சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 4

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா

கேள்வி 2: 

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்: மாவை அய்யா

கேள்வி 3:

சாதிய, பிரதேச சிக்கல்களை கூர்மைப்படுத்துவதன் மூலம் அடிப்படை முரண்பாடுகளைக் கூர்மையாக்கி முதன்மை முரண்பாடான தேசிய இனச் சிக்கல் நோக்கிய வேலைத் திட்டங்களின் வலுவைக் குறைக்க சிலர் இப்போது முனைப்பாக வேலை செய்வதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் சாதிய ஒடுக்குமுறையைக் களையதீண்டாமை எதிர்ப்பு மாநாடுபோன்ற வேலைத் திட்டங்களில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. அதிலும் நிறையப் போதாமைகளும் முழு ஈடுபாடின்மையும் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால்திருகோணமலையிலிருந்தே இந்த வேலைத் திட்டம் தொடங்கியதாகவும் சொல்வதுண்டு. அதில் நீங்கள் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொடுத்து சாதிய ஒடுக்கல் சிந்தனைகளைத் தகர்க்க வேலை செய்ததாகக் கேள்விப்பட்டோம். மற்றும் நீங்கள் மலையகப் பகுதிகளுக்குச் சென்று எமது மக்களிடத்தில் வேலை செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்து உங்கள் நினைவுகளை மீட்க முடியுமா? சாதியம் மறுபடியும் தலைவிரித்தாட அதைக் கூர்மைப்படுத்தி எம்மைச் சிதைக்க வேலைகள் நடக்கும் இக்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் கூட பாராமுகமாக எந்த செயற்றிட்டமும் இல்லாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பதில்: மாவை அய்யா


கேள்வி 4:

தனித்தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதற்கு மக்கள் ஆதரவு கோரி 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவினால் பெருவெற்றியீட்டி பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்று, மாவட்ட அதிகார அவை என்ற அளவிற்கு கீழிறங்கிப் போனதை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 6 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர, இனிமேல் பாராளுமன்ற அரசியல் வழியில் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக நாட்டை விட்டு இந்தியா சென்றீர்களா? ஆம் எனின் அந்தச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் போது என்ன மனத்துணிவில் இங்கு வந்து பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள்?

பதில்:

1976 ஆம் ஆண்டு அப்போது நான் சிறையில்தான் இருந்தேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்த போது சிறையிலிருந்தே நான் அதனை ஆதரித்துக் கடிதம் அனுப்பியிருந்தேன். அந்தத் தீர்மானம் மிகச் சரியானது. அந்தத் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியாகத் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் (ஆனால் அவர் அந்த மாநாட்டுக்கு வந்திருக்கவில்லை) மற்றும் மலையகத்துத் தலைவர் தொண்டமான் ஆகியோர் சேர்ந்து எடுத்திருந்தார்கள். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இதற்கு ஈடான அரசியல் தீர்வு தமிழ்மக்களிற்குக் கிடைக்குமானால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று தந்தை செல்வா கூறினார். விடுதலைப் புலிகளும் அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச சந்தர்ப்பங்கள் காரணமாக அவர்கள் ஒஸ்லோ வரைக்கும் சில மாற்றுத் திட்டங்களை ஆராய பேச்சுகளிற்குச் சென்ற வரலாறும் இருக்கின்றது. நான் நீண்டகாலமாகத் திரட்டிய விடயங்கள் அடங்கிய கோப்பினை எடுத்துப் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன். அதற்காக அவர்கள் போராடியது வேறு அரசியலிற்காக அல்ல. அவர்கள் தமிழீழத்தை அமைப்பதற்காகவே போராடினார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தந்தை செல்வா இறப்பதற்குச் சற்று முன்னர்தான் நான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தேன். 1977 பொதுத் தேர்தலில் நாங்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதே பரப்புரைகளைச் செய்தோம். அந்தத் தீர்மானத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பரப்பினார்கள் என்பதற்காக திரு.அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரட்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டு Trial at Bar நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. அப்போது தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நீலன் திருச்செல்வம் அவர்களின் தந்தையாரான திருச்செல்வம், புலநாயகம் போன்ற திறமையான வழக்கறிஞர்கள் எல்லோரும் அதில் வாதாடினார்கள்.

குற்றஞ்சுமத்தப்பட்டவர்களிற்கெதிராக அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றெல்லாம் குற்றஞ்சுமத்தித்தான் அந்த வழக்கு நடைபெற்றது. ஆனால், சட்டபூர்வமாக அதில் சொல்லப்பட்ட விடயம் என்னவென்றால், நாங்கள் நாட்டைப் பிரிப்பதற்கு அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. நாங்கள் ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்பதற்காகவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். எங்களுடைய போராட்டத்தின் இலக்கு அதுதான். இந்த நாட்டிற்கு ஐரோப்பியரிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும் போது அது சிங்களவர்களின் கைக்குத் தான் சென்றது. தமிழர்களிற்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆகவே, அரசியல் அமைப்பு ரீதியாக தமிழர்களுடைய உரிமைகள் மறுக்கும் முகமாக 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கொண்டுவரப்பட்ட போது அதில் எங்களின் சமஸ்டிக் கோரிக்கையைக் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 1972 ஆம் ஆண்டு சமஸ்டி அடிப்படையில் தான் நாங்கள் தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கின்றோம். அதற்குப் பின்னர் தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் அந்த நீதிமன்றத்தில் மிகச் சிறந்த 67 வழக்கறிஞர்கள் அந்த வழக்கில் வாதாடினார்கள். தந்தை செல்வா ஒரு அரசியல் தலைவனாக மட்டுமல்ல மூத்த வழக்கறிஞராகவும் இருந்த நேரத்தில் ஜி.ஜி.பொன்னம்பலம், புலநாயகம், ரெங்கநாதன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் எல்லோரும் அதில் வாதாடினார்கள். அப்பொழுது நாம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக அல்ல, தமிழர்களுக்கு தமிழ்த் தேசத்தின் மீதுள்ள ஆட்சி இறைமையை மீட்கவும் ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரம் இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அது தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. அதை நாம் நிலைநாட்டுவதற்காகவே என்பதே வழக்கின் வாதமாக எமது தரப்பில் இருந்தது.

அதுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகவும் இருந்தது. அதற்குப் பிறகு பல கலவரங்கள் குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் இப்படியாகத் தொடர்ச்சியான நிகழ்வுகளோடு இந்தியா அதில் தலையிட்டது. அந்த நேரத்தில் தான் திம்புக்கோட்பாடு என்பது உருவாக்கப்பட்டது. அப்பொழுது 1983 ஆம் ஆண்டு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமறைவாகி இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்பொழுதுதான் நாங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்தோம். அந்த நேரங்களில் சிறையிலும் வெளியிலும் பல கொலைகள் இடம்பெற்றமை, எங்களின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டமை போன்ற காரணங்களால் நான் இந்தியாவிற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. (28 ஆண்டுகளிற்குப் பின்னர் நான் எனது சொந்த இடத்திற்கு வந்துள்ளேன். எங்களது நான்கு வீடுகளும் அழிக்கப்பட்ட பின்பு என்னுடைய பிள்ளைகளில் ஒருவர் பொறியியலாளராக இருப்பதால் அவரின் உதவியோடு இந்த வீட்டைக் கட்டி,, இன்னமும் கட்டுமானம் அரைகுறையாகத்தான் இருக்கிறது. இன்னமும் கட்டி முடிக்கவில்லை. இருப்பினும் அதுவல்ல இங்கே பிரச்சனை). கிட்டத்தட்ட இந்தியா தலையீடு செய்த காலத்தில் தான் எங்களுடைய தலைவர்களும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். நான் விடுதலை பெற்றதும் யாழ்ப்பாணட்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து “இராமானுயர்” என்ற கப்பலில் தான் இரகசியமாக இந்தியாவிற்கு என்னை அனுப்பினார்கள். அந்தளவுக்கு எங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை அன்று இருந்தது. நான் இந்தியாவிற்குப் போய் அங்கு ஒளிந்திருக்கவில்லை.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டோம். 1989 ஆம் ஆண்டு திரும்ப இங்கே வந்திருந்தோம். அதற்குப் பின்னர் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் முழுக்க முழுக்க இந்த நாட்டிலே தான் இருந்திருக்கின்றேன். ஆனபடியால் நாம் இந்தியாவிற்குத் தப்பியோடினோம் என்பது அர்த்தமற்ற கதை. நாங்கள் அங்கு அகதியாகத்தான் இருந்திருக்கிறோம். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இந்திராகாந்தியின் அரசாங்கம் பேச்சுக்கள் நடத்திய காலம். நாங்கள் பல சந்தர்ப்பங்களில் அதில் பங்குபற்றியிருக்கிறோம். அதற்குப் பின்னர் 1989 இல் தேர்தலிற்காக திரும்ப இங்கே வந்திருக்கின்றோம். அதிலே போட்டியிட்டிருக்கின்றோம். போர் நடந்துகொண்டிருந்த படியாலும், இந்தியத் தலையீட்டால் பல நெருக்கடிகள் இருந்ததாலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருந்த காரணத்தினால் அந்தத் தேர்தலில் மக்கள் அதிகமாக வாக்களித்திருக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றிருக்கவில்லை. ஆனாலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறோம். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவருடைய இடத்திற்காக ஒக்டோபர் மாதம் முதன் முதலாகப் பாராளுமன்றம் சென்றிருந்தேன். நாங்கள் பாராளுமன்றப் பதவிக்காகவோ அல்லது பதவி தந்திருந்தால் தான் கட்சியில் சேருவோம் என்று சண்டையிட்டோ வந்தவர்கள் அல்ல. நாங்கள் சிறுவயதிலிருந்தே போராட்டப் பாதையில் வந்தவர்கள். பதவிகள் எதுவும் நான் கேட்டதில்லை. பாராளுமன்றம் சென்றிருக்கக் கூடிய 1977 ஆம் ஆண்டு கூட அதை விட்டு விட்டு நான் போராட்டப் பாதைக்குச் செல்வதுதான் சரியானது என்று முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்படியான வரலாற்றைக் கொண்டவரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கின்ற போது எனக்கு மனதில் பெரும் சுமையாகத் தான் இருந்தது. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இதைவிட எத்தனையோ தடவை நாங்கள் ஆணையிரவு இராணுவ முகாமில் கூட அடிவாங்கிய காயங்களும் இறந்துவிட்டோம் எனத் தூக்கியெறியப்பட நிகழ்வும் கூட எனப்பல காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பலர் என்மீது அதிகம் மதிப்பைக்கொண்டிருந்தாலும், நடவடிக்கைகள் காரணமாக பலவிதமான பேச்சுகள், செயற்பாடுகள் காரணமாக எனது மனம் நிறையக் காயப்பட்டிருக்கிறது. அதைப் போல நான் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியை நினைக்கவில்லை. ஆனபடியால், என்னுடைய பின்னணி இப்படித்தான் இருந்திருக்கின்றது. பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்ததன் பின்புதான் போராட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அப்பொழுது ஒரு பெரிய அவலம் நடந்தது. அப்பொழுதும், நான் பாராளுமன்றப் பிரதிநிதியாகப் பிரதிந்தித்துவப்படுத்தியிருக்கின்றேனே தவிர தப்பியோடியிருக்கவில்லை. இதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதைவிட புலனாய்வுத்துறை, இராணுவம் போன்றவற்றால் எங்களது உயிர்கள் அதிகம் அச்சுறுத்தலில் இருந்த படியாலும் எங்களுடைய தலைவர்கள் இந்தியா சென்றிருந்த படியாலும் நான் சிறையால் வந்தவுடன் “இராமனுயர்” கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன். இதுதான் நடந்தது,

இப்பொழுது உங்களுடைய கேள்வியின் அத்திவாரம்,
தமிழீழம் பிரகடணப்படுத்தியதன் பிறகு அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குள் நிற்காமல் வேறு வேறு வழிகளிலும் நீங்கள் அரசியலில் ஈடுபடுகின்றீர்கள் என்று எம்மைக் கேட்பது முதன்மையான கேள்வி. எங்களது அரசியல் சிக்கல்களை திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து நாங்கள் பேசலாம். திம்புக் கோட்பாட்டிலே நான்கு அடிப்படைகள் உண்டு. நான் திம்புக் கோட்பாட்டில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கவில்லை. அப்போது தான் நான் சிறை மீண்டு சென்றிருந்த காலம். அப்பொழுது LTTE, EPRLF, TELO, EROS, PLOTE மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என 6 அமைப்புகள் திம்புப் பேச்சுகளில் பங்குபற்றிய காலம். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் எல்லோரும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திரு. அமிர்தலிங்கம் குறிப்பாக இந்திராகாந்தியுடன் எங்களது சுதந்திரத்தைப் பற்றி பேசி இருக்கிறார். விடுதலையைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அவை நாம் அறிந்த உண்மைகள் தான். அதை யாரும் மறுத்துவிட முடியாது. 1971 இல் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்தை உருவாக்கியது போன்ற சந்தர்ப்பத்தை எல்லாம் அவர் இந்திராகாந்தியுடன் விவாதித்தார். வங்காளதேசம் உருவாகியபோது அதனை நாம் கொண்டாடியதாக நானும் திரு. அமிர்தலிங்கமும் விசாரிக்கப்பட்டோம். அப்படியாக நிகழ்வுகள் நடந்தன. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைக் கூட திரு. அமிர்தலிங்கம் இந்திராகந்தியிடம் கேட்டார். இந்திராகாந்தி மட்டுமல்ல காங்கிரசினர் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அந்த நேரத்தில் இருந்து வந்தனர். இந்த ஆசியப் பிராந்தியத்தில் இந்து மாகடல் பகுதியில் இந்தியா அரசியல், பொருளாதார, சமூக பலத்தைக் கொண்டிருப்பதாகப் பல திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். அதில் ஒன்று தான் பாகிஸ்தானிலிருந்து 1500 மைல்கள் தொலைவிலிருந்த வங்காளதேசம் தனிநாடாக்கப்பட்டமை.

அந்தக் காலத்தில் முயிமின் ரகுமான் அவர்களை நாங்கள் நேசித்தோம். அவரது இளைஞர் அமைப்பான “முக்திபகினி” என்ற இயக்கத்துடன் கூட தொடர்பில் இருந்தோம். அந்தப் போராட்டத்தில் இந்திராகாந்தி எடுத்த மூலோபாயம் மற்றும் இலக்கை நாடி நின்று எடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் என்பன அன்று எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்தன. அதைப் பற்றி விரிவாகச் சொன்னால் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். என்னுடைய புதிய சுதந்திரனில் அதைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கின்றேன். அதில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்தித்தோம். ஐரிஸ் போராட்ட வரலாற்றை சிறையில் இருக்கும் போது நான் படித்தேன். அந்த நூலை மீள ஒப்புவிக்கும் அளவிற்குப் படித்துள்ளேன். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒத்த மிகப்பெரும் போராட்டம் அது. வங்காளதேசப் போராட்டத்திற்கு முயிமிர் ரகுமான் தலைமை தாங்கினார். இந்தியா முழுமையாக அதற்கு உதவியது. “முக்தி பகினி” என்ற இளைஞர் இயக்கத்தை அது உருவாக்கியிருந்தது. ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா மற்றும் பொதுவுடமை நாடான சீனா என்பன ஒரே அணியில் நின்று அந்த வங்காளதேச உருவாக்கத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள். வங்காளதேசத்தை உருவாக்க இந்திராகாந்தி மிகப்பெரிய இராஜதந்திரத்தைக் கையாண்டிருந்தார். வங்காளதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றால் பாதுகாப்புச் சபை வரைக்கும் ஆதரவு இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமாகப் படிக்க வேண்டிய அனுபவமாக இருந்தது. அது என்னவென்றால் அங்கே இளைஞர்கள் “முக்தி பகினி” என்ற அமைப்பில் போராடினார்கள். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராகப் போராடினார்கள். பாகிஸ்தான் இராணுவத்திற்கு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின.

ஏனென்றால் இந்தியாவின் பூகோள மேலாதிக்கத்தின் காரணமான சூழ்நிலைகள், தந்திரோபாயங்கள் தான் அவை. ஆனால் அடக்கியொடுக்கப்பட பாட்டாளி வர்க்க மக்களாக வங்காளதேச மக்கள் இருந்தார்கள். மேற்குப் பாகிஸ்தான் முதலாளித்துவக் கோட்பாட்டுடன் அமெரிக்காவுடன் சேர்ந்து வர்த்தக, வாணிபங்களில் ஏகாதிபத்திய உலகத்தோடு வேலை செய்தார்கள். அவர்களுடைய அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான 7 கோடிக்கும் மேற்பட்ட வங்காளதேச மக்களின் போராட்டத்தை இந்திராகாந்தி முழுமையாக ஆதரித்தார். அதேபோல, இராஜதந்திரக் காரணங்களும், பூகோள ரீதியான காரணங்களும் வியூகங்களும் அங்கே இருந்தன. அந்த வியூகத்தை வகுத்து வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து அந்த இளைஞர் இயக்கமும் இந்திய இராணுவமும் போராடி வங்காளதேசத்தின் நகரம் வரை கைப்பற்றி இருந்தார்கள். 90,000 இராணுவ வீரர்களை கல்கத்தாக்குக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முகியிர் ரகுமான் சிறைப்பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட போது, பூட்டோ அவர்கள் பலவிதமான நெருக்குதல்களின் விளைவாக அவரைத் தப்பவைத்து விட்டார். இதெல்லாம் நடந்த நிகழ்வுகள். அன்று படித்துக்கொண்ட பாடங்களில் நினைவிலிருப்பதைச் சொல்லுகின்றேன். வங்காளதேசை ஏற்றுக்கொள்ளாமல் சீனாவும் அமெரிக்காவும் பாதுகாப்புச் சபையிலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அப்போது இந்தியா ரஸ்யாவுடன் ஒரு நட்பு உடன்பாட்டில் இருந்தது. அப்போது ஈரான் அதனை ஆதரித்திருந்தது. ஆனால் ரஸ்யா பொதுவுடமை நாடு. சீனா தீவிரமான மாவோசேதுங் தலைமையிலான பொதுவுடமை நாடு. ஆனால் பூகோள அரசியல் வியூகங்களைப் பார்த்தால் அடக்கியொடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தைக் கொண்ட வங்காளதேசத்தின் விடுதலைக்கு எதிராக சீனா அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாப்புச் சபையிலே அல்லது நடைமுறை ரீதியாக இராணுவ ரீதியில் பாகிஸ்தானிற்கு ஆதரவாகத்தான் இருந்தது. இதில் உலக அரசியலை அப்போது நாங்கள் படிக்க வேண்டியிருந்தது. இந்திய இராணுவத்தை வங்காளதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்புசபையில் பிரேரணையை அமெரிக்காவும் சீனாவும் கொண்டு வந்த போது ரஸ்யா “இரத்து” அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ரஸ்யாவே முதன் முதலில் வங்காளதேசத்தை அங்கீகரித்தது. நீங்கள் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை நாம் நிரூபிப்பதானால் இதை நீங்கள் படித்துக்கொள்ள வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை.

இந்தியாவிற்குப் பின்னணியில் ரஸ்யா இருந்தது. இந்தியாவுடன் ரஸ்யா 20 ஆண்டுகால நட்புறவு உடன்படிக்கை ஒன்றைச் செய்து இருந்தது. அதில் ஈரானும் சேர்ந்து நின்றது. அவர்கள் பங்காளதேசத்தை அங்கீகரித்தார்கள். அதற்கு மறுபக்கத்திலே பூகோள அரசியலை நீங்கள் பார்க்கலாம். பொதுவுடமை நாடான சீனா ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று ஒடுக்கப்பட்ட வங்காளதேச மக்களின் விடுதலையை எதிர்த்தது. இதிலிருந்த படிப்பினைகள் என்ன? அப்போது தமிழீழம் குறித்து இந்திராகாந்தியிடம் பேசிய போது அவர் சொன்ன விடயம் என்னவெனில் நாங்கள் பல படிகள் கடந்தே அந்த நிலைக்கு வர வேண்டும் என்று. அதற்காக இந்தக்கொள்கையை யாரும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள் என்றில்லை. இப்பொழுது எங்களிற்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் எமது இலக்கினை அடைய வேண்டுமானால், எங்களுடைய மக்கள் சுதந்திரமடைய வேண்டுமானால், வங்காளதேசத்திற்கு இருந்த நிலைமை கூட எங்களிற்குப் பொருத்தமாக இல்லை. வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து 1500 மைல்கள் தொலைவில் இருக்கிறது. இந்தியாவினுடைய எல்லைக்குள் இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள். இந்திராகாந்தி கொண்டிருந்த தத்துவங்கள், அரசியல் கோட்பாடுகள் ஆசியாவில் இந்தியாவின் வல்லாண்மையை நிரூபிப்பதற்கான தீர்மானங்கள் தான். அதன்படிதான் வங்காளதேச விடுதலைக்கு இந்தியா உதவியது. வெள்ளையர்களுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் விடுதலையினை முதன் முதலில் ஏற்றுக்கொண்டது இந்தியாவே.

சர்வதேச பூகோள அரசியல் நிலைமைகள் எங்களிற்குப் பொருத்தமாக இருக்கின்ற வரைக்கும் நாங்கள் அதைக் கைவிடாமல் பாதுகாத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் எம்மிடம் இருக்கின்றது. அதை நீங்கள் இப்பொழுது தெளிவாக உணர்ந்திருப்பீர்கள். ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமானால் அதை நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். வங்காளதேசத்திற்கு இந்தியா படைகளை அனுப்பியிருந்தாலும் அதனை அங்கீகரித்தது ரஸ்யா. இப்போது ரஸ்யா, சீனா என்பனவும் எங்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. இன்னொரு விதமான பூகோள அரசியல் போட்டா போட்டிகள் இந்த நாட்டில் இடம்பெற்று வருவதை நாங்கள் பார்க்கின்ற பொழுது, எமது இலக்கினை அடைய நாங்கள் எவ்வளவு தூரம் சர்வதேச ரீதியில் தந்திரோபாயமாக, ராசதந்திரரீதியாக, பூகோளரீதியான விடயங்களை வென்றெடுக்கத்தக்க விதத்தில் செயற்பட வேண்டுமென்பதைச் சிந்திக்கிறோம். திம்புக் கோட்பாடுகள் எனும் போது அங்கே தமிழீழத்தை நாம் முன்னிறுத்தவில்லை. சில அடிப்படைக் கோட்பாடுகளான தேசம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றைக்கொண்டு தான் அந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம். தமிழீழம் என்ற கோரிக்கைக்குப் பின்னால் இந்த விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிலிருந்து சர்வதேச, பூகோள அரசியல் தலையீடுகள், இந்தியாவின் தலையீடு என்பனவற்றால் தான் அதனைச் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லச் சந்தர்ப்பங்கள் இல்லாமல் இருந்தது. பல நாடுகளின் தலையீடுகள் இருந்தன. தற்போது, அது ஐ.நா. மாந்த உரிமைப் பேரவைக்குக் கூடச் சென்று விட்டது.

2003 இல் மேற்கொண்ட ஒஸ்லோ பிரகடணத்தையும் நீங்கள் பார்க்கலாம். அந்தக் காலத்தில் அமெரிக்கா விடுதலைப் புலிகளைத் தடைசெய்து இருந்தது. இவ்வாறாகப் பல சர்வதேச அழுத்தங்கள் அந்தக் காலத்தில் இருந்தன. ஏனைய சர்வதேச நாடுகளும் நோர்வே ஊடாக அணுகல் போக்கைச் செய்து விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை அறிவித்ததும் ஒரு பேச்சுவார்த்தைக்கு நோர்வேக்கு அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது தான் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் தமிழர் தாயகப் பகுதியில் சுயாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு வேண்டுமெனப் பேசப்பட்டது. அது நிறைவேறியிருந்தால் விடுதலைப் புலிகளின் பலம், பூகோள அரசியலில் நாங்கள் சாதிக்கக் கூடிய பலம் என்பன பெரிதாக இருந்திருக்கும். எங்களுடைய நிலைமை இன்று வேறானதாக இருந்திருக்கும். ஆனபடியால், அப்படியான சூழ்நிலை எங்களிற்கு ஏற்படும் வரையில் நாங்கள் அதனைக் கைவிட்டோம் என்று சொல்வதோ அல்லது நாங்கள் எங்களுடைய இலக்குகளைக் கைவிட்டோம் என்று சொல்வதோ பொருத்தமில்லை. அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரலாம். அப்போது அதை நாங்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

நான் முன்பு வங்காளதேசத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். அதற்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையையும் நாங்கள் இப்பொழுது அடைந்திருக்கின்ற நிலைமையையும் பார்க்கின்ற பொழுது, ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் முன்னர் சிறிலங்கா இராணுவத்தைப் பாராட்டித் தீர்மானம் செய்த மனித உரிமைப் பேரவை தான் இந்த அரசிற்கு எதிராக 41 நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24,25 ஆம் தேதிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, போர்க்குற்றத்திற்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வரும் என்று தான் உடன்பட்டோம். ஆனால் அந்தப் போர்க்குற்றத் தீர்மானம் சபைக்குக் கொண்டு வந்தால், தங்கள் தங்கள் நாட்டில் அவை குறித்து வருமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது எனப் பல நாடுகள் அதாவது 10 வரையிலான நாடுகள் அமெரிக்காவிடம் கூறியது. அப்படியான சூழ்நிலையில் தான் சில சொற்பதங்களை மாற்றிக் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது ரஸ்யா, சீனா போன்ற “இரத்து” அதிகாரம் கொண்ட நாடுகள் எதிர்த்தன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் எம்பக்கம் இருந்திருந்தாலும் போர்க்குற்றத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 24 வாக்குகளைப் பெற்று அதனை 2012 இல் கொண்டு வந்தது நாங்களும் அமெரிக்காவும் தான். இப்போது ரஸ்யா, சீனா, இலங்கை உட்பட 47 நாடுகள் ஆதரித்த தீர்மானம் வரைக்கும் நாங்கள் வந்திருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடி சர்வதேச சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட காலம் தான் தமிழர்களின் மிகப் பலமான காலம். ஆயுதம் தூக்கி விடுதலைப் புலிகள் போராடிப் பெற்ற பலமும் சனநாயகரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவு கொடுத்தமையுமாக அமைந்த காலம் தான் அதிலும் தமிழர்களுக்கு மிகப்பலம் வாய்ந்த கலமாகக் கணிக்க முடியும். இப்பொழுது அதில் ஒரு பலத்தை இழந்துவிட்டோம் என்று தான் சொல்லுவேன். தோற்றுவிட்டோம் என்று ஒருகாலமும் அந்த வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். அது இழக்கப்பட்ட சந்தர்ப்பமாக இருக்கலாம். இப்போது புலம்பெயர்ந்த எமது மக்கள் பல வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். மற்றைய இனங்களில் அது குறைவாக இருக்கலாம். இலங்கைக்கு எதிராக அதாவது இலங்கையைக் கட்டுப்படுத்தி நடக்கக் கூடிய தந்திரோபாயங்கள் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதை நாங்கள் இழந்துபோகாமல் எங்களது இலக்குகளை நோக்கி எங்களது மண்ணை நாங்கள் ஆளுகின்ற சமஸ்டிக் கட்டமைப்பில்… எப்படி எமது மக்கள் 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களித்தார்களோ…அதே மக்கள் பல காலகட்டங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். நாம் தேர்தல்களில் விடுதலைப் புலிகள் காலத்திலும் அவர்கள் இல்லாது போன இந்தக் காலத்திலும் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே எங்களுடைய மக்களின் அங்கீகாரத்துடன் தான் நாம் இன்றைய அணுகல் முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றோம்.

 

தொடரும்..

காகம்

 26,783 total views,  3 views today

(Visited 3 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply