திரை சொல்லும் விடுதலை: The battle of Algiers -செல்வி-

தேசிய இனங்கள் தங்களது விடுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தவுடன் கலைகளும் மக்களின் குரலாக, குரலற்றவர்களின் குரலாக உரிமைக்காக ஒலிக்கும் படைப்புகளாக முகிழத் தொடங்கின. அதைப் போலவே திரையும் திரைபேசும் மொழியும் கலை என்பதையும் தாண்டி, விடுதலைக்கான குரலாக பல மொழிகளிலும் ஒலித்திருக்கின்றது. வாழ்வியல் இயங்கியலை அழகியலாக மாற்றும் பொறிமுறை சமூக இயங்கியலுக்கானதாக, சமூக இயங்கியலின் நிழல் சாட்சியங்களாக மாறத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் அல்ஜீரிய மக்களின் விடுதலைப் பயணத்தையும் விடுதலைக்காக அவர்கள் சிந்திய குருதிகளின் வாடையையும், கொடுத்த உடலங்களின் மாதிரி நிழலுருக்களையும் The battle of Algiers என்ற பெயரில் திரைமொழியாக்கியிருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்களை இன அழிப்பு செய்த காலனித்துவத்திற்கான ஒரு பதிவாக இருக்கும் இத்திரைப்படம் ஜிலோ பொன்ரர்கோவா என்பவரால் இயக்கப்பட்டிருக்கிறது.  தேசிய இன விடுதலை என்பது அவர்களது தேசிய இயக்கத்தின் சுடுகலன்களை மௌனிக்கவைத்து, தோல்வியடைய வைப்பதுடன் விடுதலை நெருப்பை அணைய வைத்துவிடலாம் என்று கனவு கண்ட ஆதிக்கத்தின் அதிகார வெறியை, விடுதலைக்கான போராட்டம் விடுதலை பெறும்வரை ஓயோம் என்று மக்கள் புரட்சியாக விடுதலைக்கான போரை அடக்குவதென்பது விடுதலை வேட்கையை அடக்குவதாகாது. அந்த விடுதலை விதை சொந்த மண்ணில் சுதந்திரமாக முளைக்கும் வரை புரட்சிகள் ஓயாது என்பதை உலகிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் சொல்லிச் சென்றது அல்ஜீரிய போராட்ட வரலாறு.

ஆபிரிக்க கண்டத்தின் தலைப்பகுதியாக துனிசியாவுக்கும் மொராக்கோவுக்குமிடையில் இருக்கும் அல்ஜீரியா, காலத்துக்கு காலம் பல்வேறு குடியேற்றங்களால் நிரப்பப்பட்டிருப்பினும் தம் ஆளுகைக்குள் கொண்டுவரவில்லை. ஆனால் 1830 இல் பிரான்சியப் படைகள் அல்ஜீரியாவை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். அடக்குமுறை அரசாங்கங்கள் செய்யும் அதே அடக்குமுறை வடிவங்களுக்கு அல்ஜீரிய மக்களும் உட்படுத்தப்பட்டனர். குடியுரிமை மறுக்கப்பட்ட சமூகம் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கத் தொடங்கியது. தமது தேச மீட்பிற்கான விடுதலைப்போரினை முன்னெடுப்பதற்காக ஒன்றுதிரண்டனர். தன்னாட்சி உரிமைக்கான தேவையையும் புரட்சிக்கான நோக்கத்தினையும் தமது மக்கள் மத்தியிலே பரப்புரை செய்து, மக்களை ஓரணியில் அணியமாகும் மனநிலைக்கு கொண்டுவந்தார்கள். 1930 இல் அந்த விடுதலை வேட்கை அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி என்னும் ஆயுதம் தாங்கிய இயக்க வடிவமாக உருவெடுத்தது. விடுதலைக்கான குரல்கள் பிரான்சிய அதிகாரத்திற்கு எதிராக அறைகூவத் தொடங்கின. 1943இல் பெர்ஹாத் அப்பாஸ் என்பவர் தனது ஏனைய தலைவர்களுடன் இணைந்து அல்ஜீரிய தேசிய தலைவர்களுடன் இணைந்து அல்ஜீரிய ஆட்சியிலும் சட்டங்களிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு அறிக்கை சமர்ப்பித்தார்கள். ஆனால் அவர்களது கோரிக்கையை அரச அதிகாரம் மறுதலித்ததன் காரணமாக இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள். அந்த விடுதலைத் தீயை அணைப்பதற்காக சூழ்ச்சிகளை பிரான்சிய அரசு, அல்ஜீரிய மக்கள் மீது தனது கொடுங்கோலை நீட்டியது. அதன் விளைவாக 1945, வைகாசி 8 ம் நாள் அல்ஜீரிய மண்ணில் அல்ஜீரிய மக்களின் குருதியாலும் உடலங்களாலும் படுகொலைக்கான சாட்சியங்கள் பதியப்பட்டன. அந்த இரத்தின் கறையிலிருந்து போராட்டம் இன்னும் வீறுகொண்டது. அரசுக்கெதிரான ஊர்வலங்கள் யாவும் அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பிரான்சிடம் ஜேர்மனி வீழ்ந்தவுடன், பிரான்சிய அதிகார வெறி முன்னிலும் வேகமாக தனது கொடுமைகளைக் கட்டவிழ்த்தது. விடுதலைக்காக எழுந்த இளைஞர்களை அழிக்கும் வேலைத்திட்டத்தில் ஏறத்தாழ 50000 இளைஞர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அந்த இளைஞர்களின் இழப்பினால் முற்றிலுமான அறவழிக்கு முற்றுப்புள்ளி வைத்த அல்ஜீரிய மக்கள் மறவழியில் புரட்சிக்கான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். 1954 ம் ஆண்டு கார்த்திகை 01 ல் விடுதலைக்கான நெருப்பை அல்ஜீரியாவின் பல பாகங்களிலும் ஒரே நேரத்தில் சுடுகலன்களால் பற்றவைத்தனர். அரச கட்டமைப்புக்களை நோக்கி வைத்த இலக்குகளால் பிரான்சிய அதிகாரம் ஆட்டம் கண்டது. தேசிய விடுதலை முன்னணி தனக்கான தளத்தை வெறுமனே போராளிகளிடம் மட்டும் என்று மட்டுப்படுத்தவில்லை. மாணவர்கள், பெண்கள், துறைசார்ந்த வல்லுனர்கள் என அனைவரிடமும் தேசியத்திற்கான தாகத்தின் தேவைகளை நன்கு உரைத்து, அவர்களையும் போராட்டத்தில் இன்னொரு தளமாக வைத்திருந்தனர். விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அகமத் பென் பெலா என்பவர் கொரில்லாத்தாக்குதல் திட்டங்களினால் பிரான்சியப் படைகளை கதறடித்த அதேநேரம், இன்னொரு தலைவரான பிரான்ஸ்வா பனான் விடுதலைப்போரின் கருத்தியல்களை உலக மேடைக்கு பரப்புவதில் ஈடுபட்டு, பன்னாட்டு அங்கீகாரத்துக்காக போராடினார். பல இயக்கங்கள் விடுதலைநோக்கி தொடங்கியிருந்த போதும், போராட்டங்கள் வலுப்பட தொடங்க, மற்றைய இயக்கங்களும் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தனர். ஆனால், அவர்களது வன்முறைப் பாதையை எதிர்த்த சகோதர இயக்கத்தை அழிப்பதையும் மக்களின் விடுதலையின் பெயரால் தேசிய விடுதலை முன்னணி நிகழ்த்தியது. காட்டிக்கொடுப்போரும் களையெடுக்கப்பட்டனர்.

1956 புரட்டாதி 30 ல் மூன்று பெண் போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பின் எதிரொலியால் பிரான்ஸ் அரசுக்கு விடுதலைப்போரின் தீவிரம் உணர்த்தப்பட்டது.  அதன் விளைவாக போராளிகளும் பொதுமக்களும் சித்திரவதைகளுக்கு உட்பட்டனர். ஆயினும் தொடர்ந்த விடுதலைப்போரின் காரணமாக விளைந்த வன்முறைகளினால் மக்கள் மத்தியில் புரட்சி மீது அதிருப்தி தோன்றி, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நம்பத் தொடங்கினர். அந்தப் புள்ளியை ஆரம்பமாக வைத்து அந்த விடுதலை இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டது. மறவழிப்போராட்டம் அடக்கப்பட, GPRA என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு, தேசிய விடுதலை இயக்கத்தினுடைய தலைவரே இந்த அமைப்புக்கும் தலைவராக இயங்கிவந்தார். மக்கள் புரட்சி வெடிக்க, அரசு பொது வாக்கெடுப்பு என்னும் பொறிமுறைக்கு இணங்கி, பிரான்சிய மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 132 ஆவது ஆண்டுகளின் காலனிய ஆட்சி 1962 ஆடி 05ம் நாள் நிறைவுக்கு வர, ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்களின் தியாகங்களின் மேல், அல்ஜீரியா தனிநாடாக தன்னை பிரகடனம் செய்துகொண்டது.

இந்த அல்ஜீரிய போராட்டத்தை கருவாகக்கொண்டு எழுந்த திரைப்படம் அல்ஜீரிய மக்களின் போர் என்ற திரைப்படம் ஒரு ஆவணமாக மட்டுமன்றி, விடுதலைக்காக போராடி, இன்று தோற்கடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் எமக்கும் சில பாடங்களைச் சொல்கிறது. விடுதலைக்கான வேட்கையும் தாகமும் தோல்விகளாலும் அழிவுகளாலும் முடிவுபெறா. அவை விடுதலை கீதத்தின் ஒலியில் மட்டுமே தீரக்கூடிய வேட்கைகள். தோற்றாலும், சுடுகலன்கள் முற்றாக இழந்தாலும், அடக்குமுறைகள் இருக்கும்வரை, அந்த விடுதலைக்கான புரட்சி மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் முகிழ்த்துக்கொண்டே இருக்கும். உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களது போராட்டங்களின் தோல்வியும் அவர்களது மீள எழுகையின் குறிகாட்டிகளாகவும் தளங்களாகவுமே இருந்திருக்கின்றன. அல்ஜீரிய விடுதலைப்போரின் வரலாறும் தோல்வியிலிருந்து மீள எழுந்த புரட்சியின் வன்மையைப் பதிந்து சென்றிருக்கிறது.

தேசிய இன விடுதலைக்காக களமாடத் துணிந்த புரட்சியாளர்கள் ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரையுடன் அரச பயங்கரவாதத்தினால்  கொடிய சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை கண்முன்னே காட்டும் காட்சியுடன் திரைப்படம் எம்முடன் தொடர்பாட ஆரம்பிக்கிறது. பிரான்சிய இராணுவத்திடம் பிடிபட்டு, பலத்த சித்திரவதைகளின் பின்னர் தனது சக போராளிகளின் மறைவிடத்தை காட்டிக்கொடுக்கும் போராளியின் உடல்மொழியும் வதைகளின் பின்னாலிருக்கும் வலிகளும் அலறல்களும், எம் தாயக மீட்புக்காக போராடி, இன்றும் சிறைகளில் வாடும் எமது உறவுகளை வலியுடன் நினைவூட்டிச் சென்றது. காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று புறங்கையால் ஈழம் பெறத் துடித்தவர்கள் போகிறபோக்கில் சொல்லிவிட்டுபோகும் சொல்லுக்கு பின்னால் இருக்கும் பிடிபட்ட போராளிகளின் வலியையும் கண்முன்னே கணத்தில் நிறுத்திச்சென்றது காட்சி. கஸ்பா நகரத்திலிருக்கும் வீடொன்றின் சுவருக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய இடமொன்றில் ஒளிந்திருக்கும் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அலியும்(புனையப்பட்ட பெயர்) அவனுடைய சக போராளிகளும் இராணுவத்தினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, அலியையும் அவனது சக போராளிகளையும் ஆயுதங்களைக் களைந்து சரணடையும் பட்சத்தில், நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் போராட்டத்தில் எஞ்சியிருப்பவர்கள் அவர்கள் மட்டுமே என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அலியும் போராளிகள் தப்புவதற்கான எந்த சாத்தியங்களும் இல்லாத கணத்தில், அலியின் கண்களினூடே பின்னோக்கு காட்சி நுட்பத்தினூடாக, அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டம்  பதிவுசெய்யப்படுகின்றது.

திருடனாக இருக்கும் அலி, பிரான்சிய காவல்துறையிடம் பிடிபட்டு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெறுகின்றான். அங்கே ஏற்கனவே சிறையில் அடைபட்டிருந்த அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராளிகளின் புரட்சி பேச்சுக்களால் கவரப்பட்டு, புரட்சியின் பக்கம் செல்கிறான். அல்ஜீரிய குடிமகனாக, பிரான்சிய அரச அதிகாரத்தால் தான் எவ்வாறு அடக்கி ஆளப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, திருடனாக சிறைக்குச் சென்றவன் விடுதலைப் போராளியாக வெளியேறுகிறான். தனது புரட்சிகரமான செயற்பாடுகளால் இயக்கத்தின் முக்கிய போராளிகளுள் ஒருவனாக மாறுகிறான். சிதறி சிதறி பல இயககங்களாக உருவெடுத்திருந்த போராளிகளை ஒரு கட்டமைப்புக்குள் வைத்திருக்கவேண்டுமென்று விரும்பி, அதனை நடத்திக் காட்டினான். இனத்தின் விடுதலை என்பது வெறுமனே நில மீட்பல்ல. அது பண்பாட்டு ஒழுக்கத்தினை காப்பதுமாகும் என்று மக்களையும் சிறுவர்களையும் அறிவூட்டி, போதைப் பழக்கத்தை ஒழிக்க முயன்றான்.

பிரான்சிய காலனித்துவ அரசின் அடக்குமுறைகளுக்குள்ளான மக்களில் பெருந்தொகையான இளைஞர்கள் விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்கிறார்கள். போராளிகளுக்கு உறுதுணையாக மக்களும் இணைகிறார்கள். இராணுவத்திடமிருந்து போராளிகளைக் காப்பதற்காய் அவர்களது வாசல்கள் காத்திருந்தன. மக்களை அரசியற்படுத்தி, அவர்களைத் தளமாகக் கொண்டு நடத்தப்படும் போரை, மக்களே நடத்திக்கொடுப்பார்கள். காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சையளிப்பதும் மருந்துகொடுப்பதும் குற்றம் என்று சட்ட சீர்திருத்தத்தில் அரச அறிவிப்பாக வெளியிடப்பட்டபோது கூட மக்கள் போராளிகளைக் காத்தார்கள்.  ஈழத்து விடுதலைப்போராட்டத்திலும் பல வெற்றிச் சமர்களின் பின்னாலும், உலகத்திற்கே சவாலாக வரக்கூடிய அளவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வளர்த்ததில் மக்களின் பங்கும் பெருமளவில் உண்டு.

பிரான்சிய அதிகாரத்திற்கும் விடுதலை இயக்கத்திற்குமிடையே சிறிது சிறிதாக மூண்டுகொண்டிருந்த போர், அல்ஜீரியக் குடியிருப்பில் காவல்துறையினர் குண்டுவைத்து, அல்ஜீரியர்களின் படுகொலையின் எண்ணிக்கையின் ஆரம்பம் எழுதப்படுகிறது. முள்வேலிகளும் சோதனைச் சாவடிகளும் ஊரடங்குச் சட்டங்களும் மக்களை முடக்க எழுகின்றன. முள்வேலிகளையும் முள்வேலிக்குள்ளால் உடல் தடவ விட்டு போகும் அல்ஜீரிய மக்களை திரை பேசுகையில் எம்மைச் சூழ்ந்திருந்த முள்வேலிகளும் மண் அணைகளும், முழத்துக்கு முழம் நீட்டிக்கொண்டிருந்த துப்பாக்கி முனைகளும் இரவுகளை முடக்கிய ஊரடங்குச் சட்டங்களும் மனத்திரையில் பேசின.

முள்ளுவேலிகள் போராட்டங்களை முடக்குவதற்காக எழுந்தாலும் முள்கம்பிகளுக்குள் நுழைந்தும் புரட்சி தொடரும் என்பதை, பெண்போராளிகள் மூவர் பிரான்சிய அரசுக்கெதிரான தங்கள் வெஞ்சினத்தை, குண்டுகளை வெடிக்கவைப்பதனூடாக உணர்த்துகிறார்கள். ஆண்கள் முள்வேலிகளுக்கு காரணமற்று கைதுசெய்யப்படுகிறார்கள். ஆண்களிற்கான முள்வேலி கெடுபிடிகள் அதிகமாகி, அவர்களின் இயங்குதிறன் குறுக்கப்பட்ட போது, பெண்கள் அந்த இடைவெளியை தங்கள் விடுதலை உணர்ச்சியால் நிரப்பிக்கொள்கின்றனர். குண்டுவைப்பதற்கான பெண்கள் மூவரும் தயாராவதிலிருந்து முள்வேலியை அவர்கள் தாண்டுவது வரை, எம்மையும் போராளிகளுள் ஒருவராக உணர வைத்துவிடுகிறார் படத்தின் இயக்குனர். ஈழத்து போராட்டத்திலும் ஆண்களுக்கு நிகராக, தற்கொடைத் தாக்குதல்களை மேற்கொள்வதிலிருந்து கடலில் படையினரை முடிப்பது, ஊடுருவி தாக்குதல் என பெண் போராளிகளின் பங்கும் ஆண்களுக்கு சமமாக இருந்திருக்கிறது. கர்ப்பிணி போன்ற வேடம் போட்டு கரும்புலியாகிய அக்கா முதல் இன்னமும் தன்னை விடுதலைப்புலி போராளி என வெளியே சொல்ல முடியாத அளவிற்கு தங்கள் வாழ்வை முழுமையாக போராட்டத்திற்கு அர்ப்பணித்த புலனாய்வுத்துறையின் அக்காக்கள் வரை அவ்வளவு பேரையும் அந்த அசையும் திரை எனக்கு சொல்லிச் சென்றது. முள்வேலியை தாண்டும் வரைக்கும் உயிரை எதிரியிடம் கொடுக்கும் திடத்தினை இன உணர்வன்றி வேறு எது கொடுக்க முடியும்?

பெண்போராளிகளினால் வைக்கப்பட்ட குண்டு, பிரான்சிய அரசிலும் அதிர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பிரான்சிய சிறப்பு இராணுவப்படை ஒன்றை தளபதி மத்யூவின் தலைமையில் அனுப்பி வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்திற்கெதிரான அவரின் யுக்திகள் பிரித்தாளும் தந்திரத்திலிருந்து தொடங்குகின்றன. அல்ஜீரிய மக்களில் எல்லோரும் எமது எதிரிகளல்ல. அவர்களையும் போராட்டத்திலிருக்கும் மக்களையும் எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது பற்றி இராணுவத்திற்கு அறிவூட்டுகிறார். என் வீட்டுப் படலையில் ஆயுத முனை தெரியும் வரைக்கும் ஆயுதம் தூக்காத எம் மக்களில் சிலரையும், தன் வயது இளைஞர்கள் நாட்டுக்காக போராடப்போன போது, தாயின் சேலைக்கு பின்னர் ஒளித்த சிலரையும், வீட்டுக்கொருவன் நாட்டுக்காக வா என்றால், வீட்டுக்கொருவனை நாட்டை விட்டு புலம் பெயர்த்திய எம் மக்களில் சிலரையும் போல அங்கும் இருந்திருப்பார்களென்று எண்ணத்தோன்றியது. மக்களை வடிகட்டியதுடன் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கையும் operation champagne என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது.

இராணுவ நடவடிக்கையால் தேசிய விடுதலைப் போராட்டம் தன் இறுதி நாட்களை எண்ணத் தொடங்கியது. பல போராளிகளும் தலைவர்களும் இராணுவத்தால் உயிரோடு கைது செய்யப்படுகின்றனர். சொல்லொணா வலிகளைக் கொடுக்கும் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். சித்திரவதைகளின் உச்சத்தில் சக போராளிகளை காட்டிக்கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆயினும் முதல் 24 மணிநேரத்திற்கு அவர்கள் தங்களது விடுதலைப்போராட்டம் பற்றிய எந்த தகவலையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. குண்டு வைப்பதில் சிறந்த போராளி ஒருவர் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க வைக்கப்படுகிறார். ஒரு செய்தியாளர் அவரிடம் அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிக்கும் குண்டுகளைப் பெண்கள் கூடைகளில் கொண்டு செல்வது  தவறானது இல்லையா என கேட்கும்போது, நேபாம் குண்டுகளை வீசி பாதுகாப்பற்ற கிராமங்கள் மீது தாக்குதலை நடத்துவது அதைவிட ஆயிரம் மடங்கு மோசமானது  அப்படியென்றால் குண்டுவீச்சு விமானங்களையும் குண்டுகளையும் எங்களிடம் தந்துவிட்டு கூடைகளை நீங்கள் எடுத்துகொள்ளுங்கள். அது எங்களுக்கு மிக இலகுவாகவும் இருக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்தும் பேச முற்பட்ட கணத்தில், அந்த ஊடகர்களின் சந்திப்பு வலிந்து முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த கணத்தில், “உங்கள் காட்சி முடிவடைந்து விட்டதா” என்று கேட்கும் போராளியின் குரலில், ஒட்டுமொத்த விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பற்றி அரச சார்பாக  ஊடகங்களில் என்ன இருக்கவேண்டும் எனற அதிகாரத்தின் உச்சம் காட்டப்பட்டது.

ஆயினால் அந்தக் குரல்வளை சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டுவிட்டு, தற்கொலையென சித்தரிக்கப்படுவதை தற்கொலை சாத்தியமல்ல என்று வாதாடும் ஊடகவியலாளர், விபச்சார ஊடகங்களுக்கு மத்தியில் விடுதலைக்காக போராடும் ஊடகர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஒருவரின் கைகள் கட்டப்படாமல், அவரது சட்டையை கயிறாக மாற்றுவது சாத்தியமா என்று கேட்கும்போது, அதனை இராணுவப் பேச்சாளரிடம் கேளுங்கள் என்று தன் பொறுப்புக்கூறலை தட்டிக்கழிப்பது, சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைக் குற்றத்திற்கு காரணமானவர்களை வெளியே கூறவேண்டிய பொறுப்புக்கூறலிலிருந்து நழுவுவதற்கு ஒப்பாக இருக்கிறது.  இன்று முள்ளிவாய்க்காலில் விடுதலைப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவந்த போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் ஒப்படைக்கப்பட்டவர்களும் அரசியற் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களும் இவ்வாறு தான் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்களா என்று இனமாக அந்த வலியை நாங்கள் உணர்ந்தோமா?

விடுதலைப்போராட்டங்கள் காட்டிக்கொடுப்புக்களாலேயே ஒடுக்கப்படுகின்றன. அலியின் பதுங்குமிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, சுற்றிவளைக்கப்படுகிறது. திரைப்படத்தின் பின்னோக்கி காட்சி நிறைவடைய மீண்டும் காட்சித்திரை ஆரம்பத்திற்கு நகர்கின்றது. அலியும் அவனது சக போராளிகளும் சரணடைய முன்வராததனால் மக்களின் கண்முன்னாலேயே அவர்கள் குண்டுவைத்து தகர்க்கப்படுகிறார்கள். போராளிகளின் பிணங்களின் மேல் அரச பயங்கரவாதம் தன் வெற்றியை இறுமாப்புடன் பெற்றுக்கொள்கிறது. விதைப்பவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பார்கள். விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் போட்ட விடுதலை விதை மக்கள் புரட்சியாக மாறுகிறது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என ஒட்டுமொத்த மக்களின் புரட்சியாக வெடித்த விடுதலை நெருப்பு, ஆயிரக்கணக்கான தேசியக் கொடியினாலும் கோசங்களினாலும் பெருநெருப்பாகியது. மீண்டும் அதிகாரம் தன் துப்பாக்கி முனைகளை மக்கள் பக்கம் நீட்டிய போதும், மக்கள் புரட்சி மாபெரும் புரட்சியாக இருந்ததால் அது வலுப்பெற்று, மூன்று ஆண்டு கால முடிவில் தனிநாடாக தமது கொடியை தமது மண்ணிலே ஏற்றினார்கள். அல்ஜீரிய தேசம் தன்னை தனிநாடாக அறிவித்தது என்ற செய்தியுடன் அமைதியாகும் இந்தத் திரைமொழி அமைதியாகி, விடுதலைக்காக போராடி தோற்ற இனங்களை மீண்டும் ஆர்ப்பரிக்கவிட்டு செல்கிறது. அது முழு போராட்ட வரலாற்றையும் சொல்லவில்லை. ஆனாலும்

அடக்குமுறைகளுக்கான எதிர்ப்புக்கள் அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அதன் போராட்ட வடிவங்கள் மட்டும் வேறுபட்டிருக்கும். ஆனால் எதிர்ப்பில்லாமல் எந்த அடக்குமுறையும் ஒடுக்கப்பட்டதில்லை. அடக்குமுறையாளர்களின் கண்களுக்கு அழிக்கும்போது சிறுவர்கள் பெண்கள் என்ற பாகுபாடு தெரிவதில்லை. ஆனால் அதே சிறுவர்கள் ஆயுதமேந்திப் போராடும்போது தான் குழந்தைப் போராளிகள் என்பது நினைவுக்கு வந்து, சிறுவர் உரிமைகளைக் காப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். சுற்றிவளைப்பபொன்றில் குழந்தையொன்றை இழுத்துவரும்போது துடிக்காத துடிப்பு, குழந்தைப் போராளிகளைக் கண்டதும் உலக நாடுகளுக்கு வந்துவிடும்.

ஒடுக்குண்ட தேசிய இனத்தின் விடுதலைக்கு போராட அகவை ஒரு தடையா? தாயை நேசிப்பதற்கு அகவை தேவையா? திரை முழுவதும் விடுதலைப்போராட்டத்தின் இயங்குதலின் கருவியாக ஒரு சிறுவன் வந்துபோகின்றான். அலியை தேசிய விடுதலைப்போராட்டத்தில் இணைப்பதிலிருந்து, இராணுவத்தின் கூட்டத்தில் நுழைந்து ஒலிவாங்கியில் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக பேசிவிடுகிறான். அந்த பேச்சின் பின் வந்த பெண்களின் குலவை ஒலியில் பேசாப்பொருளை இராணுவத்தின் முன் பேசிய உணர்வு வந்தது. இறுதியில் அலியுடன் மறைவிட சுவருக்குள் மாட்டிக்கொள்கிறான். ஆனால், அவனை வெளியே போகுமாறு அலி கூறியபோது, நாட்டிற்காக தன் உயிரையும் போக்கிக்கொள்கிறது அப்பிஞ்சுப் புரட்சி. விடுதலைப்போராட்டத்தில் சிறுவர்களை இணைத்ததாக குற்றம் சாட்டும் பன்னாட்டு நீதி நிறுவனங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், கொக்கட்டிச்சோலையிலும் சத்துருக்கொண்டானிலும் வந்தாறுமூலையிலும் நவாலியிலும் நாகர்கோவிலிலும் செஞ்சோலையிலும் சிதறிய உடலங்கள் எவை என்பது தெரியவில்லையா? அடக்குமுறைகள் இருக்கும்போது, அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதற்கு அகவை எதற்கு?

போராட்டத்தை தோற்கடிப்பதென்பது வெற்றியை ஒத்தி வைப்பதே தவிர, வெற்றியை முடக்குவதல்ல. மண்ணிற்கான போராட்டங்கள் பல தோல்விகளின் பின்னர் விடுதலைப்பாடல்களை பாடியிருக்கின்றன. தோற்கடிக்கப்பட்ட போராட்டம் மக்கள் புரட்சியாகி, அடக்குண்ட மக்களின் ஓலமாய் எழுந்த குலவைப் பாடல், வெற்றிக்கான பாடலாக மாறிய விடுதலைக்கான பாடம் எமது தாயக விடுதலைக்கான குரலாகவும் ஒலிக்கலாம்.

நீ பற்ற வைத்த நெருப்பொன்று….

-செல்வி

2018-07-15

Loading

(Visited 27 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply