இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பண்டாரங்களின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

இலகு புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் பெரும்பாலானோர் அடங்கலாகப் பலருக்கு அரசியல் வரட்சியும் புரிதலின்மையும் மறதியும் மிகவும் கூடுதலாகவிருப்பதால் இந்த இலகு அணுகுமுறையில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பால பாடமாகக் கற்க வேண்டியவற்றை மீள் நினைவுறுத்துவதாய் கீழ் வரும் வினா- விடைகள் எழுதப்படுகின்றன.

  1. இந்தியா என்றால் என்ன?

தேசிய இனங்களின் இறைமையைப் பறித்து மண்ணின் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடிமையாக்கி ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களின் காலனித்துவப் பசிக்காக உருவாக்கப்பட்ட சந்தையானது ஆங்கிலேய ஆதிக்கத்தின் முகவர்களான ஆரிய பார்ப்பனிய- பனியா ஆதிக்க வர்க்கத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வேறு வழியில்லாமல் 29 மொழிவழி மாநிலங்களாக்கி இன்றும் பேணப்படும் சந்தையே தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஆகும்.

இந்த சந்தையாக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறி இறைமையுள்ள தேச அரசமைப்பதற்காக இந்தச் சந்தையின் வட கிழக்காக உள்ள நாகலாந்து, அசாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுர மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் சீகியர்களின் தாயகமான பஞ்சாப் மற்றும் இன்றைய கரியானா, கிமாச்சலப் பிரதேசம், ராயசுதான், சண்டிகார் மற்றும் யம்மு காசுமீர் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய காலிசுதான் என்கின்ற சீக்கியரிற்கான தனிநாடு, வடக்கேயுள்ள யம்மு காசுமீர் என சுடுகலன் ஏந்திய மறப்போராட்டங்கள் முடக்கப்பட்டாலும் முற்றாக அழிக்கப்பட முடியாத நிலையில் இன்றும் தொடரும் நிலையில் உள்ளது. அத்துடன் தமிழ்நாடு விடுதலை கோரி நடந்த மறவழிப் போர் முளையிலேயே ஒடுக்கப்பட்டாலும் தான் இழந்த இறைமையை மீட்க எழுந்து போராட வேண்டிய நிலையை உணர்ந்து வரும் தமிழ்நாடு என இந்தச் சந்தையிலுள்ள பாதி மாநிலங்களில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்கள் எடுப்பினும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

2) இந்திய அரசு என்றால் என்ன? அரசாங்கம் என்றால் என்ன?

இந்திய ஆளும் வர்க்க (அம்பானி, அதானி வகையறாக்கள்) நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றதும் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக மூல அதிகாரங்களைக் கொண்டு தொடர்ந்து இயங்குவதுமான நிரந்தரமான பொறிமுறையே இந்திய அரசு ஆகும்.

அரசிடமிருந்து அதிகாரங்களைப் பெற்று இந்திய ஆளும் வர்க்கங்களான தரகு முதலாளிகளுக்குக்கான முகவராகச் செயற்படும் தற்காலிக தன்மையுடையதே இந்திய அரசாங்கம் ஆகும். ஆட்சி மாற்றம் என்பது அரசாங்கங்கள் மாறுவதே. பா.ச.க விற்குப் பதிலாக காங்கிரசோ இன்னபிற மூன்றாவதோ நாலாவதோ அணி அரசாங்கமாக மாறி மாறி வரலாம். ஆனால் இந்திய அரசு மாறாது. அது எப்போதும் ஆளும் வர்க்க நலன்களிற்கானதே.

3) இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது என்ன? இந்தியாவின் அயலுறவுக்கொள்கைகளிற்கும் ஆட்சி மாற்றங்களிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான மூலதனத் திரட்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் பிராந்திய மேலாதிக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது தான் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் அயலுறவுக் கொள்கைகள். இதற்கு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இந்தியா என்ற பாரிய சந்தை இருக்க வேண்டியதும், அண்டை நாடுகள் மீதான மேலாதிக்கத்தை அது பேண வேண்டியதும் அவசியமாகின்றது. அரசாங்கங்கள் மாறும் ஆட்சி மாற்றமானது இந்திய அரசை மாற்றாது. எனவே ஆட்சி மாற்றங்களால் இந்திய அரசின் அயலுறவுக்கொள்கை மாறாது.

4) இந்தியாவின் அயலுறவு கொள்கை தான் ஈழத்தமிழரிற்கு எதிராக இருப்பதுடன் அது இந்தியாவிற்கும் கேடானது என்றும் அதனை மாற்றுமாறு இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு அரசியல் ஆய்வாளர்கள் என்று கருத்தப்படுவோர் வகுப்பு எடுப்பது பற்றி?

இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்களிற்கானது தான். ஆளும் வர்க்க நலன்களிற்கேற்றாற் போல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா என்ற சந்தையைப் பேணுவதற்கும் அண்டை நாடுகளின் மீது சந்தை விரிவாக்கம் செய்வதற்காக மேலாதிக்கம் செய்வதும் தான் இந்தியாவின் கொள்கை வகுப்பு. எனவே இந்தியாவின் அயலுறவுக் கொள்கை இப்படி இருப்பதாலேயே இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் இன்றும் உடையாமல் இருக்கின்றது. எனவே இந்தியாவின் அயலுறவுக் கொள்கை மாற்றம் என்பது இந்த ஆய்வுக் குன்றுகள் சொல்வது போல நடைபெறாது.

5) தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவது சாத்தியமானதா?

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான மூலதனத் திரட்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் பிராந்திய மேலாதிக்கம் என்பவற்றின் அடிப்படையிலானது தான் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள். இதற்கு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இந்தியா என்ற பாரிய சந்தை இருக்க வேண்டியதும், அண்டை நாடுகள் மீதான மேலாதிக்கத்தை அது பேண வேண்டியதும் அவசியமாகின்றது. எனவே, தனது பிராந்தியத்தில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவது தனது ஆளும் வர்க்க நலன்களுக்கு கேடாக அமையும் என்பதால், தனது பிராந்தியத்தில் நடைபெறும் நடைபெறப்போகும் எந்தவொரு தேசிய இன விடுதலைப் போரையும் அழிப்பதற்கு இந்தியா தன்னாலியன்ற அனைத்தையும் செய்தேயாகும். எனவே இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் உடையத் தொடங்கினால் தெற்காசியப் பிராந்தியத்தில் பல தேசிய இனங்களின் விடுதலை சாத்தியமாகும். தமிழீழமும் இந்த மெய்நிலைக்குட்பட்டே சாத்தியமாகும். இன்றேல் நிழலரசு வரையே எப்பாடுபடினும் எத்தகைய ஈகங்களைச் செய்யினும் செல்ல முடியும். இதுவே எமக்கு நடந்தது.

6) தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதை இல்லாதொழிக்க இந்தியா எடுக்கும் நர சூழ்ச்சிகள் எத்தன்மையிலானவை?

நாகலாந்தில் ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்ற வீரஞ்செறிந்த மறப்போராட்டத்தினை முடக்குவதற்காக இந்தியா போர்த்தவிர்ப்பை 1997 இல் கொண்டு வந்தது. பின் 2000 ஆம் ஆண்டில் நாகலாந்து விடுதலை இயக்கத்திற்கான செயற்பாட்டுத் தளமாக இருந்த மியான்மாரின் எல்லைப் பகுதிகளில் இருந்த பகுதிகளை மியான்மார் அரசுடன் பேசி இல்லாமல் செய்தது. பின்னர், நாகலாந்து தேசிய பாதுகாப்பு அவையுடன் 2003 இல் அமைதிப் பேச்சைத் தொடங்கியது.  இவ்வாறே இருபது ஆண்டுகளாக இறைமையுடைய மிசோரம் தனி நாடமைக்கப் போராடிய மிசோரம் விடுதலை இயக்கமும் அமைதிப் பேச்சு என்ற போர்வையில் அழைக்கப்பட்டு, போர்த்தவிர்ப்புக் காலம் நீட்டப்பட்டது.

இப்படியாக அமைதிப் பேச்சுக் காலங்களினை நீட்டிப்புச் செய்து அந்தக் காலத்தில் பேச்சுக்கு வரும் விடுதலை இயக்கங்களின் முதன்மை நிலைத் தலைவர்களுடன் நேரில் பழகும் வாய்ப்பைப் பயன்படுத்திப் பிரித்து விடுதலை இயக்கங்களைப் பலவீனப்படுத்தலும் அக்காலத்தில் போராடிய மக்களின் நுகர்வுப் பண்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவாறு நகர்வுகளைச் செய்து மறவழிப் போராட்டங்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தளரச் செய்த பின்னர், சனநாயகவெளியை ஏற்படுத்தச் சொல்லி தேர்தல் அரசியலுக்குள் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு  இறைமையுள்ள தனிநாடு தான் தீர்வு என்று நம்பும் மக்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்தல் என்றவாறு நர சூழ்ச்சியை இந்தியா செய்தது. இதே போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த அமைதிப் பேச்சும் அமைய வேண்டும் என இந்தியா நோர்வேயை வழிநடத்தியது. சிறிலங்கா வரும் எரிக் சொல்கெய்ம் டெல்கி வழியாகவே நோர்வே செல்வதாகவும் அங்கே போதியளவு வழிகாட்டல்களை இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் தனக்கு வழங்குவதாகவும் எரிக் சொல்கெய்ம் தெளிவாகப் பலமுறை பதிவு செய்துள்ளார். எனவே அமைதிப் பேச்சு என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நடந்தது தான் நாகலாந்து மற்றும் மிசோரத்தில் ஏலவே நடந்தது.

7) தெற்காசியப் பிராந்தியத்தில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனத்தின் விடுதலை அமைப்புக்கு உண்மையான நட்புச் சக்திகளாக அமைய வல்லவர்கள் யார்?

இறைமையுள்ள அசாம் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடர முயலும் ULFA (UNITED LIBERATION FRONT OF ASSAM), ADIVASI NATIONAL LIBERATION ARMY, KLNLF, NDFB போன்ற விடுதலை இயக்கங்கள், இறைமையுள்ள நாகலாந்து நாடமைக்கும் வேட்கையில் இன்றும் இருக்கும் NAGA NATIONAL COUNCIL, NAGA FEDERAL ARMY, NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND போன்ற விடுதலை இயக்கங்கள், இறைமையுள்ள மணிப்பூர் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடரும் PEOPLE’S LIBERATION ARMY OF MANIPUR, PREPAK, KCP போன்ற விடுதலை இயக்கங்கள், இறைமையுள்ள மிசோரம் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடரும் MIZO NATIONAL FRONT, MIZO NATIONAL ARMY போன்ற விடுதலை இயக்கங்கள், இன்றைய அருணாச்சல் பிரதேசம் என்று சொல்லப்படும் பகுதியில் தனிலாந்து எனும் இறைமையுள்ள தனிநாடமைக்கப் போராடும் NATIONAL LIBERATION COUNCIL OF TANILAND, திரிபுரவில் திரிபுரித் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் NATIONAL LIBERATION FRONT OF TRIPURA என்ற விடுதலை இயக்கம், சீக்கியர்களின் தாயகமான காலித்தான் என்ற இறைமையுள்ள தனிநாடமைக்கப் போராடும் KHALISTAN LIBERATION FORCE என்ற விடுதலை இயக்கம் போன்ற இந்தியச் சிறையினுள் பூட்டி வைக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் விடுதலைக்காக இறைமையுள்ள தனிநாடு கோரிப் போராடும் விடுதலை இயக்கங்களே தெற்காசியப் பிராந்தியத்தில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனத்தின் விடுதலை அமைப்புக்கு உண்மையான நட்புச் சக்திகளாக அமைய வல்லவர்கள்.

8) சிறிலங்கா இந்தியாவை ஏமாற்றி ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வைத்தது என்று கூறுவது குறித்து என்ன விளக்கம்?

தனது சந்தையை விரிப்பதற்கான இந்தியாவின் அண்டை நாடுகளின் மீதான மேலாதிக்கத்தையும் அதற்காகவே ஒடுக்கப்படும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் பற்றிய உண்மைச் செய்தியை மறைத்து இந்தியாவின் ஆதிக்க நலனிற்காக உளறுகின்ற ஈனச் செயல் தான் இப்படியான கதையளப்புகள்.

9) இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் ஒட்டான உறவை ஏற்படுத்தி மனம் விட்டுப் பேசி அவர்களின் மனங்களை வென்றெடுப்பதன் மூலம் டெல்கி சென்று மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகச் செயற்படுபவர்களின் செயற்பாடுகள் குறித்து என்ன விளக்கம்?

தனிநபர்களின் குணநிலைப் போக்குகளும் அவர்களின் அறவுணர்ச்சியும் அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் என்று சொல்பவர்கள் ஒன்றில் அடிமுட்டாளாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஒரு இனத்தையே முட்டாளாக்க நினைக்கும் நயவஞ்சகர்களாக இருக்க வேண்டும்.

மக்களின் வாழ்வியலிலிருந்து நுகர்வுக் கலாச்சாரம் வரை பன்னாட்டு நிறுவனங்களாலும் அவற்றின் தரகு முதலாளிகளாலும் தீர்மானிக்கப்பட இயலும் இன்றைய உலக ஒழுங்கில், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கமைய இருக்கின்றது என்று கூறுவதைப் போன்ற பித்தலாட்டம் தமிழர்களின் அரசியலில் இன்றும் நடந்தேறுகின்றது.

பா.ச..க வோ காங்கிரசோ இல்லை வேறு எந்த முற்போக்கு, பிற்போக்கு அணிகளோ ஆட்சி அமைத்தாலும், ஈழம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை மாறாது. ஏனெனில், இலங்கை மீது மேலாதிக்கம் செய்வது என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைதான் இந்திய அரசின் சிறிலங்கா மீதான உறவுகளைத் தீர்மானிக்கும் கொள்கையாகவும் இருக்கின்றது.

10) ஈழத்தில் இறந்தவர்கள் இந்துக்கள் எனவும் சிங்களவர்களால் இடிக்கப்பட்டவை இந்துக் கோயில்கள் எனவும் எடுத்து விளக்க டெல்கிக்கு அடிக்கடி பயணப்படும் செயற்பாடுகள் குறித்து?

ஒரு நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளினைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது அந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் தான். இதற்கு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இந்தியா என்ற பாரிய சந்தை இருக்க வேண்டியதும், அண்டை நாடுகள் மீதான மேலாதிக்கத்தை அது பேண வேண்டியதும் அவசியமாகின்றது. எனவே தெற்காசியப் பிராந்தியத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா நசுக்கியே தீரும்.  எனவே, ஈழத்தமிழனை இலங்கை இந்துவாக்கினால் தமிழினச் சிக்கலிற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்பவர்களைக் கண்டால் தமிழர்கள் தூர விலகுவது நல்லது.

11) இந்திராகாந்தியை அன்னை என்று சொல்வதுவும்அன்னை இந்திராகந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்என்று கூறுவது குறித்து எப்படிப் பார்க்க வேண்டும்?

1978 ஆம் ஆண்டு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராகிய செயவர்த்தனவோ திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த அதேவேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு முற்பட்டார். சோவியத் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் செயவர்த்தன நெருங்கிச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அது தமது மேலாண்மையைப் பாதிப்பதாக அமையும் எனவும் இந்திராகாந்தியின் இந்திய அரசாங்கம் கருதியது. அதனால், இலங்கைத் தீவின் இன நெருக்கடியை சிறிலங்கா மீதான தனது மேலாண்மையை நிலைநாட்டும் வாய்ப்பாகப் பயன்படுத்துவததென இந்திராகாந்தி முடிவெடுத்தார்.

1983 ஆண்டு சிங்கள அரசினால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆடிக்கலவரத்தினால், லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்தார்கள். அத்துடன், தமிழர்கள் சிறிலங்காவில் கொன்றொழிக்கப்படுவதால் கொதித்துப் போன தமிழ்நாட்டு மக்கள் உணர்வெழுச்சியுடன் பாரிய போராட்டங்களைச் செய்தனர். ஆனால் இவற்றையெல்லாம், சிறிலங்காவின் மீதான தனது மேலாண்மையைச் செலுத்தவல்ல பொன்னான வாய்ப்பாகக் கருதிய இந்திராவின் இந்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது போலவும் ஈழத்தமிழர்களைக் காப்பது போலவும் பாசாங்கு செய்தவாறு தனது மேலாண்மைக் கனவுடன் காலடி எடுத்து வைத்தது.

இந்திராகாந்தி. ரசிய- அமெரிக்க பனிப்போர் உச்சத்தில் இருந்தது இக்கால கட்டத்திலேயாகும். யே.ஆர் அரசாங்கத்தின் எல்லைமீறிய அமெரிக்க சார்பு நிலையைப் பார்த்துப் பதற்றப்பட்ட இந்தியா, தனது புவிசார் நலன்கள், பொருண்மிய ஒத்துழைப்பு, சிறிலங்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பவை தனது நலனுக்கு எதிராக இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றை சிந்தையில் கொண்டு, ஈழப்போராளிக் குழுக்களைப் பயிற்றுவித்து ஆயுதங்களும் நிதியுதவியுமளித்து போராளிக்குழுக்களை ஏவி விட்டுத் தனது கூலிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்க சார்பு யே.ஆரின் அரசாங்கத்திற்கு கீழிலிருந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி, விலக்குப் பிடிக்க வருவது போல தலையிட்டுத் தனது சிறிலங்கா மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதென கங்கணம் கட்டிச் செயற்பட்டது. தனது இந்த மேலாண்மை செலுத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தமிழர்கள் மீதான கரிசனை மற்றும் மனிதாபிமான அணுகுமுறை போன்ற அரசறிவியலுக்குப் பொருந்தாத சொற்றொடர்களுக்குள் ஒளித்த இந்திராகாந்தி தமிழர்களை முட்டாள்களாக்குவதில் வெற்றி கண்டார். இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு அவர்களது தாயகநிலப்பரப்புக்களை சிங்களத்திடம் இருந்து மீட்டுத் தனிநாடாக்கிக் கொடுத்தால் தமிழ்நாடும் தனிநாடாகி இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை சிந்தையில் கொண்டு மிகவும் சிரத்தையுடனே தனது மேலாதிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் இந்திராகாந்தி. எனவே விடுதலைப் போராளிகள் தாமகவே போராடிப் பெறப்போகும் ஈழம் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது எனக் கருதிய இந்திராகாந்தி, தமிழ்மிதவாதத் தலைமைகள் மற்றும் ரெலோ போன்ற அமைப்பினரைத் தமக்குச் சார்பானோராக்கி அவர்களுக்கு ஒரு அரைகுறைத் தீர்வு மூலம் பொறுப்பினைக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு காய்நகர்த்தினார்.

12) 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தாகிய சிறிலங்காஇந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு என்று சொல்லப்படுகின்றதே?

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராசீவ் காந்தியும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஆம். இது இந்தியாவிற்குப் பொன்னான வாய்ப்புத் தான். புலிகளின் தீர்க்கமான முடிவும் இந்தியக் கொலைவெறிப் படைக்கெதிரான வீரஞ்செறிந்த மறப்போராட்டமும் இந்தியாவிற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை இல்லாததாக்கித் தமிழர்களின் விடுதலை மாண்பினைக் காப்பாற்ற உதவியது.

13) ராசீவ்காந்தி கொலையுண்டமையால் தான் ஈழத்தமிழருக்கு இந்த நிலை ஏற்பட்டதென்று அன்றும் இன்றும் கூறும் முன்னாள் அரசியல் ஆய்வாளராகிய மு.திருநாவுக்கரசு போன்றோரின் கருத்துப் பற்றி?

ராசீவ்காந்தி கொலையுண்டமைக்காகத் தான் இந்தியா ஈழத் தமிழரை அழிக்கும் நோக்குடன் செயற்படுகின்றது என்று கூறுவதன் மூலம் தனது ஆளும் வர்க்க நலன்களிற்காக அண்டை நாடுகளின் மீது மேலாதிக்கம் செலுத்துவதும் அங்குள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்களை அழிப்பதன் மூலம் இந்தியா என்ற தனது சந்தையையும் காப்பாற்றுவதோடு மேலும் சந்தை விரிவாக்கக் கனவுடன் இந்தியா தொடர்ந்து செயற்படும் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் ராசீவின் கொலை பற்றிய செய்தி இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்கு வாய்ப்பாகவே பயன்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ராசீவ் கொலையைக் காரணம் காட்டி தமிழ்நாட்டிலுள்ள தீவிர தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களும் தமிழ்நாடு விடுதலை பற்றியும் உலகத் தமிழின விடுதலை பற்றியும் செயற்பாட்டார்வம் காட்டிய தமிழுணர்வாளர்களும் இந்தியாவால் நர வேட்டையாடப்பட்டனர். இவ்வாறாக, தமிழ்நாட்டில் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சி எதிர்காலத்திலும் ஏற்படாதிருப்பதனை உறுதி செய்வதற்காக தமிழின உணர்வாளர்கள் மீது ராசீவ்கொலையை காரணம் காட்டி கொடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டது.

தனித் தமிழ்நாடு விடுதலை அடைவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவும் தமிழீழ விடுதலையை தனது சந்தை இருப்பு மற்றும் விரிவாக்கத்திற்காக அழிக்க முடிவெடுத்த இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக பயன்படும் ராசீவ்காந்தி கொலை பற்றிய பேச்சை முன்னாள் அரசியல் ஆய்வாளரும் தொடர்ந்து சொல்கின்றார் எனில் அவரின் செயற்பாடுகள் குறித்து ஈழத்தமிழர் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கூட்டத்தில் இதே கருத்தை அந்நாளில் அரசியல் ஆய்வாளராக இருந்த மு.திருநாவுக்கரசு கூறியதோடு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்து ரணிலின் வருகையைத் தடுத்தது தவறெனப் பொருட்படும் படியும் வலியுறுத்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவரிற்கான முதன்மையளித்தல் இல்லாதாக்கப்பட்டமையை தொடர்ச்சியான நிகழ்வுகளைக் கண்ணுற்றோர் தெரிந்திருப்பர்.

அத்துடன், உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை 2009 ஆம் ஆண்டு ஏழாம் மாதமளவில் இந்தியாவின் வெளியக உளவுத்துறையான றோ உருவாக்கிக் கொண்டது. இதில் புலம்பெயர்ந்தவர்கள் அடங்கலாகப் பல ஈழத் தமிழ் ஊடகர்களும் பத்தி எழுத்தாளர்களும் உள்வாங்கப்பட்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு வேலையை ராமச்சந்திரன் என்கின்ற தென்னிந்திய ஆங்கில ஊடகச் செயற்பாட்டாளன் செய்தான். இதன் விளைவாகவே ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் சரியான செல்வழி செல்வது முடியாமல் இருக்கின்றது. எனவே எச்சரிக்கை உணர்வு இப்போது மிகவும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

14) சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்றும் அதனால் புவிசார் அரசியலின் நலனாக இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் அமையும் என இந்த முன்னாள் அரசியல் ஆய்வாளர் கூறி வருவதை எப்படிப் பார்க்க வேண்டும்?

சீனா இந்தியாவிற்கு எதிரான கடல் முற்றுகையைச் செய்து இந்து மா கடல் பகுதியில் இந்தியாவிற்கு எதிரான மேலாதிக்கப் போட்டியில் இறங்குவதோடு அதற்கு வலுச்சேர்ப்பதாக சிறிலங்காவுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் தேவையறிந்து செய்து வருகின்றது. எனவே தான் இந்தியா சிறிலங்காவைப் பகைத்துக் கொள்ளாமல் தன் பக்கம் சாய்ப்பதற்காக சிறிலங்காவுக்கு உதவுகின்றது என்று கூறி தமிழினப் படுகொலையில் தனது முதன்மைப் பங்கை இந்தியா மறைக்கின்றது. உண்மையில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் படியே இந்தியா நடந்துகொள்கின்றது. அது எப்போதும் தெற்காசியப் பிராந்தியத்தில் நடக்கும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்குக் கொண்டது. சீனா வேண்டுமெனில் உலகின் வல்லரசாகலாம். ஆனால், இந்து மா கடல் பகுதியில் அமெரிக்காவும் அதனது பேட்டை ரவுடியுமான இந்தியாவுமே ஆதிக்கம் செலுத்தும்.

“புவிசார் அரசியலும் தமிழீழமும்” என்ற கட்டுரையைப் படிப்பதன் மூலம் இது குறித்துத் தெளிவான புரிதலைப் பெறலாம். http://www.kaakam.com/?p=941

எனவே சீனப் பூச்சாண்டி காட்டுவதன் மூலம் இந்து மா கடலில் அமெரிக்க இந்தியக் கூட்டு மேலாதிக்கத்திற்கான எல்லாச் செயற்பாடுகளும் ஞாயப்படுத்தப்படுகின்றது. சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்றும் அதனால் புவிசார் அரசியலின் நலனாக இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் அமையும் என கதையளப்பது இந்தியாவின் உண்மையான அயலுறவுக் கொள்கையை மறைத்து ஈழத்தமிழரை ஒரு மாயையிலும் போலி நம்பிக்கையிலும் மறுபடியும் மூழ்கச் செய்யும் நோக்கிலானதே.

15) ஈழத்தமிழரின் பன்னாட்டு அரசியல் வெளியில் தற்குறி அரசியல் என்பது எது?

(பட விளக்கம்)

16) தமிழீழ விடுதலைக்கு என்னதான் வழி?

எமக்கு இருக்கும் ஒரேயொரு வழி தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர் தேசங்களில் மக்கள் மயப்பட்ட புரட்சிப் போராட்டமே. இதற்கு உலகவாழ் தமிழரனைவரும் உழைக்க வேண்டியதே இப்போதிருக்கும் ஒரே வழி. மற்றைய படி புவிசார் அரசியல் பேசுவதும் ஐ.நா மன்றம் போவதும் ஒரே மாதிரியான இரு வேறு நிகழ்வுகளே. இது தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர எக்காலத்திலும் உதவாது. இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமாகிய சந்தை துண்டு துண்டாக உடைந்து தேசிய இனங்கள் விடுதலையடைந்தாலே தமிழீழம் இந்த உலகில் மலர உறுதியான வாய்ப்புண்டு.

 

 

Loading

(Visited 60 times, 1 visits today)

Be the first to comment

Leave a Reply