புதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அமளிகளுக்குள் எந்தவொன்றையும் அறிவார்ந்து உரையாடும் வெளியைத் திறக்க முடியவில்லை. மக்களின் சமூக-பொருளியல்-அரசியல் வாழ்வு பற்றி அறிவார்ந்து அக்கறை கொள்வது பயன் இல என்றாற் போலவே அக்காலத்தில் ஊடகங்கள் முதல் வாக்குப் பொறுக்கும் பரப்புரையாளர்கள் வரை கட்சித் தொண்டாற்றி அதற்குத் தமிழ்த் தேசிய முலாமிடுவதில் பரபரப்பாக இருந்தார்கள். பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும் “தமிழ்த் தேசியம்” என்ற உயிர்மைக் கருத்தியல் பலரது அறியாமையை மறைக்கவும் அவர்கள் தம்மைப் புனிதர்களாகக் காட்டவும், அவர்களது அறியாமையின் பால் விளைந்த கட்சிச் சார்பினை கருத்தியலின் பெயரால் எண்பிப்பதற்கும் அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த கேடான நிலையானது, அதை விஞ்சியவாறாக உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்புகளினதும் தேர்தல் முடிவுகளினதும் விளைவாய் பல கேடிலும் கேடான செய்திகளை எமக்குச் சொல்கின்றது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலின் புரட்சிகரத்தன்மைக்கு உலை வைத்தாற்போல் பல கெடுவினைகள் நடந்தேறிவருவதைக் காட்டும் நீலப்பாசிச்சாயத்தாளாக உள்ளூராட்சித் தேர்தல் களம் இருந்திருக்கிறது.

அனைத்து அடக்குமுறைகளிருந்தும் விடுதலை பெற்று ஒப்புரவும் நிகரமையுமான தமிழீழ விடுதலையை அடைய மூன்று பத்தாண்டுகளாக கருவியேந்தி மறப்போர் புரிந்து ஈடு இணையற்ற ஈகங்களைச் செய்த விடுதலைப் போராட்டத்தின் இன்றைய அரசியல் தொடர் வழி எவ்வாறு கீழ்மைப்பட்டுக் கிடக்கின்றது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே இந்த உள்ளூராட்சி அவைத் தேர்தல் அமைந்திருக்கின்றது. இது எமது அரசியல்வெளி எப்படி தரங்கெட்டுக் கிடக்கின்றது என்பதைச் சொல்லி புரட்சிகர விடுதலைக்கு இனித் தமிழீழத் தமிழினம் முதிர்ச்சியடையுமா எனக் காலந்தாழ்த்தாமல் சிந்திக்குமாறு தமிழின விடுதலையை நேசிப்போருக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இறுதிப் போரின் அவலங்களைத் தாங்கிய மக்களின் வெளிப்பாடு, சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் வெளிப்பாடு, இனவழிப்பு இறுதிப் போரின் போது வீழ்ந்த பல்லாயிரக் கணக்கான எறிகணை வீச்சுகளில் ஒன்று கூட வீழ்ந்து வெடிக்காத இடங்களைச் சேர்ந்த அதாவது போரின் பாதிப்புகளை எதிர்கொள்ளாதோரின் வெளிப்பாடு, சிங்கள மற்றும் முசுலிம் என இரட்டை வல்வளைப்புகளுக்குள் நின்று தாயக நிலங்களைப் பறிகொடுத்தவாறு சொந்த மண்ணில் எண்ணிக்கைச் சிறுபான்மையினராக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தென் தமிழீழ மக்களின் வெளிப்பாடு, போரின் போது போராட்டப் பங்களிக்காமல் புலம்பெயர்ந்து விட்டு இப்போது தம்மை முன்னணிப் போர்ப்படை போல புலுடா விடுபவர்களின் பரப்புரை வெளிப்பாடு என எல்லாம் வெவ்வேறு திசை வழிகளிலேயே வெளிப்பட்டு நிற்பது இந்த உள்ளூராட்சி அவைத் தேர்தல் முடிவுகளில் கண்கூடு.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தரப்பினரதும் வெளிப்பாடுகள் ஒவ்வோர் காரணங்களிற்கானதாயிருந்தாலும், அவற்றிலிருந்து பிரிகையுறக் கூடிய அரசியற் பதங்களாக யாழ்மையவாத குறுந்தேசியம், இன்னும் சில பிரதேசங்கள் சார்ந்த குறுங்குழுவாதம், சாதியம் போன்ற தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டிற்கெதிரான அத்தனை கேவலங்களும் பிணநாற்றங்களுடன் இந்த உள்ளூராட்சி அவைத் தேர்தல்களில் வெளித் தெரிந்துள்ளது.

சுமந்திரன், கசேந்திரகுமார், விக்கினேசுவரன் போன்ற கொழும்பு வளர் அரசியல்வாதிகளின் கதைகள் பலவாறு இந்த அமளிக் காலத்தில் உச்சவீச்சுடன் பேசுபொருளாகின. சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் நெருங்கி வாழும் பகுதிகளில் மக்களின் தெரிவுகள் தமிழ்த் தேசியம் என்பதனை தமது வாக்குப் பொறுக்கும் கட்சிகளின் பெயரொட்டாக வைத்திருப்போராக பெருமளவில் இருக்கவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் முசுலிம் அடிப்படைவாதத்தினதும் நிலப்பறிப்புகளையும் வல்வளைப்புகளையும் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் தென் தமிழீழ மக்கள் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் ஓரணியில் நிற்பதனை உறுதிப்படுத்துவதன் மூலம் தேர்தல் அரசியலிலும் தமிழர் தாயகத்தில் தமிழர்களின் எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கிற்காக தமது வாக்குத் தெரிவைப் பயன்படுத்தியிருப்பது தெளிவாகியிருக்கின்றது. தென் தமிழீழ மக்களின் உணர்வுகளை யாழ்மையவாத குறுந்தேசியவாதம் என்றும் உணர்ந்ததில்லை என்ற நீண்டகாலக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போலவே யாழ்மைய வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அத்துடன், ஒரு குறிப்பிடத்தக்க வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அடைவினை மாற்றம் எனக் காட்டி, அந்த மாற்றம் யாழிலிருந்து தொடங்கி வன்னியினூடாக தென் தமிழீழம் சென்றடையுமென பத்தி பத்தியாக எழுதப்படுவதிலிருந்து யாழ்மையவாத சிந்தனைத் திணிப்புக்கு எப்பேர்ப்பட்ட மேட்டுத்தனமும் மெத்தனமும் இருக்கின்றது என்பது தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளினதும் மெய்நிலையைத் தெளிவாகத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வர். சாதி ஆதிக்க சிந்தனையுள்ளவர்கள் சில குறிப்பிட்ட பகுதிகளில் தாம் காலகாலமாக வாக்களித்து வந்த கட்சியினை விட்டு விட்டு அந்தப் பகுதியில் சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக சில யாழ்மைய அரசியல் ஊதுகுழல்கள் இன்று சொல்லும் மாற்றத்திற்கு வாக்களித்துத் தமது சாதி மேலாதிக்கப் பொதுப் புத்தியைக் காட்டியுள்ளார்கள்.

இவை எல்லாவற்றையும் நோக்குகையில் சமூக மாற்றம் என்பது ஒரு கிலோ என்ன விலை எனும் நிலையிலேயே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பான தமிழர்களின் தேர்தல் அரசியல் இருக்கின்றது என்பதும் அரசியற் கட்சிகள் எந்த விறுத்தத்தில் செயற்படுகின்றன என்பதும் தெரிகின்றன.  தமிழரசுக் கட்சி எதிர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு என்கின்ற நீண்டநாள் குடுமிச் சண்டைதான் தலைமுறை கடந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போர்வையில் தொடர்கின்றது என்பது சிறார்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ச்சியாகத் தமிழரின் ஒற்றுமை தேர்தல் அரசியலிலும் சிதறக் கூடாது என்பதற்காய் தெரிவு செய்யப்பட்டு வந்தமையை சுமந்திரன் போன்ற கொழும்பு வளர் தொழில்முறை அப்புக்காத்தர் தவறாக எடை போட்டதோடு மக்களை வாக்குப் போடும் சதைப்பிண்டங்களாக நினைத்து தான் விரும்பும் அரசியலைச் செய்ய முனைந்தமை தமிழரின் ஒற்றுமையைக் குலைக்க அயராது உழைத்த இந்திய, சிறிலங்கா புலனாய்வுச் சூழ்ச்சிக்கு நல்ல வாய்ப்பாகிப்போனது. தொகுப்பாக சமூக மாற்றம் நோக்கி எந்த வேலைத் திட்டமும் இல்லாமலும் விடுதலை நோக்கி மறம் சார்ந்து எந்த முன்னெடுப்புமில்லாமலும் எட்டு ஆண்டுகளாக தமிழீழ இளையோர் எத்தகைய அரசியலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு சுருங்கத்தன்னும் காரணங்களை அடுக்கியாக வேண்டும்.

 • மக்களிடம் இரண்டகர், நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்ற நிழலுருவை ஏற்படுத்தி மற்றையவரை வீழ்த்தித் தனக்கு வாக்குப் பொறுக்கும் வேலைக்கு கட்சிகள் இளையவர்களைப் பயன்படுத்துகின்றனர்.
 • மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையேயில்லாமல் ஊடகங்களைச் சார்ந்து போராடும் நிலையில் சமூக வலைத்தளத்தில் கொச்சைப் பதிவுகளிட்டுக் கருத்துருவாக்கப் பரப்புரை செய்ய இளையோர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
 • கொச்சைப் பதிவுகள் மூலம் கருத்துருவாக்கவல்ல இளைஞர்களின் கருத்துகளின் பின்னால் ஏனைய இளையோர்கள் அலையவிடப்படுகிறார்கள்.
 • அரசியற்கட்சி சாராமல் மக்களின் விடுதலை அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்ற சிந்தனை இளையவர்களிடம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.
 • அரசியற் கட்சிகளுக்கு வாக்குச் சேகரிப்பதே அரசியல் என்றாகிவிட்ட இளையவர்கள்.
 • சமூக விடுதலை, அரசியல் விடுதலை என்ற தளங்களை மறந்து விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விடுதலை என்றாற் போல இளைஞர்களை ஆக்கிவிட்ட துன்பத்தை த.தே.ம.முன்னணியினரும், தீர்வு வருகின்றது வந்துகொண்டிருக்கின்றது நம்பிக்கையாயிருங்கள் என்று கூறி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சியை இளையோர் புரிந்துகொள்ளாதவாறு இளையோரை முட்டாள்களாக்கிவிடும் வேலையை த.தே கூட்டமைப்பும் செய்கின்றது.
 • ஒருவித குழுவாத அரசியலுக்குள் இளையோர் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
 • சுடுகலன்களை ஏந்தி மண்ணிற்காக தம்மை ஈகம் செய்கின்ற மரபைக் கொண்ட இனத்தின் இளைஞர்கள் இன்று சேறடிப்புகள், கதை கட்டல்கள், பொய்ப் பரப்புரை போன்றவற்றைத் தமது சுடுகலன்களாக்கி தமக்கான போராட்டக்களமாக சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றோராய் விடுதலை அரசியல் புரியாத மந்தைகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியம் என்ற சொல்லைத் தமது கட்சிப் பெயர்களில் பெயரொட்டாக வைத்திருக்கும் த.தே.கூ மற்றும் த.தே.ம.மு ஆகியனவற்றில் அரசியல் பாங்கு இப்படியிருக்க சுரேசு பிரேமச்சந்திரன், டக்ளசு தேவானந்தா போன்றோரின் அரசியலுக்கு இப்போதெல்லாம் புது விளக்கம் கொடுக்கப்படுகின்றமை அதனிலும் கொடுமையாகவுள்ளது.

த.தே.கூ தமிழ்மக்களின் அரசியலை அடகுவைப்பதாகக் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஏற்கனவே தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் கைகோர்த்ததோடு த.தே.கூ பதிவு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்திய சுரேசு தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் கேள்வியின்றி ஒட்டியுள்ளார். எனவே கூட்டமைப்பை உடைப்பதற்குக் காரணம் தேடிய சுரேசு அத்தகைய குற்றச்சாட்டுகளை த.தே.கூட்டமைப்பினர் மீது வைத்துள்ளார் என்பது புலனாகின்றது.

அத்துடன் தமிழ்த் தேசியம் என்பதைக் கட்சியின் பெயர்களில் மட்டும் வைத்துக்கொண்டு ஏழை, எளிய, நலிவுற்ற, நிலமிழந்த மக்களின் அவல வாழ்வினை மாற்றியமைக்க எந்தளவிலும் களத்திலிறங்கி வேலை பார்க்காத கட்சிகளின் இழிசெயலைக் கணித்துத் தனது ஒட்டுக்குழுச் செயற்பாட்டுக் காலத்தை மறக்கடிக்கச் செய்து அரசியல் புனிதராகவேனும் டக்ளசு தான் சிறிலங்கா அரசுடன் மிகவும் ஒத்தோடிய காலத்தில் தனக்குக் கிடைத்த அரசியல் மற்றும் பொருளியல் பலத்தின் ஒரு பகுதியை அடக்குண்டு நலிவுற்றிருந்த மக்களுக்காக பயன்படுத்தியமையால் அவருக்கு அன்று உறுதியாகிப் போன வாக்கு வங்கி புதிய தலைமுறை வாக்காளர்களையும் இணைத்தமையால் மடங்காகப் பெருகியுள்ளமையை சரியாக இனங்காணாமல் நலிவுற்ற மக்களின் தோழர் போன்று பெரிமிதப்படுத்துகையை நினைத்தால் தமிழர்களின் மறதி அவர்களின் அரசியல் வரட்சியிலும் அதிகமென்றுதான் சொல்லலாம்.

எனவே தமிழ்த் தேசியம் என்ற புரட்சிகரமான விடுதலைக் கருத்தியல் புரட்சி நீக்கம் செய்யப்பட்டு அதன் முதன்மையான இரட்டைப் பகைவர்களான சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்தியாவையும் மறந்து சாதியம், குறுந்தேசியவாதம், குறுங்குழுவாதம் என்பன நீந்தி விளையாடும் தேர்தல் அரசியலுக்குள் முடக்கப்படுவது என்பது தமிழ்த் தேசிய விடுதலைக்கான இன்றைய எச்சரிக்கை மணியும் நாளைய சாவு மணியுமாகத் தான் தெரிகின்றது. சிறிலங்காவில் மீண்டும் மகாவம்ச புரட்டின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீளெழுகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முரணாக, சிங்கள தேசியக் கட்சிகள் தமிழர் தாயகப் பகுதியில் நிலவும் அரசியல் பேதமைகளையும் வரட்சிகளையும் பயன்படுத்தி தம்மை நிலைப்படுத்துவதில் ஓரளவு வெற்றி கண்டமை இதுகாலவரையிலான தமிழரின் ஈகம் நிறைந்த மறப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கொடுஞ் செயலாகின்றது. இந்த இழிநிலை போக்க களத்திலும் புலத்திலும் பல உடனடிக்கடமைகளை செய்து எமது மக்கள் தேக்கமின்றி முன்னகர வேண்டும்.

களத்தில் இருக்கும் எமது மக்களே! இளையோரே!

 • மக்களமைப்புகளைப் பலப்படுத்தாமல் அரசியல் போராட்டங்களைச் செய்யவியலாது என்பதை நினைவிலிருத்துங்கள்.
 • புரட்சிகர எழுச்சிக்குரிய நிலைமைகள் முதிர்ச்சியுறுவதைத் தடுப்பதே பொய் புரட்டுகளின் மூலம் வாக்குப் பொறுக்கி தமது கட்சிகளைக் காப்பாற்றும் அரசியற் கட்சிகளின் நோக்கம் என்பதையறிந்து அவர்களிடத்தில் எச்சரிக்கையாயிருங்கள். மக்களைப் பற்றிப் பேசுபவர்களும் மக்களோடு பேசுவதில்லை என்பதை மீள் நினைவூட்டி மக்கள் அமைப்புகளைக் கட்டியமையுங்கள்.
 • வாக்குக் கேட்டு அதிகாரத்திற்குள் நுழையும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அவை உறுப்பினர்கள், தவிசாளர்கள், அமைச்சர்கள் போன்ற எல்லோரும் மக்களது அரசியல் ஊழியர்கள் தான் என்பதை மனதிலிருத்தி அவர்களுக்கும் அதனை அடிக்கடி சொல்லி அழுத்தி வாருங்கள்.
 • புரட்சிகர ஒழுக்கம், சுறுசுறுப்பு, சிக்கனம், பாரபட்சமின்மை, தன் தவறுகளைத் திருத்திக்கொள்கின்ற மனம், தற்பெருமை மற்றும் ஆணவமில்லாதிருத்தல், சொன்ன சொல்லைக் காப்பாற்றல், கொள்கையில் உறுதி, தியாக உணர்ச்சி, பொருண்மிய முறையில் பயன்பெற விரும்பாமை போன்றவை உங்களது அரசியல் ஊழியர்களுக்கு இருக்கின்றனவா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
 • புரட்சி அமைதியான முறையில் வளர்ச்சியடையும் கட்டத்தைக் கடந்திருக்க வேண்டிய நாம் வாக்குப் பொறுக்கும் கட்சி அரசியலின் பின்னால் நக்குண்டு கிடந்தோம் என்ற இழி நிலையைப் புரிந்து இனியாவது அந்தக் கட்டத்தைக் கடக்க உறுதியோடு வேலை செய்யுங்கள்.
 • அரசியற் போராட்டங்கள் எதுவும் தொடர்ந்து வளர்திசையில் செல்வதாயின் அது இராணுவப் போராட்டத்துடன் இணைந்தேயாகும். எனவே தொடர்ச்சியாக அரசியற் கடமையாற்றுங்கள்.
 • தேசிய எழுச்சிக்கான நேரம் இன்னும் வரவில்லையே தவிர அது உறுதியாக வரும் என புரட்சிகர அறிவியல் மற்றும் புரட்சிகரப் பண்புகளை வளர்ப்பதன் மூலம் நம்புங்கள்.
 • கொள்கையில் உறுதியும் செயலுத்தியில் நெகிழ்ச்சியும் இருக்கலாம். ஒவ்வொரு துறையும் பொருளியல் மற்றும் அரசியல் வாழ்க்கையில் சேர வேண்டும் என்பதாக வேலை செய்யுங்கள்.
 • இலக்கு நோக்கிச் சற்றும் சலிப்படையாத, சற்றும் ஐயப்படாத, தளர்ச்சியற்ற நம்பிக்கை, இடைவிடாத செயற்பாடு, அச்செயற்பாட்டின் வழி உருவாகும் பாதை கூட்டு உழைப்பு கூட்டு முயற்சி- கூட்டு இணைவு என்பதாக வேலைத் திட்டங்களில் இறங்கி வேலை செய்யுங்கள்.
 • சிங்களப் பேரினவாதிகளின் பொருட்களைக் கூவி விற்கும் விற்பனை முகவர்களாக இல்லாமல் மற்றும் எமது மக்களின் மீதமிருக்கும் சிறு சேமிப்புகளையும் இல்லாதொழிக்க எமக்குத் தரும் நுண்கடன் திட்டங்களையும் புறக்கணிப்பதோடு தமிழீழ தாயகத்தில் எமது மக்களின் பொருண்மிய மேம்பாடு நோக்கித் தொடர்ச்சியாக அறிவார்ந்து வேலை செய்யுங்கள். இதன் மூலம் பொருண்மியப் போராட்டம் அரசியற் போராட்டத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.
 • தமிழீழம் எங்கனும் தரிசாகிப்போன நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படல் வேண்டும், உற்பத்தித் துறைகள் எமது மண்ணில் பெருக வேண்டும், சந்தைக்களம் விரிவுபடுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கோரி உங்கள் அரசியல் ஊழியர்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து அதனைச் செயற்படுத்த முனையுங்கள்.
 • மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தல், அரசியற் கைதிகள் விடுதலை, நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்கள், மக்களின் வாழ்நிலையை உயர்த்துவதற்கான போராட்டங்கள், சமூக விடுதலை மற்றும் அரசியல் விடுதலை சார்ந்த தொடர் போராட்டங்களில் ஈடுபடுங்கள்.  போராட்டங்கள் விழிப்பினை ஏற்படுத்துவன.
 • தமிழ்த் தேசிய சித்தாந்தத்தையும் நடைமுறையையும் தொடர்புபடுத்தி, புரட்சிக்கு உறுதி, ஈகம், விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை தேவை என்பதை விளங்கி முரண்களைக் களையும் திறனில்லை என்றாலும் கையாளும் திறனையாவது வளர்த்து இப்போது தமிழீழ தாயக மண்ணிலிருக்கும் புரட்சிக்கெதிர்ச் சூழலை நீக்க இளையோர்கள் முன்வர வேண்டும்.

புலத்திலுள்ளோரே!

 • உலக வல்லாண்மையாளர்களும் அடக்குமுறை அரசுகளும் சனநாயகத்தைப் பற்றி தேனொழுகப் பேசுவது ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 • ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த முயற்சிகள் மூலமே விடுதலை பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
 • புலம்பெயர்ந்தோர் எங்கு சந்தித்துக் கொண்டாலும் தாய்நாட்டு விடுதலை பற்றிப் பேச வேண்டும் அதற்குப் பங்களிக்க வேண்டும் என்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள். உங்களது நுகர்வுகளை குறிப்பாக உணவு நுகர்வுகளைத் தன்னும் எங்களது தாயக மண்சார்ந்ததாகச் செய்வதன் மூலம் எமது மக்களின் உற்பத்திக்கான சந்தைக் களத்தை நீங்கள் வசிக்கும் நாடுகளில் ஏற்படுத்திக் கொடுங்கள்.
 • தாயகத்தில் இருக்கும் மக்கள் புரட்சிக்கு முதிர்ச்சியடைந்துவிட்டார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் அங்கு நிலவுகின்ற ஆட்சிமுறையில் திருப்தியாக இருப்பதால் புரட்சி செய்ய விரும்பவில்லை என்பது அதனிலும் தவறு என்பதைத் தெரிந்துகொண்டு களநிலையைச் சரியாகக் கணித்துக் கொண்டு அரசியல் செய்யுங்கள்.

விடுதலை பெறும் வரை விடுதலைப் போராட்டங்கள் ஓயாது. தலைமையை இழந்தாலும் விடுதலை இயக்கமே அழிந்தாலும் வரலாற்றில் நிகழா தோல்வியை அடைந்தாலும் அடக்குமுறை இருக்கும் வரை விடுதலைக்கான தேவை இருக்கும். தேவை இருக்கும் வரை போராட்டங்கள் ஏதோவொரு வடிவமெடுக்கும். போராட்ட வடிவங்கள் அடக்கப்படும் போது அது வேறு வடிவம் கொள்ளும். விடுதலை அமைப்பு அழிக்கப்பட்டால் மக்களே தமது கைகளில் போராட்டத்தை எடுத்துக் கொள்வர். தமிழீழ வரலாறும் இதுவாகத் தான் இருக்கும்.

-அருள்வேந்தன்-

2018-03-03

 5,920 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply