இணையத்தில் வந்த செய்திகளையும் மாத்திரம் வெளியிடும் வெறும் தாள்களாகவே தமிழ் செய்தித்தாள்கள்; வெளிவருவது மிகவும் துன்பியல் விடயம். முறையாக ஊடகவியலைக் கற்றவர்களை வைத்து உலகத்தரத்திலான செய்தித்தாள்களை வெளியிடுவது குறித்து ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் செய்தித்தாள்களில் மாற்றங்கள் நிகழாமைக்கான காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தான் என பல மட்டங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். இன்று தமிழர்களின் தேர்தல் அரசியலானது அப்புக்காத்தர்களினால் மட்டும் நிருவகிக்கப்படும் ஒரு தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. எந்தவொரு அடிப்படைச் சிக்கல்களினையும் அதன் மூலத்தில் இருந்து அறிவார்ந்து அணுகி, துறைசார்ந்தவர்களின் ஆய்வுகளையும் அறிவூட்டற் கருத்துகளையும் பெற்று அதன் மூலம் தீர்வை நோக்கி நகருவதை விடுத்து, அப்புக்காத்தர்களின் பேச்சைக் கேட்டு “அந்தச்சட்டத்தில் இத்தனையாம் பக்கத்தில் இத்தனையாம் சரத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது” அது இது என்று மிகவும் வெகுளித்தனமாக கால இழுத்தடிப்பைச் செய்து கொண்டிருக்கிறது தமிழர் அரசியல்.
இன்றைய தமிழ் செய்தித்தாள்கள் வெறும் கட்சி அரசியலின் பரப்புரை ஊடகங்களாகவும் ஏற்கனவே காகத்தில் குறிப்பட்டிருந்தது போல ஊடகர்கள்; அரசியல்வாதிகளின் ஊடக அடியாட்களாகவும்தான் மாறியிருக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கைச் சிங்களச் செய்தித்தாள்கள் தங்களை பன்னாட்டுத் தரத்திலான ஆங்கிலச் செய்தித்தாள்களின தரத்திற்கு வளர்ந்துவிட்டன. சிறுவர்களின் வாசிப்பிற்கு, மாணவர்களின் வாசிப்பிற்கு, அரசியல் வாசிப்பிற்கு, உலக நடப்புகள், விஞ்ஞானம், வேளாண்மை, பொருண்மியம் என்று எல்லாவற்றையும் அந்தந்த துறைசார்ந்தவர்களால் சிறந்த முறையில் ஆய்வு செய்து மிகத்தரமான மொழிநடையுடன் சிங்களச் செய்தித்தாள்களின் உள்ளடக்கங்கள் பல்பரிமாண வாசிப்பிற்கான தளமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. குடும்பச் சிக்கல்கள், கள்ளக்காதல்கள் போன்ற சமூகச் சிக்கல்களை பெரும் செய்திகளாகக் காவிக்கொண்டு திரியாமல் தமது சமூகத்தின் வாசிப்பையும் தேடலையும் ஊக்குவிக்கும் விதமாகத் தமது செய்தித்தாள்களை தெளிவாக வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். சிங்களச் சமூகம். தமிழர்கள் சிறுபான்மையினர் என்றும் வந்தேறிகள் என்றும் இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்றும் சிங்கள பேரினவாதத்தின் இனவாதக் கருத்தியல்களை தமது சமூகத்திற்கு செய்தித்தாள்கள் மூலம் பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாகச் சொல்லித் தரும் ஊடக நுட்பத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்றைய அறிவியலுக்கு ஏற்றாற்போல், இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகக் கட்டமைப்புகளின் வடிவ மாற்றங்களிற்கேற்றாற் போல் தமது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திற் செல்வதில் சிங்கள ஊடகர்களின் பணி மிகப் பெரியளவில் காணப்படுகிறது.
ஆனால், இன்று எந்த தமிழ்ச் செய்தித்தாள் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமானதாக வெளிவருகிறது? வெறும் அரசியல் கட்சிகளின் ஊதுகுழல் செய்தித்தாள்களே வெளிவருகின்றன. பாடசாலை மாணவர்கள் விரும்பி வாசிக்கவும், அறிவியல் குறித்தும், பொருண்மியம்; குறித்தும், தமிழர் வரலாறு குறித்தும், தமிழர்களின் வாழ்வியலின் இலக்கியம் குறித்தும் எந்தச் செய்தித்தாள் தமிழினத்திற்கு தொடர்ச்சியாக சொல்லிவருகிறது? கள்ளக் காதல்களையும், கஞ்சா விற்ற கதைகளையும், கொலைகளையும், கொலை செய்த முறைகளையும், சண்டியர் கதைகளையும், ஈழத்துத் தமிழ் சண்டியர்களை தென்னிந்திய சினிமாக்களுடன் ஒப்பிட்டு அதை பத்திரிகைகளில் வெளியிடும் அளவிற்கு தரம்கெட்டுப் போய் இருக்கிறது தமிழ் ஊடகவியல்.
ஒரு செய்தியை சமூகத்திற்குள் கடத்தும் போது “இந்தச் செய்தி கட்டாயம் எல்லோருக்கும் சொல்லப்பட வேண்டிய ஒன்றா” என்பது குறித்து சிந்திக்கக் கூட ஆற்றலற்றவர்களைக் கொண்ட ஊடகவியல் சமூகம்தான் இன்றும் தமிழீழ நிலப்பரப்பில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு செய்தியை சமூகத்திற்கு சொல்லும் போது அதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன என்பது பற்றியதான உளவியல் பார்வையே இல்லாத இழிநிலை ஊடகவியலை தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது. தமிழ்ச் செய்தித்தாள்களில் துறைசார்ந்தவர்களின் பங்களிப்பானது மிகச் சொற்ப அளவிலேயே காணப்படுகிறது. தமிழீழ போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டங்களில் தமிழ்ச் செய்தித்தாள்களில் வெளிவந்த கட்டுரைகளைப் பார்த்தால் அந்தக் காலத்தில் இருந்த வாசிப்பின் வீச்சுத் தெரிகிறது. ஆனால் இன்று வெளிவரும் செய்தித்தாள்கள் அலட்டல்தனமாகவும், அருவருக்கத்தக்க சமூகச் சிக்கல்கள் செய்திகளாகவும் வெளிவருகின்றன. உண்மையில் இவைதான் இந்தச் சமூகத்திற்கு சொல்லப்பட்ட வேண்டிய செய்திகளா என்று காறித் துப்புமளவிற்கு தரம்கெட்டுப்போய் இருக்கிறது தமிழ் ஊடகவியல்.
தவிர, ஆண்டுதோறும் சகல துறைகளிலிருந்தும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழ பட்டப்படிப்புகள் மேற்படிப்புகளை முடித்து வெளியேறினாலும் தமிழர்தாயகத்தில் மிக முதன்மையான ஆய்வுகளை சிங்களவர்களே செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில் சிங்கள அரசு அடாவடித்தனமாக நடந்து கொண்டாலும் “ எங்களிடம் ஆய்வு செய்யக் கூடிய அணி இருக்கிறது நாங்களே இதை செய்கிறோம்” என்று பேச்சளவிலேனும் சொல்லத் திராணியற்ற அப்புக்காத்தர்களின் அரசியல்தான் இன்று தமிழர்களின் சாபக்கேடாக மாறியிருக்கிறது. அறிவியற்றுறை, வேளாண்துறை, புவியியல், கணக்கியல், உணவியல், பொறியியல் என பல்வேறுபட்ட துறைகளில் புலமைத்துவம் மிக்கவர்கள் தமிழ்ச் சமூகத்திற்குள் தமிழினத்திற்கு பணிபுரியக்கூடிய அவாவோடு இருந்தாலும் அப்புக்காத்தர்களினால் தொழிலாக செய்யப்படும் இந்த அரசியலுக்குள் இணைந்து பணியாற்ற அவர்கள் விருப்பமற்று இருக்கிறார்கள்.
விக்கினேசுவரன் பதவியேற்றபோது இருந்த அத்தனை குறைபாடுகளும் இன்று பதவி முடிவுறும் நேரத்திலும் காணப்படுகிறது. விக்கினேசுவரனிடம் துறைசார் குழுக்கள் இல்லை. துறைசார் குழுக்களை எப்படி கட்டமைப்பது என்பது பற்றியதான அறிவும் இல்லை. சட்டம் சட்டம் சட்டம் இதைத் தவிர வேறெதுவும் தெரியாத ஒரு அப்புக்காத்தரையே தமிழினம் தனது தலைவனாக இன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய வல்லாதிக்கமும் அவர்கள் சார்ந்த குழுக்களும் விரும்புகின்றன.
விடுதலைப்புலிகள் தமது நிருவாகத்தில் குறைந்த வளங்களை வைத்துக் கொண்டு துறைசார்ந்த நிபுணத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தனர். பொறியியல், கடல், வான், மருத்துவம், வேளாண், உற்பத்தித் துறைகள், புத்தாக்கத் துறைகள் என பலதரப்பட்ட துறைகளிலும் புலிகளிடம் கட்டமைப்பு இருந்தது. ஆனால் இன்று ஆலோசனை பெறக் கூட தமிழர்களிடம் துறைசார்ந்த கட்டமைப்புகள் இல்லை. இருப்பவர்களும் தங்களுக்குள் ஒற்றுமையின்றி சைக்கிளா வீடா என்ற சில்லறைத்தனமான அரசியல் பிடிக்குள் சிக்குண்டிருக்கிறார்கள். இதைத்தான் சிங்களம் விரும்பியது. அதை கசேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் என்ற கொழும்புவளர் அப்புக்காத்தர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டது. எப்படி தமிழினம் மீண்டெழுந்து இன்றைய உலக ஒழுங்கிற்கு ஏற்றது போல, ஆகக் குறைந்தது சிங்கள சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது போல போட்டி போடுவது?
எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அப்புக்காத்தர்தர்களை அரசியலில் இருந்து துரத்த வேண்டும். துறைசார்ந்தவர்களை, புதிய தளத்தில் இன்றைய தமிழினத்தை நகர்த்தி அரசியல் விடுதலை குறித்தும் வேலை செய்யக் கூடியவர்களை தமிழர் அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும். ஆங்கிலப் புலமையும் சட்டப் புலமையும் மாத்திரமே தமிழருக்கு விடுதலை பெற்றுத் தரும் என்பது போலான மாயையை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கான நிரந்தரத் தொழிலாக தமிழர் அரசியலை மாற்றிக் கொண்டிருக்கும் அப்புக்காத்தர்கள் எல்லோரையும் தமிழர் அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே இப்போது இருக்கக் கூடிய உடனடித் தேவையாகக் காணப்படுகிறது.
இன்று தமிழ்த்தேசியம் பேசும் அத்தனை அப்புக்காத்தர்களும் பின்வழியால் சமூக விரோதிகளுக்காக நீதிமன்றில் வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளிலும் இப்படியான அப்புக்காத்தர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். வடகிழக்கில் நீர் மேலாண்மை, நில மேலாண்மை, பொருண்மியம், தொழினுட்ப குறைபாடுகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. ஆனால் இந்தந்த துறைசார்ந்தவர்கள் எத்தனை பேர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் இருக்கிறார்கள்? எத்தனை துறைசார் குழுக்கள் வடகிழக்கில் காணப்படுகின்றன?
புலம்பெயர் நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் புலமைபெற்று உச்சக்கட்ட தொழினுட்ப பலத்துடன் எமது இனத்தின் ஒருபகுதி இருக்கிறது. அந்த வளத்தை பயன்படுத்துவதற்கு இந்த அப்புக்காத்து அரசியல் அனுமதிக்காது. அந்த வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த அறிவும் தொலைநோக்கு சிந்தனைகளும் அப்புக்காத்து அரசியலிடம் இருக்காது.
அன்பான தமிழ் மக்களே!!
துறைசார் குழுக்களை உருவாக்கவும் அதை அரசியல் சாராத கட்டமைப்புகளாக வடிவமைத்து எப்பொழும் எமது இனத்திற்காக பணியாற்றக் கூடிய வகையில் வைத்திருக்கவும் உங்களின் பங்களிப்பு முக்கியமானது. நீங்கள் சந்திக்கும் உங்கள் பிரதேச அரசியல்வாதிகளிடம் இது பற்றி கேள்வி எழுப்புங்கள். உங்கள் பிள்ளைகளை இனத்திற்காக பணியாற்றக் கூறுங்கள்.
காகம் துறைசார் இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள், பணிகளில் இருப்போர் என பலர் காகத்துடன் பயணப்பதற்கு அணியமாக இருக்கிறார்கள். நாள்தோறும் ஒரு மணி நேரமாவது இனத்திற்காக செலவழிக்க அணியமாபவர்கள் காகத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.
கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்
கதிர்
16-09-2018
6,781 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.