சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! – கேள்வி 2

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள்யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள்அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள்பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.

பதில்: மாவை அய்யா 


கேள்வி: 2

நீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார்? அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?? சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.

பதில்:

இன்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் அதிகளவாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டமையினால் கைதுசெய்யப்பட்டதாக அறிகிறோம். நாங்கள் அப்படியானதொரு பாரிய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் சிறைகளிலும் நாலாம் மாடியிலும் மிக மோசமாக நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தோம். அதேவேளை 7 சிறைகளில் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்தோம். சிறைச்சாலைக்குள்ளேயே நாங்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் இறக்கின்ற தருவாயிற்கு வந்து விட்டோம் என்று தந்தை செல்வா தலையிட்டார். ஆனாலும் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்று சொன்னோம். 1976 ஆம் ஆண்டு மூன்றாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அப்பொழுது நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். எங்களுடைய அரசியல் சிக்கல்களை அவர்கள் அறிந்துகொள்ள சிறைக்குள் இருக்கும் நாங்களும் துணைநிற்க வேண்டும் என்று நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். எமது நிலை கண்டு தந்தை செல்வா கூட அந்தப் போராட்டத்தைத் தவிர்க்க முயற்சித்தார். இறுதியாக அந்த மாநாடு முடிந்த காலகட்டத்தில் தான் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. சிறைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எமது மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு பலாத்காரமாக மூக்கின் வழியால் உணவினை ஊட்டி விட்டார்கள். நல்லவேளை நான் சிறைக்குள் இருந்தும் யோகாசனம் செய்கின்ற பழக்கம் இருக்கின்ற படியால் நான் தலைகீழாக நின்ற போது மயக்கமடைந்து விட்டதால் மருத்துவர், பொலிசார் எல்லாம் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். அதனால் பலவந்தமாக மூக்கினால் உணவினை ஊட்டும் அந்த நடவடிக்கையில் இருந்து நான் தப்பியிருந்தேன். பலருக்கு அப்படிப் பலாத்காரமாக உணவை ஊட்டியிருந்தார்கள். இதனால் உணவை உட்கொண்டு அந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் எனச் சிந்திக்காமல் 5 பேரை நியமித்து இருந்தோம். நாங்கள் ஏதாவது மயக்க நிலையில் பேச முடியாது இருந்தால், அவர்கள் தான் எங்கள் சார்பில் பேச வேண்டும் என்று கூறி அவர்களிடம் தந்தை செல்வாக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருந்தோம். திரு.காசியானந்தன் மற்றும் திரு.வண்ணை ஆனந்தன் என எல்லோரும் சேர்ந்து அவ்வாறு முடிவெடுத்திருந்தோம். அணிசேரா மாநாடு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு மறுத்து விட்டோம். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அதிகாரிகள் எங்களைத் தடுப்பி வைத்து விசாரித்தார்கள். அதில் தசநாயக்கா என்பவர் தலைமையில் ஒரு குழு எங்களை அடிக்கடி வந்து சந்தித்தார்கள்.  “போராட்டத்தை நிறுத்துங்கள். நாம் உங்களை விடுதலை செய்வோம்” என்று சிறிமாவோ கூறிய போது நாம் அதனை ஏற்காது சிறைக்குள்ளே இருந்து போராடினோம். தந்தை செல்வாவும் “நீங்கள் இந்த உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும். நிலைத்து நின்று போராட வேண்டும்” என்று சொன்ன வசனங்கள் எல்லாம் எனக்கு இன்றும் நினைவிலிருக்கின்றது. அந்தக் காலத்துச் சுதந்திரன் பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். அப்படியான வசனங்கள், எங்களது உண்ணாவிரதத்தை நிறுத்த எடுத்த முயற்சிகள் என அதில் இருக்கும். நாலாம் மாடியில் இரத்தம் வந்து மயங்கும் வரை அடித்து எம்மை மிக மோசமாகச் சித்திரவதை செய்தார்கள். சிறைக்குள்ளும் மிக மோசமாக நடத்தப்பட்டோம். அப்படியிருந்தும் நாம் ஒருபோதும் இந்தப் போராட்டப் பாதையிலிருந்து விடுபடவில்லை. வேறு வேலைக்குப் போகவில்லை. முழுக் காலமும் இந்தப் போராட்டப் பாதையிலேயே வாழ்ந்திருக்கிறோம். நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்குப் பின்னர் அந்த இளைஞர்களைப் பலமுறை சிறைகளில் சந்தித்திருக்கிறேன். இப்பொழுது ஒரு வகையில் 76 இளைஞர்கள் சிறைகளில் இருக்கிறார்கள். அதைவிட சிலர் கூட இருப்பதாகவும் உண்டு. நேற்றிரவும் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். இப்பொழுது சிறையில் இருக்கும் இளைஞர்களின் பின்னணியும் நாங்கள் சிறையில் இருந்த பின்னணியும் வேறானது.

இருந்தாலும், சிறைகளில் பட்ட துன்பங்கள், சித்திரவதைகள் என்பனவற்றை அனுபவித்த நாம் எங்களை விட ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடிய அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று JVP யினர் நடத்திய போராட்டத்தைப்போல் அல்லாமல் எங்களுடைய தமிழர் தாயகத்தில் எம்மக்களுடைய விடிவுக்கான சனநாயகப் போராட்டங்கள் அடக்கப்பட்டு இராணுவ அடக்குமுறைகள் மெலெழுந்த நிலையில் ஆட்சிகள் அந்த இராணுவ அடக்குமுறைக்குப் பின்னணியில் இருந்ததால் இந்த இளைஞர்கள் உலகில் நடந்த பல போராட்டங்களைப் போல (ஐரிசு நாட்டுப் போராட்டத்தை நான் மிகவும் படித்தேன், சிறையிலிருக்கும் போதும் படித்தேன்) அந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் சேர்ந்து போராடியதை நான் எப்பொழுதும் நியாயப்படுத்துவேன். எப்பொழுதும் அதை நியாயப்படுத்தித்தான் நான் பேசுவேன். அவர்களோடு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கிறோம். நேரடியாக ஆயுதம் தூக்கி நாம் போராடவில்லையென்றாலும், திரு.பிரபாகரன் அவர்கள் போராளிகளுடன் எங்களை வந்து சந்திக்கும் ஒருவராக இருந்திருக்கிறார் (நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முன்னர் இருந்த வீடு இருந்தது. எங்களது நான்கு வீடுகளில் அழிக்கப்பட்ட இரண்டு இடத்திலும் திரு.பிரபாகரன் அவர்கள் எம்மைச் சந்திக்கவருவதுண்டு). இருந்தபொழுதும், நாங்கள் ஆயுதம் ஏந்துபவர்களாக இருக்கவில்லை. ஆனால் அந்தப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்துள்ளோம். அதை நான் வெளிப்படையாகப் பேச விரும்புகின்றேன். அதைவிட எமது இளைஞர் அமைப்பினுடைய வரலாற்றுக் காலத்திலேயே நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, திருகோணமலையிலே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிங்களவர்களால் அபகரிக்கப்படும் நிலையில் இருந்த 10 ஆம் கட்டை, உவர்மலை போன்ற பிரதேசங்களில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினோம். இந்தத் தொடர்ச்சியான போராட்டங்களால் HSC என்று சொல்லப்படுகின்ற உயர்தரப் பரீட்சையை நாம் எழுத இயலாமல் போனது. அப்படி 150 இளைஞர்கள் நாங்கள் இப்படிப் பாதிப்புகளுடன் போராடினோம். அதேவழியில், எங்களுடைய விசுவமடு, உடையார்கட்டு, முத்தையன்கட்டு, அக்கராயன் போன்றவற்றில் வவுனியாவில் திரு.இராஜசுந்தரம் போன்றவர்களால் குடியேற்றப்பட்டதில் நாம் முன்னின்று செயற்பட்டோம். அந்தக் காலத்தில் எங்கள் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்தது எமக்குத் தெரியும். அந்த இயக்கங்களிற்கு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கின்றோம். திரு.பிரபாகரன் அவர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கையும் அவர் என்மீது அதேபோல் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். வரலாற்றில் எல்லாவற்றையும் நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. தேவைப்பட்டால் நான் பேசுவேன். அப்படி நாங்கள் மானசீக உணர்வுகளோடு அவர்களைப் பலமுறை சந்தித்திருக்கிறோம். எங்களுடைய வீடுகளில் அவர்கள் புழங்கியிருக்கிறார்கள். என்னுடைய மனைவியினுடைய வீடு அதற்கு ஒரு முதன்மையான இடமாக இருந்தது. போராளிகளில் குறிப்பாக திரு.பிரபாகரன் அவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ சந்திக்கின்ற இடமாக அது இருந்தது. அப்படியிருந்தாலும், நாங்கள் மிகக் கவனமாகவும், நிதானமாகவும் அந்தப் போராட்டத்தை ஆதரித்திருக்கிறோம். அது வரலாற்றில் முக்கிய கடமையாக எங்களிற்கு இருந்தது.  2002 ஆம் ஆண்டில் போர் ஓய்விற்கு வந்த போது, நாங்கள் விடுதலைக் கூட்டணியாக, தமிழரசுக் கட்சியாக “நாங்கள் பேச வரவில்லை. விடுதலைப் புலிகளோடு பேச்சு நடத்தி இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அவர்களுடன் தான் பேச வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தோம். அதில் நான் முதன்மையான பங்கு வகித்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும்.

சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் காலத்திலும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகவே இருந்தார்கள்.

பின்னர், 2009 இல் போரின் உச்சநிலையில் பெண் போராளிகள் எவ்வளவு மோசமாக நடட்தப்பட்டார்கள்…போராளிகள் நடத்தப்பட்ட முறையை நாம் அறிவோம். அந்த இளைஞர்கள் மோசமாகக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். இராணுவம் நடந்துகொண்ட முறைகளை எவரும் நியாயப்படுத்த முடியாது. போரின் போது, பாதுகாப்பு வலயங்களைப் பிரகடணப்படுத்தி அங்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு மக்களிற்குச் சொல்லிவிட்டு அங்கு குண்டு வீசி மக்களைக் கொன்றதை எவரும் நியாயப்படுத்த முடியாது. அப்பொழுது, Thermobaric Bomb, Phosporus குண்டுகள் என்பன போராளிகள், பொதுமக்கள் மத்தியில் வீசப்பட்டு அதனால் அவர்கள் மயக்கமடைந்து, மரணமடைந்து இருக்கும் நிலைமையை டெல்லியிலே திரு.சம்பந்தன் அவர்கள் தலைமையில் சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிச் சொல்லியிருக்கிறோம். நான் ஏன் இவற்றையெல்லாம் சொல்லுகின்றேன் என்றால், அவ்வளவு கொடிய போரிற்குள் நின்று போராடிய இளைஞர்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறார்கள். எங்களின் சனநாயக ரீதியிலான போராட்டங்களும் அவர்களுடைய போராட்டத்தை ஆதரித்தன. நாங்கள் ஆயுதம் தூக்கிப் போராடவில்லையானாலும், உலக வரலாற்றில் ஆயுதம் எடுத்துப் போராடிப் பல நாடுகளிற்கு விடுதலை கிடைத்திருக்கின்றது, அவர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இந்த இளைஞர்கள் மீது நான் மிகுந்த அனுதாபங்களை நான் கொண்டிருப்பதற்கு எனக்கு இயல்பாகவே நியாயங்கள் இருந்தன. நேற்று இரவு கூட அங்கிருந்து இளைஞர்கள் தங்களுடைய விடுதலை பற்றி என்னுடன் பேசினார்கள். நான் நேரடியாக அங்கு வர இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கம் ஞானசாரதேரரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் பொதுமன்னிப்பு என்று சொல்லவில்லை.

அரசியல் ரீதியாக அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேசமே அவர்களை ஏற்றுக்கொண்டு பேச்சுகளை நடத்திய நிகழ்ச்சிகளிலிருந்து இந்த இளைஞர்களை அவர்கள் அரசியல் கைதிகள் இல்லையென்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எமது திட்டவட்டமான கருத்து.

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றேன். கைகளை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என அவர்களின் நிகழ்ச்சிகளில் அதிகமாகப்பெற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அகில் கலந்துகொண்டிருக்கிறேன். சிறையில் வாடும் இந்த இளைஞர்களை விட, 12,600 இளைஞர்கள் போரிலே கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். நல்லிணக்கம் வடக்கு-கிழக்கை கட்டியெழுப்பல் என்ற எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, தமிழ், சிங்கள், முஸ்லிம்கள் இருக்கின்ற பாராளுமன்றக் குழுவில் நான் தலைவராக இருக்கின்றேன். அங்கே அந்தக் குழுவில் நான் எடுத்த முயற்சியின் பயனாக அந்தப் 12,600 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு, அவர்களிற்கு விடியலை ஏற்படுத்தக் கூடிய வாழ்வாதாரம், கல்வியைப் பெற்றுத் தந்தால் அதற்கான தொழில், அப்படியல்லாவிட்டால் தொழிற்பயிற்சிகளை அளித்து அவர்களிற்கான வேலைவாய்ப்பை உருவாக்கல் என இந்த முறை வரவு- செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களுடைய பிரேரணை என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இரண்டாவதாக, அதைவிட முக்கியமாக சிறையிலிருக்கும் இந்தப் போராளிகளின் நிலையை நீங்கள் கேட்ட போது இன்னுமொரு விடயத்தை நான் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 90,000 இற்கும் அதிகமான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்று நிற்கதியாக நிற்கின்றார்கள். அந்தக் குடும்பங்களைப் பற்றி சமூகவியல் பார்வையுடன் அந்தப் பெண்களின் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை சமூக ரீதியில், சனநாயக ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அக்கறைகாட்டி பேச்சுகளை நடத்தி உருவாக்கிய தீர்மானம் தான் வரவு- செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பெண்கள் விடயத்தில் அவர்களுடைய புது வாழ்விற்காக, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக, தொழில்துறைகளிற்காக, மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் என இம்முறை மட்டும் 2150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய முயற்சி. இதனை யாரும் மறுக்க முடியாது. இது மக்கள் மத்தியில் இன்னமும் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது எங்களிற்குக் கவலை தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகத் தீவிரமாக இருக்கின்றோம். 1971 ஆம் ஆண்டு நாடு முழுவதையும் கைப்பற்ற முயன்ற JVP யினர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நான் அவர்களுடன் சிறையில் இருந்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுத் தற்போது அரசியல் நீரோட்டத்திலே பாராளுமன்றம் வரை சென்றிருக்கின்ற போது, விடுதலைப் புலிகளை மட்டும் பயங்கரவாதச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி அதில் வழக்குகளைப் போட்டு அவர்களை இழுத்தடித்துக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. நாங்கள் இது பற்றி எத்தனையோ தடவைகள் பேசினாலும், இந்த அரசாங்கத்துடன் இன்னும் தீவிரமாகப் பேசி திட்டவட்டமாக ஒரு முடிவைக் காண வேண்டும். நீதிமன்றங்களில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கின்றோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து நாங்கள் அதில் தீவிரமாக இயங்குகின்றோம். அது முதன்மையானது. இந்த இளைஞர்கள் நிச்சயமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும். அவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பங்களோடும் மக்களோடும் அவர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. இந்தப் பின்னணி நான் சிறையிலிருந்ததால் மட்டும் என்பதனால் அல்ல. எங்களுடைய காலத்திற்கும் இப்போது அவர்கள் இருக்கின்ற காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. போராட்ட வடிவங்கள் கூட வேறானது. அதை நினைவுபடுத்துகையில் எனது மனம் கொந்தளிப்பாக இருக்கின்றது.

தொடரும்..

காகம்

 8,775 total views,  3 views today

(Visited 3 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply