சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே

சிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளை (Budget Allocations)   முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதைத் தமிழர் தாயகப்பகுதி கட்டுமானத்திற்கு முற்று முழுதாக பயன்படுத்துதல் வேண்டும். பலதரப்பட்ட வரி மூலங்கள் மூலம் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தின் சிறு பகுதியை மட்டுமே அரசானது அபிவிருத்திக்காக ஒதுக்குகிறது. அப்படி ஒதுக்கப்படும் மக்களின் வரிப் பணத்தை முழுமையாக பெற்று அவற்றை மீளவும் மக்களுக்கான அடிப்படைக் கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதே சிறந்த நிருவாகமாகக் கருதப்படும். ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளில் சிறிலங்கா அரசானது அரசியல் செய்ய நினைப்பின் அதை அரசியல் செயற்றிறனுடன் (Diplomatic Approach in Politics)  கையாண்டு சூழ்ச்சியில் சிக்காமல் ஒதுக்கீடுகளை முழுமையாக பெற்றுக் கொள்வதே சிறந்த அரசியலாகக் கருதப்படும். 

தமிழீழ விடுதலைக்கான மறவழிப் போராட்டத்தில் நேரடியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தமிழர் தாயகத்தின் பெரும்பகுதி பொருண்மிய மட்டத்திலும் உட்கட்டுமான மட்டத்திலும்  கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கருவி ஏந்திய மறவழிப் போராட்டம் பேசா நிலைக்கு வந்து  9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் தாயகத்தின் ஊர்ப்பகுதிகளில் அடிப்படைக் கட்டுமானங்கள் எந்தவொரு அபிவிருத்தியையும் காணவில்லை. வடகிழக்கின் பிரதேச அவைகள் , நகர அவைகள் , மாகாண அவைகள் என அனைத்திலும்  மேலாண்மை செலுத்துவது தமிழ் அரசியல்வாதிகளாக இருந்தபோதிலும் ஊர் மட்டங்களிலான கட்டுமானங்கள் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல் இருப்பது நிருவாகத் திறனின்மையைத் தடித்த கோடிட்டுக் காட்டுகிறது.

ஆண்டுதோறும் சிறிலங்கா அரசானது வடக்கு கிழக்கு மாகாண மற்றும் பிரதேச செயலகங்களுக்கு குறிப்பிட்ட  அளவு ஒதுக்கீடுகளை வழங்கியும் அவற்றில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் திரும்புவதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பயன்படுத்தப்பட்டதாக கணக்குக் காட்டப்படும் பணத்திற்கும் சரியான திட்டமிடல்களுடன் வேலைகள் நடைபெற்றிருக்கின்றனவா என்று பார்த்தால் சொல்லும்படியாக எதுவும் இல்லை.

தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்திற்கு தமிழர் தாயகப்பகுதியின் உட் கட்டுமானம் திறம்பட கட்டமைக்கப்பட வேண்டியது மிக தேவையானது. வீதிகள், மின்னிணைப்புகள், வடிகாலமைப்பு, நீர்ப்பாசன மறு சீரமைப்பு, வேளாண் பண்ணைகள், களஞ்சியங்கள், சந்தைகள், மீன் பிடித்துறை, உற்பத்தித் துறை, கல்வித் துறை, விளையாட்டுத் துறை  என பல அடிப்படைத் துறைகள் நேர்த்தியாக கட்டமைக்கப் படவேண்டியது மிக முதன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. 

தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டியதான ஏராளமான பணிகள் காணப்படும் இன்றைய நிலையில் இளைஞர்களை ஒன்றிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அரசியல், இன்று கட்சி ரீதியாக இளைஞர்களைப் பிரித்து தங்களுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழரசு கட்சிக்கும் காங்கிரசு கட்சிக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பனிப்போரினை த.தே.கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போர்வைக்குள் முன்னெடுத்துச் செல்லும் அவலத்தை இரண்டு தரப்பு அரசியல் தலைமைகளும் செய்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவாகியுள்ள இளைஞர்களே!!

கட்சி வேற்றுமைகளுக்கு அப்பால் “தமிழர் தமிழரல்லாதோர்” என்ற சித்தாந்தத்தை உள்வாங்கி அதன் படி அரசியல் செய்ய ஓரணியில் அணியமாகுங்கள்.  உள்ளூராட்சி செயற்பாடுகளில் கட்சித் தலைமைகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்கள். தாயகத்திற்கு தேவையான கட்டுமானத்தை அனைவரும் சேர்ந்து கட்டியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுங்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்குள் தொடர்பாடல்களை உருவாக்கி சிறந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர் ஊராக வகை பிரித்து ஆங்காங்குள்ள உட்கட்டுமான குறைபாடுகளை நிரற்படுத்தி, அவற்றில் எவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வகைப்படுத்தி, துறைசார் புலமை உள்ள தமிழ் இளைஞர்களிடம் வழியூட்டல் கருத்துகளைப் பெற்று, சரியான திட்டங்களை வகுத்து, அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி அதற்கான ஒதுக்கீடுகளைப் பெற்று, அதை நேர்மையான முறையில் பயன்படுத்தினால் தமிழர் தாயகப்பகுதிக்கான உட்கட்டுமானத்தின் பெரும் பகுதியை மிக குறுகிய காலப்பகுதிக்குள் செய்து முடிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பலதரப்பட்ட துறைகளில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிவர்களில் பலர் இன்று வெளி நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் பலர் உள்நாட்டிலும் முதன்மையான பொறுப்புகளில் இருக்கிறார்கள், புலம்பெயர் சமூகத்தின்; அடுத்த தலைமுறையொன்று அந்தந்த நாடுகளில் மிகச்சிறந்த கல்வியாளர்களாகக் காணப்படுகிறார்கள். தமிழர்களின் இந்த அறிவியல் வளத்தை மிகச் சரியாக பயன்படுத்தினால் துறைசார் புலமையாளர் குழாங்களை; கட்டிமைக்க முடியும் அதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மிக நேர்த்தியாக வடிவமைக்கவும் முடியும்.

ஊர் மட்டங்களில் ஏற்படுத்தப் போகும் அடிப்படைக் கட்டுமானப் பணிகள்தான் எதிர்கால தமிழீழ விடுதலைக்கான பயணத்தின் செல்திசைகளின்  அடிக்கற்கள் என்பதை மனதில் நிறுத்தி வேலை செய்யுங்கள். சிங்கள அரசானது தமிழர் தாயகப் பகுதிகளில்   ஊர் மட்டங்களில் அபிவிருத்தி பணிகளை தாமாக முன்னெடுக்காமைக்கான காரணமும் அதுதான்.

தென்னிலங்கைச் சிங்கள மற்றும் முசுலீம் வணிக நிறுவனங்கள் தமிழீழ  ஊர்களில் காணப்படும் வளங்களை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கியோ அல்லது சுரண்டியோ அவற்றை மீளவும் தமிழர் தாயகத்தில் விற்பனைக்கு கொண்டுவருகின்றன.  குறிப்பாக வடகிழக்கில்  பால் உற்பத்தி, வேளாண் விளை பொருட்கள், இறைச்சி வகைகள் என பலதரப்பட்ட  உணவு வணிகத்தின்  பெரும்பகுதியை தென்னிலங்கை வணிக நிறுவனங்களே கையகப்படுத்தியிருக்கின்றன. காரணம், குறித்த துறைக்கான சரியான கட்டமைப்பு தமிழர் தாயகப்பகுதியில் உருவாக்கப்படவில்லை அதையே காரணமாக வைத்து நுண்ணிய முறையில் தமிழர் தாயக வளங்களை சுரண்டி அவற்றை மீளவும் தமிழர்களுக்கே விற்பனை செய்யும் அவலம் காணப்படுகிறது.

தமிழர் தாயகப் பகுதியில் உற்பத்தி மற்றும் களஞ்சியத்திற்கான கட்டுமானம் சிறந்த அளவில் உருவாக்கப்படுமாக இருந்தால் பொருண்மியம் சார்ந்து ஊர் மட்டங்கள் பெரும் மாற்றத்தைக் காணும் என்பதை நம்ப வேண்டும்.

பறிபோகும் நிலங்களும் வளங்களும்!

வடகிழக்கில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான நிலப்பரப்பு தமிழர்களால் சிங்களவருக்கும் முசுலீம்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. பூர்வீகம், தாயகம் என்ற அடிப்படை உணர்வுகளைத் தாண்டி தமது மித மிஞ்சிய பொருண்மியத் தேவைகளுக்காக தென்னிலங்கையர்களுக்கு நிலங்களை விற்கும் இழி நிலையை தமிழர்கள் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது போக மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் வளமிக்க பெரும் நிலப்பரப்புகள் சிறிலங்கா அமைச்சர்களால் வல்வளைக்கப்பட்டு, பாரிய அளவிலான வணிகம் நடைபெறுகிறது. மன்னாரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள நிறுவனம் ஒன்றினால் அன்னாசி பயிரிடப்பட்டு ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது (குறித்த அன்னாசித் தோட்டம் இசுரேல் நாட்டு நிறுவனத்தின் சிறிலங்கா பினாமி நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது என்பது காகம் இணையத்திற்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்). முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பல பகுதிகளில் சிங்களவருக்கான வாடிவீடுகளும் சிறு சிறு மீன்பிடித் துறைமுகங்களும் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது, கிளிநொச்சியில் பெரும் விளை நிலங்கள் சிங்கள அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களினால் கையகப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வணிகத்திற்கான பயிர்ச்செய்கைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் வளமிக்க ஏக்கர் கணக்கிலான தோட்டக்காணிகள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அங்கு இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அதை தமிழர்களிடமே வணிகம் செய்யும் அவல நிலை காணப்படுகிறது.

தமிழர்களுக்கான பாராளுமன்ற தலைவர்களாகக் காணப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் நிலங்களை மீட்கும் பணியில் தீவிரமாகச் செயற்பட வேண்டும். ஆளையாள் கோவணத்தை உருவி கேடுகெட்ட அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழர்களின் மண் மீட்பில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

வடகிழக்கில் ஏலத்தில் விடப்படும் வணிகச் செயற்பாடுகளில் இயன்ற அளவு தமிழர் வணிகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் இறைச்சிக்கடை ஏலம் முற்று முழுதாக முசுலீம் வணிகர்களிடம் சென்றுள்ளது. ஏற்கனவே முசுலீம் உணவுக் கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகி சில கண்டன போராட்டங்களும் நடைபெற்ற நிலையில் இன்று முற்று முழுதாக இறைச்சி வணிகம் முசுலீம்களின் கைகளில் சென்றுள்ளமை எதிர்காலத்தில் எப்படியான விளைவுகளை கொண்டுவரப் போகிறது என்பதை ஊகிக்கவே முடியாதுள்ளது. தவிர தமிழர்கள் அனைவரும் முசுலீம் முறைப்படியிலான “கலால்” இறைச்சிகளையே உண்ண வேண்டி கட்டாயத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதாவது வணிகம் சார்ந்து பிறத்தியாரின் பண்பாட்டுத் திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 6 இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் யாழ் மாவட்டத்தில் சின்னச் சின்ன ஊர்களில்; கூட முசுலீம்களின் இறைச்சிக் கடைதான் காணப்படுகிறது என்பது மிக மோசமான அரசியலாகத்தான் பார்க்கப்பட வேண்டியது. இறைச்சிக் கடை ஏலத்தின் போது சில லட்சம் ரூபாய்களை அதிகமாக கேள்வியில் விட்டு எல்லாக் கடைகளையும் முசுலீம்கள் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இறைச்சிக் கடைகளைக் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்து வணிகம் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத கையறு நிலையில் யாழ்ப்பாண வணிக மேலாண்மை இருக்கிறது.

மக்கள் தொகையில் அதிகளவு தமிழர்களும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமாகவும் காணப்படும் யாழ்ப்பாணத்திலேயே, வணிகத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தெரியாக கையறு நிலையில் தமிழர்கள் காணப்பட்டால் மற்றைய மாவட்டங்களில் எப்படியான நிலை காணப்படும்!!!

ஆதலால், தமிழர் தாயகப்பகுதிகளில் உட்கட்டுமானப் பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு தமிழர்களுக்கான வணிகமும் அது சார்ந்த துறைகளும் செப்பனிடப்பட வேண்டும். பொருண்மியம் மட்டத்தில் தன்னிறைவு பெற்ற இனம், விடுதலை நோக்கி மிக விரைவாக நகர முடியும் என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம் என்பதை நினைவில் கொள்க.

துலாத்தன்

25-02-2018

 4,726 total views,  2 views today

1 Comment

  1. இந்த வழியில்தான் போக வேண்டும். ஆனால் கஜேந்தி அம்மானும் சுமந்தியும் விடமாட்டான்கள். பெடியள் நினைச்சா எல்லாம் செய்யலாம்

Leave a Reply