
அன்பான சிங்களதேசத்துத் தோழர்களே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தோழமையாகத் துணிவுடன் எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி உங்களால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான செயற்பாடுகளுக்குத் தமிழீழ மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். மற்றைய ஒடுக்குண்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் போலன்றி, கெடுவாய்ப்பாக, ஒடுக்கும் சிங்களதேசத்திலிருந்து மிகச் சொற்பளவிலான முற்போக்கு ஆற்றல்களே தமிழர் தேசத்திற்குத் தமது முழுமையான ஆதரவை நல்கியிருந்தாலும், தமிழர்களின் தன்னாட்சி உரிமை அடிப்படையிலான விடுதலைப் போராட்டத்துடன் துணை நிற்கும் சிங்களதேசத்து முற்போக்குத் தோழர்களான காலஞ்சென்ற திரு.அட்ரியன் விஜயமன்னே, காலஞ்சென்ற திரு.பிரைன் செனவிரட்ன, விராஜ் மென்டிஸ், பாசன அபேவர்த்தன, யூட் லால் பர்னாண்டோ மற்றும் வெகு சிலர் ஆகியோர் ஒடுக்கப்படும் தமிழர்தேசத்திற்கு ஒடுக்கும் சிங்களதேசத்திலிருந்து கிடைத்த மிக அரிதான முத்துக்களே.
தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்கள் தமிழர்களது தொடர்ச்சியான விடுதலைப் போராட்டத்தின் பகை ஆற்றல்களையும் நட்பு ஆற்றல்களையும் தொடர்ச்சியாக இனங்காணத்தவறிவருகின்றதோடு, தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை நன்கு திட்டமிட்டு ஊக்கமளித்தோரிடமிருந்து தீர்வினை நம்பும் முட்டாள்த்தனத்தையும் செய்து வருகையில், பன்னாட்டரங்கில் குறிப்பாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போன்ற அமையங்களில் அறிக்கைகளை, எடுத்துக்காட்டாக “பிரித்தானியாவின் தமிழினவழிப்புப் போர்” சமர்ப்பிப்பதன் மூலம் தமிழினவழிப்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வகிபாகம் குறித்து வெளிப்படுத்தும் உறுதியான நிலைப்பாட்டை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
தமக்கிழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் தங்களது விடுதலை இயக்கத்தை இழந்தமை என்பனவற்றால் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்னல் வடித்துக்கொண்டிருக்கையில் அதிலும் பெருமளவானோர் நினைவுகூரும் நிகழ்வுகளில் ஒன்றுகூடும் சடங்குகளாக வந்து வடிக்கும் முதலைக் கண்ணீருக்கப்பால் எதனையும் பயனுள்ளவாறு முன்னெடுக்காதிருக்கும் நிலையில், சிங்களதேசத்துத் தோழர்கள் நீங்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக நீதிவேண்டிப் பயன்னுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.
மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிர்ப்புடன் இருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விசுவாசத்தைக் காட்டி வந்த புலம்பெயர் தமிழர்களில் ஒரு குழுவினர் தற்போது பின்கதவு வழியாக அமைச்சர்களையும் வணிகப்புள்ளிகளையும் சென்று சந்தித்து வருவது அவர்களின் விடுமுறைக்கால வழக்கமாகவும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாகவுமாகிவிட்ட நிலையில்,,,,,,,,,, உங்களது உயிர்களைப் பணயம் வைத்தும் பின்னர் அங்கிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நாள் முதல் இன்றுவரை உங்களது பெற்றார்களின் இறந்த நிகழ்வுக்குக் கூடப் போக முடியாததும் இதுவரை உங்களது சொந்த நாடு திரும்ப முடியாததுமான நிலையில் நீங்கள் இருந்துகொண்டு, தமிழர்களுக்காக எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காகத் தமிழர்கள் உங்களைத் தலைவணங்க வேண்டியுள்ளது.
உங்களுக்கான எங்களின் செய்ந்நன்றியை வெளிப்படுத்த எம்மிடம் வார்த்தைகளே இல்லை. அத்துடன் ஒரு தேசம் ஒடுக்கப்படும் போது, ஒரு ஒடுக்கும் தேசத்து முற்போக்கு ஆற்றல்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உலக எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்காக முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டிய, கருத்திலெடுக்கப்பட வேண்டிய சில விடயங்களில் உங்களை அக்கறை கொள்ளுமாறு உரிமையுடனும் நேர்மையுடனும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். அப்படியான விடயங்கள் சிலவற்றைக் கீழே குறிப்பிடுகின்றோம்.
JVP இயக்கம் சிறிலங்காவில் நிலவிய முதாலாளித்துவ ஆட்சிமுறைக்கு எதிராகப் போராடிய போது உங்களில் பலர் அல்லது எல்லோரும் அந்த இயக்கத்தின் தோழர்களாகவோ அல்லது அனுதாபிகளாகவோ இருந்துள்ளீர்கள். தன்னாட்சி உரிமை அடிப்படையிலான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது JVP யின் அணுகுமுறையை உங்களில் சிலரால் 1990 இன் முற்பகுதிகள் வரை சகித்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இருந்தபோதும், தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்று நீங்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறிய நாள் முதல் எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றித் தமிழர்களுக்காகப் போராடி வருகின்றீர்கள். நீங்கள் JVP இயக்கத்திலிருந்த போது ஐந்து அரசியல் வகுப்புகளில் கலந்துகொண்டிருப்பீர்கள். அதில் ஒரு அரசியல் வகுப்பானது அறத்திற்கு முரணாக மலையகத் தமிழர்களை இந்திய விரிவாக்கத்தினதும் இந்தியக் குறுக்கீட்டினதும் தொடர்ச்சியாகவும் அதேபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நோக்குமாறு சொல்லப்பட்டிருக்கும். ஆகவே, தேசிய இனவிடுதலைப் போராட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களைத் தெற்காசியப் பிராந்தியத்தில் அழித்தொழிப்பதில் இந்தியாவின் வகிபாகம் என்னவென்பதை விளங்கிக்கொள்ளும் அரசியல் கடமை உங்களுக்குள்ளது.
இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதால், தெற்காசியப் பிராந்தியத்தில் தன்னாட்சி உரிமை அடிப்படையிலான தேசிய இன விடுதலைப் போராட்டங்களை அழித்தொழிப்பதில் சாத்தியமான அத்தனை நரபலிக் குறுக்கீடுகளையும் இந்தியா மேற்கொள்ளும். புவிசார் நலன்களுக்கு அப்பால், தெற்காசியப் பகுதியிலுள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்களிற்கு எதிராகவே இந்தியா எப்போதும் இருக்கும். ஈழத்தமிழர்களின் முதன்மைப் பகை இந்தியாவே என்பதனை விளங்கிக்கொள்ள வரலாற்றுத் தகவல்களை நோக்குவதே போதுமானது.
இருந்தபோதும், தோழர்களே! தமிழினவழிப்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வகிபாகங்களை மிகவுறுதியுடன் வெளிக் கூறிய நீங்கள், தமிழினவழிப்பில் இந்தியாவின் வகிபாகத்தைப் பன்னாட்டளவில் வெளிக்கொணர மிக மிகச் சொற்பளவு முயற்சிகளையே எடுத்துள்ளீர்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் சந்தை நலனுக்காக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு தனித்த தேசமே தமிழ்நாடு ஆகும். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவால் வல்வளைக்கப்பட்டிருக்கின்ற தனித்த தேசமான தமிழ்நாடே ஈழத் தமிழர்களுக்கு மிகவருகிலிருக்கும் தேசிய இன விடுதலையைத் தாகமாகக் கொண்டிருக்கும் தேசமாக இருப்பதால், அதுவே ஈழத்தமிழர்களுக்கான முதலாவது நட்பு ஆற்றலாகும். மொழி, பண்பாடு, மரபு மற்றும் வழக்காறுகள் என்பன இரு தேசங்கட்கும் ஒன்றானதாக இருக்கின்றது என்பதனாலல்ல, அடக்குமுறை இந்தியாவிலிருந்து விடுதலை பெற வேண்டிய தனித்த தேசம் தமிழ்நாடு என்பதனால், தமிழீழமும் தமிழ்நாடும் எப்போதும் கைகோர்க்க வேண்டும். தமிழீழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான பொதுவானதும் முதன்மையானதுமான பகை இந்தியாவே. எனவே தமிழீழமும் தமிழ்நாடும் தமது தொடருகின்ற விடுதலைப் போராட்டத்தில் பொதுவான வேலைத்திட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல் சூழமைவுகள் இவ்வாறிருக்க, நட்பாற்றல்களை இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தேடுமாறு எமக்கு அறிவுரை கூறும் தோழர்களாகிய நீங்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி பார்வையை, அக்கறையை பெரும்பாலும் செலுத்துவதேயில்லை?
அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் புத்திசீவிகள் என்று சொல்லப்படுவோர் தமது அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக மார்க்சிய சுலோகங்களைப் பயன்படுத்துவது பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். தயான் ஜெயதிலக போன்றோர் மார்க்சிய சுலோகங்களைக் கோடிட்டுக் காட்டித் தமிழர்களின் மீதான சிறிலங்கா அரசின் போரினை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் என்றவாறு ஒரு பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். இப்படி மார்க்சிய வரிகளைக் கோடிட்டுச் சொல்லப்படும் விளக்கங்களைத் தம்மைத் தாமே மார்க்சிய, சோசலிச நாடுகள் என்று கூறிக்கொள்ளும் நாடுகள் செவிமடுக்கிறார்கள்.
தமிழினவழிப்பில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வகிபாகங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க மார்க்சிய சுலோகங்கள் மூலம் முற்போக்காற்றல்கள் என்ற போர்வையில் உங்களை அணுகும் தமிழ்நாட்டிலிருந்து வரும் சில தரப்பினர் இலகுவாக உங்கள் மனங்களையும் நெஞ்சங்களையும் வென்றுவிடுகிறார்கள். அவர்கள் தமிழினவழிப்பில் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் வகிபாகங்களை அறிக்கையிடுவதைத் தாண்டி பன்னாட்டளவில் தமிழினவழிப்பில் இந்தியாவின் வகிபாகத்தை வெளிப்படுத்த எதனையும் செய்ய மாட்டார்கள்.
பன்னாட்டளவில் தமிழர்களின் சிக்கல்கள் குறித்த உங்களின் செயற்பாடுகளுக்குள் ஊடுருவி இறுக்கமான இறுதி நேரங்களில் இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக மார்க்சிய சுலோகங்களுடன் உங்களிடம் வரும் சிலர் இந்திய உளவுத்துறையால் நன்கு அணியப்படுத்தப்பட்டவர்கள். பன்னாட்டுச் சமூகத்தைச் சந்திக்கப் பயணத்தடையேதும் இந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு விதிக்காமல் இந்திய உளவுத்துறையால் நோக்கங்கருதி வளர்த்துவிடப்படும் இந்தப் புகழ்வெளிச்ச நபர் மீது இதே குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அந்த அமைப்பில் அந்தக் குறித்த நபருக்கு மிக நெருக்கமான தோழராக இருந்தவர் அந்த அமைப்பை விட்டு வெளியேறியிருக்கிறார்.
கோட்பாட்டு அடிப்படையிலும் மார்க்சியக் கோட்பாடுகளைக் கோடிட்டும் அறிக்கைகளும் எழுத்துகளும் தயாரிக்கும் நபர்களால் நீங்கள் இலகுவில் ஏமாற்றப்படுகிறீர்கள் என தோழர்களே நாங்கள் உங்களில் ஐயுறவு கொள்கின்றோம். உங்களின் செயற்பாடுகளுக்குள் ஊடுருவுவதற்கு உங்களின் இத்தகைய பலவீனத்தை இத்தகைய உளவு அமைப்புகள் பயன்படுத்துகின்றன. அவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேசுகின்றார்கள் என்றும் மார்க்சிய அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அறிக்கைகளைத் தயாரிக்கிறார்கள் என்றும் இப்படிச் சில நபர்களை நீங்கள் வளர்த்துவிட்டால், ஈற்றில் அவர்கள் உளவு அமைப்புகளின் ஊடுருவல்களாகவிருந்தால் அது மிகக் கேடானதாக அமையும்.
தமிழினவழிப்பில் இந்தியாவின் வகிபாகத்தைப் பன்னாட்டளவில் வெளிக்கொணர நடவடிக்கைகளை எடுக்குமாறு “Hiru” தோழர்களாகிய நீங்கள் நேர்மையுடன் வேண்டப்படுகிறீர்கள். அத்தோடு, தமிழ்நாடு தேசத்தினதும், மலையகத் தமிழர்களினதும் தன்னாட்சியுரிமையை ஏற்குமாறும் நீங்கள் வேண்டப்படுகிறீர்கள், ஏனெனில் தமிழீழம், தமிழ்நாடு, மலையகம் என்ற தமிழ் பேசும் ஆனால் தனித்த மூன்று தேசங்களும் நரபலி இந்தியாவின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்.
இந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை “Hiru” தோழர்கள் இலகுவில் விளங்கிக்கொள்வார்கள் என எமக்குத் தெரியும். மார்க்சிய சுலோகங்களுடன் முற்போக்கு ஆற்றல் என்ற போர்வையில் இந்திய உளவுத்துறையால் அணியமாக்கப்பட்ட ஊடுருவல்களை நீங்கள் இனங்காண்பீர்கள் என நாம் நம்புகின்றோம்.
மேலும், தமிழினவழிப்பில் இந்தியாவின் முதன்மைப் பங்கு என்னவென்பதைப் பன்னாட்டளவில் வெளிக்கொணரத்தக்க அறிக்கை மூலம் ஈழத்தமிழர்களுக்கு “Hiru” தோழர்கள் உதவுவார்கள் என நாம் நம்புகின்றோம்.
உங்கள் உண்மையுள்ள,
மெ.புரட்சி,
களநிலைவர ஆய்வு நடுவம், தமிழீழம்
2018-08- 11
7,489 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.