
01 ஜனவரி 2017
காகம் இணையம்
அன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு !
வணக்கம்.
ஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.
இலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தில், வாசிப்பற்ற இளம் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசானது பாரிய அளவிலான நிதி மற்றும் மனித வலுவை செலவழித்துவருகிறது. இப்படிப்படியான தேவை ஏன் இலங்கை அரசிற்கு அவசியம் என்பதை அறிய முதல், எமது நிலமையை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைத் தீவில் பின்வரும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழுகின்றன:
சைவ மற்றும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் ஈழத் தமிழர்கள்
மலையகத் தமிழர்கள்
இந்த மூன்று சமூகங்களும் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து தமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் இலங்கை அரசு மாத்திரமல்ல இந்திய அரசும் விரும்புகிறது.
புத்தளம் முதல் வடகிழக்கோடு அம்பாறை வரை விரிந்து கிடக்கும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலத்தின் அரசியல் இருப்புத்தான், மலையக தமிழ் மக்களினதும் உரிமைக்கும் குரல் கொடுக்கக் கூடியதாக அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் பேசும் சமூகம், இன்று பல இடங்களில் சிறுபான்மையாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பாரிய அளவிலான மாற்றங்களை இலங்கை அரசு ஏற்படுத்திவிட்டது. இதே பாணியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை அரசானது தற்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்பேசும் மக்களுக்கு தடையாக இருப்பது என்ன?
இந்தக் கேள்விக்கு பதில் மிக இலகுவானது. அதாவது கட்சி ரீதியாக பிளவடைந்து காணப்படுதல்.
வடக்கு கிழக்கில் பிரதானமாக காணப்படும் பிளவுகள்: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள்,டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி ஆதரவாளர்கள், விஜயகலாவின் ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அங்கஜனின் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், ரப்ஃ ஹக்கீம் ஆதரவாளர்கள், ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள், ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள்,இன்னும் வேறு சில தென்னிலங்கை கட்சி ஆதரவாளர்கள்.
மேலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பெயரில் பிளவடைந்து நிற்கும் இந்த இனம், பொது எதிரியை வெல்வதற்கான எந்தவொரு ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களும் இன்றி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பதவி மோகத்திற்காக, மக்களை திசை திருப்பி அரசியல் பிரச்சினைகளை மேலும் மேலும் சிக்கலாக்கி, இலங்கை அரசாங்கத்திடம் இந்த இனத்தை நிரந்தர அடிமையாக்கும் வேலைகளே இப்போது நடந்து கொண்டிருக்கிறன.
நாம் ஏன் தனித்துவமானவர்கள்?
இந்த நிலத்தில் வாழும் தமிழர்களுக்கு என்றொரு பாரம்பரியம் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், மருத்துவம் எல்லாமே காணப்படுகிறது.
மற்றைய தேசத்து இஸ்லாமியர்கள் போலல்லாது, ஈழத்து தமிழ் இஸ்லாமியர்களுக்கு என்று தனித்துவமான உடை, உணவுப் பழக்கவழக்கம், இலக்கியம் காணப்பட்டது.
ஏன் பொது எதிரியை நோக்கி ஒன்றி திரளவேண்டும்?
இலங்கை அரசானது இஸ்ரேலிய மற்றும் இந்திய அரசுகளின் ஆலோசனைப்படி, தமிழ் பேசும் சமூகங்களை கட்சி ரீதியாக, மத ரீதியாக பழவடையச் செய்வதில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இந்தப் பிளவுகளை சாக்காக வைத்து புத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பேசும் சமூகங்களை சிறுபான்மையினராக மாற்றிவிட்டார்கள்.
புத்தளம், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இலங்கை அரசு செய்த சிங்களக் குடியேற்றங்களானது, பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குடியேற்றங்களை ஒத்தது.
இஸ்ரேஸ் இலங்கையில் அறிமுகப்படுத்திய குடியேற்ற மாதிரிகள்:
(i) மாவட்ட எல்லைகளை மாற்றுதல்
(ii) ஆறுகளை அண்டிய குடியேற்றங்களை கொண்டுவருதல் (மகாவலி திட்டம்)
(iii) தமது எதிரியை குழுக்களாக உடைத்து அவர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி குடியேற்றுதல்.
தவிர:
(i) தமக்கென கலாச்சார விழுமியங்களைக் கொண்டிருந்த ஈழத்து தமிழ் இஸ்லாமியர்களுக்குள், இறக்குமதி செய்யப்பட்ட அரேபிய மோகங்களை திணித்து அவர்களை மற்றைய தமிழ் பேசும் மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றுவதிலும் இஸ்ரேலிய அமைப்புகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இப்படி, தமிழ் பேசும் சமூகங்களை கட்சி அரசிலுக்கூடாக பிரித்து அந்த அரசியலில் கவனம் செலுத்தப்பண்ணிவிட்டு, தமது ஆக்கிரமிப்புகளை எந்தவொரு தடையுமின்றி செய்துவருகிறது இலங்கை அரசு.
பொது எதிரியை நோக்கி எப்படி ஒன்று சேர்வது? “காகத்தின்” பங்கு எப்படியாயிருக்கும்?
பொது எதிரி நோக்கி ஒன்று சேர்வதற்கு, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆக்க பூர்வமாக தேட வேண்டும். அதன் மூலம் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் மண் விடுதலை பற்றிய தேவையும் அக்கறையும் உணரப்படும். ஈழத் தமிழ்த் தேசியத்தின் இளம் சமுதாயமானது சரியான தெளிவுடன் வளருமிடத்து, பொது எதிரி நோக்கி ஒன்று சேர்ந்து மண்ணை விடுதலை பெறச் செய்வதென்பது சாத்தியமற்றதல்ல.
“காகம்” இணையத்தைப் பொறுத்தவரை, கட்சி அரசியல்களைவிட தமிழ்த் தேசிய விடுதலை பற்றிய கருத்துவாக்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கும்.
ஈழத் தமிழ்த் தேசிய இனமானது தமது அறிவியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல் என்பவற்றை மிக ஆக்க பூர்வமாக தேட வேண்டும். அதனூடாக ஒன்றிணைந்த சமுகத்தையும் விடுதலைக்கான கருத்துருவாக்கத்தையும் உருவாக்க முடியும் என்று “காகம்” முழுமையாக நம்புகிறது.
“காகம்” இணையமானது, இன்று எமது இனம் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளை மிக நுணுக்கமாக அணுகி அதை மக்களுக்கு வெளிப்படுத்தும். தவிர நாம் அவதானிக்க வேண்டிய எம்மைச் சுற்றி நடக்கும் விடையங்களையும் மக்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.
ஒன்றாகச் சேருவோம் ஒன்றிற்காக சேருவோம்!
நன்றி
காகம்
3,547 total views, 2 views today
ஐயா…. எழுத்தாளரே தாங்கள் எழுதியிருக்கும் அனைத்துமே தற்போதைய ஈழத் தமிழரின் அரசியல் பின்னடைவுகள், மற்றும் எம் உறவுகளின் அவல நிலை….
விடுதலை புலிகளின் மற்ற இயக்க தலைவர்களின் அழிப்பு, மற்ற இயக்கங்கள் நிர்மூலம், மற்ற இயக்க ஆதரவாளர்கள் குடும்பங்கள் அழித்தொழிப்பு இறுதியாக உலகத் தமிழரின் தமிழீழ கனவை குழி தோன்டி புதைத்து இதுபோன்ற எமது கடந்த கால சரித்திரத்தையும் கொஞ்சம் எழுதுங்களேன்…. உலகத் தமிழரின் எதிர்கால தலைமுறை உண்மையாக நடந்ததை அறிந்து கொள்ளட்டும்
இப்படிக்கு
லண்டனிலிருந்து
சுப்பையா புவனேஸ்வரநாயகம்