சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 5,6,7

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 3:

சாதிய, பிரதேச சிக்கல்களை கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களையதீண்டாமை எதிர்ப்பு மாநாடுபோன்ற வேலைத் திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால்திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத் திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாட அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்: மாவை அய்யா

கேள்வி 4:

தனித்தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதற்கு மக்கள் ஆதரவு கோரி 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவினால் பெருவெற்றியீட்டி பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்று, மாவட்ட அதிகார அவை என்ற அளவிற்கு கீழிறங்கிப் போனதை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 6 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர, இனிமேல் பாராளுமன்ற அரசியல் வழியில் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக நாட்டை விட்டு இந்தியா சென்றீர்களா? ஆம் எனின் அந்தச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் போது என்ன மனத்துணிவில் இங்கு வந்து பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள்?

பதில்: மாவை அய்யா


கேள்வி 5:

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறு இருந்தது?

பதில்:

அப்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த விநாயக மூர்த்தி கூட்டணியாக எம்முடன் நிறு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தி 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கு மாறாக, குமார் பொன்னம்பலம் தனியாகப் பிரின்டு சென்று தேர்தலில் நின்றார்.

கேள்வி 6:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது பாராளுமன்ற அரசியலையும் வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்ந்தது. அதன் உருவாக்கத்தின் போது எழுந்த முரண்பாடுகள், அதன் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள், முரண்பாடுகள் களையப்பட்ட விதம், விடுதலைப்புலிகளுடனான உறவு என்பன பற்றிக் கூறுங்கள். தமிழீழ நிழல் அரசை நீங்கள் பார்த்த விதம் பற்றி கூற முடியுமா? கூட்டமைப்பு சின்ன உருவாக்கத்தில் வீடு, சூரியன் பேசப்பட்டது போல சைக்கிளும் பேசப்பட்டதாமே. அந்த முரண்பாடுகள் களையப்பட்ட விதம் பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பதில்:

சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அது உணர்வுபூர்வமான புரிந்துணர்வு. நான் செய்தேன். அவர் செய்தார். இவர் செய்தார் என இப்போது சிலர் சொல்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976 இல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடத்திய போது, திரு.தொண்டமான, தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் (மாநாட்டிற்கு அவர் வரவில்லை. ஆனால் ஆதரவு தெரிவித்திருந்தார்) ஆகியோர் கூட்டணியின் தலைமைகளாக இருந்தார்கள். சிவசிதம்பரம் ஆகியோர் அதில் பெரும் பங்களித்திருந்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய சுதந்திர தமிழீழம் என்பதை மலையகத்தில் இருப்பவராகத் தன்னால் சிங்களவர்கள் மத்தியில் இதனை முன்னெடுத்து அரசியல் செய்வதில் சிக்கல்கள் இருப்பதனால் தான் அதைப் பற்றிப் பேசாமல் ஆதரவளிப்பேன் எனச் சொல்லி 1977 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தொண்டமான் செயற்பட்டார். ஜி.ஜி.பொன்னம்பலம் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவராகவில்லை. தமிழரசுக் கட்சிதான் அதில் கூடுதலான பங்கை வகித்திருக்கின்றது. காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பகுதியினர் எங்களோடு நின்றார்கள். விநாயகமூர்த்தி அவர்கள் அதில் தீவிரமாக எங்களுடன் செயற்பட்டார். அதற்குப் பின்னர் இளம் சமுதாயத்தில் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த 4 கட்சிகளில் ஒன்றாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் ஒரு சட்டத்தரணி. அரசியலில் ஒரு பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டவர். அவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது கொள்கைரீதியாக முரண்பாடு வந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கஜேந்திரகுமார் அவர்கள் இறுதியாக எம்மிடம் கேட்டது என்னவென்றால் பத்மினி அவர்களுக்கும் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதே. நான் அல்லது எமது கட்சி கூறியது என்னவென்றால், விநாயகமூர்த்தி அவர்களுக்கும் கஜேந்திரகுமார் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளில் ஒரு கட்சியான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற முறையில் இரண்டு இடங்கள் தரலாம் இதற்கு மேல் உங்களுக்குத் தருவதில் பிரச்சனைகள் இருக்கின்றது என்பதே. கேட்டு விட்டுப் போனவர்கள் திரும்ப வரவில்லை. இதுவே நடந்தது. இப்போது கொள்கைகள் பற்றி பேசுவதென்பது…… பேசலாம். அதைப் பற்றி பிரச்சனையில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த திரு.தொண்டமான் மற்றும் தந்தை செல்வா மறைந்த பின்பு, ஜி.ஜி.பொன்னம்பலமும் கூட்டங்களுக்குச் சமூகமளிக்காமல் இருக்க இந்தப் பின்னணியில் சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். அமிர்தலிங்கம் அப்போது செயலாளரானார். ஆனாலும் அமிர்தலிங்கம் அதில் முக்கியமானவராக இருந்தார். அவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருந்தார். அவரும் அர்ப்பணிப்புள்ள ஒருவர் தான். அதனை யாரும் மறுக்க முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் அமிர்தலிங்கமும் அதன் பின்பு சிவசிதம்பரமும் மறைந்த பின்பு திரு. ஆனந்தசங்கரி கூட்டணியின் தலைவரானார். அவர் தலைவராக இருந்த பொழுது, அவருக்கும் அந்த நேரத்தில் கூட்டணியில் இருந்த பிரதிநிதிகளுக்குமிடையில் சில வகையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அவர் தன்னை முன்னிலைப்படுத்திய அல்லது தனது சொந்தக் கருத்தபிப்பிராயங்களோடு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதற்கு மேல் அதனைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை.

அந்தப் பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளோடு ஒரு புரிந்துணர்வோடு (ஒன்றாக என்று சொல்ல மாட்டேன்) அந்தத் தேர்தலைச் சந்தித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நாம் பெருவெற்றியடைந்தோம்.

அந்நேரத்தில் விநாயகமூர்த்தி போன்றோர் தங்கள் தங்கள் கட்சிகளை முன்னிலைப்படுத்தவில்லை என விடுதலைப் புலிகளோடு பேசினார்கள். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கேட்பதுதான் சரியாகவிருக்கும் என திரு. பிரபாகரன் அவர்களும் ஒரு கருத்தைக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சர்வாதிகாரக் கருத்தாகச் சொல்லப்பட்டது என நாம் சொல்லவில்லை.  அவர்களுக்கிருந்த நம்பிக்கை அது. அவர்களது நம்பிக்கையால் தான் பலரும் இன்றும் அதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சொல்லப்பட்ட நம்பிக்கை அது தான். தமிழரசுக் கட்சியின் செயலாளராக நான் அப்போது இருந்ததையும் அவர்கள் ஒரு முக்கியமானதாகக் கருதினார்கள். அதை நான் இப்போது பெருமையாகச் சொல்லத் தேவையில்லை.

தமிழரசுக் கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கமாக இருந்த போது தனியாக வேலை செய்யாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே வேலை செய்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வந்தபோது, உதய சூரியன் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அப்போது ஒரு நீதிமன்ற வழக்கு வந்தது. திரு. ஆனத்தசங்கரிக்கும் ஏனையோரிற்குமிடையில் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதில் நீதிமன்ற வழக்கு நடந்தது. அதனால் அந்தச் சின்னத்தை விட்டு விட்டுத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுப் பெரு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம். அதனால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் பின்னர் எல்லோரும் வந்திருந்தார்கள். கஜேந்திரகுமார் உட்பட…. திரு. ஆனந்தசங்கரியும் உள்ளூராட்சித் தேர்தலிலே அந்தச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றார். இவை காலத்தின் தேவை கருதி நடைபெற்றுக்கொண்டிருந்த விடயங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தினாலும் ஏனைய கட்சிகளோடு ஒரு புரிந்துணார்வு அடிப்படையில் அதற்கான உடன்பாட்டைக் கூட நாங்கள் எழுதியிருக்கின்றோம். தேர்தலில் தங்கள் தங்கள் கட்சிகளின் பலத்தை நிரூபிப்பது தீர்மானமெடுப்பது என்பன சகஜமான விடயங்கள். அது ஒரு பெரிய விடயமல்ல. ஆகவே, நாங்கள் இப்படித்தான் இதுவரை இயங்கி வந்திருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்து நிலைமையை இப்போது அப்படியே கொண்டுசெல்ல முடியாது. அவர்கள் இருந்த காலத்தில் திம்புக் கோட்பாடு என்ற கொள்கைக்கான செயல் வடிவமாக ஒஸ்லோ உடன்படிக்கை செய்தனர். அந்த அடிப்படைகளைக் கொண்டு தான் ஒரு அரசியல் தீர்வு காண முயற்சிக்கின்றோம். சர்வதேச சமூகத்தின் வழிகாட்டலின் படி எங்களுடைய பங்களிப்புடன் தான் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் வந்தது. அதிலிருந்து நாங்கள் திடீரென்று வெளியேறும் காலம் இருக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24௨7 ஆம் தேதி வரை அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேசினார். 24 வாக்குகள் எடுத்தால் தான் அதனை நிறைவேற்றலாம் என்ற சூழ்நிலை சர்வதேச அரசியலில் இருந்தது. ஒரு நாட்டைக் குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தாம் அதற்கு ஆதரவு தர முடியாது என்ற பல நாடுகள் விவாதித்தன. ஆனபடியால், 2012 ஆம் ஆண்டு சில பதங்களை மாற்றி தீர்மானத்தைக் கொண்டு வருவதென முடிவெடுக்கப்பட்டது. சொற்பதங்கள் மாற்றப்படுவது பற்றி எங்களிற்குச் சொன்ன போது நாங்கள் மிகவும் மனவருத்தப்பட்டோம். ஆனால் எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை. நாங்கள் மனித உரிமைப் பேரவையில் ஒரு உறுப்பும் அல்ல. நாங்கள் ஒரு நாட்டிலுள்ள கட்சி. ஒரு நாட்டு அந்தஸ்து எங்களுக்கு இல்லை. அந்த நாடுகளுக்குள்ளும் அமெரிக்கா அதனை முன்னெடுத்தபடியால் தான் அது வெற்றிபெறக் கூடியதாக இருந்தது. சில நிபந்தனைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் அந்தத் தீர்மானத்தை முன்னெடுக்கின்ற போது சிறிலங்கா அரசை வெற்றி பெற விடமாட்டோம். இதனை சிறிலங்கா அரசு தோற்கடிக்கும் சந்தர்ப்பத்திற்கு இடமளிக்க மாட்டோம்” என அமெரிக்கா எம்மிடம் கூறியது. அதனால் நாங்களும் அவர்களுக்குப் பின்னால் செல்ல வேண்டியவர்களாக இருந்தோம். நாங்களும் பலவற்றைப் பேசி இருக்கின்றோம். அவற்றைப் புரிந்துகொண்டு தான் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பெறுமதி வாய்ந்தது. இன்னும் அதனை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் சிலர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்தார்கள். எரித்தார்கள். அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தை அவர்கள் எரித்தார்கள். இவர்கள் எல்லாம் எரித்துவிட்டார்கள் என்று நாமும் அப்படியான வகையில் ஈடுபட முடியாது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்ததற்குப் பின்னால் கஜேந்திரகுமாரும் இருந்தார். இப்படித் தான் சித்தாந்தரீதியாக, சர்வதேச வியூகங்கள் தொடர்பாக எங்களுடைய இலக்கினை அடைவதற்காக சர்வதேச சந்தர்ப்பத்தில் நாங்கள் வேலை செய்யும் போது அவர்கள் வேண்டுமென்று எதிர்த்தார்கள். இதுதான் உண்மை. ஆனபடியால், நாங்கள் அதிலிருந்து உடனே வெளியேற முடியாது.

பத்மினிக்கும் கஜேந்திரனுக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கவில்லை என்பது தான் காங்கிரஸ் வெளியேறுவதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது. பின்னர் அந்த எதிர்ப்போடு அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலுக்குச் சென்றார்கள். இது தான் நடந்தது.

நாங்கள் சர்வதேச சமூகத்தோடு ஒன்றுபட்டுச் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் வந்தது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இலங்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் இதற்குப் பங்களித்திருக்கிறோம். நாங்கள் இதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. ஆனாலும் இன்றைக்கும் அதிலுள்ள பல தீர்மானங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதனால் சர்வதேச நாடுகளிடத்தில் இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் உண்டு. அல்குசைன் வெளியிட்ட அறிக்கை முக்கியமானது. அதற்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் உயர் ஆணையராக இப்போது வந்திருப்பவர் வெளியிட்ட கருத்து இன்னும் தாக்கமானதாக இருக்கிறது. “இந்த அரசாங்கம் தீர்மானத்தில் சொல்லப்பட்டவையை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஒரு தவறை விட்டு விட்டோம் போல தெரிகிறது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அறிக்கைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும்” என அவர் சொல்லியிருக்கிறார். இது ஒரு பெரிய விடயம். இரண்டாவதாக, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு குழு இலங்கைக்கு வந்த போது சனாதிபதி, பிரதமரைச் சந்தித்து விட்டு திரு. சம்பந்தன் அவர்களைச் சந்தித்தனர். “நீங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் இதற்கு வெளியே தீர்மானம் எடுக்க வேண்டும்” என்று அந்தச் சந்திப்பில் சம்பந்தன் சொன்னார்.

இந்த உலக நாடுகளுடைய கருத்தை நாம் இலகுவாகத் தூக்கி வீச முடியாது. ஆனபடியால், சிறிலங்கா அரசு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றாது விட்டால், இலங்கையில் தமிழர்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை உருவாக்காது விட்டால், ஏனைய தமிழர்களுடைய சிக்கல்களுக்குத் தீர்வு தராவிட்டால் நாம் உறுதியாக மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். உதாரணமாக, பான்கிமூன் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது யாழ் நூல் நிலையத்தில் நாம் அவரைச் சந்தித்தோம். கஜேந்திரகுமார் அப்போது இருக்கவில்லை. “இவ்வளவு சர்வதேச சந்தர்ப்பங்கள் இந்த நாட்டிற்குக் கிடைத்த போதும் இனப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றுமாக இருந்தால் வடக்கு-கிழக்கில் அரச நிருவாகம் நடைபெறுவதை ஒத்துழைக்காத நிருவாகம் நடைபெற விடாத தீர்மானத்திற்கு நாம் போக வேண்டியிருக்கும். அப்பொழுது நீங்கள் எங்களிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்ற அடிக்கருத்தை அந்தச் சந்திப்பில் சம்பந்தன் பான்கிமூனிற்குச் சொன்னார். இன்றைக்கு நாம் அதைத்தான் எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த அரசாங்கத்தில் இப்பொழுது சனாதிபதி, பிரதமர் எல்லோரும் ஒன்றுபட்டு எமது இனப்பிரச்சனை தொடர்பில் பேசித் தீர்வுகாண முன்வராதுவிட்டால் நாம் நம்பிக்கையிழந்து…. அந்த நேரத்தில் நாம் எப்படித் தீர்மானம் எடுக்க வேண்டுமென்பது முக்கியமானது. எங்களது அரசியல் கட்சிகளுக்குள் கருத்து மோதல்கள் இல்லாமலிருக்கலாம். சரியான தகவல்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படியொரு தீர்மானம் எடுக்க வேண்டிய சூழலில் அரசியல் கட்சிகள் மற்றும் வெளியிலிருப்போர் என எல்லோரும் ஒன்றுபட்டுத் தீர்மானம் எடுக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. சர்வதேச சமூகத்தினை இணைத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதன் படி நாங்கள் கட்டாயம் செல்ல வேண்டும். இவை தான் இப்போதுள்ள சிக்கல்கள். சர்வதேச சந்தர்ப்பங்கள் எங்களுக்குக் கிடைக்கும் போது அவர்களை விட்டு விட்டு நாங்கள் தனியாகச் செல்ல முடியாது. உங்கள் அறிவிற்கு நான் சொல்லலாம்………..

உதாரணமாக சர்வதேச சந்தர்ப்பத்தில் அவ்வளவு பலத்துடன் இருந்த விடுதலைப் புலிகள் கூட போரை நிறுத்தி விட்டு ஒஸ்லோ பிரகடணத்திற்கு வந்தார்கள். அந்த நேரத்தில் அமெரிக்கா விடுதலைப் புலிகளைத் தடை செய்திருந்தது. அந்த நேரத்தில் ரிச்சட் பௌச்சர் போன்றவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். விடுதலைப் புலிகளைத் தடைசெய்திருந்தமையால் விடுதலைப் புலிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்தின் பின்னணியில் நோர்வேயில் ஒரு உடன்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. முன்வைக்கப்பட்டது. அதில் சமஸ்டிக் கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அதிகாரங்கள் முழுமையாகப் பகிர்ந்தளிக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்மானத்தைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் பேசப்பட்டிருந்தது. 1985 வரை கொள்கை மட்டும் பேசப்பட்டது. திம்புக் கோட்பாட்டில் அடிப்படைக் கொள்கைகள் மட்டுமே பேசப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் ஒஸ்லோவில் அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது. அதை அரசு நிறைவோடு ஏற்கவில்லை. விடுதலைப் புலிகளும் அதனை மேலும் முன்னெடுக்கவில்லை.

திரு. பிரபாகரன் அவர்களுடன் நேரடியாக இது பற்றி பேசியிருக்கின்றேன். நான் அதிக நேரம் முக்கியமாக அவருடன் பேசுகின்றவன். “நீங்கள் அந்த உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் கனடா சமஸ்டி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளகச் சுயநிணய உரிமைக்கு நாம் உட்படுவோமாக இருந்தால், அது நிறைவேற்றப்படாதிருந்தால் வெளியக சுயநிர்ணய உரிமை எமக்கிருக்கும்” என நான் அப்போது அவரிடம் சொல்லியிருந்தேன். அன்ரன் பாலசிங்கமும் அதைத் தான் சொன்னார். கடைசியில் அவரும் அதிலிருந்து ஒதுக்கப்பட்டவராகவிருந்தார். ஆனபடியால், நிலைமைகளை மதிப்பீடு செய்து தான் நாம் அரசியலை முன்னெடுத்துச் செல்லலாம். கட்சிகள் தங்களுடைய பதவி, அதிகாரங்கள் குறித்து வெளியேறினார்களே தவிர அந்த வெளியேற்றம் எமது இனத்தின் விடுதலை நோக்கியதாக இருக்கவில்லை. அது அவர்களைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது. அதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கேள்வி 7:

விடுதலைப்போராட்டத்தில் சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த காலத்தில் இறுதிநேர வெள்ளைக்கொடி விவகாரம், மூன்றாம் தரப்பு மேற்பார்வையில் சரணடைவு, போர் நிறுத்தம் போன்ற பேச்சுகளில் நீங்கள் என்ன பங்கு ஆற்றியிருக்கிறீர்கள்? அது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் உங்கள் மீதும்; குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அது குறித்து இதயத் தூய்மையுடன் பதிலளிப்பீர்களா?

பதில்:

அவருடைய குற்றச்சாட்டுகள் உண்மையில் நடந்தவற்றுக்கு மாறானது. அவர் விட்ட தவறுகளும் பலது. ஆனால் எங்களைப் பற்றி அவர்கள் சொன்னதுக்கு நான் புதிய சுதந்திரனில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் போர் நடைபெற்ற காலங்களில் எமது மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக உணவு மருந்து கொடுப்பதற்காக  ராஜபக்ச நிதியமைச்சராக வாற திட்டத்திற்கு பேசுகின்றபோது கூட நாங்கள் பாராளுமன்றத்துக்குள்ளேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். போராட்டம் நடத்தியிருக்கிறோம். வெளிக்கு உணர்த்தியிருக்கின்றோம்.;. இரண்டாவதாக போர்க்காலத்தில் போராளிகளுடன், அல்லது தலைவர்களுடன் நாங்கள் தொடர்பிலிருந்தோம். அவர்களுடைய நிலைமைகளை அறிந்து கொண்டிருந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் அறியமுடியாமல் போய்விட்டது. மன்னார் வரைக்கும் இலங்கை இராணுவம் முன்னேறி வந்த வரைக்கும் நன்கு தெரியும். இந்திய நாட்டினுடைய முக்கியமான அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒரு பேச்சுவார்த்தைக்கு…..; விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும் ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைக்க  ஒரு முயற்சி எடுத்திருந்தார். அது வெளிப்படையாக பின்பு  தெரிய வந்தது. அவர் காரைக்காலிலே ஒருமுறை பேசுகின்றபோது விடயங்களை நல்ல தெளிவாகச் சொன்னார். அந்தநேரத்தில் உண்மையில் ராஜபக்ச தான் வெல்லுவேன் என்று நினைக்கவில்லை. அதில் இந்திய நாட்டில் திரு.சிதம்பரம் அவர்கள் எடுத்த நடவடிக்கை மட்டுமல்ல நெதர்லாந்து நாட்டினுடைய தூதுவர் ராஜபக்சவுடன் நல்ல நட்பாக இருந்தவர். அவர்கூட விடுதலைப்புலிகளுடைய இடங்களுக்குச் சென்று ராஜபக்சவினுடைய நிலைப்பாடுகளைச் சொல்லி பிரபாகரன் அவர்களையும் ராஜபக்சவையும் பேச வைப்பதற்கு முயற்சி எடுத்திருந்தார். ஆனால் அது கைகூடவில்லை என்பதனை நான் இப்போது சொல்லலாம். இரண்டாவது இந்திய நாட்டின் சார்பில் சிதம்பரம் அவர்கள் மன்னாருக்கு இராணுவம் முன்னேறி வருகின்ற நேரத்தில் போரை நிறுத்தி விடுதலைப்புலிகளையும் ராஜபக்சவினையும் பேச வைப்பதற்கு எடுத்த முயற்சியும் கைகூடி வரவில்லை. முயற்சிகள் எடுத்தமை உண்மையானது. அது எங்களுக்கு தெரியும். இறுதியாக அந்தப் போர்க்காலங்களில் அங்கிருந்தும் எங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை ஒட்டி பாராளுமன்றத்திலும் நாங்கள் ராஜதந்திரிகள் மட்டங்களிலும் நிச்சயமாக எல்லோரும் பேசி வந்திருக்கிறோம். நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே உடனடியாகப் போரை நிறுத்த வேண்டுமென்று சர்வதேச இராஜதந்திர ரீதியாக நாங்கள் செயற்பட்டோம். அப்படித்தான் நாங்கள் செயற்படலாம். ஆனால் ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகள் சார்பிலே தமிழ்ச்செல்வன் அப்போது இறுதிக்கட்டத்தில் உயிருடன் இல்லை. நாங்கள் இந்தியாவுடன் சென்று பேசி போரை நிறுத்தவேண்டுமென்று முயற்சி எடுத்தபொழுது நடேசன், புலித்தேவன் ஆகியோர் ஒரு செய்தியை எங்களிடம் சொன்னார்கள். அதாவது, இந்திய அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்ற கருத்தை எங்களிடம் சொல்லியிருந்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமாரும் எங்களுடன் இந்தியாவுக்கு வருவதாகத்தான் தீர்மானம் எடுத்திருந்தோம். இறுதியாக அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அவர் வராமல் விட்டுவிட்டார். நாங்கள் இந்தியா சென்றோம். அப்போது இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் சிதம்பரம் அவர்கள் தோற்றுப்போனார் என்று கூட செய்திகள் வந்தன. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் போய் விடுதலைப்புலிகளினுடைய கருத்தையும் நாங்கள் மனதிலே கொண்டு யுத்த காலத்தினுடைய நிலைவரங்களையும் நாங்கள் அவதானித்துக்கொண்டு இந்தியாவுக்கு டெல்லிக்கு சென்று நாங்கள் அப்பொழுது அரசியல் தலைவர்களைச் சந்திக்காமல் தீர்வுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரிகளை நாங்கள் சந்தித்து, செயலாளர்களைச் சந்தித்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாடுகளைச் சொல்லியிருந்தோம்.

அப்போது எங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் நெதர்லாந்து தூதுவர் பிரான்ஸ் மருத்துவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்த செய்திகள் மிகக் குறிப்பாக அரசாங்க இராணுவத்தரப்பினர் கொத்துக்குண்டு என்ற சொல்லக்கூடிய cluster bombs, thermobaric bombs  நல்ல நினைவு இருக்கிறது. அடுத்தது phosphorus gas குண்டுகள் . இவற்றையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆவணமாக வைத்திருந்தோம். அதை நாங்கள் இந்தியாவிடம் சொல்லியிருக்கின்றோம்.  இராஜதந்திரிகள் அந்தத் தகவலை அறிந்திருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் சொல்லியிருந்தோம். இது மிக மோசமாக மக்களை அழித்துவிடக்கூடிய போரை, கொடூரமாக மக்களை அழித்துவிடக்கூடிய நிலைமைக்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று நாங்கள் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தோம். யாரும் மறுக்கமுடியாது. அந்த நேரத்தில் நாங்கள் டெல்லியில் இறங்குகின்ற பொழுது நேரு மண்டபம் என்று நான் நினைக்கின்றேன். அங்கே எங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறையின் அனுசரணையோடு நாங்கள் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியிருந்தோம். 60 பேருக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அதில் குறிப்பாகச் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அதிகமாகக் கூடியிருந்தார்கள். எங்களுடைய அந்த பத்திரிகை அறிக்கையை, அவர்களுடன் நாங்கள் அன்றைக்கு நாங்கள் பேசிய விடயங்கள் அன்றைக்கே வெளியே வந்திருந்தது. இது இரகசியமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் cluster bombs, thermobaric bombs, phosphorus gas பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சொல்லி இந்தப்போரை நிறுத்த சர்வதேசம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரியிருந்தோம். இந்தியா தலையிட வேண்டும் என்ற அழைப்பை நாங்கள் பகிரங்கமாக விட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமார் வந்திருக்கவில்லை. அவர்கள் நடேசன், புலித்தேவன் சொல்லுகிறார்கள் என்று விட்டுவிட்டார்.

ஆனால் நான் சொன்னேன் நான் எடுத்த முடிவு, நாங்கள் அங்கே போய் பேசுவோம் என்று தான் சொல்லியிருக்கின்றேன். அது கஜேந்திரகுமாருக்கும் நிச்சயமாக தெரியும். நடேசன், புலித்தேவன் ஆகியோர் அப்படி நினைத்தமைக்குக் காரணம் என்னவெனில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர்களுடைய உத்தரவாதம் மற்றும் அமெரிக்க பசுபிக் கொமாண்ட் முல்லைத்தீவில் அகதிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற பல செய்திகள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் அந்த நம்பிக்கையுடன் தான் இந்த நெருக்கடியில் முனைப்புக் கொண்டதாக இருந்தது. அதை நாங்களும் அறிந்திருந்தோம். ஆனால் அந்த சம்பவங்கள் சாத்தியப்படாத நேரத்தில் தான் நாங்கள் அறிந்த செய்திகளின் படி, நாங்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தமையால் அவர்கள் மிக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நாங்கள் இந்த உண்மையை டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.

அதுதான் நாங்கள் எடுத்த ஒரு பலம் வாய்ந்த சக்திமிக்க நடவடிக்கையாக இருந்தது. அதைவிட எங்களுடைய கையில் வேறு எதுவும் இருக்கவில்லை. அந்த நேரத்தில் தான் கஜேந்திரகுமார் அவர்கள் நாங்கள் இந்தியாவிலே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் ஒரு முயற்சியில் இறங்கியிருந்தார்;. சரணடையிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதில் “அண்ணை நிலைமை மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என எனக்கு அவர் சொல்லியிருந்தார். நான் அப்போது திருச்சியில் இருந்தேன். நாங்கள் எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று எங்களைக் கேட்டிருந்தார். ஆனபடியால் இந்தியாவில் அங்கே நாங்கள் பேச வேண்டியிருந்தது. உண்மையில் அதுதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்திய தூதுவர் பிரசாத்திடம் அவர் தொடர்புகொண்டிருந்தார். அங்கே மலேசியாவிலிருந்த கே.பி என்பவர் தான் ஒருபெரும் சாட்சியாக இருந்திருக்கிறார். அவர் எப்பிடி சொல்லப்போகின்றாரோ எனக்கு தெரியாது. ஆனால் கே.பி அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அன்று ஒருநாள் இரவு முழுவதும் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாங்கள் சிதம்பரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கலைஞர் கருணாநிதியுடன் பேசி அரசாங்கத்தைத் தலையிட வைக்கவேண்டும் என்று முயற்சித்திருக்கிறோம். சிதம்பரம் அவர்களிடம் கலைஞர் அவர்கள் என்னுடன் பேசும்படி தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.  நான் பிறகு சம்மந்தன் அவர்களை அங்கே சென்னையில் .அவரைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கு வைத்திருந்தேன். அப்பொழுது இந்த சரணடையிற பிரச்சினை கூட பேசப்பட்டது. அதற்காகத்தான் பேசப்பட்டது.  அதாவது கௌரவமாக சரணடைய வேண்டும் என்ற பேச்சுவார்த்தை. . ஆனால் அந்த நிலைமையில் யார் தலையீடு செய்திருந்தார் என்றால் அது கஜேந்திரகுமார். அது பிழையென்று இப்பொழுது நாங்கள் கருதவில்லை. கஜேந்திரகுமார் தான் இந்திய தூதுவரோடு தொடர்பு கொண்டிருந்தார் கொண்டிருந்தார். திரு. சம்மந்தனோடு தொடர்புகொண்டு மற்றைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தரும்படியும் மற்றைய நாடுகளுடன் பேச வேண்டும் என்றும் கேட்டிருந்தார். .அவரே பின்பு மின்னல் ரங்காவினுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற பொழுது நான் கூறிய ஒரு கூற்றைக்கொண்டு பதிலளித்திருக்கிறார். “ஆம் நான் பேசினேன் நான் முயற்சித்தனான் தான். சம்மந்தன் அவர்கள் சொன்ன அடிப்படையில் தான் நான் அமெரிக்க தூதுவரோடு, பிரிட்டிஸ் தூதுவரோடு எல்லாம் பேசினேன்” என்று கூட அந்த நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தியுள்ளார்.  அது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட விடயம். அதற்கு நாங்கள் அப்பொழுது எங்கள் மீது எதாவது குறை என்று பேசுவது உண்மைக்கு மாறான விடயம். கே.பி அவர்கள்….. நான் நினைக்கிறேன் அந்த இரவு கிட்டத்தட்ட 20 -25 தடவைகள் நானும் கஜேந்திரகுமாரும் பேசியிருக்கின்றோம். நானும் அவரும் அழுதனாங்கள் என்று கூட மின்னல் நிகழ்ச்சியிலே அவர் சொல்லியிருக்கிறார். சரணடைவதை எப்படியும் கௌரவமாக நடத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிரபாகரன் அப்படி சரணடைந்திருக்க மாட்டார் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால் ஏனையவர்கள் சரணடைவதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். யார் அதில் இருக்கிறார்கள். யார் அதில் இருக்கவில்லை என்று வருவதற்கு நான் இப்போது ஆயத்தமாக இல்லை. நான் அதிகமாக இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்புவர்கள் மீது பிரபாகரனைப் பற்றி கேள்வி கேட்கின்ற போது அவர் உயிருடன் இருந்தால் எனக்கு தொடர்பு இருந்திருக்கும் என்று தான் பதில் சொல்வேன். அவ்வளவு தான் என்னுடைய வார்த்தை. ஆனால் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் திரு.கஜேந்திரகுமார் அவர்கள் தொடர்புகொண்டிருந்தது பசில் ராஜபக்சவோடு. இரண்டு நாட்களாகப் பேசியிருக்கிறார்கள். ராஜப்பு ஜோசப் அவர்களும் பசில் ராஜபக்ச அவர்களும் கஜேந்திரகுமார் அவர்களும் கிளிநொச்சிக்கு போவதாகத் தீர்மானித்தார்கள். சரியான முறையில் கௌரவமாக சரணடைய வைக்கவேண்டும் என்பதற்காக. அதற்காக எங்களுடனும் அதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்பொழுது இந்திய தூதுவராக இருந்த பிரசாத் அவர்கள் இதில் அவ்வளவு தூரம் உண்மையாகச் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது. அவருடன் நாங்களும் பேசினோம். அவர் அடுத்த நாள் காலையில் என்னுடன் பேசினார். 16ந் தேதி வரையில். மே மாதம் 16ந் தேதி  17ந் தேதி நடந்த சம்பவம் இது…… கலைஞர் கருணாநிதியுடன் பேசவேண்டும் என்று திரு. சம்மந்தன் அவர்கள் என்னிடம் கேட்டார். நான் பேசினேன். அவர் அப்போது தேர்தலில் வெற்றிபெற்று டெல்லியோடு பேசுவதற்கான கூட்டங்களில் இருந்தார். பிறகு சிதம்பரத்துடன் நாங்கள் பேசினோம். சிதம்பரம் தான் உதவுவதாகச் சொன்னார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் மற்றும் கௌரவமாகச் சரணடைய வேண்டும் என்ற விடயத்தில் தங்களுக்கு விடுதலைப்புலிகள் சார்பிலே ஒரு கடிதம் வேண்டுமென்று சிதம்பரம் எமக்குச் சொன்னார். கேபி அவர்கள் என்னுடன் தொடர்ச்சியாக விடியுமட்டும் பேசிக்கொண்டிருந்தவர். தொடர்ச்சியாக பேசியவர். நாங்கள் இதனைக் கூறிய போது அவர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதற்காகத் தான் சொன்னேன் பிரசாத் எவ்வளவு தூரம் நேர்மையாக நடந்திருக்கிறார் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறதென்று. கஜேந்திரகுமார் அவர்களுடன் அன்று முதல் நாள் மாலையிலிருந்து அவர் பேசாமல் விட்டிருக்கிறார். நான் திருப்பி எடுத்தபொழுது விடிய நான்கு மணிக்கு சொன்னார் அந்த கடிதம் தனக்கு பிந்தித்தான் கிடைத்ததென்று. சிலவேளை இருக்கலாம். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டது. தேர்தல் முடிந்து வெற்றிகள் தோல்விகளைப் பற்றி செய்திகள் அறிவித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இது நடந்தது. இலங்கை அரசாங்கமும் அந்த நேரத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் நாங்கள் அறிந்திருந்தோம். விடுதலைப்புலிகள் ஏதோ ஒரு நம்பிக்கையோடு கடைசிவரைக்கும் ஈடுபட்டார்கள். மிகவும் துக்ககரமான சூழல். நிலைமை அப்படி சரணடைய வேண்டும் என்று ஏற்பட்ட நிலைமை தவிர்த்திருக்க முடியாததாக இருக்கலாம். அடுத்தது லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது அதுக்கு காரணம். அரசாங்கம் திட்டமிட்டு, இராணுவம் திட்டமிட்டு cluster bombs, thermobaric bombs, phosphorus gas போன்றவை பயன்படுத்தியமை தான் முக்கியமான காரணம். முகாம்களுக்குள் இருக்கிறவர்கள். No fire Zone என்ற பாதுகாப்பான வலயங்களுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் அதனை வீசியிருக்கிறார்கள்.  இதை எவரும் மறுக்க முடியாது. அப்படிச் செய்தார்களென்று இராஜதந்திரிகளிடத்திலே. நாடுகளிடத்திலே நாங்கள் வாதிட்டிருக்கிறோம்.   . ஆனால் அந்த சரணடைய வேண்டும் என்ற விடயத்தில் இவ்வளவு விடயத்தையும் கே.பி அவர்களுடன் கஜேந்திரகுமாருடன் நாங்கள் பிறகு கருணாநிதியுடன் சிதம்பரத்துடன் அதை கௌரவமாக நடத்துவதற்கு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பசில் ராஜபக்ச அன்றைக்கு மாலை வரை அவர் கஜேந்திரகுமார் அவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. கிளிநொச்சிக்கு போகவேண்டும் என்ற செய்தியை அவர்கள் முன்னெடுக்கவில்லை. ஏனென்றால் நிலைமைகள் படுமோசமாக மாறிவிட்டது முல்லைத்தீவில். அவர் இறுதியாகக் கஜேந்திரகுமாருக்கு சொன்ன விடயம் ராஜபக்ச அண்ணன் வருகிறார். வந்ததுக்கு பிறகு தீர்மானிக்கலாம் என்று. அவர் வந்து விமானத்தில் இறங்கினவுடன் அவர் செய்த வேலை  மண்ணில் முத்தமிட்டது. அது ஒரு நிலைமையில் அவர் ஏன் அப்படி செய்திருக்கிறார் என்று நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அவ்வளவு நெருக்கடிகள் அங்கே ஏற்பட்டு விட்டது. அந்த நிலைமையில் அதோடு அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அந்த முயற்சியை அதில் தொடர்பாடலில் இருந்த நேருவினுடைய மகன் சந்திரநேரு அவர்களுடன் தொலைபேசியில் skype இல் பேசிக்கொண்டிருந்த திரு. நடேசன் அவர்கள் அந்த செய்தியை பரிமாறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திரு.சம்மந்தன் அவர்களிடமும் என்னுடனும் பேசிய சந்திரநேரு அவர்கள் அமெரிக்க, ஆபிரிக்க தரப்பினர், சுவிஸ் தரப்பினருடன் தொடர்புபடுத்தியிருக்கிறார்.  அந்தநேரத்திலே பசில் ராஜபக்சவினுடைய தரப்பில் சொல்லப்பட்டது என்னவெனில்……. அவர்களை இன்னொருவருடைய பெயர்….. அதனை நான் மறந்துவிட்டேன்…… சில போராளிகள் சரணடைந்தார்கள் என்றும் வெள்ளைக்கொடியை பிடித்துக்கொண்டு வாருங்கள் என்றும் அவர்கள் ஆலோசனை சொன்னதை சந்திரநேரு அவர்கள் நடேசன் அவர்களுக்கும் பலித்தேவன் அவர்களுக்கும் சொல்லியிருக்கின்றார். அப்படிச் சொல்லிவிட்டு இறுதியாக சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யார் தப்பியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உண்மையில் வெள்ளைக்கொடியைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இறுதியான செய்தி. அந்த செய்தியை சந்திரநேரு எங்களுடன் தொடர்புபடுத்தி கதைத்துவிட்டு சம்மந்தன் அவர்களுடைய கருத்துப்படி அவர் அமெரிக்க தூதுவரிடத்தில், பிரிட்டிஷ் தூதுவரிடத்தில் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடத்தில் அதைப் போய் உரைத்திரைக்கிறார். அவர் அதை  ஐ.நாவினுடைய அந்த விசாரணைக் குழுவிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். அது இரகசியமல்ல. அது இணையத்தளங்களில் வெளியே வந்துவிட்டது.

ஆனால் இதில் முக்கியமாக அதை செயற்படுத்தியிருக்கவேண்டியது திரு.கஜேந்திரகுமார் என நான் கூறிவிட்டேன். நான் அதை சொல்லிவிட்டேன் என்பதனால் தான் அவர் என்னைக் குறை கூறுகிறார். அவர் இல்லாத உண்மைகளுக்கு மாறான விடயங்களைத் தேர்தல் காலத்தில் பேசியபடியால் நான் இதனைச் சொன்னேன்;. “சரி சந்திரநேரு செய்த வேலையையாவது நீர் செய்திருக்கலாம் தானே” என்று நான் கஜேந்திரகுமாரிடம் கேட்டிருந்தேன். அதுதான் அந்த பிரச்சினைக்குரிய செய்தி. அதற்குமேல் நான் சொன்னேன். அவர் அம்மாவின் மேல் சத்தியம் செய்தபோது எனக்கு கவலையாக இருந்தது உண்மையில்.  நான் அதைப் பேசாமல் விட்டிருக்கலாம் என்று கூட யோசித்தேன்.  நான் இறுதியாக நல்லூர்க்கூட்டத்தில் பேசியபோது கூட நான் இனி அப்பிடி பேசவில்லை… நான் சொல்லமாட்டேன்.. என்று சொல்லியிருக்கிறேன்.  நாங்கள் இரவு முழுவதும் தொடர்பிலிருந்தவர்கள். இரண்டுபேரும் அழுதனாங்கள் உண்மையிலேயே. அதுதான் நடந்தது. ஏன் அவர் இப்படிச் சொல்லுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு எதிராக அவர் சொன்ன விடயங்கள் அந்த அடிப்படையில் தான். அதை நான் உண்மையிலேயே கவலையோடு தான் பரிமாறிக்கொண்டிருந்தேன். அதுக்காக நான் அவரை இரண்டுபேரும் கண்ணீர் விட்ட கதையை நான் கதையாகச் சொல்லவோ குற்றமாகச் சொல்லவோ  நான் ஆயத்தமாக இருக்கவில்லை. அதுதான் உண்மையானது. அவர் அதைச்செய்திருந்தால் சந்திரநேரு அவர்களை விட கஜேந்திரகுமார் அவர்கள் அந்த செய்தியை முன்னெடுத்திருந்தால் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதுதான் எனது கருத்தாக இருக்கிறது.

தொடரும்!

 11,150 total views,  3 views today

(Visited 4 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply