சுமந்திரனே! மேற்கின் பதிலியாக (Proxy) இருப்பதற்கு மெதடிச திருச்சபையின் துணைத்தலைவர் பதவியும் கனவான் வாழ்விற்கு அப்புக்காத்தர் தொழிலும் போதும் -முத்துச்செழியன்

இலங்கைத்தீவில் இன்று தமிழ் அரசியற் பரப்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு நபரின் பெயர் யாதெனக் கேட்டால், தயக்கமின்றிச் சுமந்திரன் எனச் சொல்லலாம். கூட்டமைப்பு என்று பேசினாலே பேச்சாளராக சுமந்திரனின் பெயரே முன்னிற்கின்றது. சம்பந்தன் என்று தனித்துப் பேசுவது காலாவதியாகிப் போய்  சம்பந்தன் + சுமந்திரன் என இணைக்காமற் பேசுவாரில்லை எனலாம். விக்கினேசுவரனின் சூழ்ச்சியில் சிக்குண்டோரும் அவரைப் போற்ற சுமந்திரனைத் தூற்றுவார்கள். கயேந்திரகுமாரை ஒரு அரசியலாற்றலாக நம்புவோரும் அவரை ஏற்ற இவரையே தூற்றுவார்கள். அறிவார்ந்து அரசியலை நோக்குவோரும் மேற்கின் அடிவருடியாக இவரைத் தான் நோக்குவார்கள். மேற்குச் சார்பு ஆங்கில, சிங்கள ஊடகங்களும் இவருக்கு ஒளி பாய்ச்சுவார்கள். இந்தியத்தூதரகத்தைக் கோயில் போல நேசித்துப் பூசிக்கும் ஊடக நிறுவனத் தலைமைகளும் முழுநேர அவதூறாக இவரைப் பற்றியே பேசுவார்கள். இவரை இரண்டகர் என்போர் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். இவரை அரசியல் சாணாக்கியன் என்போரும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர் உண்மையில் யார்? எவரின் நலன்களை இவர் பட்டெறிகிறார்? இந்த மேற்கின் முகவரை இரட்டை முகவராகப் பயன்படுத்தக் கூடிய நுட்பம் கூட்டமைப்பின் தலைமைக்கு இருக்கிறதா? இவர் தமிழர் அரசியலுக்குத் தலையிடியா இல்லைப் புற்றுநோயா என்பதை உவத்தல் காய்தலின்றிச் சரியான தகவல் திரட்டி ஆய்வு செய்யும் திறன் அவதூறு பரப்பிப் பழகிப் போன குறைக் கூட்டத்திற்கு இருக்கப்போவதில்லை. பயனுள்ள பலதைத் தமிழர் அரசியற் பரப்பில் பேசவிழைந்தாலே குறுக்கிட்டு வரும் சுமந்திரன் பற்றிய பேச்சு பேசு பொருளையும் திசைமாற்றுவதோடு அருவருப்பையும் கொடுப்பதாகவே இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் நாம் ஈடுபடப் போகும் பயனுள்ள அரசியற் கருத்தாடல்களின் போது மேற்கின் பதிலியான (Proxy) சுமந்திரனைப் பற்றிய எமது பார்வை என்னவென அறிய மீண்டுமொரு கட்டுரை வரைவது உடனடித் தேவையாகவுள்ளது.

எப்போதும் மேற்குலக தூதரகங்களும் இந்திய தூதரகமும் தமக்கானவர்களாகக் கூடியவர்களை இனங்கண்டு அவர்களுடன் உறவுகளைப் பேணி மாநாடென்றும் பயிற்சிப்பட்டறை என்றும் இன்னுஞ் சில பல நிகழ்வுகளென்றும் தத்தமது நாடுகளுக்கு அழைத்து தமக்கான முகவர்களை உருவாக்கியபடியே இருப்பார்கள். இப்படியானவர்கள் தகவல் வழங்குநர்களாகவும் கருத்தேற்றங்கள் செய்யவல்ல கருத்தியலடியாளாகவும் எதிர்காலத்தில் அரசியலில் நுழையக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பர். அமெரிக்காவின் உளவுத்துறைக்கு நபர்களை உற்பத்தி செய்வதில் பெரும்பங்காற்றும் Harward பல்கலைக்கழகத்தில் கற்ற நீலன் திருச்செல்வம் மறைந்தால் அந்த இடத்தினை இன்னொருவரைக் கொண்டு நிரப்ப ஏற்பாடுகள் ஏலவே முடிந்திருக்கும். இதனை அந்தத் தொடர்புடையவர் உணரவே நாட்கள் ஆகியிருக்கும். சுமந்திரனின் அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு நீலன் திருச்செல்வம் நினைவில் வருவது இயல்புதான். “நீலன் திருச்செல்வம் துரோகி எனச் சொல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர்களைக் கொலை செய்து நாம் எவற்றை அடைந்திருக்கிறோம்? இப்போது என்னையும் துரோகி எனக் கூறி கொல்லுங்கள். அதன் பின்னர் நாம் என்ன செய்யப் போகின்றோம்?” என வெளிப்படையாகவே பேசிய சுமந்திரன் தன்னை நீலன் திருச்செல்வத்தின் அரசியலோடு ஒப்பிட்டுப் பேசி நாம் கொடுக்கும் விளக்கவுரையை மிக இலகுபடுத்தியிருக்கிறார்.

சுமந்திரனின் அரசியல் வருகை என்பது  திடீரென கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகியமையுடன் நிகழ்ந்ததல்ல. மேற்குலகின் சூழ்ச்சிகள் மூலமும் தமிழர் விடுதலை அமைப்பின் மீதான பாரிய உலக அழுத்தங்கள் மூலமும் தமிழர்களின் தன்னாட்சியுரிமைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய கொண்டுவரப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தில் உள்ள தன்னாட்சியுரிமை மறுப்பு என்ற உள்ளடக்கத்தை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு சிறப்பான வழிவகையென்றாற் போல ஒரு சட்டப் புலமையாளன் என்ற அடையாளத்துடன் 2002 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளிலிருந்து ஊடகங்கள் வாயிலாகப் பரிந்துரைப் பரப்புரை செய்வதில் தனது அரசியல் நுழைவைச் செய்தார் அமெரிக்காவின் மெதடிச திருச்சபையின் சிறிலங்காவுக்கான துணைத் தலைவரான சுமந்திரன். இப்படியாக நுழைந்தவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராக கூட்டமைப்பிற்குள் நுழைந்தார். அரசியலுக்கு நுழைவதன் முன்பு தொழில்முறை வழக்கறிஞராக வர்த்தக வழக்குகளில் சிறந்தவராகத் திகழ்ந்த இவர், அரசியலில் நுழைந்ததன் பின்பாக அடிப்படை உரிமையியல் வழக்குகள், இறுதிப்போர் காலத்தில் கொழும்பிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றும் கோத்தபாயாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்திய வழக்கு, மறப்போராட்ட ஓய்வின் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையைக் காரணங்காட்டி 6 ஆம் திருத்தச் சட்டத்தின் படி த.தே.கூட்டமைப்பைத் தடைசெய்யும் முயற்சியை உச்சநீதிமன்றத்தில் கனடாவின் கூட்டாட்சி நீதிமன்று கியூபெக் சிக்கலில் கொடுத்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வழக்காடித் தோற்கடித்த வழக்கு, வலி வடக்கில் வல்வளைக்கப்பட்டிருந்த நிலங்களை மீட்பதற்கான வழக்குகள், சட்ட மீளாய்வு வழக்குகள் மற்றும் அவர் சார்ந்த கட்சி வழக்குகள் என்பவற்றில் ஈடுபட்டிருக்கிறார். சுமந்திரனின் அரசியலை அவர் சார்ந்த கட்சியிலிருப்போரிடம் கண்டிக்கும் போதெல்லாம் மேற்குறித்த வழக்குகளிற்காக அவர் உழைத்திருக்கிறார் என்று பதிலளிப்பர். அப்படி சுமந்திரனின் சட்டப் புலமையில் அவர்கள் நம்பிக்கை கொள்வது உண்மையெனில் அவரை ஒரு தொழில்முறை வழக்கறிஞராகப் பயன்படுத்துவது தான் அவரது துறைசார் செயற்பாடுகளுக்கு நல்லது என்பதுடன் தமிழர்களுக்கும் நல்லது.

அரசியற் சிக்கல்களை சட்டச் சிக்கல்களாகக் குறுக்குவதோடு மூடிய அறையில் மூடுமந்திர அரசியலில் ஈடுபட்டு தமிழர்களின் அரசியற் போராட்டம் மக்கள்மயப்பட்டு விடாது செய்யும் இழிநிலை அரசியலையே சுமந்திரன் செய்து வருகின்றார். கேப்பாபுலவில் மக்கள் திரண்டு தமது நிலங்களைக் கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கிய போது மக்களுடன் அவர்களின் பிரதிநிதியாக நின்று அவர்களுக்கு உறுதுணையாக நிற்காதுபோனாலும் பரவாயில்லை, மக்களைப் போராட்டத்தைக் கைவிட்டு மைத்திரியுடன் பேச வருமாறு சுமந்திரன் அழைத்தார். மேற்கின் பிணவாடைக்கு நல்லாட்சிப் போர்வை போர்த்த ஆட்சியில் மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதை விரும்பாத மேற்குலகின் குரலாக சுமந்திரன் பட்டெறிகிறார் எனப் போராடும் மக்களும் தெரிந்துகொள்ள அவரின் இந்தச் செயற்பாடு உதவியது.

நாதியற்று அரசியல் ஏதிலிகளாக நிற்கும் தமிழ் மக்கள் தமது அரசியல் வாஞ்சைகளையும் பேணவாக்களையும் வெளிப்படுத்தித் தமது குரலாகத் தம்மாற் தெரிவு செய்து தமது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கூடப் புரிந்துகொள்ள மறுக்கின்ற போக்கும் அணுகுமுறையும் சுமந்திரனிடமிருப்பதைத் தொடர்ச்சியாக நோக்கக் கூடியதாகவுள்ளது. “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையானது ஒரு இனச் சுத்திகரிப்பு” எனக் குறிப்பிட்ட சுமந்திரன் இது தொடர்பில் வட மாகாண மன்றில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். இல்லையெனின், பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு விடயமாகக்கொள்ளாது” எனக் கூறியுள்ளார். ஐ.நா அவை 1993 இல் இனச் சுத்திகரிப்பிற்குக் கொடுத்த வரைவிலக்கணத்தை எப்படி முசுலிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் பயன்படுத்த விரும்புவாரோ அப்படியே சுமந்திரன் இந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் அதாவது தென் தமிழீழத்தில் முசுலிம் ஊர்காவல் படையினர் சிங்களக் காடையருடன் சேர்ந்து தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றும் தமிழினப் பெண்களை பால் பலாத்காரத்திற்குட்படுத்தியும் நரபலி வெறியாட்டத்தை நடாத்தினர். இது தொடர்பில் வடக்கில் தமிழருடன் இணைந்து வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு வாய் கூடத் திறக்காது தமது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நிரூபித்தது மாத்திரமன்றி, அதில் சிலர் பள்ளிவாசற் தொடர்புகள் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத அரச படைப்புலனாய்வாளர்களுக்குத் தகவல் வழங்கும் கேவலமான வேலையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முனைந்தால் ஒன்றுபட்டு நின்று பள்ளிவாசலை வைத்துத் தப்பிக்க முனைவார்கள். அறவுணர்வுக்கு அப்பாற்பட்டுத் தமது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் ஒரு சமூகத்தைக் கூட வைத்துக்கொண்டு தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தன்னாட்சியுரிமை எனப் போராடுவது அடக்குண்டிருக்கும் தமிழினத்திற்கு மிகக் கடினமாக இருக்கும் என நினைத்து 24 மணி நேர காலக்கெடுவில் முசுலிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டுத் தமிழருடன் வடக்கில் அவர்கள் இணைந்து வாழ்தல் விடுதலைப் புலிகளால் மறுக்கப்பட்டது. இது தொடர்பில் பின்னரான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் முசுலிம் தலைமைகளை வன்னிக்கு வரவழைத்து வருத்தம் தெரிவித்ததுடன் முஸ்லிம்களை மீளக் குடியேறுமாறும் கோரியிருந்தார். ஆனால் இது வரை முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்காவல் படையால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் தலைமைகள் உரிமை பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் சலுகைகள் வேண்டி மாறி மாறிக் கூட்டணி வைக்கும்; நாகரீகம் கருதாது சொல்ல வேண்டுமெனின் விபச்சார அரசியலைச் செய்கின்றனர். இவ்வாறிருக்க, முசுலிம்களுக்கு வடக்கில் இணைந்து வாழ்தல் மறுக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து மீளக் குடியேறுமாறு அழைப்பு விடுத்து விடுதலைப் புலிகளினால் முடித்து வைக்கப்பட்ட சிக்கல் தொடர்பில் வட மாகாண மன்றில் பிரேரணை கோரிச் சுமந்திரன் உரையாற்றுவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப்படுகொலையைச் சந்தித்து இன்று நட்டாற்றில் நிற்கும் தமிழ் மக்களிற்கு வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதாகவே இருந்தது. சிங்கள பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை முசுலிம்கள் வெளியேற்றப்பட்டதுடன் சமன் செய்து சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள ஒரு சமூகத்தின் கூட்டுளவியலில் குற்றவுணர்ச்சியை வளர்த்து விடுதலை நோக்கி இயங்குவதில் சலிப்பையும் உண்டு பண்ணக் கூடும் என்பதும் இங்கு நோக்க வேண்டும்.

இந்தப் பாராளுமன்ற வழிகாட்டல் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கூட்டாட்சியும் இல்லை, வடக்கு- கிழக்கு இணைப்பு என்பதும் இல்லை, சொல்லாடல்களில் ஆங்கிலத்தில் சித்து விளையாட்டைக் காட்டினாலும் அதன் மெய்ப்பொருளில் ஒற்றையாட்சி -Ekiya Rajyaya (அரசியலமைப்புக் குறித்த விவாதங்கள் உச்ச நீதிமன்றுக்குச் செல்லின் அங்கு சிங்களமொழியிலுள்ள மூலமே கருத்திலெடுக்கப்படும் என்றே சிறிலங்காவின் அரசியலமைப்புச் சொல்லுகிறது) சிறிலங்காவில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுமந்திரனும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் எனச் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்பு நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழ் மக்கள் முறியடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு வந்த சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக அன்றிருந்த ரொபேட்-ஒ-பிளேக் என்பவர் கூட்டாட்சி (Federal), ஒற்றையாட்சி (Unitary) என்ற இரு சொற்களும் தவிர்க்கப்பட்ட ஒரு தீர்வைத் தான் தமிழர்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்தார். அன்றே மேற்கு என்ன செய்யப் போகின்றது என்பதில் மிகவும் தெளிவுறுதியுடன் இருந்திருக்கிறது. சுமந்திரன் மிகத் தெளிவாக மேற்கின் முடிவுகளையும் நலன்களையும் பட்டெறிந்து வருகிறார்.

உலக வங்கி (World Bank), பன்னாட்டு நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக அமையம் (WTO) என்பன கொழும்புமைய ஒற்றையாட்சியையே தனக்கு உவப்பானதாகக் கருதுகிறது.  “Vision 2025” என்ற பொருண்மியத் திட்டத்தை சிறிலங்காவில் நிறைவேற்றுவதற்காகவே இந்த நல்லிணக்க அரசாங்கம் எனப்படும் அரசாங்கம் மேற்கினால் கொண்டுவரப்பட்டது. பன்னாட்டளவில் சிறிலங்கா மீதான களங்கப்பெயரை இல்லாதாக்குதல், பன்னாட்டளவில் அதன் மீது விசாரணை மேற்கொள்ளலில் இருந்து காப்பாற்றல், 19 ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருதல் எனப்பல திட்டங்கள் அந்த “Vision 2025” திட்டத்திலுள்ளது. இதற்கான சட்ட மூலத்திருத்தங்களுக்காக சுமந்திரன் மிகவும் உறுதியுடன் வேலை செய்கிறார் என்பதை ஆழமாகப் பார்க்கின் புரிந்துகொள்ளலாம்.

“கடந்த ஓராண்டாக த.தே,கூட்டமைப்பு டெல்கி செல்லவில்லை என்றும் மீனவர் சிக்கல் பற்றிப் பேசும் சிறிலங்காவின்  குழுவொன்றில் நான் இடம்பெற்றதால் நான் மட்டும் 2016 இறுதியில் இந்தியா சென்றேன். ஆனாலும் த.தே.கூட்டமைப்பாகச் செல்லவில்லை. இப்படி த.தே.கூட்டமைப்பு இந்தியா செல்லாமல் இருப்பது விபத்தோ அல்லது தற்செயலானதோ அல்ல” என 2017 ஆம் ஆண்டு வெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் சுமந்திரன் வெளிப்படையாகவே பேசினார். அமைதிப் பேச்சு முன்னெடுப்புகளில் இருந்த எரிக் சொல்கெய்ம் கூட சிறிலங்கா சென்று திரும்பும் போது டெல்கி வந்து பேசி விட்டுத் தான் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருந்த இந்தியாவுக்கு இப்படியொரு சுமந்திரன் வழிகாட்டலில் உள்ள கூட்டமைப்பின் மீது வெறுப்பேற்படாமல் இருக்காதென்பதனை விளங்குவது மிகவெளிது. எனவே இதன் கிளைச் செய்தியாக நாம் கீழ்வருவனவற்றை சுருங்கவும் தெளியவும் விளங்கிக்கொள்ளலாம்.

தமது சொற்கேட்டு ஆடிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏதோவொரு அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் ஏதோவொரு வகையில் கொண்டு வரலாம் என்ற நகைப்பிற்கிடமான சிந்தனையில் முற்று முழுதாக மேற்கின் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கத் தொடங்கிய பின்னர், இந்தியாவிற்கு கூட்டமைப்பின் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டது. தமிழர்களிற்கு இலங்கைத்தீவில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் தம்மிடம் வந்து முறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. ஏனெனில் சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தைப் பேண தமிழர்களின் சிக்கல்கள் முதன்மையான ஒரு சாட்டாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் மேற்கிற்கோ தமது “Vision 2025” என்ற திட்டத்திற்காக ஒரு உப்புச் சப்பற்ற ஒரு தீர்வையென்றாலும் கையறு நிலையிலிருக்கும் தமிழர்களுக்கு வழங்கி அதனை தமிழர் பிரதிநிதிகள் மூலமாக தமிழர்களை ஏற்க வைத்துத் தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் காயடித்துத் தமது சந்தைக்கான நிலையான அமைதியை ஏற்படுத்தும் திட்டமிருக்கிறது.

எனவே மேற்கின் விருப்பினை நிறைவேற்றும் தரகர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுவதனால் சினமடைந்த இந்தியா, விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்திக் கூட்டமைப்பை ஓரங்கட்டித் தான் எதிர்பார்க்கும் வேலையைச் செய்யத் திடமாக வேலை செய்கிறது. (http://www.kaakam.com/?p=1116) கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதற்கு இப்போது கயேந்திரகுமார் பயன்படுகிறார். அதனால் அவர் இப்போதைக்கு இந்தியாவின் அடிவருடி விக்கிக்கு முண்டுகொடுப்பதாக முடிவெடுக்க நேரும். கயேந்திரகுமாரின் அரசியலாளுமை கூட்டமைப்பை உடைக்கவும் விக்கிக்கு வலுச் சேர்க்கவுமே பயன்படுமே தவிர தனது குடும்பக் கட்சியை வளர்த்து நிலைபெறச் செய்யக் கூட இயலாதுபோகின்றமையை அவரை ஒரு அரசியலாளுமையாக நம்பியவர்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள். கூட்டமைப்பில் சுமந்திரனின் மேலாதிக்கம் முடக்கப்பட்டால் மீண்டும் அது இந்தியாவின் சொல்லை மட்டும் கேட்டு நடக்கும் நிலைவரின் மீண்டும் கூட்டமைப்பிற்குள் விக்கினேசுவரன், சுரேசு போன்றோர் உள்வாங்கப்பட்டு இந்தியத் தூதரகத்தின் கட்டளைக்கேற்ப கட்டச் செய்தியிடும் ஊடக நிறுவனங்களும் கூட்டமைப்பிற்கு வலுச் சேர்க்கும். அப்போது கயேந்திரகுமார் மீண்டும் ஐ.நா மன்று பற்றியும் புவிசார் அரசியல் பற்றியும் மாற்றி மாற்றிப் பேசி மேலும் பேசுவதோ அல்லது செய்வதோ என்னவென அறியாது அங்கலாய்க்கவே செய்வார். (http://www.kaakam.com/?p=1003)

எனவே தமிழர்களின் பாராளுமன்ற அரசியலில் தலைமைக்கு வருவோர் மேற்கின் அடிவருடியாகவும் இந்தியாவின் அடிவருடியாகவும் இருப்பரே தவிர ஒரு போதும் தமிழர் தேச விடுதலையை நோக்கிச் செல்லார்கள். அப்படியாரும் பாராளுமன்ற அரசியலில் தம்மால் இப்படியேதாவது கிழிக்க முடியுமெனச் சொல்லின் அவர் மிகப் பெரும் பொய்யராக இருப்பார் அல்லது மக்களின் அதிருப்திகளை மூலதனமாகக் கொண்டு தன்னை வளர்க்கும் உத்தியில் இருப்பார். எனவே பாராளுமன்றக் குழுவாத குழுக் கும்பல் வெட்டிப் பேச்சுகளிலிருந்தும் வெட்டிச் செயற்பாடுகளிலிருந்தும் தமிழிளையோர் விடுபட்டு புரட்சிகர ஆற்றல்களாக ஒரு இயக்க நடைமுறையுடன் தமிழர் அரசியலைக் கையிலெடுத்து இந்தப் பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். புரட்சிகர ஆற்றல்களாக பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழிளையோர் இயக்கமாகச் செயற்பட்டேயாக வேண்டியது இக்காலத்தின் உடனடித் தேவையாகும்.

எனினும் ஒரு புரட்சிகரமான விடுதலைப் போராட்டம் இல்லாத காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தல் அரசியலை எவ்வாறு குழுப்பிரிந்து சிதைவடையாமல் ஓரணியில் நின்று தமிழர்களின் அரசியல் வாஞ்சைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தலாம் என்ற பார்வையும் தேவையானது தான். தமிழர்கள் ஓரணியில் நிற்பது தேவையானது ஆனால் போதுமானதல்ல. ஓரணியில் நிற்பதன் மூலம் தமிழர்களைப் பிரித்தாள நினைப்போரின் கனவுகளைத் தகர்க்கலாம் எனிலும், பாராளுமன்ற அரசியலில் அவர்கள் தேர்தலின் போது முன்வைக்கும் தேர்தல் அறிக்கை தமிழரது அரசியல் வாஞ்சைகளை மலினப்படுத்துவதாக இருந்தால் அது தமிழர்களின் அரசியல் வாஞ்சைகளைத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த முடியாது போவதுடன் அதற்கு மாறான செய்திகளையே உலகிற்குச் சொல்வதாய் அமையும். இருப்பினும், தமிழர்களின் அரசியல் வாஞ்சைகளை வெளிச் சொல்லும் தேர்தல் அறிக்கைகளை உருவாக்குவதில் 6 ஆம் திருத்தச் சட்டம் தடையாகவே இருக்கும். அப்படி அந்தத் தடை கணக்கெடுக்கப்படாமல் எவரேனும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அவர்கள் மீது ஆறாம் திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையென்றால் அவர்கள் இப்போதைக்கு எதற்கோ ஆளுந்தரப்பிற்குப் பயன்பட்டுப் போகின்றனர் என்றே பொருள்.

எனவே புரட்சிகரப் போராட்டங்களைத் தவிர தமிழர்களுக்கு வேறெந்தக் குறுக்கு வழிகளும் இல்லை. புரட்சிகரமாகத் தமிழர்கள் போராடத் தொடங்கிவிட்டால் இந்த அப்புக்காத்தர் தலைமைகளை அவர்கள் விரும்பும் மேற்கிற்கோ அல்லது இந்தியாவிற்கோ போகச் சொல்லி இவர்களை அப்புறப்படுத்தலாம். இல்லையென அடம்பிடித்து நந்திபோல நின்றால் அவர்களை அகற்றும் வழிவகைகளை போராடும் இயக்கம் மக்களுடன் நின்று முடிவு செய்யலாம். தமிழர் புரட்சிகரமாகப் போராடும் வரை குறைந்தது ஓரணியில் பிளவில்லாமலாவது நிற்க வேண்டுமல்லவா?

பாராளுமன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தலைமைகள் தம்முள் அகமுரண் களைந்து 2001 ஆம் ஆண்டில் உருவாக்கிய கூட்டமைப்பு உருக்குலைந்து போய்க்கொண்டிருப்பதில் வெளியாரின் பங்கு என்னவென்பதற்கு மேலே அதில் சுமந்திரனின் பங்கு மிக அதிகமெனவே கூறலாம். ஏனெனில் வெளி முயற்சிகளும் அகத்தின் வழியாகவே நடைபெற இயலும். வெளி முயற்சிகள் உண்டென்பது உண்மையென்றால் அதனிலும் உண்மை உள்ளிருக்கும் சுமந்திரனின் அணுகுமுறையும் அரசியலும் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தித் தமிழர்களைக் குழுக் கும்பல்களாக உடைத்தலில் பெரும் பங்கு வகித்திருக்கின்றது என்பதாகும். எனவே நாம் சொல்லுகின்றோம்……. திரு.சுமந்திரனே! மேற்கின் பதிலியாக (Proxy) இருப்பதற்கு மெதடிச திருச்சபையின் துணைத்தலைவர் பதவியும் கனவான் வாழ்விற்கு அப்புக்காத்தர் தொழிலும் போதும்…… தமிழரின் அரசியலை விட்டு நீர் போகலாம்.

-முத்துச்செழியன்-

2018-09-09

 

 14,870 total views,  3 views today

(Visited 1 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply