
2009 ஆம் ஆண்டு மே இற்குப் பின்னர் தமிழர் தாயக வாழ்வியல் கட்டமைப்பிலும் நடைபெறும் நிகழ்வுகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புகழ் வெளிச்சத்திற்கு மாத்திரமே ஏங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் ஏராளமாக உருவாகியிருக்கிறார்கள். சமூக அக்கறையற்ற, வெறும் அரசியல் அடியாட்களாக மாத்திரமே செயற்படத் தெரிந்த எண்ணற்ற ஊடகவியலாளர்கள் “உருவாக்கப்பட்டுள்ளனர்”. பரபரப்பிற்கும் அரசியல் அடியாள் வேலைகளிற்குமாக உருவாக்கபட்டுள்ள இந்த ஊடகவியலாளர்களின் புத்திபேதலித்த செயற்பாடுகளினால் பல பொறுப்புவாய்ந்தவர்கள் தமது தொழில் தவிர்த்து சமூகப்பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர். பொறுப்புவாய்ந்தவர்களின் இந்த நழுவலான போக்கானது இன்று தமிழினத்தை மிக இக்கட்டான சூழலிற்கு தள்ளியிருக்கிறது.
விடுதலைப்புலிகள் சுடுகலன்களை பேசாநிலைக்குக் கொண்டு வந்ததன் பின்னர் தமிழினமானது, மருத்துவ ரீதியாக, பொருண்மிய ரீதியாக, நிருவாக ரீதியாக, கல்விரீதியாக மிக மோசமான பின்னடைவை சந்தித்துவருகிறது. ஆனால் எல்லாவற்றையும் தனித்தனியாக ஆவணப்படுத்தி அதை ஆய்விற்குட்படுத்தி மக்களுக்கு சரியான தகவல்களையும் தெளிவுபடுத்தல்களையும் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களை செய்வதற்கு அந்தந்த துறை சார்ந்தோர் தயங்குகின்றனர். வடகிழக்கு மாகாணங்களில் நிருவாக ரீதியாக செய்யப்பட்டுள்ள வல்வளைப்புகள் குறித்து அந்தந்த அலுவலகங்களில் வேலை செய்யும் பலருக்கே தகவல்கள் தெரியாது என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு தகவல்கள் தெரியாது என்பதற்கு அப்பால் தனது மண் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்புத் தொடர்பில் எந்தவொரு அக்கறையுமற்று இருக்கின்றனர். சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புத் தொடர்பில் தகவல்கள் தெரிந்தாலும் அதை எப்படி எங்கு வெளிப்படுத்துவது என்பது தொடர்பாக தெளிவற்று இருக்கின்றனர்.
தமிழீழ மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி உட்பட ஏராளமான போராளிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மருத்துவச் சிக்கல்களால் இறந்திருக்கிறார்கள். எல்லா இறப்புகளையும் இயல்பான செய்திகளாக ஊடகங்கள் வெளியிடுவதையும் அவற்றை இயல்பான இறப்புச் செய்தியாக மக்கள் கடந்துவிடும் இழிநிலையையும் இன்று நாம் கண்ணூடாக கண்டுவருகிறோம். தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளியொருவர் விடுவிக்கப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மருத்துவச் சிக்கலால் இறந்த செய்தி வெளியாகிய உடனேயே அது குறித்து அக்கறை எடுத்து தீவிரமாக கண்காணிப்புகளையும் ஆய்வுகளையும் செய்திருக்க வேண்டிய இந்த இனம் மாறாக ஆண்டுதோறும் ஆகக் குறைந்து ஐந்து போராளிகளையாவது மருத்துவச்சிக்கலால் இழந்து கொண்டுவருகிறது. இந்த இனத்திற்கு முற்றிலும் புதிதான அல்லது இத்தனை ஆண்டு காலமும் இந்த இனம் இந்த மண்ணில் சந்தித்திராத புதுவிதமான நோய்களினால் போராளிகள் பாதிக்கப்பட்டு இறப்பதனை இயல்பாகப் பார்க்கமுடியாது. போராளிகளின் இறப்புகள் குறித்து செய்து வெளியிடும் ஊடகங்கள் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதோ தாங்கள் கண்டுபிடித்த தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதோ கிடையாது.
எடுத்துக்காட்டாக:
யாழ்ப்பாண சுண்ணாக நிலத்தடி நீர் தொடர்பான சிக்கலில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை சிக்கலுக்குள் தள்ளி அரசியல் லாபம் ஈட்டுவதற்காக, பல குழப்பங்களை விளைவித்து சுண்ணாக நிலத்தடி நீர்ச் சிக்கலை திசை திருப்புவதற்கு நேரவிரயம் செய்து பணி செய்த அந்த மருத்துவர் அணி இதுவரை ஏன் போராளிகளின் இறப்புகள் குறித்து அக்கறையெடுக்கவில்லை? சுண்ணாக நிலத்தடி நீர் மாசுபடுத்தல் தொடர்பில் நேரடியாகத் தொடர்புபட்ட நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே பொலுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த நிறுவனம் விடுவிக்கப்பட்டிருக்கிறதே தவிர அந்த நிறுவனத்தின் மீது குற்றஞ் சாட்டப்பட்டு அந்த நிறுவனம் விசாரிக்கப்பட்டு மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. அந்த நிறுவனத்தின் மீது சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்காகவே பொதுநல வழக்கு மாத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு. அதாவது சுண்ணாக நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டமை தொடர்பில் தொழினுட்ப ரீதியிலான ஆய்வு செய்து அது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு இன்றை தொழினுட்பம் வளர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட தொழினுட்பங்களை பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் நாடுகளில் புத்திசீவிகள் இருக்கின்றார்கள். ஆனால் சுண்ணாக நிலத்திடி நீர் மாசுபடுத்தப்பட்டமை தொடர்பில் அந்த துறைசார்ந்தவர்களை உள்வாங்காமல் அதை ஒரு சட்டச்சிக்கலாகவும் மருத்துவ மற்றும் அரசியல் சிக்கலாகவும் மாத்திரமே கையாண்டு மக்களை குழப்பியடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிட்டது யார்? இந்த நிகழ்வுகளை எல்லாச் செய்தி ஊடகங்களும் மறந்துவிட்டன அல்லது குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பில் தொடர்சியான தகவல் சேகரிப்பு இல்லை (Follow up news). காரணம் பொறுப்புவாய்ந்தவர்களின் சமூகப்பொறுப்பற்றதன்மையே.
புங்குடுதீவு சிறுமி வித்தியா பாலியல்வன்புணர்விற்குட்டுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நீதித் துறைக்கு அழுத்தத்தை கொடுத்து விசாரணைகளில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்ட உழைத்த ஊடகங்கள், 2015 காலப்பகுதியில் பாலியல்வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி சரண்யா தொடர்பிலோ, அதே காலப்பகுதியில் புளியங்குளம் பகுதியில் காவலரணில் இருந்த சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பிலோ செய்திகளை சேகரிக்க ஆர்வம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? போரின் போது தந்தையை இழந்த சரண்யா பின்னர் ஒரு விபத்தில் தனது தாயையையும் இழந்து பாட்டியோடு வளர்ந்தவர். பொருண்மிய ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்தாலும் கல்விச் செயற்பாட்டில் மிக ஆர்வமாக பங்கெடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் வடகிழக்கில் பெருமளவிலான நில அபகரிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. மன்னார் மாவட்டத்தில் மிக முக்கியமான வளமான நிலப்பகுதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகளாலும் அதிகாரம் மிக்க அதிகாரிகளாலும் பலவந்தமாக தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி என எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆக்கிரமிப்புகள் மிக கச்சிதமாக திட்டமிடப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லா மாவட்டங்களிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் இதுவரையில் சரியான தகவல்களுடன் தொடர்ச்சியாகக் கண்காணிக்கபட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்டவில்லை. குறிப்பிட்ட திணைக்களங்களில் இருக்கக் கூடிய தமிழ் அதிகாரிகள் கூட இது தமது இனத்தின் மீதான அழிப்பு இதை எப்படியாவது வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை.
வடகிழக்கில் அதாரணமாக அல்லது பலவந்தமாக அரசியல் அதிகாரத்துடன் தென்னிலங்கை சிங்கள மற்றும் முசுலீம் வர்தத்தகர்களால் ஏற்படுத்தப்படுவரும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஆளுமையற்ற நிலையில் தொடர்புபட்ட அதிகாரிகளும் தொடர்புபட்ட அரசியல் நிருவாக கட்டமைப்புகளும் காணப்படுகின்றன. நன்கு திட்டமிடப்பட்டு தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டுவரும் அத்தனை அடக்குமுறைகளையும் எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பில் மக்களுக்கு காணப்படும் தெளிவின்மைக்கு காரணம், மக்களுக்கு சரியான தகவல்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதே.
தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை அத்துமீறல்களையும் எப்படி ஆவணப்படுத்தி அதை மக்களுக்கு வழக்குவது??
எல்லா வேலைத்திட்டங்களுக்கும் அரசியல்வாதிகளையும் அரசியல்வாதிகளின் ஊடக அடியாட்களையும் நம்பிக்கொண்டிருக்க முடியாது என்பதை காகம் முற்றுமுழுதாக நம்புகிறது. தொழில்சார்ந்து தாம் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களால் தணிக்கை செய்ப்படும் தகவல்களை அல்லது தணிக்கை செய்யப்படக்கூடும் என்று நம்பப்படும் தகவல்களை, அவை உண்மையில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய தகவல்கள்தான் என ஒரு ஊடகவியலாளர் கருதினால் அதை சரியான முறையில் வகைப்படுத்தி ஆய்விற்குட்படுத்தி மக்களிடம் சென்றறையச் செய்யும் பணியை காகம் செய்யும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
அது போல அரச நிருவாக திணைக்களங்களில் பணியாற்றும் தமிழின சமூக அக்கறை மற்றும் விடுதலை மீது நம்பிக்கை கொண்டவர்கள், தத்தமது திணைக்களங்களினூடாக இடம்பெறும் தமிழின விரோத நடவடிக்கைகள் குறித்து தகவல்களை காகத்திற்கு வழங்கினால் அது குறித்த தகவல்களை தொடர்ச்சியாக கண்காணித்து ஆய்விற்குட்படுத்தி அவை சரியான முறையில் மக்களுக்கு சென்றடைவதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதற்குமான பணியை காகம் செய்யும்.
குறிப்பாக தமிழினத்தின் மீது நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவரீதியிலான தாக்குதல்கள் குறித்து கண்காணிப்பது ஒவ்வொரு தமிழ் மருத்துவரினதும் கடமை. தமிழினத்தை பலவீனப்படுத்தும் மருத்துவரீதியிலான தாக்குதல்கள் குறித்து மிக அக்கறை எடுத்து அது குறித்து ஆவணப்படுத்தலும் ஆய்வுகளையும் செய்ய வேண்டியது மருத்துவர்களினது கடமை. கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த புற்றுநோயினாலான இறப்புகள் மற்றும் வழமைக்கு மாறான இறப்புகள் குறித்து மருத்துவர்கள் மிகுந்த அக்கறை செலுத்துதல் நன்று. அது குறித்ததான தகவல்களை தமிழ் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது குறித்ததான ஒரு பொறிமுறையை மருத்துவர்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்குக் காகம் தனது முழுமையான பங்களிப்பை வழங்க அணியமாக இருக்கிறது.
அரசியல்வாதிகளையும் அதிகார எடுபிடிகளையும் நம்பியிராது ஒட்டு மொத்த தமிழினமும் தனது இனம் குறித்த அக்கறையுடன் செயற்பாட்டால் மாத்திரமே பாதுகாப்பும் விடுதலையும் மெய்ப்படும்.
“கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்”.
05-08-18
10,919 total views, 3 views today
Leave a Reply
You must be logged in to post a comment.