
மனித குல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல நாடுகளும் பேரரசுக்களும் தோன்றின. பல மறைந்தும் போயின.
உலகில் மிக தொன்மக் குடிகள் என வரலாற்று ஆய்வாளர்களாலும் பல சான்றுகளாலும் குறிக்கப்பட்டும், இன்றும் பல எச்சசொச்சங்களை எடுகோள்களாகவும் கொண்டிருக்கும் இனமாக தமிழினம் தனது வரலாற்றை தனித்துவமாகக் கொண்டிருக்கின்றது. இயற்கை அழிவுகள் எனவும், வணிக நோக்கங்களுக்காகவும் பல பெயர்வுகள் நடந்துள்ளன. அதே போல் போர் நடவடிக்கைகள் மூலமும் பல நாடுகளை வென்ற வரலாறுகளையும் அதனூடாக உலகின் பல பாகங்களுக்கு குடி நகர்வுகள் இடம் பெற்று வந்துள்ளமையையும் காணக்கூடியனவாக உள்ளன. காலஞ்செல்ல அந்நியராட்சிகளால் தமிழர் நிலங்கள் காவு கொள்ளப்பட்டு, அவர்களால் தொழிலாளர்களாக பல நாடுகளுக்கு தமிழர்கள் செல்ல வேண்டிய நிலை பிற்காலத்தில் ஏற்பட்ட சோகமும் எமது வரலாற்றின் இருண்மைப் பகுதிகள் தான்.
தவிர, பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்ää அடிப்படையில் அவர்களை இரண்டு வகையினராக வகுக்கலாம்.
- தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள்
- தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள்
தமிழகத்ததைத் தாயகமாகக் கொண்டவர்கள்; தென்னாபிரிக்கா, பிஜி, மலேசியா பிரான்ஸ், தாய்லாந்து என பெரும் எண்ணிக்கைகளிலும் ஏனைய நாடுகளில் சிறு எண்ணிக்கைகளிலும் வாழ்கின்றனர். இங்கு இவர்களின் நகர்வுக் கால கட்டங்கள் இருநூறு ஆண்டுகளுக்குள்ளானதாக கால எல்லைகளைக் கொண்டிருந்தாலும், தமி;ழகத்திலிருந்து போர் நடவடிக்கைகளின் போது பெயர்ந்திருந்த மக்களின் வழித்தோன்றல்களின் வேர்களும்; அங்கு வாழ்ந்து, பின்னர் பின்னாளில் சென்றவர்களுடன் இணைந்திருக்கின்றனர். மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளை நாம் எடுகோள்களாகக் கொள்ள முடியும்.
தமிழீழத்தைப் பொறுத்தவரை பணி நிமித்தமாக மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தமிழர்கள் சென்ற காலத்திற்குச் சமமான காலத்தில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளுக்கு கல்விக்காகவும் பணிக்காகவும் தொடக்க காலத்தில் மேல் தட்டு தமிழர்கள் சென்றிருந்தாலும், நடுத்தரவர்க்கத் தமிழர்கள் அறுபதுகளிலேயே புலம் பெயரத் தொடங்கியுள்ளனர். அந்தவகையிலான பெயர்வுகள் பெரும்பாலும் ஆபிரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குமான நகர்வுகளாக இருந்து வந்துள்ளன. ஆபிரிக்க நாடுகளில் தமது பணிக்காலம் முடிய, பலர் குறிப்பாக பிரித்தானியாவை தமது வாழ்விடமாக்கியுள்ளமையை இனங்காணலாம். மலேசியாவிலிருந்தும் பெருந்தொகையான ஈழத்தமிழர் பல்வேறு நாடுகளுக்கும் பெயர்ந்துள்ளனர்.
பிரித்தானியரின் ஆட்சிக்கு உட்பட்ட ஈழத்தில் ஆங்கில மொழியுடனான கல்வியும் பணித்தகைமைகளும் இவர்களுக்கு இருந்தமையினாலும் ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு அவர்கள் ஈர்க்கப்பட்டனர். அத்தோடு பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வதை அன்று தொட்டு இன்று வரை ஒரு கௌரவமான பெயர்வாகவே பெரும்பாலானவர்கள் கருதி வருகின்றனர். ஒரு காலத்தில் தமது நாடு பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும்ää அவர்கள் எமை ஆண்டவர்கள், அரச வம்சத்தவர்கள் எனவே அவர்களின் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்ற ஒரு வகை உளவியல் மேலாண்மையாகக் கொள்ளும் நிலைமை இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளையர்கள் தங்களை எப்படி நடத்துகின்றனர், எப்படி உள்வாங்குகின்றனர் என்பதற்கு அப்பால், ஆரம்பத்தில் பெயர்ந்தவர்கள் தமது மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் சூழலை கறுப்பு நிற தோல் கொண்ட வெள்ளைக்கார மன நிலையிலேயே வைத்து வாழ்ந்தனர். வீட்டு மொழியாக ஆங்கிலமே கோலோச்சியது. அடுத்த தலைமுறையினரின் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் கோலங்கள் அவர்களிடமிருந்து அவர்களின் பெற்றார்களாலேயே விலக்கி வைக்கப்பட்டிருந்தது. சொந்த நாட்டின் இனப்பிரச்சினையின் தாக்கங்கள் அவர்களைத் தாயகம் பற்றியோ மொழி பற்றியோ சிந்திக்க விடாது செய்திருந்தது. கத்தோலிக்க கிருத்தவர்கள் நாட்டோடு கலந்திருந்த மத வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ள இலகுவாக இருந்தது. சைவ இந்துக்கள் உள்வீட்டில் சாதி சமய வர்க்க வாதங்களுடன் வலம் வந்தனர்.
எழுபதுகளில் தாயகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1977 தேர்தல், அதற்கு பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆடி இன வன்முறைகள் நாடு முழுவதும் ஊழித்தாண்டவமாடியது. தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் சட்ட அமுலாக்கம் எனப் பல விடயங்கள் அரங்கேறின. இதன் தாக்கங்களினாலும் முன்னே சென்றவர்களின் உறவுகளும், ஏனையவர்களும் பல்வேறு நாடுகளுக்கும் பெயரத் தொடங்குகின்றனர். கல்வி, பொருண்மிய, வர்க்க, மற்றும் சாதிய கட்டுடைப்புடனான நகர்வு இக்காலகட்டத்திலேயே உருவாகுகிறது. தாயகத்தில் இடம்பெற்று வருகின்ற இனமுரண்பாடுகளுக்கு வடிகால்களாகவும் இனத்துவ குமுக (சமூக) விடுதலை பற்றி சிந்திப்பவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்தும் செயற்படும் காலமும் முகிழ்ந்தது இக்காலக்கட்டங்களிலேயே ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில், அவ்வாறான செயற்பாடுகள் முளை விடத்தொடங்கின. பொது அமைப்புக்கள் நிறுவப்பட்டன. தொடக்க காலத்தில் வந்தவர்கள் பின்னே வந்தவர்களுடன் இணைந்து செயற்படும் தன்மைகள் மிக மிகக் குறைவாகக் காணப்பட்டன. தாம் படிப்புக்காகவும் பணிக்காகவும் தாயகத்தின் உயர் மட்டத்திலிருந்து வந்தவர்கள்; என்ற மமதை அவர்களை ஆட்கொண்டிருந்தமையே அதற்குரிய காரணங்களாக இருந்துள்ளன.
1983ல் இடம்பெற்ற ஆடி இனக்கலவரமானது தமிழர்களின் பாரிய இடப்பெயர்வையும் புலப்பெயர்வையும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்றது. கொழும்பில், தென்பகுதியில் தொழில் புரிந்தவர்கள் கூட வெளியேறத் தொடங்கினர். அவ்வன்முறையானது பன்னாட்டவரினதும் கவனத்தை சிறிலங்கா மீது திருப்பிய அதே நேரம், அவர்களின் குயுக்தியான காய் நகர்த்தல்களையும் நகர்த்துவதற்காக புலப்பெயர்வில் பாதையை அகலத் திறந்து விட்டார்கள். உலகத்தை வரை படத்தில் பார்த்தவர்கள் அந்நாடுகளில் வாழ்வை பாதுகாப்பாகவும் பொருண்மிய பலமாகவும் கொள்ளத்தொடங்கினர். இன முரண்பாட்டு வன்முறைகள் நேரடி சண்டைகளாகி பாதிப்புக்கள் தொடங்கிய போது தொடர்ச்சியான நகர்வு தொடர்ந்த வண்ணமிருந்தாலும் இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு பின்னரான காலப்பகுதிகளில் புலப்பெயர்வின் உச்சம் மேலோங்கியது.
நேரடிப் பாதிப்புக்களைச் சந்தித்த பலரில் சிலரும், பாதிக்கப்படாத பலரும், பொருண்மிய இலக்கை நாடிய பயணங்களாகவும் இவை இருந்தன என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எது எப்படியோ நாட்டில் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் பொருண்மிய, ஆட்புல, களப் பங்களிப்புக்கள் பெரும் பங்கினை வகித்தன. போராட்டக்களத்தின் வெற்றிகளும் உறுதியான தலைமைத்துவ வழிகாட்டல்களும் ஒருங்கிணைப்புச் செயற்திறன்களும் ஒரு செயற்பாட்டு வடிவமாக, தேசிய விடுதலையில் உண்மையான பற்றுள்ளவர்களைத் தவிர மற்றவர்களையும் பங்கு கொள்ள வைத்தன. எப்போதும் கடிவாளம் போராட்டத்தரப்பின் கைகளிலிருந்து புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்களை நெறிப்படுத்தியது என்றால் மிகையாகாது.
தமிழர்களுக்குள் இருக்கும் சிறப்புத் தகைமைகளான தன் முனைப்பு, மண்டைக்கனம், போட்டிகள், பொறாமைகள், சமூகப் பிளவுகள் என பல சிக்கல்கள் அவ்வப்போது தலைகாட்டினாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற “தாரக மந்திரம்” அனைத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிவிட்டிருந்தது. விரும்பியோ விரும்பாமலோ மேற்குறிப்பிட்ட தரப்பினரும் அடக்கி வாசித்தே வந்தனர். ஆனால் போரின் பின்னடைவிற்குப் பின்னர் களத்திலும் சரி புலத்திலும் சரி மாலுமி இல்லாத கப்பலாகிப் போனதையொத்த செயல்கள் இடம்பெற்று வருகின்றன. போர் வடிவம் பெற்ற ஒர் விடுதலைப் போராட்டம் பின்iடைவைக் காணும் போது, களத்தில் ஏற்படும் வெற்றிடத்தைத் தன் வயப்படுத்தும் எதிர்முனையின் நேரடிப் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கும் களச்சூழலை நாம் புரிந்துணர்வுடனும் நிகழ்வுகளின் தாக்கங்களிலிருந்தும் பார்க்கலாம். ஆனால் புலச்சூழல் அப்படியானதல்ல. புலத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் குளறுபடிகளும் எதிர்கால நகர்வுகளுக்கு உகந்தனவாக இல்லை என நிகழ்வுகள் எதிர்வு கூறுகின்றன.
போரோய்விற்குப் பின்னர் புலம் பெயர்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் பல அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. வல்லாதிக்கங்களினதும் பிராந்திய நுண்ணாதிக்கங்களினதும் எடுப்பார் கைப் பிள்ளைகளாகிச் செயற்படும் சக்திகளும்ää விடுதலைப் புலிகளின் காலத்தில் சேமிக்கப்பட்ட பணம் மற்;றும் அசையும் அசையாச் சொத்துக்களைத் தன் வயப்படுத்தி வைத்திருக்கும் தரப்பினரும், பௌத்த சிங்களப் பேரினவாத அரசுகள் தங்கத் தட்டில் வைத்து தீர்வினைத் தரப்போகிறது என்ற எண்ணக்கனவுகளில் மிதந்து, மகிந்த காலத்திலும், தற்போது மைத்திரி காலத்திலும் ஓடெடுத்துக் கொண்டு திரிபவர்கள் என ஒருபுறமும், நானா நீயா என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு செயற்படுகின்றவர்கள் என, திக்கெட்டும் திசை மாறி நிற்கும் குழுவாதங்கள் என குழம்பிய குட்டையாக புலம் பெயர் தமிழரின் நிலை தடம் மாறி போயுள்ளது. எனினும் மிகச் சிலர் என்ன செய்வது? எப்படிச் செய்வது? எங்கிருந்து தொடங்குவது? எனத் தெரியாமல் கொண்ட கொள்கையினையும் விட்டு விடமுடியாமல் நடைப்பிணங்களாக வாழும் நிலை ஒன்றும் இருக்கவே செய்கின்றமையையம் குறிப்பிட்டாக வேண்டும்.
நிலைமை இப்படி இருக்க, சிறிலங்காவில் சிங்களத்தின் மத்தியில் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் பற்றியும், மக்கள் பற்றியும் பாரிய பொய்மை கொண்ட மாயை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அடுத்த போராட்டத்திற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் அதற்கான கட்டமைப்;புக்களை புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அதனால் தொடர்ந்தும் தமிழர்களைக் கண்காணிப்புக்களுக்கும், கட்டுப்பாடுகளுக்குள்ளும் வைத்திருக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறும் அதே வேளை, பாதுகாப்பு வட்டங்களால் அறிந்தது பாதி அறியாதது மீதி என முள் வேலிகள் போடப்பட்டுள்ளன. அந்த மாயைகளால் அவதிப்படுவது அப்பாவி மக்களே. எந்த முறையான கட்டமைப்பான வேலைத் திட்டங்களுமின்றி; புலம் பெயர்ந்த சவடால்களால் தாயக மக்கள் பாதிப்படைவதில் எந்த நியாயங்களும் இல்லை. ஆனால் மகிந்தவின் ஆட்சி இருக்கும் போது, அதற்கெதிரான திட்டங்கள், செயற்பாடுகள், போராட்டங்கள் சில நடந்து வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இன்று அதில் ஒரு மந்தமும் தேக்கமும் வந்தன் பின்னணி என்ன?
நடந்து வந்த போராட்டங்கள் வீரியம் பெற்றால் சிறிலங்காவிற்கு மட்டுமல்ல தமக்கும் பிரச்சினை என வல்லாத்திக்கங்களும் பிராந்திய நுண்ணாதிக்கங்களும் எண்ணிää மகிந்த என்ற “வன் வலுவை” ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு மைத்திரி என்ற “மென் வலுவை” கைப் பாவையாக கொண்டாள்வதன் மூலம் தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தலாம் என்ற சூழ்ச்சி வலையில் கண்களை மூடிக்கொண்டு கூட்டமைப்பினர் வீழ்ந்தது போல் புலம் பெயர் போராளிகளும் வீழ்ந்து விட்டனரா? அல்லது ஒன்றுக்கும் உதவாமல் காலங்கடத்தலில் சேடமிழுக்கும் ஜ.நா பொறிக்குள் சறுக்கி விட்டனரா? எரிந்த வீட்டில் பிடுங்கியது போதும் என ஒதுங்கத் தொடங்கி விட்டனரா? இல்லை தலைப்பாகை கட்டும் நாட்டாமை தொடர்பான உள்ளகப் போட்டி பொறாமைகளின் விளைவால் சிதைந்த சிற்றுளியாகி விட்டனரா? என பலவாறு சிந்திக்கத் தோன்றுகிறது.
எதிரியானவனின் காய் நகர்த்தல்களைப் புரிந்து கொண்டு அதற்கமைவாக செயற்பாட்டு வடிவங்களை மாற்றத் தெரியாதளவிற்கு யாரும் பால் குடிப் பாப்பாக்களல்ல. ஆனால் யாரினதோ நிகழ்ச்சி நிரல்களுக்கு பலியாகிப் பணிய வேண்டிய தேவைகள் சிலருக்கும், நடப்பு நிகழ்வின் உள்ளார்ந்த ஆழம் புரியாத நிலை சிலருக்கும்ää இன்னும் பலருக்கு தலைமைப் பித்துப் பிடிப்புக்களால் தொற்றி இருக்கும் நோய்களும்தான் காரணிகள் என எண்ணத் தோன்றுகிறது. நடைமுறைப் பன்னாட்டு அரசியல், பொருண்மிய, பண்பாட்டுத் தளத்தினைக் கையாள்பவர்களின், சுவைப்புத் தன்மையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தனி நாட்டுக் கோரிக்கை என்பது எட்டிக்காய் என்பதை நாம் புரிந்து கொண்டது இன்று நேற்றல்ல. பல்லாண்டுகாலப் புரிதல் அல்லவா?;. மனித உரிமைகள், சாசனங்கள், பொறிமுறைகள் என புத்தகம் போட்டு கொண்டு பாதிக்கப்பட்டவனைப் பாதிப்புள்ளாக்கியவர்களின் கைகளை வலுபடுத்திப் பிடித்துக்கொண்டு ஏறி மிதிக்கும் செயற்பாடுகளை எத்தனை காலம் தான் வேடிக்கை பார்ப்பது? அதற்கான மாற்று வழிகள் தான் என்ன என்று கண்டு பிடித்து, ஆக்க பூர்வமான பணியினைத் தொடங்குவதற்கு எல்லாத் தகைமைகள் இருந்தும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதன் நோக்கங்கள் என்ன? ஆண்டிகள் அம்பலம் கட்டுவதையொத்த செயல்களாகவே பலவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது.
தமிழீழ விடுதலைத் தாகத்துடன் ஒரே ஒரு பொதுக் கொள்கைக்காக தன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவு மீட்கும் நாளைää ஓரே நாட்டிலேயே இரண்டாக்கி நிகழ்வு நடத்தும்; போது மாவீரர்களை அவமானப்படுத்துவதாக எண்ணிää அந்த தார்மிகப் பொறுப்பினை ஏற்று விட்டுக் கொடுக்கும் மன நிலை குறிப்பிட்ட தரப்பினருக்குக் வராமல் போவது ஏன்? வெட்டுக் குத்துää கொலை என தமக்குள் அடிபட்டு அழிவது எதற்காக? எனக்குக் கண் போனால் உனக்கு மூக்கு போக வேண்டும் எனச் செயற்படுவதற்கு இது என்ன பக்கத்து வீட்டுக்காரனின் கோழிச்சண்டையா? வேலி சண்டையா? எமது சின்ன சின்னப் பிளவுகளைச் சரி செய்ய முடியாதவர்கள்ää எப்படி வல்லாதிக்கங்களின் நீண்ட நாள் கொள்கை வகுப்புக்களினூடாக வரும் சு10ழ்ச்சிக் கருவறுப்புக்களை இனங்கண்டுää கையாண்டு அடுத்த கட்ட விடுதலையினையை அடைய உதவப் போகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதில் அர்த்தங்கள் இல்லாமலில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் எங்கோயோ போனானாம் என்ற கருத்துக்குப் பொருந்தும் முகமாகவே பல விடயங்கள் நடந்தேறுவதைச் சகிக்க முடியாதுள்ளது.
சில மாற்றங்களைத் தமது நடவடிக்கைகளில் சீர் செய்வதன் மூலம் சில முன்னேற்றகரமான மாற்றங்களை அடையலாம். நவக்கிரகங்களாக இருக்கும் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மத்தியில் குறைந்தளவிலான புரிந்துணர்வும் ஒன்றிணைவும் அவசியமாகிறது. பன்னாட்டுக் கொள்கை வகுப்பும், அதில் சிறிலங்கா அரசின் வகிபாகம் பற்றிய தெளிவும் அவசியமாகிறது. ஐ.நா தீர்மானங்களை அமுற்படுத்துவதாகக் கூறி, சிறிலங்கா அரசு நடத்தும் சித்து விளையாட்டுகளைக் கண்காணிக்கும் பொறிமுறைகளைக் கண்காணித்தும் அதற்கான அழுத்த நடவடிக்கைகளை கொடுக்கக் கூடிய பொதுக் கட்டமைப்பினை அமைத்தல் வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் எனச் சொல்லிக் கொண்டு தான்தோன்றித்தனமாகச் செயற்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஏனையவர்களைச் செயற்பாட்டுத் தன்மைகளுக்குக் கொண்டு வர வேண்டும். தாயகத்தில் அரசியல் செய்பவர்களின் சின்னத்தனமான அரசியலுக்கு வக்காலத்து வாங்குவதுடன், பணம் கொடுத்து கொம்பு சீவி விடும் கைங்கரியத்தைப் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் கண்மூடித்தனமாகச் செய்து வருவது தமிழர்களின் எதிர்கால இருப்புக்களுக்கு நலமற்ற செயல்களாகும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
சிறிலங்கா அரசானது அரசியல் தீர்வொன்றைத் தரப் போவதில்லை என்ற யதார்த்தம் நிகழ்வுகளில் தெரியும் போது, தீர்வுத் திட்டத்திற்கான காத்திருப்புக்கள் செயற்பாடுகளை காலங்கடத்தவே செய்யும். அத்தோடு புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிடம் என்ன இறுதித் தீர்வு என்ற நிலைப்பாட்டில் குழப்பங்கள் இருக்கின்றன. பொதுத் தீர்மானத்திற்கு வருவதன் மூலமே இலக்கு நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட முடியும். இவர்கள் மீது ஆறாவது திருத்தச் சட்டம் ஒன்றும் பாயப்போவதில்லை. பன்னாட்டுக் கொள்கை வகுப்பாளர்களினதும் சிறிலங்காவின் மேல்; மட்டத்தாரினதும் முகச்சுழிப்புக் கோபங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அவ்வளவே. தாயகப்பகுதியில் நிலவும் அரசியல், பொருண்மிய, பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொண்டு அதற்கான வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
- பொருண்மிய அடிப்படையிலான வேலைத் திட்டங்கள்
- சமூக, அரசியல், அறிவியல், பண்பாட்டுக் கட்டமைப்பு வேலைத் திட்டங்கள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது காகிதத்தில் எழுதி வைத்து விட்டு பார்வைக்கும் படிப்பதற்கும் வைப்பதல்ல. அது சரியான முறையில் தமிழின அசைவியக்கத்தை கொண்டு கலந்தாய்வு செய்து, கொள்கைப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். அது அவசரமானதும் அவசியமானதுமான தேவைகளாகும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தாயகத்தின் அரசியல், பொருண்மிய, பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஓரு கட்டமைப்பாக செயற்பாட்டுத் தளத்துக்குக் கொண்டுவரும் அதேவேளை, உலகத் தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்பு ஒன்றினையும் திடமான கட்டமைப்பாக உருவாக்க வேண்டும். ஆட்புல ஓருமைப்பாடு என்பது இன்றைய உலக ஒழுங்கில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்ட ரீதியில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. உடனடி நடவடிக்கையாக அவற்றைச் சீர்த்திருத்தத்திற்குக் கொண்டுவர வேண்டிய தேவை ஒன்று இருப்பதை, இன்று தாயக மண்ணில் இந்தியம் செய்யும் ஊடறுப்புக்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. அதில் தமிழரின் தொன்மங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் பாரிய வேலை திட்ட நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது என்பது எந்த கட்டமைப்பையும் ஒதுக்குவதும் அலட்சியபடுத்துவதுமல்ல எமது முன்னாலுள்ள பணி. பொருள் வளமும் மனித வளமும் வீணடிக்கப்படுவதும் சொந்த நலன்களுக்காக பொது நலன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டு, போலித்தனமாக் செயற்படுவதைத் தவிர்த்து, எமக்கான பொறிமுறைகள் எவை எனச் சிந்திக்க, செயலாக்கத் தூண்டுவதே எமது நோக்கங்கள் என நாம் புரிந்த கொள்வோமெனில் பிரச்சினைகளை தீர்ப்பது மிக எனிதானதாகும். நாம் இஸ்ரேலியர்கள் அல்ல என்பது புரிந்து போய் பல ஆண்டுகளாகி விட்டன. பொய்மை, மாயை, தன்முனைப்பு மண்டைக்கனம் என்பன வீழ்ச்சியை தவிர உயர்ச்சியைக் கொடுக்காது என்பது மட்டும் திண்ணம்!. தேக்கங்கள் ஊற்றாக வேண்டுமெனில் மாற்றங்கள் எம்மில் தேவை என்பதை என உணர்வோமாக!.
– கொற்றவை-
1,589 total views, 1 views today
Leave a Reply
You must be logged in to post a comment.