உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியையும் காண்போம் படைப்பு வெளியில் .. தமிழ்த்தேசியராக….. – செல்வி-

தேசிய இனங்களின் மரபுவழித் தொடர்ச்சியை அளவிடும் கூறுகளில் கலைகளும் இலக்கியங்களும் அவற்றின் பேறுகளும் முதன்மையானவை. முத்தமிழ்களின் பேற்றினால் செம்மொழியாகி நிற்கும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின் தொன்மையும் சால்பும் அதன் படைப்புகளிலும் விரவி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. உழைப்பு, உற்பத்தி, ஓய்வு என்ற மூன்று அடிப்படைகளும் இணையும் தளத்தில் வாய்மொழி இலக்கியம், கலைகள் என்று தொடங்கிய படைப்பு வெளியானது மாந்தர்களின் பன்முக ஆற்றல்களின் மூலம் காலத்துக்குக் காலம் செழுமைப்படுத்தப்பட்டு, மரபுகளின் சாட்சியங்களாகி நிற்கின்றன. “மனிதன் அறிவால் அறிந்து வாழும் பகுதியை விட விரும்பியும், வெறுத்தும், நம்பியும், சேர்ந்தும், போற்றியும், தூற்றியும் வாழும் பகுதியே மிகுதியாகும். ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றை வளர்த்துப் பயன்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே” என்ற மு.வரதராசன் அவர்களின் கூற்றுப்படி, சமூகத்தின் நிகழ்வுகளை மீளவும் படைப்பு வெளியில் பார்க்கக்கூடியவாறாக இருக்கும். உழைக்கும் மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தியும், வழிபாட்டுச் சடங்குகளின் நீட்சியாகவும் எழுந்த படைப்புகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் உள்ளடக்கங்களில் மாற்றத்தை ஏற்கத் தொடங்கின. பொதுவுடைமைச் சமூக அமைப்பினை சிதைவாக்க எழுந்த தனிச் சொத்துடைமையின் தோற்றத்தால் வர்க்க வேறுபாடுகள் சமூகத்தில் தோன்றின. வர்க்க வேறுபாட்டினால் எழுந்த ஏற்றத்தாழ்வுகளினால் பொதுவாக இருந்த படைப்புவெளியும் உயர் வர்க்கத்தினரின் பாடுபொருளாக மாற்றப்பட்ட அவலமும் நிகழந்தது. படைப்பு வெளியும் ஆளும் வர்க்கங்களுக்குரியதாகவும் ஆளப்படும் மக்களுக்குரியதாகவும் பிளவுபடுத்தப்பட்டன. ஆனால் அரச இயந்திரத்தின் ஆணிவேர்களான ஆளும் வர்க்கம் படைப்புவெளிகளை தன்வயப்படுத்தி, தனக்கான மகிழ்வளிப்பிற்கான தளமாக மாற்றியது. வரலாறு என்பது ஆளும் அரசின் பதிவுகளையே அங்கீகரிக்கும் என்ற வெளிப்படை உண்மையின்படி, உழைக்கும் மக்களுக்காக படைப்பு வெளியானது மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. கலைகளும் இலக்கியங்களும் உழைக்கும் மக்களின் வாழ்தலுக்கான போராட்டங்களின் வெளிப்பாடுகளே தவிர, ஆளும் வர்க்கத்தினரைப் பேசும் வெற்றுப் புனிதங்கள் அல்ல என்ற புரிதலுடன் படைப்பாக்கங்களைப் படைக்கத் தவறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், படைப்பு வெளி தமிழினம் இயற்கையோடு இணைந்தும் போராடியும் வாழ்ந்த வாழ்வியலை எவ்வாறு தன் படைப்புகளில் உள்வாங்கியது என்பதனை நோக்கி, உழைக்கும் வர்க்கத்தினரின் உற்பத்திக்கான பங்கெடுப்புக்களை படைப்பு வெளி கொண்டிருக்க வேண்டியதன் தேவையையும் கருத்தில் கொண்டு இப்பத்தி எழுதப்படுகிறது.

வரலாற்றுத் தொடர்ச்சியினை நோக்கும் போது, மரபார்ந்த படைப்புகள் எல்லாமே மக்களின் உழைப்பையும் வாழ்வியல் உணர்வுகளையும் பேசுபவையாகவே உள்ளன. திணைசார்ந்த வாழ்வியலைக் கொண்ட சங்ககாலச் சமூகத்தின் இலக்கியங்கள் அந்தச் சமூகத்தின் வரலாற்றையும் நிகழ்வுகளையும் தம்முள் பதிந்திருக்கின்றன. கலைகளுக்கும் உற்பத்திக்குமிடையில் இருந்த நேரடித் தொடர்பானது, படைப்புகள் உழைக்கும் வர்க்கத்தினரிற்கானதாக வாழ்வியலுக்கான போராட்டத்தின் வெளிப்பாடுகளுக்கானதாக தவிர அவை வெற்றுப் புனிதங்கள் அல்ல. அந்த வகையில் எமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்தும் போராடியும் வாழ்ந்தமைக்கான பதிவுகளாகவே படைப்புவெளிகள் இருக்கின்றமையை நோக்கலாம்.  உற்பத்தியில் ஈடுபடுவதும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் வாழ்தலுக்கான போராட்டமாகவே இருந்திருக்கின்றது. ஆரம்பகாலத்தில் மக்கள் வேட்டைத் தொழிலையே முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்தனர். வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் வேட்டைத் தொழிலைத் தொடர்ந்து மக்களின் தொழில்களாகின்றன. சங்ககாலத் தமிழர்கள் வெறுமனே மன்னர்களைத் துதிபாடி, மன்னனின் புலவர்களாக இருந்தபோதிலும் சமூகம் சார்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பதிவுசெய்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக,

‘உடும்பு கொளீ, வரிநுணல் அகழ்ந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்

கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்’(நற்றிணை 59)

அதாவது உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு, மண்ணைக் கிளறி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து, அங்குள்ள ஈசல்களை அள்ளிக்கொண்டும் சுடவே ஓரு முயலினையும் கொண்டுவந்தான் வேடன் என்று வேட்டையாடுதலைக் கூறும் பாடலைக் குறிப்பிடலாம்.

மேலும்,

“பகல்நாள்

பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்

தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி

முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்

நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கு அற வளை,

கடுங்கண் கானவர் கடரு கூட்டுண்ணும்” (பெரும்பாணாற்றுப்படை 111-116)

பகற்பொழுதில், பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து, குவிந்த இடத்தையுடைய வேலியில் பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, முள்ளுள்ள தண்டுகளையுடைய தாமரையின் புறவிதழைப் போன்ற நீண்ட காதுகளையுடைய சிறிய முயல்களை வேறு போக்கிடம் இல்லாதவாறு வளைத்துப் பிடித்து, கடுமையான கானவர் காட்டில் கூட்டாகச் சேர்ந்து உண்ணுவர் என்பது இதன் பொருள்.

இன்றும் முயல்வேட்டை என்பது எமது சமூகங்களில் காணப்படுகிறது. இந்த மரபுத் தொடர்ச்சியினை நாம் அறிந்துகொள்ள உம் இலக்கியத்தின் பதிவுகள் சான்றுகளாகி நிற்கின்றன எனலாம். வேட்டைச் சமூகத்தின் வாழ்க்கையில் இயற்கையுடன் இணைந்து வாழுவதற்காகவும் வாழ்க்கையை தக்க வைக்கவேண்டுமென்ற நம்பிக்கையுடன் பல சடங்குகள் நடைபெற்றிருக்கின்றன. வேட்டைச் சடங்குகளின் பதிவுகள் சங்கப்பாடல்கள் எங்கும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இனக்குழும வாழ்க்கை ஒரு நெறிமுறைக்கு வரும்போது அந்த மக்களுடைய முதன்மைத் தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவுத்தொழிலை நடுவப்படுத்தியதாகவே ஏனைய தொழில்களும் இருந்திருக்கின்றன. உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சி, உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியை,

‘‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன

கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்

பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்

காரேறு பொருத கண்ணகன்செருவின்

உழா நுண்டொளி நிரவிய வினைஞர்” என்று பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.

மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர் என்று நாற்று நடுவதற்கேற்ப நிலம் பண்படுத்தப்பட்ட உழவரின் செயல் இப்பெரும்பாணாற்றுப்படை வரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வியலின் ஒவ்வொரு கூறினையும் தன்னுள் வைத்திருக்கும் வள்ளுவமும் உழைக்கும் மக்களின் மேன்மையைக் கூறத் தவறவில்லை.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”

என்கிறார். இதனை விட உழவனின் சிறப்பினை கூற முடியுமா என்ன?  ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய், பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்ற பொருள்பட,

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்

என்று பாடுகிறார். அரச அதிகார வர்க்கத்தின் புகழைப் பாடியவர்கள் மத்தியில் அந்த அரச அதிகாரத்தையே உழவனின் அதிகாரத்துக்குள் கொண்டுவந்த சிறப்பு இங்கு நோக்கத்தக்கது..

வெற்றி பெற்றவர்களால் உருவகம் செய்யப்படும் வரலாறானது உழைக்கும் மக்களின் வரலாற்றை பெருமளவில் சொல்லவில்லை. அல்லது சொல்லப்பட்ட வரலாறுகள் மறைக்கப்பட்டும் இருக்கலாம். அவ்வாறு இருந்தபோதிலும் உழவுத்தொழிலின் போது, ஊருக்கே உணவளிக்கும் உழவனின் வாழ்க்கை மகிழ்வாக இருக்கவில்லை என்பதை பாட்டில் பதிவுசெய்திருக்கிறார்கள். இதனை,

‘‘எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற

சில் விளைவரகின் புல்லென் குப்பை

தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்

பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்

ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்

சிறு புல்லாளர் முகத்தளவை கூறி

வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை ’’ ( புறநானூறு : 327;)

என்ற புறநானூற்றுப்பாடல் மொழிகின்றது.

அதாவது, எருதுகளைப் பிடித்து, அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் புசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையை களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன் என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப் பெற்ற செய்தியைப் மேற்குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.

உழவர்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் அவர்கள் வறுமை மிக்க வாழ்க்கையையே வாழ்ந்தனர். வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தன. தம் மனைக்கு விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உணவிட்டாள் என்று உழவனின் வறுமை நிலையினை,

‘‘வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்

இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்

குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்

குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து

சிறிது புறப்பட்டன்றோவிலள்”  ( புறநானூறு : 333;)

என்ற புறநானூற்றுப் பாடல் இயம்புகின்றது.

திணை வாழ்வியலைக் கொண்ட சங்க மக்களில் நெய்தல் நில மக்கள் கடல்தொழிலை முதன்மையான தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். கடலில் செல்லும் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தவறி ஓடுவதும் உண்டு. அப்போது கப்பலோட்டும் பரதவர் அவைகளை அடக்கிச் செலுத்தினர் என்பதை,

‘முரசு கடிப்படைய அருந்துறைப் போகிப்

 பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்

 பண்ணிய வினைவா

என்ற பதிற்றுப்பத்து பாடலினூடாகப் பதிவுசெய்திருக்கின்றனர்.

“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண் செய் கொல்லர், பூவிலைப்பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், விலைப்பெண்டிர், வேடர்” என்று தொழில்முறைவாரியாக பிரிக்கப்பட்டிருந்தனர் என்பது உ.வே.சாமிநாதையரின் கருத்தாகும். உழைக்கும் இம்மக்களினைப் பற்றிய பதிவுகளை நோக்கலாம்.

நெசவாளன் :

ஒரு சமூகத்தின் மரபினை ஒரு பார்வையிலேயே காட்டுவது அவர்களின் ஆடையாகும். அந்த ஆடையை நெய்யும் நெசவாளனை,

‘செய்யும் தொழிலனைத்தும் சீர்தூக்கிப் பார்க்குங்கால்

 நெய்யுந் தொழிற்கு நிகரில்லை”

என்று திருவள்ளுவர் பாடுவதைச் சுட்டலாம்.

‘நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்

 பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து

 நறுமடி செறிந்த அறுவை வீதி” (சிலப்பதிகாரம் . ஊர் காண் காதை. 205 – 208)

என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளினூடாக பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன. எலி மயிர் முதலியவற்றால் கம்பளங்களும் நெய்யப்பட்டுள்ளன என்பது பதியப்பட்டுள்ளது.

பொற்கொல்லர்கள்:

‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

 பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்” ( புறநானூறு : 353)

என்ற வரிகளினூடாகப் பதியப்பட்டுள்ளது.

தச்சர்கள் :

‘ ————— வைகல்

 எண்தேர் செய்யும் தச்சன்

 திங்கள் வலித்த கால் அன்னோனே” ( சிலப்பதிகாரம்: கடலாடு காதை)

குயவர்கள் :

‘இருள் திணிந்தன்ன கரூஉத்திரள் பரூஉப்பகை

 அகல் இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை” ( சிலப்பதிகாரம்: கடலாடு காதை)

புலையர் :

‘பசைவிரல் புலைத்தி நெடிது பிசைந் தூட்டிய

 பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல்” ( சிலப்பதிகாரம்: கடலாடு காதை)

உமணர் :

‘ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்

 உப்புஒய் ஒழுகை எண்ணுப மாதோ” (புறநானூறு 311)

ஆயர் :

‘மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த

 குடப்பால்” (புறநானூறு 276)

பரதவர் :

‘திண்திமில் வன் பரதவர்” (புறநானூறு 24)

கொல்லர் :

‘வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” (புறநானூறு 312)

கடல் வணிகம்:

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

 வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” (புறநானூறு 66)

நாட்டுப்புறவியலும் உழைக்கும் மக்களும்

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்வினையும் நாட்டுப்புறவியல் வழக்காறுகள் பிறப்பு முதல் இறப்பு வரை உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் எல்லா கோணங்களையும் வெளிப்படுத்துகின்றன. மாந்த வரலாற்றில் உழைக்கும் மக்களின் நீண்டி நெடிய அனுபவங்கள் நாட்டுப்புற வழக்காறுகளிலேயே எஞ்சியிருக்கின்றன. உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் உழைப்பும் நாட்டுப்புறவியலிலேயே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இனம், நாடு என்ற தேசியப் பண்பாடு ஒன்றினைக் கட்டமைப்பதற்கும் மக்களிடையே அவர்களுடைய அடையாளத்தை உருவாக்கவும் நாட்டுப்புறவியல் உதவியது. நாட்டுப்புற கலைவடிவங்களிற்கு மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. இவற்றை அடியொற்றிய வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு போன்ற ஆய்வுப்பிரிவுகள் தோன்றின.  நாட்டுப்புற மக்களின் வாழ்வினையும் அவர்களின் வாழ்வில் இடம்பெறும் பண்பாட்டுக்கூறுகளையும் பாடல்கள், விடுகதைகள், பழமொழி, கலைகளினூடாக சொல்கின்றனர்.

‘ஏரு ஓட்டி பொழச்சிருந்தா

எப்படியும் வாழ்ந்திருப்போம்”

என்று மக்களை வாழவைக்கும் உழவினை நாட்டார் பாடலில் பாடுகிறார்கள்.

வயலை உழவு செய்ய மாடுகளை கொண்டு போய் கலப்பையில் பூட்டி,

“தந்ததான தானானே…

.பாரக்கலப்பையடா….செல்லனுக்கு

பாரம் மெத்த தோணுதடா…

எட்டி நட கண்டே…ஏர்பாயும் தேசமெல்லாம

பார்த்து நட கண்டே…பார் பாத்து சால்வழியே….

என்று மாடுகளின் அசைவின் சந்தத்திற்கேற்ப பாடப்பட, பாடலும் உழவும் ஒன்றாய் நிகழ்கின்றன.

விதைத்த வயலில் கதிர்கள் முற்றி  அறுவடைக்கு   தயாராகி வந்தவுடன் அருவிவெட்டு  நடைபெறும்.  ஈழத்தில் பரத்தை வெட்டு என ஒரு முறையுண்டு ஒரு குளத்தின்கீழுள்ள அனைத்து பங்காளர்களும் கூடி ஒருவருடைய வயலில் இறங்கி அறுவடை செய்வார்கள். ஒருபுறம் உடுக்கையடித்து அருவி வெட்டுப்பாடல்களைப் பாட ஒரு குழு நிற்கும். வயலில் இறங்கியோர் வரிசை தப்பாமல் அரிவாளை வீசி வெட்டுவார்கள். அரிவாள் வீச்சுக்கேற்ப பாடலின் சந்தம் இருக்கும். பாடலின் வரிகள் தெரியாதவர்கள் அதன் தருவினை மெட்டுப்போடுவார்கள்.

“முடியோடு தேங்காயைக் கையில் எடுத்தோம்

மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்.”

என தொடங்கி, அருவிவெட்டு பாடலுடன் நிகழும். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற சொற்றொடர் கூட இந்த செயல்களிலிருந்தும் பிறந்திருக்கலாம்.

‘பாடு பாத்துப் போடப்பா’ வளம் பார்த்துப்போடு” என்பது புகையிலை செய்கையை ஒட்டிய தொடராகும். புகையிலை வெட்டிய பின், அதனை பதப்படுத்துவதற்காக புகையிலையை அடுக்கும் முறைமை பாடம் போடுதல் எனப்படும். அதுவும் ஒரே மாதிரியாக அடுக்கப்பட வேண்டும். வளம் பார்த்து போடுதல் என்று அதனைக் குறிப்பிடுவார்கள். ஒரு சொற்றொடரினூடே, தொழில் செய்யும் முறைமையை கூறும் சிறப்பு எம்மிடையே இருந்திருக்கின்றது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாடியதில் பள்ளு இலக்கியங்களுக்கு முதன்மையான பங்குண்டு. ஆண்டான் அடிமைச் சமூகத்தின் வாழ்வியலை கண்ணாடி போன்று காட்டுகிறது என்றால் மிகையில்லை. ஆற்றுகை முறைமையில் அமைந்திருக்கும் பள்ளுப் பாடல்கள், நாளாந்த வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு கழிகின்றது என்பதை இலகு மொழியில் தந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக,

பள்ளி பள்ளி பள்ளன் எங்கடி போனான்?

பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப்போனான்

கொத்தப்போனான் குழலூதப்போனான்

கோழிக் கூட்டுக்கு மண்வெட்டப்போனான்

கறுத்தக்காளை ஓரிணை பூட்டீ கமுகடி வயல் உழுகைக்கே

கறுத்தப் பள்ளியார் எறிந்த நாத்து கமல குண்டலம் வீசுதே

சிவத்தக்காளை ஓரிணை பூட்டி சேந்து நாங்கள் உழுகைக்கே

சிவத்தப்பள்ளியார் எறிந்த நாத்து சோழக மண்டலம் வீசுதே”

என்பதைக் கூறலாம். ஏனைய இலக்கியங்களுக்கு பொழிப்புரை, விளக்கவுரைகள் இல்லாது எளிய மக்களால் விளங்கமுடியாதது போல இங்கு இல்லை. இலகு மொழியில் வாழ்க்கை படிமங்களாக அசைவதை பள்ளுப் பாடல்களில் காணலாம்.

பள்ளன் வயலிலே வேலை செய்துகொண்டு, பள்ளி கொண்டுவரும் உணவுக்காக காத்திருக்கிறான். அவள் வருவதற்கு காலந்தாழ்த்தியதால், பள்ளன் அவளை வைகிறான். அந்த நிகழ்வை ஆண்டையிடம் அவள் முறையிடும் பாடலினூடாக, பள்ளியின் வாழ்க்கை முறை கண்முன்னே கொண்டுவரப்படுகிறது.

“ஆறுபோந்தங்கு தண்ணீருமள்ளி

அழுத பிள்ளைக்கு பாலும் புகட்டி

சீறு பூறென்று சிறு நெல்லுக் குத்தி

கமுகம்பூப்போல அரிசியுந் தீட்டி

காலத்தாலே நான் காய்ச்சின கஞ்சியைக்

காலாலே தட்டிப் போறானே ஆண்டே”

ஆண்டையிடமிருந்து வரும் உணவு பற்றி நகைச்சுவையாகவும் அதேவேளை சொல்ல வந்ததைச் சொல்லியும் செல்கின்றனர்.

“நெல்லருவி வெட்டவென்று; பொடியளுக்குச் சொல்லி

நெத்தலியிலே ஒரு ஆணமும் காச்சி

புல்லருவி வெட்டவென்று பொடியளுக்குச் சொல்லி

புழுத்த கருவாட்டிலொரு ஆணமும் காச்சி”

என்ற பாடலடிகளினூடாக இதனை விளங்கிக்கொள்ளலாம்.

”வனத்தையறுத்து நெருப்பைக் கொழுத்தி மரத்தின் தடிகள் பொறுக்கியே

வளைத்து வேலி நிரைத்துக் கட்டி வளர் நெல் விதைகள் தூவியே”

என்று அவர்கள் உழவு செய்யும் படிமுறையை காண்பியமாக மனக் கண்ணில் தெரிய விடுகிறது பன்றிப்பள்ளு.

மலையகத் தமிழரிடையே காணப்படும் நாட்டார் வழக்காறுகள் தேயிலைத்தோட்டத்தில் அவர்கள் படும் பாடுகளை கூறுவதாக அமைந்திருக்கும. எடுத்துக் காட்டாக,

வாறாரய்யா வாறாரு நம்ப கங்காணி அய்யா வாறாரு

கையில கொடைபிடிச்ச கழண்ட கங்காணி…

கண்ணடிச்சே வேல வாங்குங் கறுத்த கங்காணி.

வாசல கூட்டி வெய்யி சாணியக் கரைச்சுவெய்யி…

அய்யாவர நேரத்துக்கு ஆலாத்தி சுத்த வேணும்.

கோட்டு நல்ல கோட்டு நம்ப கோடாங்கிக்காரங் கோட்டு.

கேட்டு வாங்கிப் போட்டு ரெண்டு பொங்கலாச்சு”

தங்களை வேலை வாங்கும் கங்காணியை கேலி செய்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வாழ்க்கையின் வளங்களை சொல்வது மட்டுமல்லாது, உழைக்கும் மக்களின் புரட்சிக் குரலாகவும் நாட்டுப்புற படைப்புகள் முகிழ்ந்தன. அன்றாடம் உழைத்து, உற்பத்தியின் மூலமாக நிற்கும் தொழிலாளியின்  உழைப்பினை  முதலாளி வர்க்கம்  உறிஞ்சி எடுக்கும் போதுதொழிலாளியின்  குரலாக,

“தாளு நெல்லு ஒங்களுக்குச் சாமி

தங்குன கருக்கா எங்களுக்கா

போரு நெல்லு ஒங்களுக்கு சாமி

ஓடுன கருக்கா எங்களுக்கா

வேலசெய்து கூலிய கேட்டா

வெள்ளி செவ்வாயிங்குறிங்க

நாத்துக் கூலிய கேக்கப் போனா

நாள பின்னைண்ணு சொல்லறீங்க

எட்டிய குட்டிய யிங்குறத ஒங்க

சுறவாணத்தில் வச்சிக்குங்க

வாடி போடியிங்குறத ஒங்க

வாசப்படில வச்சிக்குங்க”

என்று  ஒலிக்கிறது.

பொதுவுடைமைச் சமூக அமைப்பு சிதைவுற்றபோது சமூக ஏற்றத்தாழ்வுகள் உருவாகி, ஆண்டான் அடிமை மனப்பாங்குடைய ஒரு சமூக நிலை தோன்றுகிறது. ஆண்டான் வர்க்கத்தினரால் உழைக்கும் மக்களுடைய உழைப்பு மட்டுமல்லாது, மக்களின் படைப்பு வெளிகளும் உறிஞ்சப்பட்டன. ஆளும் வர்க்கத்தினராலும் அதன் கூலிகளாலும் படைப்பு வெளி கையகப்படுத்தப்பட்டது. வர்க்கவேறுபாடுகள் போன்றே, படைப்புவெளியும் ஆளும் வர்க்கத்திற்குரியதாகவும், ஆளப்படும் உழைக்கும் வர்க்கத்திற்குரியதாகவும் பிளக்கப்பட்டது.  நாட்டாரியல் என்னும் வடிவமாக  உழைக்கும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதுவரைகாலமும் மக்களிடமிருந்து ஏனைய கலை இலக்கியங்கள் ஆதிக்கர்களின் மகிழ்வளிப்பிற்கானதாகவும் அவர்களின் பண்பாட்டு செந்நெறியாகவும் மாற்றப்பட்டன. ஆய்வுகளின் படி, செவ்வியல் கலை இலக்கியங்கள் ஆளும் வர்க்கமாகிய அரசு நிறுவனத்திற்கும், நாட்டாரியல் உழைக்கும் மக்களான ஆளப்படும் மக்களுக்குமான பிரிக்கப்பட்டிருந்தமையானது, அந்தந்த சமூகங்களின் தொடர்ச்சியும் இருப்புக்குமாக பிரிக்கப்பட்டதாக கூறலாம்.

சங்க இலக்கியத்தில் பெரும் பகுதியும், அதற்குப் பின்வந்த காலத்து பக்தி இலக்கியங்களும் ஆளும் வர்க்கத்தின் புகழ்பாடுவதற்காகவும், அவர்களை நியாயப்படுத்துவதாகவுமே எழுந்துள்ளதைக் காணலாம். சிற்பங்கள், ஓவியங்கள், கோவில்கள், கோபுரங்கள், இயல், இசை, நாடகம், செய்யுள்கள், காப்பியங்கள் என படைப்பு வெளி முழுமையுமே ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அந்த அதிகாரத்தின் பிடிக்குள் நின்றுகூட உழைக்கும் மக்களின் படைப்புகள் உழைப்பினையும் அந்த மக்களின் வாழ்வியலையும் பேசத்தவறவில்லை. நாட்டார் வாய் மொழி படைப்புகள் மூலம் உழைக்கும் போதே, முதுமொழிகள், வழிபாட்டுப் பாடல்கள், கூத்து நிகழ்வுகளினூடாக உற்பத்தியில் முதன்மையான மக்களின் சமூக அசைவியக்கங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இன்றைய தமிழ்ச் சூழலில் உயர்வாகக் கொண்டாடப்படும் படைப்புகள் அனைத்துமே, ஆளும் வர்க்கத்தினர் சார்ந்த இருப்புக்கும், அந்த அரசின் நீட்சிக்குமாக படைக்கப்பட்டவைகளாகவே இருக்கின்றன. புலவர்களும் படைப்பாளர்களும் ஆளும் வர்க்கத்தையும் கடவுளர்களையும் மையமாக வைத்து, படைப்பு இலக்கியங்களைப் படைத்ததுடன், ஆளும் வர்க்கத்தவர் இறையோடு ஒப்புநோக்கப்பட்டு, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டும் படைப்புகளை படைத்தனர். அந்த படைப்புகளே பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவனவாகவும் இருந்தன. ஆனாலும், அந்தப் போக்கை எதிர்த்து எழுந்த பாடல்களும் இலக்கியங்களும் அவ்வப்போது மக்களின் குரலாக எழுந்தன. ஆனால் அவை படைப்பு வெளியில் மேலெழும்பி, மக்களின் குரலாக வரலாற்றில் பதியப்படுவதை ஆளும் வர்க்கத்தினரால் தடைபோடப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்புகளிலிருந்தும், புலவர்களின் திறமையால் எமக்கு சில படைப்புகள் எஞ்சியிருக்கின்றன. அவற்றையே நாங்கள் இன்று எடுத்துக்காட்டுகளாகவும், மக்களின் வாழ்வியல் முறைமைகளை அறிந்துகொள்வதற்காகவும் பார்க்கின்றோம். இந்த ஆளும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமானது, இன்றும் மரபு, மதம், சடங்குகள், பண்பாடு என்ற வடிவங்களில் தொடர்வதுடன், ஆளும் வர்க்க கருத்தியலினை தளமாகக் கொண்டே படைப்பு வெளி முதன்மைப்படுத்தப்படுகிறது. ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களின் குரலினை பேசுவது என்பது குறைவாக உள்ளது. அப்படி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக படைப்புகளை படைக்கிறோம் என்று சொல்பவர்கன் கூட, அதனை தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவே முன்னெடுக்கின்றனர். படைப்பு வெளி தன் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் கால மாற்றத்திற்கேற்ப மாறிக்கொண்டிருந்தாலும், அவை யாவும் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தினரின் கருத்தியல்களுக்கு உட்பட்டே நிற்கின்றன. ஆனால், படைப்பாளிகள் அதனுள் உள்ளடங்கும் கருத்தியலின் அரசியலை அரசியல் அல்ல என்றும், கலையாகவோ இலக்கியமாகவோ மட்டுமே நோக்கவேண்டும் என்று பிதற்றுகிறார்கள். இராமாயணமும் மகாபாரதமும் படைப்பு இலக்கியமாக நோக்கப்பட்டு, பகுப்பாய்ந்து கொண்டாடப்படுமளவுக்கு, அதில் இருக்கும் வர்க்க அரசியல் கேள்விக்குட்படுத்தப்படவில்லை.

படைப்பு வெளிகள் இனத்தின் தொன்மையைக் காப்பதுடன் அந்தந்த இனங்களின் மரபின் மீள்வாசிப்புக்கும் உதவிபுரிகின்றன. தமிழினத்தைப் பொறுத்தவரையில் அதன் மொழியின் பேறுகளாகவும் தொடர்ச்சிகளாகவும் படைப்பு வெளி நோக்கப்படுகிறது. ஆயினும் எந்தவொரு படைப்பும் அதன் இயங்குநிலையில் இருக்கவேண்டுமெனில் அது உழைக்கும் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும். வெறும் பொழுதுபோக்கையும் ஆளும் வர்க்கத்தைத் துதிபாடும் படைப்புக்கள் சமூகத்தை அதன் வீரியத்துடன் சென்றடையாது. சென்றடைந்தாலும் நின்று நிலைக்கா. இன்றும் மக்களிடையே புழக்கத்திலிருக்கும் நாட்டார் பாடல்களும் கலைகளும் மக்களிடம் நின்று நிலைப்பதற்கு, அவை உழைக்கும் மக்கள் சார்பானதாக இருப்பதே காரணமாகும். அந்த படைப்பு வெளிகள் யாவும் மரபுக் உழைப்பையும் உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் சம அளவில் கொண்டிருக்கின்றன. உழைப்பானது அந்த மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாதபோது, அந்த உழைக்கும் மக்களின் வாயிலாக பிறந்த கலைவடிவங்களும் கூட மக்களின் உணர்வுகளுக்கேற்ப தன்னுடைய படைப்பு வெளியில் பல வடிவங்களையும் எடுத்துள்ளது.

உழைக்கும் மக்களின் படைப்புகள் வெறுமனே அவர்களது வாழ்க்கையின் அனுபவங்களை மட்டும் பேசவில்லை. அதனோடு சேர்த்து அவர்களது சமூகப் போராட்டங்கள் பற்றியும் பேசியிருக்கின்றன. முன்பு இயற்கையுடன் போராடிய மக்கள் பின்னர் தாம் சார்ந்த வாழ்க்கையில் அரசியல், பொருண்மியம் என்ற இரு பெரும் தளங்களில் ஆளும் வர்க்கத்தினரிற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். அவையே அந்த போராட்ட நிலைமாற்றம் அவர்களின் பண்பாட்டோடு இயைந்து, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை பேசுவதாக படைப்பு வெளியிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது.

மக்களது கலைகள் யாவும் உழைப்பினை நடுவப்படுத்தியதாகவே தோன்றின. குறிப்பாக, உழைக்கும் மக்களின் வாழ்வியல் தேவைகள் யாவும் அவர்களின் சமூகப் பின்புலத்தில் கலைகளாக, இலக்கியங்களாக வடிவம் பெற்றன. ஆனால் எந்தப் படைப்பும் ஆதிக்க சமூகத்தை எதிர்த்து எழும் குரலாக எழுவது தவிர்க்க முடியாதது. ஆளும் வர்க்கத்திற்கு சார்பாகவோ அல்லது தமது சமூகத்திலுள்ள ஆதிக்கவாதிகளுக்கு சார்ந்ததாகவோ இருப்பின் மட்டுமே அவை அந்த சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் படைப்பு என்ற எழுதப்படாத விதிக்குள் நின்றே இன்றைய படைப்பு வெளிகள் குப்பை படைப்புகளால் நிரம்பி வழிகின்றன. ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்தப் படைப்பாளி சார்ந்த மரபின் சமூகத்தின் உழைக்கும் மக்களின் வலிகளைப் பேசுவதாக எழ வேண்டும். இங்கோ, கூலிக்கு மாரடிக்கும் படைப்பாளர் கூட்டம் ஆளும் வர்க்கத்திற்கு பரணி பாடுவதற்கும், அவ்வாறு பரணி பாடுபவர்கள் எல்லோரும் ஒரு மூடர் சமூகமாகி, தங்களைத் தாமே புகழ்பாடும் போக்கே காணப்படுகிறது. “பணச்சடங்கு போல இதுபுகழ் சடங்கு ஆகிவிட்டது. படைப்பு போலிகள் உழைப்பை பேசாது, தரகு வர்க்கத்தின் அரச கைக்கூலிகளாக இயங்கி, மேற்கத்தைய மற்றும் சமசுக்கிருத கலப்புடன் படைப்பவையே மேன்மை படைப்புக்கள் என்ற மாயை ஒன்றை தமிழ் படைப்பு வெளியில் உருவாக்கியிருக்கின்றனர். நாட்டுப்புறக்கலைகள், கதைப்பாடல்கள், உழவுத் தொழிற் களப்பாடல்கள், அம்பாப் பாடல்கள் என உழைக்கும் மக்களைப் பேசுபொருளாகக் கொண்டிருந்த தமிழின் படைப்பு வெளி இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது. எமது வாழ்வியலைப் பேசிய அந்த வெளியானது மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படும்போது எமது மரபு உள்ளடக்கங்களும் மீள வாசிக்க முடியும்.

ஈழத்துத் தமிழர்களின் படைப்பு வெளியும் அதன் மக்கள் சார்பு நிலையை இழந்து, சமசுகிருத மொழியின் பயன்பாட்டுக்குள் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் அல்லாதோரால் நம்மீது திணிக்கப்பட்ட போலி அழகியலுக்குள் அமிழ்ந்து கிடக்கிறோம். கலை கலைக்காகவே என்ற கலையின் அழகியல் கொள்கையினூடாக, படைப்பு அவற்றின் அழகியல் தளத்தில் நின்றே நோக்கப்படவேண்டும் என்ற போக்கும் தொடர்கிறது. அந்த போக்கின் பின்னாலுள்ள அரசியலானது படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்த அரசியலையும் மக்களுடைய குரல்களையும், அழகியல் என்ற தளத்தில் நின்று மறுப்பதற்கானதே. ஆனால் இனத்தின் இருப்பிற்கும் அதன் மரபின் மீள்வாசித்தலுக்கும், வாழ்வியலைப் பதிவதற்குமாக எங்களுடைய படைப்பு வெளிகள் மாற வேண்டும். படைப்பு வெளி உழைக்கும் மக்களின் புரட்சிகர வெளியாக உருவெடுக்கும்போதே, அது சமூகத்தின் கைகளின் மீளவும் வரும். இனத்தின் அரசியலையும் விடுதலையையும் பேசுவது என்பது, அரசியல் எமக்கு தேவையில்லை என்ற அபத்தத்தின் வெளிப்பாடாக எமது சூழலில் காணப்படுகிறது. மக்களின் வலிகளைப் பேசும் படைப்புகள் இலக்கிய இலக்கணங்களுக்குள் வரவில்லை என்று கலைத்துவ சிதைவென்று கூறி, காரண காரியமற்றும் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன.

இந்த நிலையில் படைப்பாளர்களுக்கு உழைக்கும் மக்களின் குரல்களைப் பதிவுசெய்வதும், அதனூடாக எமது மரபினை வரலாறாக்குவதுமான இரட்டைச்சுமை உள்ளது. ஆளும் அதிகார வர்க்கத்தினரின் கருத்தியல்களை எதிர்த்து, அந்த வர்க்கத்தின் தரகு முதலாளிகளின் படைப்புகளை தவிர்த்து, எமக்கான படைப்புவெளியை நாம் உருவாக்க வேண்டும்.

“உடலைக் கசக்கி உதிர்த்த

வேர்வையின்

ஒவ்வொரு துளியிலும் கண்டேன்

இவ்வுலகு உழைப்பவர்க்கு

உரியதென்பதையே’’ (பாவேந்தன் பாரதிதாசன்)

-செல்வி-

2018-02-06

4,676 total views, 6 views today

Be the first to comment

Leave a Reply