வெற்று முழக்கங்களை விடுதலை முழக்கங்களாக நம்பவைத்து தேர்தலை வெல்லத் துடிப்பது தமிழினத்திற்கு நேரும் பேரிடரே -முத்துச்செழியன்-

15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளைக் கூட அறிவியலாளர்கள் சொல்லத் தயங்கினர். காரணம் அந்த அறிவியற் கண்டுபிடிப்புகள் அதுகாலவரையிருந்த மத மூட நம்பிக்கைகளுக்கு முரணாகவிருந்திருக்கிறது. கண்டுபிடித்தும் சொல்ல முடியாமல் தத்தளித்தார்கள். சொன்னவர்களுக்கு வாழ்நாள் சிறைவாசம் பரிசானது. ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இத்தகைய கெடுவாய்ப்பும் இப்பேர்ப்பட்ட சீரழிவும் ஈழத்தமிழரசியல் சூழலில் தான் இருக்கின்றது. இன விடுதலையை விரும்பி உண்மைகளைச் சொல்லுகையில் சேறடிப்புகளை சேற்றினில் நிற்போர் செய்யத்தான் செய்வர். சமூக வலைத்தளங்களில் சொட்டைப் பதிவிட்டுத் தண்டனை குடுப்பது தான் அவர்களது தகுதியென்பதால் அதனைப் பெரிதுபடுத்தாது மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை வெவ்வேறு நிகழ்வுகளினூடாக வெவ்வேறு காலப்பகுதியில் நினைவுபடுத்த வேண்டிய ஒருவகை வரலாற்று அவலத்தின் தொடர்ச்சியாகவே இப்பத்தியும் எழுதப்பட்டேயாக வேண்டியிருக்கின்றது.

ஒழிப்பு மறைப்பின்றி பேசியாக வேண்டியவற்றைப் பேசாதிருப்பது பேராபத்தை விளைவிக்கும். தந்தை செல்வா தன்மானத்தை இழந்து தவித்த தமிழினத்தைத் தட்டி எழுப்பி தனித் தமிழீழமே முடிந்த முடிபெனக் கூறி விடுதலைப் பாதையில் இட்டு மறைந்தார். அவரையடுத்து வந்த அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் ஈழத்தமிழர் தன்மானத்தைச் சிங்கள அரக்கர்களுக்கு அடகு வைத்தனர். இந்த இழிநிலையைச் சகிக்க முடியாமல் மறவழிப் போராட்டம் உத்வேகம் அடைந்தது.

இப்போது தந்தை செல்வா வழியில் பயணிப்பதாகச் சொல்வதை நிறுத்தி விட்டு அமிர்தலிங்கத்தின் வழியில் பயணிப்பதாகச் சொல்லுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள். வரலாற்றைப் பின்னோக்கிச் செலுத்தும் ஒரு வரலாற்று முரண்நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆற்றலின்மையும் மூடு மந்திர அரசியலும் பங்களிக்கின்றது. அதற்கான ஏதுவாக முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழரின் கையறு நிலையை மட்டுமே சொல்லிவிட்டுத் தப்ப முடியாது. மக்களோடு மக்களாக நின்று மக்கள் மயப்பட்ட அரசியலைச் செய்யத் தடையாக நிற்கும் அதனது வர்க்கப் பண்பு மற்றும் புரட்சிகரப் பண்பற்ற  செயற்பாடுகளும் கடுமையாக கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். இனச்சிக்கலைத் தீர்ப்பது போன்று ஒரு மாயையை ஏற்படுத்திக் காலத்தைக் கடத்துவது என்பது சிங்களச் சூழ்ச்சி என்பது 1976 இலேயே தமிழனாய்ப் பிறந்து, சிந்திக்கும் திறனற்ற மடையருக்கும் புரிந்த விடயம். சிங்களம் தமிழருக்கு ஒரு துரும்பைத் தன்னும் தீர்வாகக் கொடுக்காது என்பது மகாவம்ச மனநிலையில் ஊறித்திளைத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தில் பரிணாம வளர்ச்சியினைக் கண்டு வரும் இற்றைவரையிலான சிறிலங்கா அரசுகளின் காலங்களில் அரசியலில் பயணித்த கூட்டமைப்பின் இன்றைய தலைமைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் மக்களுக்கு உண்மையைச் சொல்லி அவர்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டி மக்கள்திரள் போராட்டங்களைச் செய்யக் கூடிய அளவில் அவர்களில்லை என்பது இலகுவில் அனைவருக்கும் புரியக்கூடியது தான். எனிலும் தான் அமிர்தலிங்கத்தின் பாதையில் பயணிப்பதாக ஒரேயொரு உண்மையை சம்பந்தன் நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்பு தன்வாயால் பதிவுசெய்துள்ளார். அந்த வகையில் அவர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் என்பவரிலும் பார்க்க ஒரு படி மேலே தான் நிற்கின்றார் என்பது இப்பத்தியினைப் படித்து முடிகையிலாவது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை இப்பத்தி எழுத்தாளருக்குண்டு.

“இரு தேசம் ஒரு நாடு” என்பதனைத் தனது அரசியற் கொள்கையாகச் சொல்லி அதனை அடைவதற்கான வழிகளை தேர்தல் அரசியலில் நின்று எப்படிச் சாதித்துக் காட்டப் போகின்றீகள் என்று கேள்வி கேட்டோருக்கு புவிசார் அரசியல் மூலம் பன்னாட்டு விசாரணையைக் கோரி நீதிமன்றம் அமைக்குமாறு ஐ.நா அவையிடம் கேட்டுச் சாதிக்கலாம் என்று கூறி தமிழீழ விடுதலை வரலாறும் தெரியாமல் புவிசார் அரசியல் என்றால் என்னவென்று புரியாதோரினை நம்ப வைத்தது போல் விடயமறிந்தவர்களை நம்ப வைப்பதில் தவறிப்போன கசேந்திரகுமாருக்கு அவரின் அரசியல் நேர்மையினை கேள்விக்குட்படுத்துவது கசப்பானதாகவிருக்கும். ஆனால் இன ஒற்றுமைக்கு அது தவிர்க்க முடியாதது என்பதால் நாம் கடந்து செல்ல முடியாது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் இருக்கின்றது. இதனடிப்படையில் தேசிய இனங்களிற்கே உரித்தான தன்னுரிமை (Self-determination) அடிப்படையில் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்குண்டு.

எனவே, கொள்கை விளக்கத்தையாவது ஒழுங்காக எழுத முயலும் கசேந்திரகுமார் திம்புக் கோட்பாடுகளுக்கமைய தமிழர் ஒரு தேசம் எனப் பதிவு செய்வதனை வலியுறுத்துவதாகத் தனது கட்சிக்கொள்கையில் “இரு தேசம் ஒரு நாடு” என்று கவர்ச்சிகரமாகச் சொல்லி ஒரு நாடு என்று முன்நிபந்தனையும் இட்டு விட்டார். தேசத்தை ஏற்பது என்பது அதன் தன்னுரிமையை (Self-determination) ஏற்பது. அந்த தேசம் ஒரு நாட்டரசாக (Nation State) இருப்பதா இல்லை ஒன்றியத்தினுள் (Union) இருப்பதா என்பதெல்லம் அந்தத் தேசத்தின் உரிமை. இதில் இவர் உண்மையில் தமிழரினை ஒரு தேசம் என இதயத்தூய்மையுடன் தனது கட்சிக் கொள்கையில் பதிவுசெய்ய விரும்பின் “இலங்கைத்தீவில் இரு தேசங்கள்” எனச் சொல்லியிருக்கலாம். இலங்கைத்தீவு என்பது ஒரு பூகோள அமைவு என்பதாகப் பதிவு செய்து தானும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கேற்ப ஒழுகி தமிழர் ஒரு தனித்த தேசம் என்பதைப் பதிவு செய்திருக்கலாம். அப்படிச் சொல்லியிருப்பின் இலங்கைத்தீவு என்ற பூகோள அமைவிடம் வழியமைந்த நிலப்பரப்பில் இரு தேசங்கள் உண்டெனப் பதிவு செய்ததாக பொருட்பட்டிருக்கும். இவர் ஏனோ ஒரு நாடு எனக் கட்சிக் கொள்கையிலேயே நிபந்தனையிட்டு தனது கட்சியின் பெயரிலேயே இருக்கும் சிறிலங்காப் பற்றைக் காட்டி விட்டார். ஒரு நாடு என இவர் கட்சிக்கொள்கையில் நிபந்தனையிடுவது உள்ளகத் தன்னுரிமை (Internal Self-determination) என்ற புளுடாவின் விளைவானதே. அந்த வகையில் இது திம்புக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் (UNHRC) கொண்டு வரப்படும் தீர்மானங்களே நீர்த்துப் போய் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போகும் நிலையில் தமிழர்களுடைய சிக்கல் வகுப்புவாத வன்முறை (Communal Violence) என்ற ரீதியில் கடைசித் தீர்மானத்தில் குறிப்பிடிருக்கையில் பாதுகாப்பு அவைக்குப் (Security Council) போய் அங்கு முடிவாகும் பன்னாட்டு நீதிமன்று அமைத்து விசாரணை செய்தல் என்ற பொறிமுறையை வழிமுறையாகப் பேசும் கசேந்திரகுமார் வேற்றுக்கிரகத்திலிருந்து அரசியல் செய்வது போல நடந்துகொள்வதனையும் நம்ப ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். இனப்படுகொலைக் கூட்டுக் குற்றவாளிகளிடம் தீர்வை எதிர்பார்த்து விடுதலையை யாசித்துப் பெறுவதைத் திட்டமாகச் சொல்லும் இவர்களை எந்த அடிப்படையில் சிலரேனும் நம்புகின்றார்கள் என்று தெரியவில்லை.

தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976- வைகாசி– 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்து அதற்கான மக்களாணையைக் காட்ட 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலையே வாய்ப்பாகப் பயன்படுத்தினார்கள். இது சிங்களத்திற்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியத்திற்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. தமிழர்களின் அரசியல் பேணவாவைத் தெரிந்துகொள்ள பொதுவாக்கெடுப்பெல்லாம் நடக்காது. அப்படித் தமிழர்கள் நாம் பகற்கனவு காண்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஐ.நாவின் பாதுகாப்பு அவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அமெரிக்கா தலைமையிலான வல்லாதிக்க நலனுக்கு நாடமைய வேண்டிய தேவை இருப்பின் நேட்டோ படைகளை அனுப்பி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்த பின்பு படைகள் திரும்ப அழைக்கப்பட்ட பின்பு நடக்கும் ஒரு சடங்கு போலவே இந்த பொதுவாக்கெடுப்புகள் நடந்து அடக்குண்ட தேசிய இனங்கள் நாடமைத்துள்ளன. இதுவே கிழக்கு ஐரோப்பாவில் நடந்தது. ஐ.நா வின் மாந்த உரிமைகள் ஆணையத்திலேயே நீர்த்துப் போன எமது விடயத்தை அதன் மெய்நிலை மறைத்து பொய் புரட்டல்களை வழிமுறையாகக் காட்டி அறியாதோரை மயக்க நிலையில் வைத்துச் செய்யும் அரசியல் வழிமுறையை கசேந்திரகுமார் தொடர்வதனைப் பார்த்துச் சகிக்க முடியவில்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் ஆணையைக் காட்ட 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பயன்படுத்தியது போன்ற சூழலை இனி ஒரு காலத்தில் தமிழர்களின் அரசியல் பேணவாக்களை வெளிப்படுத்த தமிழர் ஓரணியில் நின்று பொதுத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதை நன்குணர்ந்தோர் தமிழர்களைப் பல குழுக்களாகச் சிதற விடுகின்றனர். இதனைச் செயற்படுத்த கொள்கை கோட்பாடு என்று மயக்க மருந்து ஏற்றி ஏமாற்று வித்தை காட்டப்படுகின்றது. 1977ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் ஒரே அணியில் தமிழீழ கோரிக்கையின் பக்கம் நின்ற போது அகில இலங்கை தமிழ் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண தொகுதியில் தமிழீழ கோரிக்கையை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தந்தை இருக்கை கிடைக்கவில்லை எனச் செய்த வேலையை தனயன் கொள்கை சரியில்லை என்று கூறிச் செய்கின்றார் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் தவறில்லை.

அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையாமல் வெளியிலிருந்து ஆற்றிய பணிகளை மதிப்பளிக்கும் விதமாக அத்தகைய மண்ணையும் மக்களையும் நேசித்துச் செயலாற்றி மறைந்தவர்களுக்கு மாமனிதர் என்ற மதிப்பினை விடுதலைப் புலிகளின் தலைமை அளித்து வந்தது. எனினும் சிறிலங்காத் தேசியவாதிகளாயிருந்து தமிழர் அரசியலில் விரும்பியோ விரும்பாமலோ தவிர்த்து விட முடியாத சக்திகளையும் எமக்கான ஏதோவொரு ஆதரவுத் தளத்தில் இயங்க வைக்கும் உத்தியுடன் தமிழினத்தின் நலனுக்காகத் தொலை நோக்குடன் மாமனிதர் மதிப்பு வழங்கப்பட்டது. தீவிர சிறிலங்காத் தேசியவாதிகளாயிருந்த ரவிராசு மற்றும் சிறிலங்கா அதிபர் தேதலில் போட்டியிட்டளவிற்கு சிறிலங்காத் தேசியவாதியாகவிருந்த குமார் பொன்னம்பலம் மற்றும் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு உயிர்தப்பிய சிவசிதம்பரம் போன்றோருக்கு இந்தவிதமான அணுகுமுறையில் மாமனிதர் மதிப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் புனிதர்கள் என்பதற்காக இவர்களுக்கு மாமனிதர் மதிப்பு அளிக்கப்படவில்லை. மாமனிதர் மதிப்பளிக்கப்பட்டமையால் இவர்கள் புனிதர்களாகி விட்டனர். எல்லோரையும் காலச் சூழலில் ஏதோவொரு வகையில் உள்வாங்க எடுத்த முயற்சியினை தமிழ்த் தேசியத்தின் மூலவர் என்றாக்கும் அரசியற் சிறுமையை கசேந்திரகுமார் செய்கின்றார். தந்தை செல்வா என்ற எமது தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் மூலவர்களில் ஒருவரை முன்னிறுத்தாமல் தீவிர சிறிலங்காத் தேசியவாதியாக இருந்த குமார் பொன்னம்பலம் அவர்களை தமிழ்த் தேசியக் கொள்கையின் மூலவர்களில் ஒருவராகத் துண்டறிக்கைகளின் மூலமும் பதாகைகள் மூலமும் ஒரு தோற்றப்பட்டைக் காட்டி வரலாறு தெரியாதோரை நம்ப வைப்பதில் கசேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி பெற்றுவிட்டர் என்றே தோன்றுகின்றது.

வடதமிழீழத்தைப் போலல்லாது, தென்தமிழீழம் சிங்களக் குடியேற்றத்தாலும், இராணுவ கொலைப் பசியினாலும், இராணுவத்துடன் கூடி நின்ற சிங்கள முசுலிம் காடையர்களினாலும் பிய்த்துக் குதறப்பட்டது. கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, தோணிதாட்டமடு, புல்லுமலை, சித்தாண்டி, வந்தாறுமூலை, புணானை, பெண்டுகல்சேனை, உடும்பன்குளம், சத்துருக்கொண்டான், அட்டப்பள்ளம், வீரமுனை என நீளும் இனப்படுகொலைகளிற்குள்ளாகி இன்றை வரை வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கின்றது. 1956 இல் சிறிலங்கா பிரதமர் D.S. சேனநாயக்க கல்லோயாத் திட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்படலானர். அன்றிலிருந்தே முசுலிம்களும் அத்துமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும், மிரட்டல்கள் மூலமாகவும் தமிழர்களின் நிலங்களைக் குறைந்த விலையில் சுரண்டி எடுத்தல் மூலமாகவும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மீராவோடை, தியாவட்டவான் போன்ற தூய தமிழ் ஊர்களிலிருந்தும் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி, கரவாகு, வீரமுனை போன்ற தூய தமிழ் ஊர்களிலிருந்தும் திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிக்குடியிருப்பு, உப்பாறு, குரங்குப்பாஞ்சான், இறக்கக்கண்டி போன்ற தூய தமிழ் ஊர்களிலிருந்தும் தமிழர்கள் 1970 களின் பிற்பகுதியிலேயே அருகிலுள்ள முசுலிம் ஊர்களிலிருந்து வரும் காடையர்களால் அடித்து விரட்டப்படலானர். முசுலிம் ஊர்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ் ஊர்களை 1970 களின் பிற்பகுதியிலேயே சிங்கள இராணுவத்துடன் இணைந்து முசுலிம்கள் அபகரிக்கத் தொடங்கிவிட்டனர். இரண்டாம் கட்ட ஈழப்போர்  ஆரம்பமான 1990 இற்குப் பின்பு பல முசுலிம் இளைஞர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தில் ஒரு படைப் பிரிவான ஊர்காவல் படையிலும் சிறிலங்கா பொலீசிலும் அதிக எண்ணிக்கையில் இணைந்த பின்பு தமிழர்கள் வகை தொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டு தமது தாயகப் பகுதியிலேயே ஏதிலிகளாக்கப்பட்டனர். தென் தமிழீழத்தின் போராட்டப் பங்களிப்பு விகிதம் மிகப் பெரியதாயிருந்தும் இது வரை இழந்த நிலங்களைத் தென் தமிழீழத்தில் குறிப்பிடத்தக்க அளவேனும் முசுலீம் மற்றும் சிங்கள அபகரிப்பாளர்களிடமிருந்து முப்பது ஆண்டுகால மறப்போராட்டத்திலும் மீட்டெடுக்கவில்லையென்பதே நெஞ்சைத் துளைக்கும் உண்மை.

1956 இலிருந்து தமிழர்களின் இன விகிதாசாரம் தென் தமிழீழத்தில் குறைந்தே வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்த மறவழி மண்மீட்பைத் தவிர வேறு வழியில்லை. இது ஏதோ சம்பந்தனால் தான் நடக்கின்றது என்பது போல தனது தேர்தல் அரசியல் வழியில் இதற்குத் தீர்விருப்பது போல் யாழ்ப்பாணத்து இளையவர்களை ஏமாற்றுவது போல தென்தமிழீழ மக்களை ஏமாற்ற முடியாது என்பது கசேந்திரகுமாருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாணத்து முகநூல் போராளிகளை நம்பவைப்பதே அவர் அடையக் கூடிய இலக்கென்று அவருக்கும் தெரியும்.

2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,

மாவட்டம் தமிழர்கள் முசுலிமுகள் சிங்களவர்கள்
அம்பாறை 111,948 268,630 228,938
மட்டக்களப்பு 381,841 128,964 2397
திருகோணமலை 95,652 151,692 84,766
589,441 549,286 316,101

இதனைப் பார்ப்போருக்கு தென் தமிழீழத்தில் தமிழர்களின் இருப்புக் குறித்து நன்கு விளங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 8 ஆம் தேதி இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண அவைத் (EPC) தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14 உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 7 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சிறிலங்கா முசுலிம் காங்கிரசு இணைந்து ஆட்சி அமைத்துக் கொண்டது. 5 பேர் கொண்ட அமைச்சர்கள் வாரியத்தில் 4 முசுலிம்களும் 1 சிங்களவரும் தெரிவாகினர். தமிழர்களுடைய தாயக மண்ணில் நடக்கும் மாகாண அவை ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாகவே இருக்க வேண்டிய கெடு வாய்ப்பே நிலைவரமானது. 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சூழ்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்ட பிளவு கிழக்கு மாகாண அவையிலும் எதிரொலிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன முசுலிம் காங்கிரசுக்கு ஆதரவை வழங்கி ஆட்சி அமைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய இந்த ஆதரவு மூலம் அமைச்சர் வாரியத்தில் இருந்த 4 முசுலிம்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்பட்டு இரு தமிழர்கள் அமைச்சராக இடமளிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் 11 இருக்கைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெறும் 6217 வாக்குகள் குறைந்ததால் 2 இருக்கைகள் இல்லாமல் போயின. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 14 இருக்கைகளில் பிள்ளையான் உள்ளிட்ட இருவர் தமிழர்கள். எனவே தமிழர்கள் ஓரணியில் நின்றிருப்பினும் 15 இருக்கைகளையே உச்ச அளவில் பெறக் கூடியதாக இருந்திருக்கும். தலையால் நடந்தாலும் தமிழர் தாயகமான இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியில் தமிழர்களால் தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் 37 இருக்கைகளைக் கொண்ட கிழக்கு மாகாண அவையில் ஆட்சியமைக்க 19 இருக்கைகள் வெல்லப்பட வேண்டும்.  ஏறத்தாழ மூவினத்தவரும் சம அளவில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கூட்டரசே அமைக்க இயலுமானதாகவிருக்கும். எனவே சிங்களத்தையும் முசுலிமையும் கூட்டரசை அமைக்க விட்டு விட்டு எதிர்க் கட்சியில் இருந்து கத்திக் குழறலாம் இன்றேல் சிங்களத்துடனோ முசுலிமுடனோ கூட்டரசு வைத்து சில அமைச்சுகளையேனும் கையிலெடுத்து தமிழர்கள் சில நிருவாகங்களைச் செய்யலாம். சிங்களம் முசுலிம்களுக்கு முதலமைச்சுப் பதவியைக் கொடுத்தது இன்னமும் கொடுக்கத் தயாராகவே உள்ளது. எனவே முசுலிம்களுக்கு தமிழர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க வைக்க என்ன இராசதந்திர அணுகுமுறையைத் தான் செய்ய இயலும்? இந்த நிலையில் சம்பந்தன் விரும்பி முசுலிம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியதாலேயே கிழக்கில் நிலம் பறி போகின்றது என்று கூறி யாழ்ப்பாணத்திலுள்ள இளையவர்களை நம்ப வைத்து அரசியல் செய்வதில் ஏதேனும் நேர்மைத்திறம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. தமிழர்களின் எண்ணிக்கைப் பெரும்பான்மையை தென் தமிழீழத்தில் (இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணம்) தேர்தல் அரசியலில் உறுதிப்படுத்தவியலாத சூழலை உருவாக்குமளவுக்கு கசேந்திரகுமாரின் அரசியலில் தென் தமிழீழ மக்கள் ஏமாறவாய்ப்பில்லை. எனினும் சமூக வலைத்தளங்களில் தொடச்சியாகப் பரவவிடும் அறிவிலிக் கருத்தூட்டங்களால் சில ஆயிரம் வாக்குகளைக் கசேந்திரகுமார் சிதறவிட வாய்ப்பிருக்கவே செய்கின்றது. இது வெந்து நொந்து போய் இருக்கும் தென் தமிழீழ மக்களின் அரசியல் இருப்பைத் துடைத்தழிக்கும் யாழ்ப்பாணக் குறுந்தேசியச் சிந்தனை கொண்டோரால் மேற்கொள்ளப்படும் அறிவிலி நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் போய் அரசியல் செய்து வாக்கைப் பிரியுங்கள். கெடுகுடி சொல் கேளாது. பரவாயில்லை. எப்படியும் அதனைத் தமிழர்களிடமிருந்து பறித்தெடுப்பது இப்போதைக்கு நடக்கக் கூடியதொன்றல்ல. ஆனால் இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் கசேந்திரகுமார் செய்யும் இழிநிலை அரசியல் மன்னிக்க முடியாததொன்று.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழட்டுத் தலைமைகளும் அரசியற் சிக்கல்களைச் சட்டச் சிக்கல் போல மட்டுமே அணுகத் தெரிந்த சுமந்திரன் போன்றவர்கள் செய்யும் சிறுமைகளைத் தனக்கான மூலதனமாகப் பயன்படுத்தி அகில இலங்கைத் தமிழ் காங்கிரசு என்ற தனது குடும்பச் சொத்தை அரசியலில் நிலைபெறச் செய்ய கசேந்திரகுமார் பொன்னம்பலம் எடுக்கும் முயற்சிகளைத் தமது அரசியற் தெரிவாகப் பரப்புரை செய்யும் மடைமையை இல்லாதாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-முத்துச்செழியன்-

2018-01-11

 6,261 total views,  2 views today

Be the first to comment

Leave a Reply